குழந்தைகளை ஆக்டிவாக்கும் கலர்ஃபுல் ஆக்டிவிட்டிஸ்!
பனிக்காலம் என்பதால் குழந்தைகளை காலையிலும் மாலையிலும் அதிகம் வெளியே கூட்டிச் செல்ல முடியாது. கூடவே கொரோனா அச்சுறுத்தல் வேறு. இந்நிலையில் நம் குழந்தைகளை எப்படி வீட்டில் எங்கேஜ் செய்து பொழுதினைப் போக்குவது என்பது பெரிய தலைவலிதான் இன்றைய நவீன பெற்றோர்களுக்கு...அத்தலைவலியை முடிந்தவரை போக்கிட நம் குழந்தைகளை எப்படி ஒன்றில் ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்வது என்பதற்கு உதாரணமாக இங்கே ஏழு விளையாட்டுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
1. குதிக்கும் வட்டம்
வட்டம் வட்டமாக சாக்பீஸ் துண்டால் தரையில் (மொட்டை மாடி சிறந்த தேர்வு) வரைந்து கொள்ள வேண்டும். பின் குழந்தையை ஒவ்வொரு வட்டமாக தாவி குதிக்கச் சொல்ல வேண்டும்.
மாற்றங்கள்
*வண்ணங்களை கற்றுக் கொடுக்க நினைக்கும் பெற்றொர்கள் வண்ண சாக்பீஸ் துண்டுகள் வைத்து வட்டங்களை வரையலாம்.
*முதல் வரிசையில் ஒற்றை வட்டமும், இரண்டாம் வரிசையில் இரண்டு வட்டம் போன்றும் வரைந்தால் கால்களை அகல விரித்தும் சேர்த்தும் குதிக்கச் சொல்லலாம்.
பயன்கள்
* அதிக ஆற்றல் தேவைப்படுவதால் குழந்தைகள் விளையாடி முடித்ததும் நல்ல பசி எடுக்கும். * ஸ்திரத் தன்மை (body balance) அதிகரிக்கும். வயது: 3 வயது முதல் எந்த வயது குழந்தைகளுக்கும் செய்யலாம்.
2. பருப்பு பொம்மை
வீட்டில் உள்ள துவரம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு... மீன், வீடு போன்ற உருவங்களை சாக்பீஸால் வரைந்து அதன் மேலே வரிசையாக அடுக்கச் சொல்ல வேண்டும்.
மாற்றங்கள் : * சங்கு உருவம், நீட்டு உருவம் கொண்ட பாஸ்தாக்களை அடுக்கச் சொல்லலாம். * க்ளே, கோதுமை மாவு (பிசைந்தது) போன்றவை பயன்படுத்தலாம்.
பயன்கள்
* சிறிய பொருட்களை கையால்வதால் நுண் வேலைகள் (உதாரணமாக, சட்டை பொத்தான் போட்டுக் கொள்வது) செய்ய உதவும். * பொறுமை மனப்பான்மை வளரும். வயது: இரண்டரை வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் விளையாடலாம்.
3. நாற்காலி கடை
பெரிய அளவு நாற்காலியில் அதிக எடை கொண்ட கூடை ஒன்றை வைக்க வேண்டும். அதில் விளையாட்டுப் பொருட்களை போட்டு, நாற்காலியை அறையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை இரு கைகளாலும் இழுத்து (Push) வரச் சொல்லவேண்டும். பின் மீண்டும் மறுமுனைக்கு தள்ளிப்போக (Pull) சொல்ல வேண்டும். (உதாரணமாக, காய் கனிகள் விற்பது போன்று பாவனை செய்து செய்யச் சொன்னால் ஆர்வத்துடன் குழந்தைகள் செய்வார்கள்).
மாற்றங்கள்
* பக்கெட், அண்ணக்கூடை போன்றவற்றில் கனமான பொருட்களை அல்லது கால்வாசி நீர் நிரப்பி அதனை இழுக்கச் சொல்லலாம். * நாற்காலியில் பெரிய பத்து புத்தகங்களை வைத்து இழுத்து வந்து மற்றொரு முனையில் உள்ள மேசை மீது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புத்தகத்தை வைக்கச் சொல்லலாம்.
பயன்கள்
* உடம்பில் உள்ள அனைத்து தசைகளும், எலும்புகளும் பலம் பெரும். * விற்பனையாளர் போன்று விளையாடுவதன் மூலம் கற்பனை திறன் வளரும்.
4. கண்ணாமூச்சி ரேரேவிதவிதமான பூக்களை ஒரு கூடையில் போட வேண்டும். பின் குழந்தையின் கண்களை கட்டிவிட்டு ஒவ்வொரு பூவாக கைவிட்டு எடுத்து தொட்டுப் பார்த்து அது என்ன பூ என சொல்ல வேண்டும்.
மாற்றங்கள்
* காய், கனிகளை பயன்படுத்தலாம். * வீட்டுப் பொருட்களான சாவிக் கொத்து, டீ ஸ்பூன், துணி க்ளிப் போன்றவற்றை கலவையாகப் போட்டு பயன்படுத்தலாம்.
பயன்கள்
* கண்களை மூடி ஒரு விளையாட்டில் ஈடுபடுவதால் சிந்தனை திறன் அதிகரிக்கும்.
