நியுஸ் பைட்ஸ்
லிவ்விங் அப்பார்ட் டுகெதெர் (Living Apart Together)
லிவ்விங் டுகெதெர் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் லிவ்விங் அப்பார்ட் டுகெதெர் எனும் வாழ்க்கைமுறை இப்போது இளைஞர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. லிவ்விங் டுகெதெரில் திருமணமாகாத காதல் ஜோடி சேர்ந்து வாழ்வார்கள். ஆனால், லிவ்விங் அப்பார்ட் டுகெதெரில் திருமணமான தம்பதிகள் தனித்தனியாக வாழ்ந்து வார இறுதிகளில் மட்டும் சந்தித்துக்கொள்கின்றனர்.
சிலர் திருமணமான முதல் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் மட்டும் பிரிந்து வாழ்ந்து குழந்தைகள் பிறக்கும் சமயம் ஒன்றாக வாழ்கின்றனர். இந்த வாழ்க்கைமுறை தம்பதிகளிடையே காதலை அதிகரிப்பதாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவதாகவும் தெரிவிக்கின்றனர். குடியரசு தினத்தில் அம்பு எய்தி சாதனை
வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சென்னையில் வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த முத்து செல்வி என்ற பெண், குடியரசு தினத்தில், வேலுநாச்சியார் போல வேடமிட்டு குதிரையின் மீது அமர்ந்து தொடர்ந்து மூன்று மணி நேரம் அம்பு எய்தி சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த சாதனை யுனிக்கோ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மால்களில் பார்க்கிங் கட்டணத்திற்கு தடா
நாடு முழுவதும் மால்களில் அதிகப்படியான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது நமக்கு தெரிந்ததுதான். கேரளாவில் இது சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவில், மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கேரள நகராட்சி விதிகளின்படி, பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் - 2021
2021ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார், பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர், சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர், சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன், உமறுப்புலவர் விருது - திரு நா. மம்மது, கி.ஆ.பெ. விருது - முனைவர் ம. இராசேந்திரன், கம்பர் விருது - திருமதி பாரதி பாஸ்கர், ஜி.யு.போப் விருது - திரு ஏ.எஸ். பன்னீர்செல்வம், மறைமலையடிகள் விருது - திரு.சுகி.சிவம், இளங்கோவடிகள் விருது - நெல்லைக் கண்ணன், அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸுக்கும் வழங்கிட அறிவிக்கப்பட்டது.
காவலர் ராஜேஸ்வரிக்கு விருது!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் விடாமல் கொட்டித் தீர்த்த மழையில் பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்த இளைஞரைத் தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் வீடியோ நாடு முழுவதும் வைரல் ஆனது.
அவர் இதற்கு முன் தன் பணியின் போது பல வீரதீர செயல்களைச் செய்ததும் கண்டறியப்பட்டது. ராஜேஸ்வரியின் செயல் தமிழக காவல்துறைக்கே பெருமை சேர்த்துள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து குடியரசு தினத்தில் அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
ஸ்வேதா கண்ணன்
|