ஒரு தெய்வம் தந்த பூவே!
குறிப்பிட்ட கற்றல் குறைபாடு (Specific learning Disability)
என் குழந்தை வளர்ந்துவிட்டான், வயதாகிறது, ஆனால் மற்ற குழந்தைகள் போன்று சரியாக படிப்பதில்லை, எழுதுவதில்லை அல்லது கணக்கு போட வரவில்லை என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இதற்கு காரணம் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு (Specific learning Disability). கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் சார்ந்த ஒரு நிலை. இது மூளையில் விவரங்களை அனுப்புகிற அல்லது பெறுகிற மற்றும் புரிந்து கொள்கிற திறனைப் பாதிக்கிறது.
 கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கு மற்றும் பொதுவாகவே எதையும் புரிந்து கொள்வதற்கு சிரமப்படலாம். ஆனால், இவர்கள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் சோம்பேறித்தனப் படுகிறார்கள் என பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் அறிவுத்திறன் குறைவானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. மற்ற எல்லா விஷயத்திலும் படு சுட்டியாக இருக்கும் இவர்கள் கற்றலில் மட்டும் சற்று பின்னடைந்து இருப்பார்கள்.
டிஸ்லெக்சியா குறைபாட்டை, வாசிப்பு குறைபாடு, எழுதுவதில் குறைபாடு மற்றும் கணிதக் குறைபாடு என வகைப்படுத்தப்படுகிறது. இந்தக் குறைபாடுகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் இணைந்தும் காணப்படலாம். வாசிப்பதில் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு புத்தகத்தில் வார்த்தைகள் தெரிந்தாலும், அதற்கான அர்த்தங்கள் புரிந்தாலும் அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாது. உதாரணத்திற்கு bat என்ற வார்த்தையைச் சொன்னால் அதற்கான அர்த்தத்தை, ஸ்பெல்லிங்கை உடனே சொல்வார்கள்.ஆனால் bat என்ற வார்த்தையை எழுதிக் காண்பித்து கேட்டால், அவர்களால் படிக்க முடியாது.
அதற்காக படிக்கத் தெரியாது என்று அர்த்தமில்லை. ஆங்கில எழுத்துக்களோ, தமிழ் எழுத்துக்களோ நன்றாகவே தெரியும். அந்த எழுத்துக்களைப் படித்து உள்வாங்கி பதில் கொடுக்க அவர்களால் முடியாது. சில குழந்தைகளுக்கு வார்த்தைகளை கூட்டி உச்சரிப்பதிலும் சொற்றொடராக படிப்பதிலும் சிரமம் இருக்கும். குறிப்பாக டிஸ்லெக்சியா குழந்தைகள் தேர்வில் குறைவாக மதிப்பெண் வாங்குவார்கள். அந்தப் பேப்பரில் எதுவுமே எழுத மாட்டார்கள். அதே குழந்தையிடம் கேள்வித்தாளை வாசித்து கேட்டால், அதற்கான பதில்களைச் சரியாகச் சொல்வார்கள்.
இது படிப்பதில் உள்ள குறைபாடு. நிறைய குழந்தைகள் எழுதுவதில் சிரமப்படுவார்கள். உதாரணத்திற்கு 6 ஐ 9 ஆகவும், ஆங்கில எழுத்து ‘b’ ஐ ‘d’ ஆகவும் ‘C’ ஐ தலைகீழாகவும் எழுதுவார்கள். நிறைய எழுத்துப் பிழைகள் செய்வார்கள். இவர்களுடைய பிழைகளைப் பார்த்தால் பொதுவான ஒரே மாதிரியான டைப்பாக இருக்கும். அடுத்து கணக்குப் பாடங்களில் எளிதாக செய்யக்கூடிய கூட்டல், கழித்தல், கணக்குகளை போடுவதில் சிரமப்படுவார்கள். வாய்ப்பாடு, கணக்கு சூத்திரங்கள், ஜியாமென்ட்ரி போன்றவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியாது. இவற்றை வைத்து இவர்களை மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் என்றோ, ஐக்யூ குறைவானவர்கள் என்றோ பெற்றோர்களும், ஆசிரியர்களும் முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
இவர்கள் பிறர் பேசும் பல்வேறு விஷயங்களை மிகவும் விரும்பிக் கேட்பார்கள். பின்பு, அவ் விஷயங்களுடன் தங்கள் கற்பனைகளையும் கலந்து பிறருக்கு விரிவாக விளக்குவதில் வல்லவர்கள். பிறர் பேசுவதை கேட்கும் அளவுக்கு தாங்களே புத்தகங்களை எடுத்துப் படிப்பதை விரும்ப மாட்டார்கள். பொதுவாக இக் குழந்தைகளுக்கு படிக்கத்தான் பிடிக்காதே தவிர, கற்பனைத்திறன் மற்ற குழந்தைகளைவிட அபரிமிதமாக இருக்கும். அதாவது இவர்களுக்கு கேள்வி ஞானமும், கற்பனை ஆற்றலும் அதிக அளவில் இருக்கும்.
இவர்களுக்கு மொழி, கணிதம், புதிர்கள், இலக்கணம், சூத்திரம் போன்ற விஷயங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால், வரலாறு, கலை, இலக்கியம், கவிதை, ஓவியம், இசை, விளையாட்டு போன்றவற்றில் அதிக திறமையானவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது கடினமான காரியம். நம் நாட்டு பள்ளிகளில் பெரும்பாலும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, எழுதுவது என்பன போன்றுதான் பாடத்திட்டம் இருக்கிறது. இதனால் இவர்களுக்கு பள்ளி வாழ்க்கை பிடிப்பதில்லை.
