குழந்தைகளோட பிரச்னைகளை ஆசிரியர்கள் பேசணும்!
ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை அடையாளம் காண்பதைவிட மாணவர்களே சிறந்த ஆசிரியரை அடையாளம் காண்பார்கள் என்று சொல்வார்கள். அப்படியானவர்களில் ஒரு ஆசிரியர்தான் சாந்த ஷீலா. பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ‘நாங்கள் வாயாடிகளே’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். பள்ளியில் குழந்தைகளிடம் பேசும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் சேர்த்து ஒரு தொகுப்பாக்கி கட்டுரைகளாக வெளியிட்டு இருக்கிறார்.
சிறு வயது முதல் பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் ஆண் குழந்தைகள் இந்த சமூகத்திடம் இருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்கிறார்கள் என்பது குறித்தும் ஒரு உரையாடல் வடிவில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார் இந்த புத்தகத்தின் மையமாக. ‘‘நான் சேலம் பொண்ணு. படிச்சதெல்லாமே அங்க தான். சின்ன வயசிலேயே எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும். அதனால் நிறைய புத்தகங்களை படிச்சேன். நான் வாழ்ந்த பகுதியில் இருந்த பிற்போக்கான விஷயம் பல பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்ததுதான்.
நான் என் வீட்ல மூணாவது பெண் குழந்தையா பிறந்தேன். தொடர்ச்சியா பெண் குழந்தைகளா பிறந்தா அவங்களை வளர்த்து சீர் செய்து வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என்கிற காரணத்தினால என்னையும் கள்ளிப்பால் ஊத்தி கொலை செய்யலாம் என்ற எண்ணம் தான் இருந்திருக்கு. நான் கொஞ்சம் கலரா பிறந்ததால என்னை கொல்லாம விட்டுட்டதா பல பேரு என்கிட்ட சொன்னாங்க. இந்த மாதிரி ஒரு ஊருல பிறந்ததாலதான் இந்த அநீதிகளுக்கெல்லாம் எதிர்த்து போராடுணும் என்கிற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அதற்காக நான் நல்லா படிக்க தொடங்கினேன். அதோடு சமூகம் சார்ந்த புத்தகங்களையும் தேடித் தேடி படிச்சேன்.
குறிப்பா அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் புத்தகங்கள் எல்லாம் படித்து இந்த சமூகம் குறித்து தெரிந்து கொண்டேன். பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதும் வேதியியல் படிப்புகள் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அந்த துறையை தேர்ந்தெடுத்து படிச்சேன். சில காரணங்களால் என்னால் தொடர்ந்து அந்த துறையில் படிக்க முடியல. அதனால் அந்த படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு ஆங்கில துறையில் சேர்ந்து படிச்சேன். படிச்சு முடிச்சதும் எனக்கு ஆசிரியர் வேலை கிடைச்சது. அதற்கான ஆசிரியர் பயிற்சி சென்னையில் தான் நடந்தது.
டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் பெண்களுக்காக தொடங்கின விடுதியில் தான் தங்கி பயிற்சிக்கு சென்று வந்தேன். பயிற்சி முடித்த கையோட நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியரா வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணம் நடைபெற்றது. எங்களுடையது காதல் திருமணம். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு இருந்தது. அதை எல்லாம் தாண்டித்தான் நாங்க இரண்டு பேரும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டோம்’’ என்றவர் பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசுவது மற்றும் அது சார்ந்த புத்தகங்கள் எழுதுவது குறித்து விவரித்தார்.
‘‘நாம் வீடுகளில் பேசும் வார்த்தைகள், செய்யும் செயல்கள் எல்லாமே குழந்தைகள் பார்க்கிறார்கள். அதை அந்த குழந்தைகளும் அப்படியே பின்பற்றவும் செய்கிறார்கள். இதையெல்லாம் நான் என்னுடைய மாணவர்கள் பேசும் போது கேட்டிருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஆண்மகனை அவமதிப்பதற்கு பெண் பிள்ளை போல் புடவையை கட்டிக் கொள் என்று அதற்குறிய சொல்லான ‘பொட்டை’ என்று சொல்லி ஏசுவார்கள். இந்த வார்த்தையினை நான் குழந்தைகளிடம் அதிகம் கேட்டிருக்கிறேன். இந்த வார்த்தை ஒரு ஆண் மகனை திட்டுவதற்கு பயன்படுத்தினாலும், அவை பெண் குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.
