முதியவர்களையும் காதலியுங்கள்!
‘‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு’’
என்ற குறளில் பிறருக்கு செய்யும் உதவியே சிறந்த உதவி என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் வாய் மொழிக்கு ஏற்ப முதியோர்களை அரவணைத்து அவர்களுக்கு தன் இல்லம் மூலம் உதவி செய்து வருகிறார். முதியோர் இல்லம் இன்னும் நம்மூரில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
அதையே இப்போது கொஞ்சம் மார்டனாக மாற்றி ரெசிடென்ஷியல் ஹோம் என்று வடிவமைத்துள்ளனர். ஆனால் இதில் எல்லாம் வயதானவர்கள் இருந்தாலும் அது ஆரோக்கியமாக உள்ளவர்களுக்காகவே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மதுரையைச் சேர்ந்த ஜூலியட் லதா உடல் நிலை குன்றியவர்களுக்காக ‘மை பேரன்ட்ஸ்’ என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
‘‘சாதாரண சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்படும் முதியவர்களையே, வீட்டில் உள்ளவர்கள் வெறுத்து ஒதுக்கும் சூழல் தான் இங்குள்ளது. இதில் படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்களின் நிலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களுக்காகவே தான் நான் இந்த இல்லத்தினை துவங்கினேன்.
நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே மதுரையில் தான். இங்குள்ள நர்சிங் கல்லூரியில் நர்சிங் படிப்பு முடிச்சேன். படிப்பு முடிஞ்சதும் வீட்டில் திருமணம் பேசி முடிச்சாங்க. எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அனைவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். நான் நர்சாக மதுரையில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது நிறைய வயதானவர்கள் அங்கு சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, பேசும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வாங்க. வயதானால் அவர்களை நாம் குழந்தைகள் போல் தான் பார்த்துக் கொள்ளணும்னு யோசிப்பேன். ஒவ்வொரு நாள் நான் கேட்கும் இவர்களின் கதையினை அன்றிரவே என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன். நான் சொன்னதைக் கேட்ட என் கணவர் நாம் ஏன் நோய்வாய்ப்பட்ட வயதானவர்களுக்காக ஒரு இல்லம் ஆரம்பிக்கக்கூடாதுன்னு கேட்டார்.
மேலும் என் தந்தையும் மருத்துவர் என்பதால் அவருக்கு சகிப்புத் தன்மை அதிகம். நான் சின்ன வயதில் இருந்தே மருத்துவம் சார்ந்து பார்த்து வளர்ந்து வந்ததால், அப்பாவிடம் இருந்து சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொண்டேன். மேலும் என்னுடைய நர்சிங் படிப்பிற்கும் இது மிகவும் அவசியம். அதனால் நான், என் கணவர் மற்றும் என் தந்தை என அனைவரும் இவர்களை பார்த்துக் கொள்வதற்காகவே ஒரு இல்லம் ஆரம்பிக்க திட்டமிட்டோம்’’ என்றவர் இந்த இல்லத்தினை கடந்த 20 வருடமாக செயல்படுத்தி வருகிறார்.
‘‘எங்களிடம் வருபவர்களில் பலர் பராமரிக்க ஆட்கள் இல்லாமலும், உடம்பில் குணப்படுத்த முடியாத புண்ணோடு வருவார்கள். நான் அடிப்படையில் நர்சிங் படித்திருப்பதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை முதலுதவி என்ன என்று தெரியும். அதற்க ஏற்ப நான் சிகிச்சை அளிப்பேன். அதன் பிறகு அவர்களின் உடல் ரீதியான பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளிப்போம்.
