கோயில் காணிக்கை முடிகளே எங்களின் முழுநேர பிஸினஸ்!



“முடி என்பது அழகு மட்டுமல்ல பலரின் தன்னம்பிக்கை” எனப் பேசத் தொடங்கினார்  சாய்ராம் ஹேர் இன்டெஸ்ட்ரி நிறுவனத்தில் குடும்பமாக இயங்கி வரும் லேகா சாய்ராம். அட, ‘வெறும் முடி தானே’ என நாம் சாதாரணமாக நினைத்துப் பேசுகிற ஒரு விஷயம் மதிப்புள்ள ஒன்றாக இங்கே மாறி விலை போகிறது.
கோயில்களுக்கு காணிக்கையாக கொடுக்கும் முடி என்னவாகும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாதுதான். கிராமம் மற்றும் சென்னை மாதிரியான நகரங்களிலும் கோயிலுக்கு காணிக்கையாக  ஒருவர் செலுத்துகிற முடி, எங்கோ லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது கலிபோர்னியாவில் வசிக்கும் யாரோ ஒருவர் தலையில் விக்காகச் சென்று உட்காரப் போகிறது என்பதை நாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதுதான் உண்மை.

ஹேர் மார்க்கெட்டில் இந்தியர்களின் முடிக்கு அத்தனை மதிப்பு.  நமது முடிகளை வெளிநாடுகளில் ப்ளாக் கோல்ட் (Block Gold) என்கிறார்கள். இங்கே தங்கத்தை வாங்குவது மாதிரி அவர்கள் முடிகளை வாங்குகிறார்கள். வியட்நாம், சீனா, இந்தியாவில்தான் ஹேர் மார்க்கெட் அதிகம். இதில் குவாலிட்டி எனப் பார்த்தால் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இந்தியா. மற்ற இரு நாடுகளும் டெக்னாலஜியில் முன்னேறி சிறந்த மெஷினரிகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தயாரிப்பு பார்க்க அழகாக  உள்ளது. ஆனால் ரியல் ஹேர்களை அவர்களால் கொடுக்க முடியாது. சிந்தடிக் மற்றும் பிளாஸ்டிக் ஹேர்களையே பெரும்பாலும் இணைத்திருப்பார்கள் என்கிறார் இவர்.

இது ஒரு இன்டர்நேஷனல் பிஸினஸ். 35 ஆண்டுகளைக் கடந்து, என் கணவரின் குடும்பம் இந்த ஹேர் பிஸினஸில் இருக்கிறார்கள். 40க்கும் அதிகமான நாடுகளுக்கு நாங்கள் ஹேர் சப்ளை செய்து கொண்டிருக்கிறோம். உலக அளவில் 5000க்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக எங்களுக்கு இருக்கிறார்கள். முக்கியமாக அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, நைஜீரியா நாடுகளுக்கு முடிகளை ஏற்றுமதி செய்கிறோம். ஏழை நாடு என நாம் நினைக்கும் ஆப்ரிக்கா நாட்டில்தான் எங்களுக்கான மெயின் பிஸினஸே கிடைக்கிறது. காரணம், ஆப்ரிக்கா நாட்டவருக்கு முடி சுருள் சுருளாகவும் குட்டியாக புஸ்ஸியாகவும் இருக்கும்.  நமக்கு உணவும், உடையும் எப்படியோ அது மாதிரி அவர்களுக்கு அங்கே முடி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நமது இந்தியர்களின் முடிகளை ஆப்ரிக்காவில் காலில் விழுந்து வாங்கிக் கொள்வார்கள்.

500 கிலோ முடியின் விலை ஒன்றரை கோடி வரை ஏலம் போகும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. எங்களைப் போன்றவர்கள் காணிக்கை முடிகளை ஏலமெடுத்து அவற்றை ஹேர் புராடெக்டுகளாக மாற்றி, வெவ்வேறு ஊர் மற்றும் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.மொட்டை அடிக்கும் பழக்கம் நமது நாட்டில்தான் அதிகம்.  இதில்தான் லாங் ஹேர்கள் நமக்குக் கிடைக்கும். இவை சில நேரங்களில் 50 இன்ஞ் நீளம்கூட இருக்கும். திருப்பதி, பழனி, சமயபுரம், பெரியபாளையம் மற்றும் பல கிராமங்களில் உள்ள கோயில்கள் மூலமாக காணிக்கை முடிகள் கிலோ கணக்கில் மொத்தமாக வருகின்றன. நடுவில் இதற்கென ஏஜென்டுகள் இருக்கிறார்கள்.

