வன நாடு!






கேரளாவின் எந்தப் பகுதிக்குப் போனாலும் இயற்கை நம்மை ஏமாற்றுவதில்லை. அபரிமிதமான இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் கேரளாவில் வயநாடு ஒரு மாவட்டம். முற்றிலும் மலைகளால் ஆன இந்தப் பகுதியில் மிதமான குளிர், அதிகமான மழை ஆண்டு முழுவதும் நிலவுகின்றன. மலைகளை காடுகளும் தேயிலைத் தோட் டங்களும் ஆக்கிரமித்துள்ளன. உயர்ந்த மரங்களையும் மலை முகடுகளையும் தொட்டுச் செல்லும் மேகக்கூட்டங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஒரு  மழை வரும்போது திடீரெனத் தோன்றும் சிற்றருவிகள் மலைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பச்சை செடி கொடிகளுக்கு இடையே பல வண்ணக் காட்டுப்பூக்கள்...  அடடா! இவற்றோடு சாலை ஓரங்களில் வீடுகளிலும் வாசல்களிலும் தினுசு தினுசான பூச்செடிகளை வளர்த்து அழகு செய்திருக்கிறார்கள் மக்கள்.

வயநாட்டில் சுற்றுலா பகுதி என்று தனியாகச் செல்லவே தேவை இல்லை. பார்க்கும் இடங்கள் எல்லாம் பரவசம் தரக்கூடியவையே! இவற்றையும் மீறி அவசியம் பார்க்க  வேண்டிய சுற்றுலாத் தலங்களும் இருக்கின்றன. இவையும் இயற்கையின் அற்புதப் படைப்புகளே!
வயநாடு மாவட்டத்தின் தலைநகர் கல்பேட்டா. இங்கிருந்து கார், பேருந்துகளில் பயணம் செய்யலாம். குகை, அருவி, அணை என எந்தச் சுற்றுலாத் தலத்துக்குச் செல் வதென்றாலும் வாயிலில் இருந்து ஓரளவு நடக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டு நடந்து சென்றால் அற்புத அனுபவம் காத்திருக்கும்!
கல்பேட்டாவிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பூகோட் ஏரி. மரங்கள் சூழ்ந்த அழகான ஏரியில் பல வகை படகுச் சவாரிகள் செய்யப்படுகின்றன. மென்மையான  தூறலுடன் இதமான காற்றுடன் படகுச் சவாரி வாய்த்தால் அதை விட சந்தோஷமான விஷயம் எதுவும் இருக்க முடியாது! ஏரிக்குள் விதவிதமான மீன்கள் துள்ளி  விளையாடுவதைக் காணலாம். ஏரியின் கரையில் இருக்கும் மரங்களில் குரங்குகளின் ராஜ்ஜியம்! குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காவும் இங்கே இருக்கிறது.



பானாசுர சாகர் அணை கல்பேட்டாவிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய மண் அணை. பானாசுரா அணையைப்  பார்ப்பதற்கும் நடைப்பயிற்சி செய்வதற்கும் பலர் வருகிறார்கள். இங்கும் படகுச் சவாரி உண்டு. அருகில் உள்ள பானாசுர மலையில் மலை ஏற்றமும் செய்யலாம்.

20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது சூச்சிபாரா நீர்வீழ்ச்சி. போகும் வழியில் அழகிய தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து ரசிக்கலாம். சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து  அருவியை அடைய வேண்டும். பாறைகளால் ஆன இயற்கைப் படிக்கட்டுகளில் கவனமாக இறங்கினால் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சியின் முழுமையான காட் சியைக் காண முடியும். ‘ஹோ’வென்ற இரைச்சலும் சில்லென்ற தண்ணீரும் சிலிர்ப்பைத் தரும்... குளிக்கவும் அனுமதிக்கிறார்கள்.



இடக்கல் குகை 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. செங்குத்தான மலையில் ஏராளமான படிக்கட்டுகள் மீது ஏறிச் சென்றால் முதலில் ஒரு சிறு குகை வரும். அதைத்  தாண்டி மீண்டும் படிப் பயணம் செய்தால் அழகிய பெரிய குகைக்குள் நுழையலாம். குகைச்சுவர்களில் எழுத்துகள் பாசிபடர்ந்து காணப்படுகின்றன. இவை கி.மு. 6000  ஆண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. வெண்ணெய்க்கட்டியை வெட்டியது போல ஒரு பெரிய பாறை இரண்டாகப் பிளந்து, சூரியக் கதிர்களைச் செலுத்திக்கொண்டிருக்கி றது. ஒன்றாக இருந்த பாறை, பூகம்பத்தால் இப்படிப் பிளந்ததாகச் சொல்கிறார்கள்.
42 கி.மீ. தூரத்தில் முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயம் இருக்கிறது. கோடை காலங்களில் நிறைய விலங்குகளைத் தரிசிக்க முடியும். யானை, காட்டெருமை,  மான், சிறுத்தை, புலி, நரி போன்ற விலங்குகளைம் மயில் உள்ளிட்ட பறவைகளையும் காணலாம்.

இவை தவிர, மீன்முட்டி நீர்வீழ்ச்சி, தொல்பேட்டி சரணாலயம், பழமையான ஜெயின் கோயில், காரபுழா அணை, சன்ரைஸ் பள்ளத்தாக்கு... இப்படி இன்னும் ஏராளமான  இடங்கள் வயநாட்டில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பயணத்தில் அனைத்தையும் பார்த்து விட இயலாது. மீண்டும் உங்களை வரவழைக்கும் சக்தி வயநாடுக்கு இருக்கிறது!

எப்படிச் செல்வது?
கோழிக்கோடு வரை ரயில், பேருந்து பயணம். அங்கிருந்து பேருந்து, கார் மூலம் வயநாடு
செல்லலாம்.

எப்போது செல்வது?
கோடை காலங்களில் வனவிலங்குகளின் தரிசனம் கிடைக்கும். மற்றபடி ஆண்டு முழுவதும் செல்லக்கூடிய இடம் இது.

எங்கே தங்குவது?
வயநாடு முழுவதும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. வனக்காப்பகத்தின் மூலம் காட்டுக்குள் மரவீடுகளில் தங்கலாம்.

உணவு?
சைவ, அசைவ உணவுகள் கிடைக்கின்றன.

என்ன ஸ்பெஷல்?
தேங்காய் எண்ணெய், வாழைக்காய் சிப்ஸ், கருப்பட்டி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, இளநீர் என பல வண்ணங்களிலும் பல சுவைகளிலும் கிடைக்கும் கோழிக்கோடு அல்வா,  தேன், மிளகு, பழங்கள்...

தவறவிடக்கூடாத விஷயம்?
தேனில் ஊறிய நெல்லிக்காய், மூங்கில் அரிசி பாயசம்.