அதாவது பெண்கள் என்றாலே ஆண்களை விட தாழ்வானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே சமயம் அதே வார்த்தை ஆண் குழந்தைகள் தங்களை பெருமிதமாக உணர வைத்து பெண்களை தங்களுடைய அடிமைகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் ஒரு நாளில் பாதி நேரம்தான் பள்ளியில் பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள். மற்ற நேரம் சமூகம் தான் அவர்களுக்கு பெரிய பள்ளிக்கூடமாக அமைகிறது. வீட்டில் நடக்கும் பிரச்னைகள் மற்றும் தன்னைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை பார்த்து அவர்கள் அதில் உள்ளவற்றை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பள்ளிகளில் பாடங்களை மட்டுமில்லாமல் அதையும் தாண்டி நல்லொழுக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
ஆணும் பெண்ணும் சமம் என்பது தான் என்னுடைய முதல் பாடமாக இருந்தது. பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் பேசத் தொடங்கினேன். ஒரு பெண் குழந்தை இரு விதமான வாழ்க்கை வாழவேண்டும். பெண் பருவமடைவதற்கு முன், பின் என அதை இரண்டு விதமாக பிரித்துக் கொள்ளலாம். பெண் குழந்தைகளை சிறு வயதில் இருக்கும் போது எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று பெற்றோர்கள் வீட்டில் அனுமதிக்கிறார்கள். ஆனால் அதுவே அவர்கள் பருவமடைந்த பின்னர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நிலைமை மாறுகிறது. அந்த குழந்தை சின்ன வயசில் இருந்து பார்த்து பழகிய சுற்றித் திரிந்த அந்த வாழ்க்கை இந்த இடத்தில் காணாமல் போகிறது.
பெண் பிள்ளைகள் படித்து கணவர் வீட்டிற்கு தானே சம்பாதித்து கொடுக்க போகிறார்கள் என்கிற எண்ணத்தாலே அவர்களை படிக்கவும் வைப்பதில்லை. ஆண் பிள்ளைகள் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்கிற எண்ணத்தினாலேயே வீட்டில் சமைக்கும் போது முதலில் ஆணை மட்டுமே சாப்பிடுவதற்கு அனுமதிக்கிறார்கள். ஆண்கள் அதிகமாக சாப்பிட்டால் அதை பெருமை என்று நினைக்கிற இடத்தில் பெண் இருந்தால் அதிகம் விமர்சிக்கப்படுகிறாள்.
உணவு விஷயத்திலும் பெண்களை இரண்டாம் இடத்திலே வைத்துள்ளோம். பெண்ணிற்கு பிடித்த உணவே என்றாலும் கடைசியில் தான் சாப்பிட வேண்டும் என்ற நிலைமைதான் இன்றும் பல இடங்களில் நிலவுகிறது. ஆனால் பெண் சார்ந்த உரிமைகளை பேசும் போது மட்டும் பொருளாதார நலன்களை முன்வைத்தே பேசுகிறார்கள். அதே சமயம் பொருளாதாரத்தை உருவாக்க பெண்களை அனுமதிப்பதில்லை. பள்ளிக் குழந்தைகளும் இதை பார்த்து வளர்வதால் அவர்களும் யாரும் சொல்லித் தராமலேயே இந்த சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த பழக்கம் பள்ளியிலும் பிரதிபலிக்கிறது. நான் குழந்தைகளிடம் பேசும் போது குழந்தைகள் எல்லோரும் தங்களை சுற்றியுள்ள சூழல் குறித்து பேசுகிறார்கள்.
முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வருகிறது. இது குறித்து குழந்தைகளுக்கு தனி வகுப்புகளும் நடத்துகிறோம். அதில் குழந்தைகளிடம் பேசும் போது தான் தெரிகிறது, அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொன்னால் பெற்றோர்கள் அவர்களை தான் திட்டுகிறார்கள். ‘நீ ஏன் அங்கப் போற... அவங்க அப்படித்தான் நடந்துக்குவாங்க... நீ பாத்து இரு’ என அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.