சிலர் பள்ளி செல்லவே அஞ்சுவார்கள்.இந்த குழந்தைகளுக்கு பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட பிடிக்கும். ஆசிரியர்கள் பாடத்தை விவரிப்பது பிடிக்கும். ஆனால், ஆசிரியர்கள் புத்தகத்தைப் பார்த்து படிக்கச் சொன்னால் பிடிக்காது. பாடங்களை எழுதச்சொன்னால் பிடிக்காது. ஒப்பிக்கச் சொன்னாலும் பிடிக்காது. ஆனால் இவர்கள் மிகவும் புத்திசாலிகள்.
உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசன் டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்தான். ஆனால் இக்குறைபாடு தெரியாமல் எடிசனின் தாயார் அவரை எவ்வாறு வளர்த்து உருவாக்கினார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உலகில் கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பலர், பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் உள்ளவர்களாக வளர்ந்துள்ளனர். இவர்களின் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தி பேசாமல், இவர்களின் மற்ற திறமைகளை வெளிக் கொண்டு வந்து அதற்கேற்றார் போல் இவர்களை மிளிரச் செய்வது பெற்றோரின் கடமை. கற்றல் குறைபாடுகள், குழந்தைகளுக்கு உடல் சார்ந்த நோய்களாலோ, மன நோய் காரணமாகவோ, கலாச்சாரப் பின்னணி காரணமாகவோ ஏற்படுவதில்லை. கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை பலவீனமாக அல்லது சோம்பேறித்தனமாக உள்ளது என்று அர்த்தமில்லை. அவர்கள் பாட்டு, நடனம், விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு திறன்களில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். கற்றலில் மட்டுமே சிரமத்தை சந்திப்பார்கள்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து 6 வயதை எட்டும் போது மட்டுமே அவர்களுக்கு கற்றலில் உள்ள குறைபாடுகள் தென்படும். அதுவரை துறுதுறு என்று இருந்த குழந்தை மதிப்பெண்ணில் சிக்கலை சந்திக்க ஆரம்பிக்கும். இந்த சூழலில் அவர்களை தண்டிப்பது, அவர்களை படி படி என்று வற்புறுத்துவது போன்ற செயல்கள் குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிக்கும். இவர்கள் கல்லூரி போன்ற உயர்கல்வி காலத்தை எட்டும்போது அடுத்து என்ன படிப்பது, எந்தத் துறையில் தனது பயணத்தை தொடர்வது என்பதில் பெரும் குழப்பத்தை எதிர்கொள்கின்றனர்.
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் புத்திக்கூர்மையற்றவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டு, அவர்கள் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் மற்றும் திறமையுடன் இருப்பார்கள். மதிப்பெண் பட்டியலுடன் மட்டுமே அவர்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அவர்கள் பலம் எது, விருப்பமான துறை எது என்பதை தெரிந்து அந்த துறையில் அவர்கள் வளர பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். விருப்பமும் திறமையும் உள்ள துறையில் அவர்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். பள்ளியில் படிக்கும்போதே தனித்திறன் சார்ந்த பயிற்சிகள் அளிப்பது அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.
கல்லூரிப் படிப்பிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத நிலையில் இவர்கள் மனதளவில் சிதைக்கப்படுகின்றனர். விருப்பம் இல்லாத ஒரு துறையில் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் போதும் பணி இடங்களில் தங்கள் பணி குறித்து ரிப்போர்ட் எழுதுவதில் இவர்கள் சிரமங்களை சந்திப்பார்கள். வேலையிடத்திலும் பெரியளவில் பெயர் எடுக்க முடியாது. அனிமேஷன் போன்று எவ்வளவோ புதுப்புது துறைகள் தற்போது வந்துவிட்டன.
அது போன்ற துறைகளில் இவர்களை ஊக்கப்படுத்துவது நல்லது. இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் கற்றல் குறைபாட்டையும் தாண்டி சாதிப்பதற்கான நேர்மறையான சூழல் நிறைய உள்ளது. பெற்றோர் செய்ய வேண்டியதெல்லாம் குறையை தாண்டி ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் திறமையை கண்டுபிடித்து வெளிக் கொண்டு வந்து அவர்களுக்கான திறமை மூலம் அவர்களது துறையில் அவர்களை சிறக்கச் செய்வதே நாம் அவர்களுக்கு காட்டும் வழி. ஒரு இரண்டரை வயதுக் குழந்தை 6 ஐ 9 ஆகவும் ‘b ‘ ஐ ‘d’ ஆகவும் எழுதுவது சகஜம். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதுவே 10 ஆவது வயதிலும் தொடர்ந்து குழந்தை அதே மாதிரி தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்சியா என்று டாக்டர் சொன்னவுடன் உடனே மூலையில் இடிந்து போய் உட்காராதீர்கள். இந்தப் பிரச்சனை உலகம் முழுவதும் இருக்கிறது. இந்த வார்த்தையே தெரியாமல் மாற்று வழிகளை கண்டுபிடித்து சாதித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளை புரிந்து கொள்ளவும் வழிகாட்டவும் நிறைய பள்ளிகள் தயாராகிவிட்டன. எனவே, பெற்றோரே உங்கள் குழந்தைகளை மட்டம் தட்டி பேசாமல் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அவர்களை சாதனையாளர்கள் ஆக்குங்கள்.
உஷா நாராயணன்
|