அழகுப் போட்டிக்கு வயது, நிறம்,தோற்றம் தடை இல்லை!



‘‘காரைக்குடியில் 12வது படிக்கும் போது, நான் தான் எங்கள் மாவட்டத்திலேயே முதலிடம். நாக்பூரில் என்.ஐ.டியில் பி.டெக். ஐ.ஐ.ஐ.டி. பெங்களூரில் எம்.டெக் என மேற் படிப்புகளையும் படித்து முடித்து, இப்போது சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் முன்னணி தரவு பொறியாளராக பணியாற்றி வருகிறேன்” எனப் பேசத் தொடங்குகிறார் பவித்ரா வெங்கட்ராமன். ‘திருமதி தமிழ்நாடு’ அழகி பட்டத்தை வென்று, சமீபத்தில் நடந்த ‘திருமதி. இந்தியா’ அழகிப்போட்டியிலும் 2-ம் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய பவித்ரா, ‘‘சிறு வயதிலேயே இசை, பரதநாட்டியம், யோகா எனப் பல கலைகளை முறையாகப் பயின்றுள்ளேன். ஆனால் கொஞ்சம் வளர்ந்ததும் வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது. மற்ற கலைகளுக்கு நேரம் இருக்கவில்லை. படிப்பு முடிந்து வேலை, திருமணம் என வாழ்க்கை பிஸியானது. எனக்கு இப்போது ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார். நான் கருவுற்ற போது என்னால் தொடர்ந்து வேலைக்கு போக முடியவில்லை.

அதனால் குழந்தை பிறக்கும் போது மகப்பேறு விடுப்பு எடுத்தேன். குழந்தையை பார்த்துக் கொண்ட சமயம் போக நேரம் இருந்ததால், நான் பொழுதுபோக்கிற்காகப் பயின்ற கலைகள் மீது என்னுடைய கவனம் திரும்பியது. பள்ளிப் படிப்பு அதைத் ெதாடர்ந்து கல்லூரி வாழ்க்கை... வேலை என வாழ்க்கை முறையே மாறி இருந்தது. அதனால் எனக்கு கிடைத்த நேரத்தை என் வேலை சாராத பிற துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் திருமதி தமிழ்நாடு அழகிப் போட்டி நடக்க இருப்பது குறித்து என் கணவர் என்னிடம் தெரிவித்தார். என்னை அதில் பங்கேற்கவும் ஊக்கமளித்தார்.

பொதுவாக  அழகிப்போட்டியில் அழகு என்பது மையப்படுத்தப்பட்டு இருக்கும் என்று தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அழகை மட்டுமே டார்கெட் செய்யாமல் ஒருவரின் அனுபவம், அறிவாற்றல், குணாதிசயம், ஆளுமை, சமூக பொறுப்பு, திறமைகள் போன்ற பல கோட்பாடுகளின் அடிப்படையில் தான் அழகிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் வெளித்தோற்ற  அழகின் பங்கு மிகவும் குறைவுதான்.

அதனாலேயே நான் இதில் கலந்து கொண்டு பட்டமும் வென்றேன். திருமதி தமிழ்நாடு போட்டியில் வென்றவர்கள், திருமதி இந்தியா போட்டியில் கலந்துகொள்ள முன்னேறுவார்கள். திருமதி இந்தியா போட்டியில் தேர்வானதும் அதில், பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சி நடத்தப்படும். அதற்கு நாம் ஏதாவதொரு தலைப்பில் பேச வேண்டும். நான் தேர்ந்தெடுத்த தலைப்பு ‘பாலியல் புரிதல்’.

பாலியல் எனும் தலைப்பை எப்போதுமே ரகசியமாக பேச வேண்டிய விஷயமாக இந்த சமூகம் மாற்றி வைத்துள்ளது. குறிப்பாக பெண்களின் பாலியல் அனுபவங்களும், அவர்களின் உணர்ச்சிகளையும் பெண்களே அவர்கள் தோழிகளுடன் பேச தயங்குகின்றனர். அதனால், பாலியல் புரிதல் குறித்த முக்கிய தகவல்களையும், சமூக ரீதியான அதன் கோட்பாடுகளையும் என்னுடைய சொந்த அனுபவங்களையும் இணைத்து ஒரு பேச்சை உருவாக்கினேன்.

