வாழ்க்கையை மாற்றியமைக்கும் வெல்நெஸ் மாநாடு!
வெல்நெஸ் என்றாலே ஸ்பா, அழகு சார்ந்த விஷயங்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறாங்க. ஆனால் வெல்நெஸ் என்பது புற அழகினை மட்டுமே குறிக்காது. நம்முடைய ஆழ் மனது மற்றும் உடல் சார்ந்த ஆரோக்கியத்தையும் குறிப்பதுதான் வெல்நெஸ். அப்படிப்பட்ட வெல்நெஸ் என்ன? அதனை எவ்வாறு மேம்படுத்த வேண்டும்? அதனால் ஏற்படும் மாற்றம் என்ன? என்பது குறித்து ஒவ்வொரு வருடமும் மாநாடு ஒன்றை நடத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த ரேணுகா டேவிட். இவர் அடிப்படையில் டாக்டர். இவரின் கணவர் இந்தியன் ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது தம்பதியினர் இருவரும் இணைந்து ரேடியன்ட் நிறுவன குழுமத்தை நிர்வகித்து வருகிறார்கள். பலவிதமான துறைகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் ஆரோக்கியம் சார்ந்த துறையினை ரேணுகா அவர்கள் நிர்வகித்து வருகிறார். ‘‘என் கணவர் ராணுவத்தில் இருந்ததால், நான் அங்கு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்தேன். அவர் ஓய்வு பெற்ற பிறகு தான் இந்த நிறுவனத்தை துவங்கினோம். அதில் என்னுடையது வெல்நெஸ் பிரிவு. வெல்நெஸ் என்பது ஆரோக்கியம் சார்ந்தது. அதாவது நம் உடலை ஆரோக்கியமாகவும், எந்தவித நோயின் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது அவசியம். நான் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய போது, பல பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கேன். மேலும், அங்குள்ள கிராம மக்களுக்கு வைத்தியம் செய்திருக்கேன்.
ஒரு மருத்துவராக எனக்கு நோயின் பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்று தெரியும். ஆனால் இது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லை என்று மட்டும் எனக்கு தெரிந்தது. பல மருத்துவமனைக்கு சென்று ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து பேசினேன். அந்த சமயத்தில் வெல்நெஸ் என்றால் அழகு சார்ந்த விஷயம் என்று தான் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஸ்பா, மசாஜ் என்பது மட்டுமே வெல்நெஸ் இல்லை என்ற எண்ணத்தை மாற்ற நினைத்தேன்’’ என்றவர் ஆரோக்கியம் குறித்த மாநாடு துவங்கிய காரணம் பற்றி விவரித்தார்.
‘‘ஒரு நோய் வரும் முன் அந்த பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இன்றைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறையினர், பல விதமான நோய்களின் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். அதைப் போக்கவே 2007ல் ரேடியன்ட் வெல்னெஸ் ஹெல்த் சென்டர் என்ற பெயரில் ஆரோக்கிய கூடம் ஒன்றை துவங்கினேன். இங்கு அனைத்து விதமான மாஸ்டர் செக்கப், உடற்பயிற்சி, யோகா மற்றும் டாக்டர்களின் ஆலோசனை எல்லாம் வழங்கி வந்தேன். ஆனால் மக்களுக்கு இங்கு நாங்க என்ன செய்கிறோம் என்பது புரியவில்லை. அப்போது தான் எனக்கு தெரிந்தது. நாம சொல்ல வேண்டிய விஷயத்தை மக்களிடம் வேறு விதமாக கொண்டு செல்ல வேண்டும் என்று.
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறார்கள். அதற்காக உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். ஆனால் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதாகவும் செய்தியினை படிக்கிறோம். உடல் ஆரோக்கியமாக, இருந்தும் ஏன் இந்த பிரச்னை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. உடலளவில் ஆரோக்கியமாக இருந்தாலும், மனதால் பெரிய உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல. அதை மக்களிடம் மாநாடு மூலம் எடுத்து செல்ல விரும்பினேன்.
காரணம், இது தற்போது மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டிய விஷயம். இன்றைய சூழலில் நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதே தெரியவில்லை. ஒரு பக்கம் வேலை பளு, மறுபக்கம் செய்யும் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்ற கேள்வி. அப்படி இருந்தும் நாம் இயந்திரங்கள் போல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஓட்டத்திற்கு ஒரு சின்ன பிரேக் அவசியம். ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பலருக்கு தெரியவில்லை. அதனால் நான் ஆரோக்கியத்தினை ஒன்பது அளவுருவாக பிரித்து, அதற்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்தோம். சொல்லப்போனால் இந்த ஒன்பது அளவுருகளும், நம்மை சுற்றி இயங்கக்கூடியது’’ என்றவர் அதனைப் பற்றி விளக்கம் அளித்தார். ‘‘வெல்நெஸ் ஆரோக்கியம் சார்ந்தது என்றாலும், அதற்குள் நாங்க பிரித்து இருக்கும் ஒன்பது அளவுருக்கள் பிசிக்கல், ஆன்மீகம், இன்டலெக்சுவல், சோஷியல், ஃபினான்ஷியல், ஆக்குபேஷனல், டெக்னாலஜி, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் எமோஷனல் என்பதாகும். இது குறித்து மாநாட்டில் பேச திட்டமிட்டோம். இவை ஒவ்ெவான்றும் ஒன்றை சார்ந்துதான் இயங்கும். நாம் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்போம். ஆனால் நாம் எதிர்பார்க்கும் பணம் நம்மிடம் இருக்காது. இதனால் ஒரு சிறிய மன உளைச்சல் ஏற்படும். நாளடைவில் அவர்கள் எமோஷனலாகவும் பாதிப்பு அடைவார்கள்.
