கிச்சன் டிப்ஸ்



* உளுந்து வடை செய்யும் போது ஒரு கரண்டி சாதத்தைப் போட்டு அரைத்து வடைதட்டினால் மொறு மொறுவென்று ருசியாகவும் தட்டும் போது கையில் ஒட்டாமலும் இருக்கும்.
* முட்டைக் கோஸ் சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணமும் மாறாமல் சுவையாக இருக்கும்.
* காபி டிகாஷன் மிஞ்சி விட்டால் கீழே கொட்டி விடாமல், அதில் சிறிது சர்க்கரையைப் போட்டு மூடிவைக்க, மறு நாள் புதிதாகப் போட்ட டிகாஷன் போல சுவையாக இருக்கும்.
* தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது அதனுடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைக்க சட்னி கமகம வென்று இருக்கும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முளைக்கீரையை சிறிது வதக்கி விட்டு, கோதுமை மாவுடன் கலந்து பிசைந்தால் சப்பாத்தி பச்சை வாசனையின்றி இருக்கும்.
* கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்து, இட்லித்தட்டில் வேக வைத்து எடுத்து, பொரியல்களில் சேர்த்துக் கிளறினால் சுவை கூடும். காய்கறிக் கூட்டு போலிருக்கும்.
* மளிகைப் பொருட்களை எவர்சில்வர் அல்லது கண்ணாடிப் பாத்திரங்களில் வைத்தால் கெடாமல் இருக்கும். பிளாஸ்டிக் டப்பாக்களைத் தவிர்ப்பது நல்லது.

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

* வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால் கூட்டு கறிகளை இறக்கும்போது லேசாகத்தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.
* பருப்புடன் சிறிது எண்ணெயும், சிறிது பெருங்காயத்தூளையும் சேர்த்து வேக விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
* பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம், மூன்று பூண்டுப்பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றை நைஸாக அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் சுவையோ சுவை.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* தக்காளி சட்னி செய்யும்போது அதில் கொஞ்சம் எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால், ருசி சூப்பராக இருக்கும். அதோடு கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறைக் கலந்தால் ருசி அதிகமாக இருக்கும்.
* பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலித்தீன் பையில் நன்றாக சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், ஒருவாரம் ஆனாலும் மொறுமொறுப்பு மாறாமல் அருமையாக
இருக்கும்.
* ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகித்த பிறகு, தோலை எறிந்துவிடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

- ஆர்.கீதா, சென்னை.

* வடை, போண்டா போன்றவற்றை வாணலியில் பொரிக்கும்முன் வாணலியில் சிறிதளவு  உப்பைத்  தூவி விட்டால்,  வாணலியின் அடிப்புரத்தில் உணவுப் பொருட்கள் ஒட்டிக்கொள்ளாது.
* சப்பாத்திகள் மீந்துவிட்டால் காய வைத்து, மிக்ஸியில் பொடித்து, தேவைக்கேற்ப வெல்லப்பொடி சேர்த்து, சூடான நெய் விட்டுக் கலந்து லட்டுகள் பிடிக்கலாம்.
* சீரகம், உப்பு, காய்ந்த கறிவேப்பிலை மூன்றையும் கலந்து பொடித்து, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் வயிறு மந்தம் ஏற்படாது.  பசி எடுக்கும். பொரியலிலும் தூவலாம்.

- எஸ்.ராஜம், ரங்கம்.

* சுண்டல் செய்தபின் அதன்மேல் காrரா பூந்தியை தூவினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.
* பாகற்காய் பொரியல் செய்யும்போது கேரட் வெங்காயம் துருவிப்போட்டு நிறைய கறிவேப்பிலையை சேர்த்தால் கசப்பே தெரியாது.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், கொளத்தூர்.

*தக்காளி, எலுமிச்சை பழம் சீக்கிரம் கெடாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
* ஒரு டப்பாவில் சிறிது சர்க்கரையைத் தூவி அதில் பிஸ்கட்டை வைத்தால் பிஸ்கட் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.

- எஸ். நிரஞ்சனி, முகலிவாக்கம்.

* சோமாஸுக்கு மாவு பிசையும்போது தண்ணீர் ஊற்றி பிசையாமல் தேங்காய்ப் பால் ஊற்றி பிசைந்தால் சோமாஸ் வெள்ளை வெளேரென்று நல்ல கரகரப்பாக சுவையாக
மணமாக இருக்கும்.
* சோமாஸ் பூரணத்தில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை வைத்தால் சுவை கூடுதலாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.  
* பீர்க்கை, செளசௌ போன்ற காய்களை சற்று சதைப்பற்றோடு சேர்த்து தோல் சீவி அதை எண்ணெயில் வதக்கி வைத்து உப்பு, புளி, மிளகாய் சேர்த்து துவையலாக, சட்னியாகச் செய்தால் தோல் சத்தும் கிடைக்கும். சிக்கனத்துக்கு சிக்கனம். சுவையும் நன்றாகவே இருக்கும்.
* வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும்போது 4 டீஸ்பூன் நெய் ஊற்றி பிசைந்தால் பக்கோடா கரகரப்பாகவும், சுவை, மணம் தூக்கலாகவும் இருக்கும்.

- கே.நாகலட்சுமி, சென்னை.

* பஜ்ஜி செய்யும் போது ஒரு கரண்டி இட்லி மாவை கலந்து செய்தால் பஜ்ஜி நன்கு உப்பி, சுவையாக இருக்கும்.

- க. நாகமுத்து, திண்டுக்கல்.

* உருளை, சேனை போன்றவற்றை ரோஸ்ட் கறி பண்ணும் போது, ரஸ்க்கை தூள் செய்து தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

* ஒரு அச்சு வெல்லத் துண்டை நெய் ஜாடியில் போட்டு வைத்தால் நெய்யின் ருசியும், மணமும் மாறாமல் இருக்கும்.
* சமையலில் உப்பு அதிகமாகி விட்டால், கொஞ்சம் தக்காளியை சேர்த்தால் சரியாகிவிடும்.

- விமலா சடையப்பன், திண்டுக்கல்.

* சாறு பிழிந்த எலுமிச்சம் பழத் தோல்களை வீணாக்காமல், ஆவியில் வேகவைத்து எடுத்து, அதில் கடுகு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள் தேவையான அளவு சேர்த்து தாளித்தால் சுவையான ஊறுகாய் தயார்.
* சமையலறையில் எண்ணெய் சிந்தி கறை ஏற்பட்டால், அந்த இடத்தில் கொஞ்சம் அரிசிமாவை தூவி துடைத்தால் எண்ணெய் கறை போய் விடும்.
* ஊத்தப்பம் போடும் போது நடுவில் துவாரம் போட்டு, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் கரகரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.

- எஸ். ஜெயந்திபாய், மதுரை.