அதையும் மீறி சொன்னால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற பயம் காரணமாகவே இவர்கள் எதையும் பெற்றோர்களிடம் வெளிப்படையாக சொல்வதில்லை. இதற்காக நான் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து வகுப்பெடுக்கும் போது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வகுப்பெடுக்காமல் ஆண் குழந்தைகளையும் இணைத்து வகுப்பெடுக்கிறேன். இதோடு குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளை தடுப்பதற்காக கிராம அளவில் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பற்றியும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அடுத்து அவர்கள் உடுத்தும் உடைகள். ஆண்கள் அணியும் சட்டை அல்லது பேன்டில் பாக்கெட் வசதி இருக்கும். ஆனால் அதுவே பெண்கள் அணியும் உடையில் இருக்காது. பெண்கள் எந்த பொருட்களை எடுத்து சென்றாலும் அதை கைகளிலேயே எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களின் கவனம் முழுதும், கையில் வைத்துள்ள பொருட்களிலேயே இருக்கும். இது குறித்து வகுப்புகளில் பேசி பெண்களின் உடைகளிலும் பாக்கெட் வைத்து தைக்க ஆரம்பித்தோம்.
குழந்தைகள் சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகளை பற்றி தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அந்த பாகுபாடு எதற்கு என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள். அதற்கான பதில் சொல்ல வேண்டிய இடத்தில் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சரியான கல்வி எது என்றால் சமூகத்தில் நடக்கும் சிறுசிறு மாற்றங்களையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது தான் ஆசிரியர்களின் கடமை. நாம் பின்பற்றும் நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுப்பி அவர்களை சிந்திக்க வைப்பதும் ஆசிரியர்களின் கடமை. நம்முடைய கல்வி அமைப்பு முறை தேர்வுகளை அடிப்படையாக கொண்டது. அதனால் ஒருவருடைய தகுதி என்பது மதிப்பெண்களை வைத்து மட்டுமே கணக்கிடுகிறார்கள்.
ஆனால் ஒரு வகுப்பில் இருக்கும் மாணவர்களில் அனைவரும் ஒரே போல திறமையுடையவர்கள் கிடையாது. ஒரு மாணவருக்கு ஆளுமை திறன் இருக்கும். இன்னொரு மாணவருக்கு ஆய்வு சம்பந்தமான தேடல் இருக்கும். சிலருக்கு விளையாட்டு... இப்படி எல்லோரும் தனித்திறமை மிக்கவர்கள். அவர்களுடைய திறமைக்கு ஏற்ற வகையிலான இடத்திற்கு அவர்களுக்கான வழியை காட்ட வேண்டும். இதைத்தான் பல கல்வியாளர்கள் பேசியும் செய்து வருகின்றனர். இதை நோக்கிதான் என்னுடைய பணியும் உள்ளது’’ என்றவர் ஆசிரியர்களுக்கு வரும் பிரச்னைகள் குறித்தும் பேசினார்.
‘‘பல ஆசிரியர்கள் மாணவர்களாக இருக்கும் போது கழிவறைகள் சரியான முறையில் சுத்தப்படுத்தாமல் இருக்கும். இதனால் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது கழிவறையை பயன்படுத்தி விட்டு வந்தால் திரும்ப பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று தான் கழிவறைக்கு செல்கின்றனர். அப்போது செய்த அந்த செயலால் தற்போது நாற்பது வயதுக்கு மேல் சென்றவுடன் உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. பல ஆசிரியர்கள் இதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதோடு நாங்கள் பள்ளிகளில் சாதி பார்க்கக்கூடாது என வகுப்புகள் எடுக்கிறோம்.
ஆனால் பெற்றோர்கள் ஆசிரியர்களை சாதியாக பார்க்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பதைத்தான் பார்க்கிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்கக்கூடாது. நாங்கள் சாப்பாடு கொடுத்தால் வாங்கி சாப்பிடக் கூடாது என எங்களிடமே தீண்டாமையை கடைபிடிக்க சொல்லி பெற்றோர்கள் குழந்தைகளின் மனநிலையில் புகுத்துகின்றனர். இதில் பெற்றோர்களை மட்டுமே குற்றம் சுமத்தவும் முடியாது. சாதிய மனநிலை எல்லோரிடமும் இருக்கிறது. இதில் சமத்துவம் பேசுகிற ஆசிரியர்கள் எல்லாவற்றையும் தாண்டி பாடங்கள் எடுத்தும் குழந்தைகளை சமூக அக்கறையுள்ள மனிதர்களாக மாற்றுவதற்காக வழிகாட்ட வேண்டும்’’ என்றார் சாந்த ஷீலா.
செய்தி: மா.வினோத்குமார்
படங்கள்: ஷி.நாகராஜ்
|