ஒருநாள் நடைபெறும் மாநாட்டில், பிரபலங்கள் மற்றும் குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுனர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். அது டெட் டாக் அல்லது கலந்துரையாடல் போன்று இருக்கும். ஒன்பது துறையை சார்ந்தும் ஆலோசனை வழங்கப்படுவதால், குழப்பத்தில் இருக்கும் பலருக்கு ஒரு தெளிவு மட்டுமில்லாமல் பிரச்னைக்கான தீர்வும் கிடைக்கும். அதாவது, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சிறிய அளவில் ஸ்டார்டப் துவங்க விரும்புவாங்க.
ஆனால் அதை சக்சஸ்ஃபுல்லா செய்ய முடியுமா? என்ன செய்வது? இல்லை மற்றவர்கள் போல் வேலைக்கு சென்றுவிடலாமா? இப்படி பல கேள்விக்கான விடையினை இந்த மாநாடு வழங்கும். மேலும் மாநாட்டில் வரும் சிறப்பு விருந்தினர்கள் எதிர்காலத்தில் இவர்களுக்கு வழிகாட்டியாகவும் மாறி அவர்களின் பிசினஸில் முன்னேறுவதற்கான பாதையினை வழிகாட்டுவார்கள்.
அடுத்து பிசினஸ் துவங்கியாச்சு, நல்ல லாபம் வருகிறது. அதை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று திணறுபவர்களுக்கும் இங்கு தீ்ர்வு உண்டு. இதுபோல் நான் குறிப்பிட்ட ஒன்பது அளவுரு குறித்தும் விவாதங்கள் நடைபெறுவதால், ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பெறமுடியும்’’ என்றவர் இதனை முழுவதும் இலவசமாக நடத்தி வருகிறார். ‘‘இது எங்க நிறுவனத்தின் ஒரு பகுதி என்பதால், இதற்கான கட்டணங்களை நாங்க வசூலிப்பதில்லை. மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எங்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு மாநாட்டில் 400 நபர்கள் என்றால், அதுவரை உள்ள விண்ணப்பங்களை மட்டுமே தேர்வு செய்து அவர்களுக்கு நாங்க தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்போம். அவர்கள் நேரடியாக மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியினை ஆன்லைன் மூலமாக பார்க்கலாம், தங்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
இதில் பெரும்பாலானவர்கள் தாங்கள் கடந்த வந்த பாதை மற்றும் அதில் அவர்கள் சந்தித்த தடைகள் அதை எவ்வாறு தகர்த்தினர் என்பதை குறிப்பிடுவதால், ஒவ்வொருவரின் மனதிலும் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படும். ஒரு முறை மாநாட்டில் ஒரு பெண்மணி கலந்துக் கொண்டார். அவருக்கு வயது 50. பட்டதாரி, வேலைக்கு சென்றவர், திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என்று இருந்து விட்டார். இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்.
இந்த பெண்மணி தனிமையை உணர்ந்துள்ளார். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலை போக்க மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு முடிந்த போது, வயது என்பது ஒரு எண்ணிக்கை. இந்த வயதிலும் என்னால் சாதிக்க முடியும். கண்டிப்பாக எனக்கான சந்தோஷத்தை நான் மீட்டு எடுப்பேன் என்று மிகவும் பாசிடிவாக சென்றார். அந்த மாற்றத்தை தான் நான் எதிர்பார்க்கிறேன்.
வருடத்தில் ஒரு முறை மட்டும் மாநாடு நடத்தினால் மாற்றத்தினை ஏற்படுத்த முடியாது. அதனால் நாங்க சமூகவலைத்தளங்களிலும் அவ்வப்போது இது குறித்து பதிவு செய்து வருகிறோம். அதன் மூலம் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புகிறோம். அடுத்து சென்னை மட்டுமில்லாமல், பல ஊர்களிலும் மாநாடுகளை நடத்தும் எண்ணம் உள்ளது. இந்த மாற்றம் இப்போது சிறிய அளவில் இருந்தாலும், வரும் காலத்தில் பெரிய அளவில் புரட்சியினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றவர் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதும் அளித்து வருகிறார்.
ஷன்மதி
|