குழந்தைகளுக்கு இதிகாச கதைகளை கற்றுத் தரும் சித்தம்
ஒரு விஷயத்தை குழந்தைகளுக்கு எத்தனையோ வழிமுறைகளில் சொல்லி கொடுக்கலாம். ஆனால் அது அனைத்தும் அவர்களுக்கு புரிந்ததா என கேட்டால் அது சந்தேகமே. தற்போது குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை பெற்றோர்கள் கவனிக்க மறந்து விடுகின்றனர். செல்போன்களை உபயோகிப்பதால் குழந்தைகளின் கவனம் அதிலேயே இருக்குமே தவிர அவர்களுக்கு மற்ற விஷயத்தின் மேல் குறிப்பாக பாடத்தின் மேல் அதிக அளவு கவனம் இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே அது எளிதில் மனதில் பதியும். அதற்காக இதே முறையை பயன்படுத்தி பாடங்களை சொல்லிக் கொடுக்கவும் முடியாது. குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிதான முறையில் சொல்லித்தர நிறைய வழிமுறைகள் இருந்தாலும், அதை பயன்படுத்துவதும் அறிதே. இந்த வழிமுறைகளை மாற்றி கல்வி துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என முயற்சித்து கற்பித்தல் வழியில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தி அதில் முன்னேற்றம் அடைந்துள்ளார் சென்னையை சேர்ந்த ‘சித்தம்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சரண்யா.
‘‘கல்வியை பொறுத்தவரை இந்த முறையில் தான் சொல்லித்தர வேண்டும் என்ற வரைமுறை கிடையாது. பாடமாக சொல்லி தருவதற்கும், செயல்முறை விளக்கத்துடன் கற்றுக் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் செயல்முறை சாத்தியம். ஆனால் தமிழில் புராதன கதைகள், இதிகாசங்களில் இந்த செயல்முறை விளக்கங்கள் மூலம் கற்பிப்பது கொஞ்சம் கடினம்’’ என்று பேச ஆரம்பித்தார் சரண்யா.
‘‘நான் பொறியியல் பட்டதாரி. பட்டப்படிப்புக்கு பிறகு அமெரிக்காவில் கேம் டிசைன் குறித்து படிச்சேன். அதன் பிறகு எம்.பி.ஏ படிக்க விரும்பினேன். அதற்காக பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூருக்கு பயணித்தேன். அங்கு இருக்கும் கல்வி முறை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. காரணம், அங்கு செயல்முறை கல்வி முறை தான்.
நம்ம ஊரில் ஏன் இந்த கல்வி முறைகள் இல்லை என்று நான் பல முறை யோசித்ததுண்டு. சொல்லப்போனால், இது போன்ற கல்வி திட்டங்களுக்கான மாதிரி முறைகள் கூட நம் ஊரில் இல்லை என்பது தான் எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது. சில சமயம் அதே போன்ற பாட திட்ட முறைகளையும் இங்கு கொண்டு வர வேண்டும்ன்னு நினைப்பேன். அந்த எண்ணம் தான் என் நீண்ட நாள் ஆசைக்கு ஒரு படிக்கல்லாக அமைந்தது.
நாம் பொதுவாக பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பது தான் வழக்கம். மனப்பாடம் செய்வது நல்ல விஷயம் தான். அதே சமயம் எல்லாவற்றையும் நாம் மனப்பாடம் செய்ய முடியாது. சிலவற்றை செயல்வழி மூலமாக புரிந்துகொண்டு படித்தால்தான் அது மனதில் நிற்கும்.
அதனால் தான் செயல்வழி கல்வி முறை வெளிநாடுகளில் அதிகமாக உள்ளது. அதனால் நான் கற்றுக் கொண்ட விஷயத்தை எப்படி நடைமுறைக்கு கொண்டு வரணும்னு யோசிச்சேன். இன்றைய காலக்கட்டத்தில் பாடங்களை படிப்பதே மாணவர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிய வந்தது.