இதனால் அவர்கள் எப்படிப்பட்ட நிலையில் வந்தாலும் நன்றாக கவனித்து குணப்படுத்துவது தான் எங்க வேலையே. இந்த மையத்தை துவங்கி 20 வருஷத்தில் பலதரப்பட்டவர்களை சந்தித்து விட்டேன். ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வரும் போது மற்றவரின் பெற்றோராக வருவார்கள். இங்கு வந்தபின் என்னுடைய பெற்றோராக மாறிடுவாங்க. எனக்கென்று இந்த மையத்தில் தனிப்படுக்கை என்று கிடையாது. யாரிடமாவது பேசிக் கொண்டு இருப்பேன். அப்படியே அவர்கள் படுக்கையிலேயே படுத்து தூங்கிடுவேன். அதேபோல் அவங்க சாப்பிடும் போது அவர்களுடன் சேர்ந்து தான் சாப்பிடுவேன். இப்படித்தான் இருக்கும் எனக்கும் அவர்களுக்குமான உறவு முறை. இத்தனை ஆண்டுகளில் நிறைய மறக்க முடியாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் தான் அவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்று மருத்துவர்கள் சொல்லி இருப்பார்கள். அதனால் அவர்களை வைத்து பார்த்துக் கொள்ள முடியாதுன்னு எங்க இல்லத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள். மருத்துவர்கள் அப்படி சொன்னாலும் நாங்க அவங்களை அரவணைத்துக் கொள்வோம். எங்களால் முடிந்த முதலுதவியினை செய்வோம்.
அவர்களுக்கு மருத்துவத்தை தாண்டி அன்பான பேச்சு மற்றும் அரவணைப்பு தான். அது தான் அவர்களின் உயிர் மூச்சுன்னு நான் சொல்வேன். அதை நாங்க கொடுப்பதால், அவர்கள் மருத்துவர்கள் சொன்ன கெடுவினைத் தாண்டி ஒரே மாதத்தில் நல்லபடியாகி விடுவார்கள். குணமானதும் சிலர் வந்து அழைத்து சென்றுவிடுவார்கள். ஒரு சிலர் இங்கேயே விட்டுவிடுவார்கள். அதில் ஒரு சிலர் வீட்டுக்கு ெசல்ல மறுத்துவிடுவார்கள். எங்கள் இல்லத்தின் தொலை பேசி இணையத்திலும் உள்ளது. அதைப் பார்த்து ஒரு சிலர் அணுகுவார்கள். ஒரு சிலர் எங்களை நேரடியாக வந்து அழைத்து செல்ல சொல்வார்கள்.
நாங்கள் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து விடுவோம். இவர்களில் நிறைய பேர் நல்ல பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள். ஓய்வுக்குப் பின்னர் அவர்களை பார்த்துக் கொள்வதற்கும் பராமரிப்பதற்கும் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் எங்கள் இல்லத்தில் நிறைய பேர் இருக்காங்க. மேலும் எங்க இல்லத்தில் தங்கும் ஒவ்வொரு முதியோருக்கும் தனிப்படுக்கை வசதி கொண்ட அறைகள் உள்ளன. மூன்று வேளையும் சத்தான உணவு, காலை மாலை இருவேளை தேனீர், மேலும் உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு தனிப்பட்ட உணவு தருவோம்.
சாப்பாடு மட்டுமே முக்கியமில்லை. இவர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரமாகவும் இருக்கணும். அதனால் தினமும் அவர்களை குளிக்க வைக்க ஆட்கள் உள்ளனர். மேலும் அவர்களின் ஆடை மற்றும் படுக்கையில் பயன்படுத்தும் பெட்ஷீட் அனைத்தும் தினமும் துவைக்கப்படும். நல்ல உணவு மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடித்தாலே பாதி நோய் பறந்திடும். சிலரால் தானாக சாப்பிட முடியாது. அவர்களுக்கு நானே ஊட்டி விடுவேன். மேலும் என் கணவர் சித்த மருத்துவர் என்பதால், இவர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவையும் இருக்கும். அன்பிற்காக மட்டுமே ஏங்கும் இவர்களை நாங்க குடும்பமாக பார்த்துக் கொள்கிறோம்’’ என்றார் ஜூலியட் லதா.
கம்சலா
|