இந்த தலைப்பைத் தேசிய அளவிலான ஒரு மேடையில் பேசும் போது, அதைத் தெளிவாகவும் அதே நேரம் யாருடைய உணர்ச்சிகளையும் கொச்சைப்படுத்தாமல், புண்படுத்தாமல் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது மிகவும் சவாலாகவே இருந்தாலும், போட்டியின் முடிவில் பார்வையாளர்களின் கரகோஷம், நாம் சமூகத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு முக்கிய தலைப்பின் துவக்கப்புள்ளியாக இருந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக இருந்ததுஉடை மறுசுழற்சி, உடை மறுபயன்பாடு சார்ந்த ஒரு போட்டியும் நடந்தது.

போட்டியாளர்கள் அவர்களின் மாநிலத்தை பிரதிபலிக்கும் உடைகளை மறுசுழற்சி/மறுபயன்பாடு செய்து அணிய வேண்டும். அப்போது எனக்கு மதுரை மீனாட்சி அம்மன் நியாபகம்தான் வந்தது. மேடையில் நடந்து வரும் போது நளினமாகவும் வீரமாகவும் தோற்றமளிக்கக் கூடியது எனக்கு மிகவும் பிடித்த மதுரை மீனாட்சி அம்மன் தான்.

கடவுளைத் தாண்டி, அவள் மதுரையை ஆண்ட அரசி. பாண்டிய நாட்டில் தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பெரும் பங்களிப்புகளைக் கொடுத்துள்ளார். வீரத்தில் சிறந்த மதுரை மீனாட்சி தன் நாட்டிலிருந்து பெரிய படையுடன் கிளம்பி கயிலை மலை வரை சென்று வென்றதாகக் கூறப்படுகிறது.

சக்தியின் மற்றொரு அவதாரமான மீனாட்சி, கயிலை மலையில் சிவனைப் பார்த்ததும், தன்னை முதல் முறையாக ஒரு பெண்ணாக உணர்ந்து சிவன் மீது காதல் வயப்பட்டதாக புராணம் கூறுகிறது. அவள் கையில் வைத்திருக்கும் கிளியும், தாமரையும் கூட காதலைத்தான் குறிப்பிடுகிறது. இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு ஃபேஷன் ஷோவில் பங்குபெற முடிவு செய்தேன். என் பாட்டியின் பெயர் மீனாட்சி. அவரும் மதுரையைச் சேர்ந்தவர்தான். அதனால் என் பாட்டியின் பழைய பச்சை பட்டுப் புடவையை அம்மன் உடுத்தும் உடை போலத் தயாரித்து அணிந்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

திருமதி அழகிப்போட்டியைப் பொறுத்த வரை, அழகு என்றாலே அது ஒருவரின் வாழ்க்கைமுறை, குணம், ஆளுமை போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தான் பார்க்கின்றனர். திருமணமானவர்களுக்காகவே நடத்தப்படும் இந்த போட்டியினை மூன்று பிரிவாக பிரித்து நடத்துகிறார்கள். 40 வயதிற்குப்பட்டவர்களை திருமதி இந்தியா பிரிவிலும், 40-60 வயதினரை க்ளாசிக் திருமதி இந்தியா என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை சூப்பர் க்ளாசிக் என்று பிரித்து மதிப்பிடுகின்றனர்.

பொதுவாகவே படிப்பில் சற்று குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் தான் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அழகிப் போட்டிகளில் பங்குபெறுவார்கள் என்ற தவறான கருத்தும் நிலவி வருகிறது. என் சக போட்டியாளர்களில் பலர் சிறந்த மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பவர்களாகவும், திறமையான இல்லத்தரசிகள் என பலதரப்பட்ட ஆளுமை பெண்கள் கலந்துகொண்டனர்”  என்கிறார்.  

நடிப்பில் ஆர்வம் கொண்ட பவித்ரா வெங்கட்ராமன், மீடியா மற்றும் விளம்பரத் துறைகளில் நடிப்பு, தொகுப்பாளினி, மாடலிங் என சாதிக்க தயாராக இருக்கிறார். திருமணம் முடிந்த பெண்கள் யார் வேண்டுமானாலும் திருமதி தமிழ்நாடு போட்டியில் கலந்துகொள்ளலாம். அதில் தேர்ச்சி பெற்றதும், திருமதி இந்தியா போட்டியில்  பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டிக்கு வயது, நிறம், தோற்றம் என எந்த தடையும் இல்லை என்கிறார் பவித்ரா.

ஸ்வேதா கண்ணன்