அதே போல் நம்முடைய சிறு வயதில் நாம் சந்தித்த பிரச்சனைகளை எவ்வாறு சமாளித்தோம் என்று அதற்கான வழிமுறைகளை சிந்திக்க ஆரம்பித்தேன். நம்ம ஊர் கல்வி முறையிலும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளது. அதில் வேறு என்ன கொண்டு வரலாம் என ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பள்ளிகள் மற்றும் கல்வி சாலைகளில் வேலை பார்த்தேன்.
அப்போது ஒரு விஷயம் புரிந்தது. என் சின்ன வயசில் நான் படிச்ச கதைகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நடைமுறைகள், குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்தது போன்ற விஷயங்கள் தான் மனஅழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்தது. கூட்டு குடும்பமா இருக்கும் போதும், அது பெரிய அளவில் பாதுகாப்பு அரணாக இருந்தது. அதே சமயம் தனியாக இருந்த போதும், முன்பு பெற்றோர் மற்றும் குழந்தைகள் எல்லாரும் ஒன்றாக இருந்தார்கள். ஆனால் இன்று எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். அம்மா, அப்பாக்கு தெரியாத விஷயத்தை தாத்தா, பாட்டி இல்லாத இடத்தை எப்படி ஈடுகட்டலாம் என ஆராய்ந்தோம். அதற்கான தீர்வு தான் சித்தம்’’ என்றவர் சித்தத்தின் செயல்பாடு குறித்து விவரித்தார்.
‘‘இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தினை மறந்துவிட்டார்கள். எல்லாம் செல்போன் என்றாகிவிட்டது. அதனால் நம்முடைய இந்திய கலாச்சாரங்கள் சார்ந்த கதைகளை இவர்களுக்கு எவ்வாறு கொண்டு செல்வதுன்னு யோசித்தேன். படக்கதையாக கொடுத்தாலும் படிக்கமாட்டார்கள். அதையே செல்போனில் கொடுக்கவும் எனக்கு விருப்பமில்லை. அதனால், விளையாட்டு முறையில் கொண்டு செல்ல திட்டமிட்டேன்.
அதற்காக கடந்த 3 வருடமாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான விளையாட்டு. இதில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நம் இதிகாச கதைகளில் இருந்து எடுக்கப்பட்டது. உதாரணத்துக்குராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாச கதைகளில் இருந்து தான் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறேன். மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் அடையாளமாக கருதப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் இதில் கொண்டு வந்துள்ளோம்.
அதாவது, தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றால், அதனை ஆந்திராவில் தோலு பொம்மலாட்டம் என்றும் கேரளாவில் தோல்பாவை கூத்து என பல பெயர்களில் குறிப்பிடுவார்கள். இதன் சிறப்பம்சங்களை விளையாட்டு வடிவில் தந்துள்ளோம். எங்களின் முக்கிய நோக்கம் நம் கலாச்சாரங்களை சுலபமான முறையில் குழந்தைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே’’ என்ற சரண்யா, விளையாட்டில் இருக்கும் சிறப்பம்சங்களை விளக்கினார்.
‘‘கிராமங்களில் அடிமட்டத்திலிருக்கும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு தேவையான உடை, சாப்பாடு, பாட புத்தகங்களை வாங்கி கொடுப்பது முக்கியம் என நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு தேவையான உத்வேகம் கொடுக்கக்கூடிய கதைகளை நாம் சொல்ல மறந்துவிடுகிறோம்.
நமக்கு தாத்தா பாட்டி சொன்னாங்க. இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு செல்போன்கள் தான் உலகம் என்றாகிவிட்டது. சித்தத்தில், ஒவ்வொரு மாநிலம், அவர்களின் பாரம்பரிய உடை, உணவு, நடனம், நினைவு சின்னங்கள் அட்டைகளில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். உடன் அதற்கான விரிவாக்கமும் ஒரு புத்தகத்தில் கொடுத்திருப்போம். கார்டுகளில் உள்ளதை மாநிலம் வாரியாக ஒன்று சேர்த்தால் அவர்கள் வெற்றி பெற்றவர்கள். இது ஒரு விளையாட்டு.