* விதவிதமான தொடு உணர்வுகளை அறிவதோடு, பொருட்களின் பெயரையும் தெரிந்துகொள்ளலாம். வயது: 4 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் விளையாடலாம்.
5. துப்பட்டா நடை
துப்பட்டா அல்லது போர்வை போன்ற பெரிய துணிகளை விருப்பத்திற்கு ஏற்ப தரையில் வளைத்து வைக்க வேண்டும். பின் அதன் மேல் குழந்தையை ஒவ்வொரு அடியாக அடி மேல் அடி வைத்து நடந்து வரச் சொல்ல வேண்டும்.
மாற்றங்கள்
* துடைப்பம் குச்சிகள் அடுக்கி அதில் நடக்க வைக்கலாம். * ஒற்றைக் காலில் குதித்து வர சொல்லலாம்.
பயன்கள்
* உடல் முழுதும் சுறுசுறுப்பாக, கவனத்துடன் இயங்கும். * கால் தசைகள் வலுப்பெறும். வயது: 3 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் விளையாடலாம்.
6. பேப்பர் பந்து
சைனீஸ் சாப் ஸ்டிக் போல குச்சிகளை எடுத்துக் கொள்ளவும். பின் பேப்பர்களை பந்து போல் கசக்கி உருட்டி மேசையில் வைத்துவிட வேண்டும். குழந்தை தன் இரு கைகளிலும் குச்சிகளைப் பிடித்து பந்தினை மேசை மேல் உள்ள கூடையில் போட வேண்டும்.
மாற்றங்கள்
* வண்ணங்கள் கற்றுக் கொடுக்க நினைப்பவர் வண்ணப் பேப்பர் பந்துகள் உபயோகிக்கலாம். * கொஞ்சம் பெரிய பிள்ளைகளாக இருப்பின் இரண்டு ஸ்பூன்களை வைத்து தோசைத் துண்டுகளை எடுத்து இன்னொரு தட்டில் வைப்பது போன்று செய்யலாம்.
பயன்கள்
* எளிதில் எழுத, வரைய கற்றுக்கொள்ள முடியும். *ஸ்பூனில் சாப்பிட எளிதில் முடியும்.
வயது: 2 1/2 வயதிற்கு மேல் உள்ள மழலைகள் முதல் விளையாடலாம்.
7. குரங்கு ஆட்டம்
தரையில் சிறிய வட்டம், முக்கோணம் போன்றவை வரைய வேண்டும். பின் வட்டத்தில் இடது கை, சதுரத்தில் வலது கால், முக்கோணத்தில் வலது கை என கட்டளை இடவேண்டும்.
மாற்றங்கள்
* எண்களை கற்றுக் கொடுக்க நினைப்பவர்கள் வடிவங்களை நான்கு நான்காக வரைந்து அதில் ஒவ்வொரு வடிவத்திலும் ஒன்று, இரண்டு, மூன்று என எழுதலாம். (உதாரணமாக, ஒன்றிட்ட வட்டத்தில் வலது கை, மூன்றிட்ட முக்கோணத்தில் இடது கால் என மாற்றி மாற்றி சொல்லி விளையாடலாம்). * வண்ண சாக்பீஸ் பயன்படுத்தலாம். (உதாரணமாக, மூன்றாவது பச்சையில் இடது கால், இரண்டாம் மஞ்சளில் வலது கை என சொல்லி விளையாடலாம்).
பயன்கள்
* புதுப்புது வடிவத்திற்கு உடல் செல்லும்போது உடலும், மூளையும் சேர்ந்து வேலை செய்வதால் குழந்தைகள் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். படிப்பதற்கு முன்பு இதனை பத்து நிமிடம் விளையாடிவிட்டு படித்தால் குழந்தைகள் அசத்தலாக படிப்பார்கள். * உடம்பின் ஸ்திர தன்மை (balance) அதிகரிப்பதால் சைக்கிள் ஓட்டுவதற்கு, கராத்தே போன்ற தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வதற்கு சுலபமாக இருக்கும். வயது: 4 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் விளையாடலாம்.
மொத்தத்தில்...
* சாதாரண விளையாட்டுகள் மாதிரி இவை தெரிந்தாலும் குழந்தைகளை அடுத்தடுத்த வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவக்கூடியது என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
* மேலும் இவற்றை துறுதுறு குழந்தைகள் (Hyper active kids), ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகள் இருக்கும் சிறப்பு குழந்தைகளும் தாராளமாக விளையாடலாம். இதனால் அவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
* அத்தோடு குழந்தைகளுக்கான இயன்முறை மருத்துவர்களிடம் எந்த மாதிரியான விளையாட்டுகள் தம் குழந்தைகளுக்கு தேவை, என்னென்ன விளையாட்டினை அவர்களை விளையாட வைக்கலாம் போன்றவற்றை கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியம்.
* மிக முக்கியமாக எப்போதும் வீட்டில் இருக்கும் பத்து பொம்மைகளை கொடுத்து விளையாடச் சொன்னால் அவர்களுக்கு சலிப்புதான் வரும். இந்த மாதிரியான விளையாட்டுகள் ஆர்வத்தை உண்டாக்குவதோடு மட்டுமன்றி அவர்களின் உடல், மூளை மற்றும் மன வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன என்பதனை பெற்றோர்கள் புரிந்து செயல்பட்டால் நம் வீட்டுப் பிள்ளைகளும் இனி சமத்துப் பிள்ளைகள்தான்.
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
|