விளையாட சுலபமாக இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களை நினைவுகூறும் வகையிலும் இருக்கும். குழந்தைகளுக்கு கதை கேட்க பிடிக்கும். அதனால் ‘நெய்வேத்யா’ என்ற புத்தகத்தில் விநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை கொடுக்கிறோம், கிருஷ்ணருக்கு ஏன் முறுக்கு பிடிக்கும், கடோத்கஜன் யார் என்பதை கதைவடிவ விளையாட்டாக கொடுக்கிறோம்.
இதில் கதைகள் மட்டுமில்லாமல், நம் நாட்டின் அரசர்கள், அரசியல் தலைவர்கள், அவர்களை பற்றிய செய்திகள் அடங்கி இருக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெற்றோர்களுக்குமே நல்லது. சொல்லப்போனால் இந்த மாதிரி விளையாட்டை நாம விளையாடும் போது குழந்தைகளுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நல்ல சுமுகமான உறவுகள் ஏற்படும். மேலும் குழந்தைகளுடைய பேச்சுத்திறன், செயல்பாடுகள், அறிவுத்திறன் அதிகரிக்கும். நான் ஒரு விளையாட்டினை அமைத்தவுடன், அதை முதலில் என் குழந்தையிடம் கொடுப்பேன். அவள் விளையாடும் போது கேட்கும் கேள்விக்கு ஏற்ப என்னுடைய விளையாட்டு புத்தகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவேன். இந்த புத்தகம் 6 வயது குழந்தைகள் முதல் அனைவரும் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இந்த புத்தகங்களை கொடுத்து வருகிறோம். அடுத்து தமிழ் பழமொழிகளை உபயோகப்படுத்தி தமிழில் ஒரு விளையாட்டு புத்தகங்களை கொண்டு வர இருக்கிறோம்.
இந்த விளையாட்டின் சிறப்பம்சம், குழந்தைகள் இதனை ஒரு விளையாட்டாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதில் உள்ள கதாபாத்திரங்கள் மற்றும் கதை குறித்து அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கு தெரியும். இவங்க எல்லாரையும் இணைக்கும் பாலமாக எங்க விளையாட்டு இருக்கும். அதற்கு ஏற்ப தான் இதனை அமைத்திருக்கிறோம். மேலும் நம் நடைமுறை வாழ்க்கையோடு இந்த விளையாட்டு மிகவும் நெருக்கமாக இருப்பதுதான் எங்களின் சக்சஸ்’’ என்று பெருமையாக கூறுகிறார் சரண்யா.
காயத்ரி காமராஜ்
நோய்களின்றி காக்கும் அறுகம்புல்
அறுகம்புல் எல்லாவித மண் வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். அறுகம்புல் தோல் நோய்களை குணப்படுத்தக்கூடியது, கண் எரிச்சலை சரி செய்யும் தன்மை கொண்டது, வயிற்றுப் போக்கை நிறுத்தக்கூடியது, புண்களை ஆற்றவல்லது. வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடிய அறுகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.
நரம்பு நாளங்களை தூண்டக்கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அறுகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.அறுகம்புல் சாறு தினமும் குடிப்பதால் பல நன்மைகளைப் பெறலாம். அது ஒரு மூலிகையாகத் திகழ்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அறுகம்புல் சாறை குடித்துவர வேண்டும். குடித்த இரண்டு மணி நேரம் கழித்து மற்ற உணவு வகைகளை சாப்பிடலாம். சாறை குடிப்பதனால் கீழ்க்கண்ட நன்மைகள் பெற்று நலமுடன் வாழலாம்.
* எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.
* ரத்த சோகை நீங்கி, ரத்தம் அதிகரிக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.
* ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
* நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகும்.
* நரம்புத்தளர்ச்சி நோய், தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
* புற்றுநோய்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு மிகச்சிறந்தது.
* மூட்டுவலி நீங்குவதோடு, பருமனான உடல் இளைக்கவும் உதவுகிறது.தினமும் அறுகம்புல் சாறு குடிப்போம், நோய்களை வருமுன் காப்போம்.
- எஸ்.ஷோபனா, காஞ்சிபுரம்.
|