சில கோயில்களில் எங்களுக்கு நேரடித் தொடர்பும் உண்டு. பெண்கள் சிக்கு எடுக்கும்போது சீப்பில் வரும் முடிகள், அழகு நிலையங்களில் வெட்டி வீணாகும் முடிகளை நாங்கள் வாங்குவதே கிடையாது. காணிக்கை முடிகளை மட்டுமே நாங்கள் எடுக்கிறோம். முடிகள் தலையில் இருந்து வழித்து எடுக்கப்பட்டதும், அப்படியே ரப்பர் பேன்ட்டுகளால் இணைக்கப்பட்டு தனித் தனி கொத்தாக மூட்டைகளில் இருக்கும். ஏலம் எடுத்து கைகளுக்கு வந்ததுமே அவற்றின் நீளத்தை அளந்து, தரவாரியாக அடர்த்தியான முடி, அலை அலையான முடி,  சுருள் முடி, கோரை முடி என (texture wise) பிரிக்கப்படும். பிறகு அதிலும் ப்ளாக் ஹேர், ப்ரவுன் ஹேர், க்ரே ஹேர் என பிரிக்கப்படும்.

கொத்து முடிகளை முள் போன்ற ஆணி வடிவ மெஷினில் விட்டு சிக்கு எடுக்கப்படும். சிக்கெடுக்கப்பட்ட முடிகள் தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களால் இரண்டுக்கும் மேற்பட்ட முறை நன்றாக சுத்தப்படுத்தப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தப்படும். உலர்ந்த முடிகளை இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தையல்  இயந்திரங்கள் மூலம் ஒவ்வொறு முடியாய் வரிசையாக இணைத்து முனைகள் பசையிடப்பட்டு இரண்டுக்கு மேற்பட்ட உறுதியான தையல்களால் இணைக்கப்படும். இணைக்கப்பட்ட முடிகளுக்குள் இருக்கும் பேன் மற்றும் ஈர்கள் கவனமாக கண்காணித்து நீக்கப்பட்டு, மீண்டும் முடிகள் வாஷ் செய்யப்பட்டு காய வைக்கப்படும். இது நம் இந்தியர்களின் முடியா என நினைக்கும் அளவுக்கு முடியின் நிறம் மற்றும் ஸ்டைலில் மாற்றம் செய்து, பார்க்கவே அழகான விக்காக மாற்றம் செய்யப்படும்.

எங்களிடம் பல்வேறு மாடல் விக்குகளும், ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ்களும் கிடைக்கும். சிலவகையான ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ்களை நிரந்தரமாகவே நமது முடிகளில் பொருத்திக்கொள்ளலாம். இவை தவிர்த்து  ஐ டிப் ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ், க்ளிப் இன் ஹேர் எக்ஸ்டென்ஷன், விக் மற்றும் ஹாஃப் விக் போன்றவைகளும் தயாராகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு கஸ்டமைஸ்டு தயாரிப்புகளும் உண்டு. முடியின் கலர்களை 30 விதமான வண்ணங்களுக்கு மேலாகவும் மாற்றிக் கொடுக்க முடியும்.

முடியின் அடர்த்தியை அதிகப்படுத்த, ஐ டிப் ஹேர் எக்ஸ்டென்ட்ஸ் என்ற  ஒன்று உண்டு. இதை இந்தியாவில் பெர்மெனன்ட் ஹேர் எக்ஸ்டென்ட்ஸ் என்பார்கள்.  பெரிய பெரிய பார்லர்களில் இதையே பயன்படுத்துகிறார்கள். இதனை நம் முடியுடன் இணைத்துவிட்டால் ஒரு வருடம் கூட அப்படியே இருக்கும்.

குளிக்கும்போதும் நீக்க வேண்டாம். ஹேர் கலரிங் விரும்புபவர்கள், தங்கள் உண்மையான முடி வீணாகிவிடும் என நினைத்தால், இந்த மாதிரியான ஐ டிப் ஹேர் எக்ஸ்டென்ட்ஸ் வாங்கி முடிக்குள் இன்செட் செய்துகொள்ளலாம். அது பார்க்க அழகாக ஸ்டீக்ஸ் (streaks) மாதிரி தோற்றம் கொடுக்கும். அழகு நிலையங்களை நடத்துபவர்கள் பெரும்பாலும் எங்களிடம் இருந்துதான் இந்த மாதிரியான ஸ்டீக்ஸ்களை வாங்கிச் செல்கிறார்கள்.

க்ளிப் ஆன் ஹேர் எக்ஸ்டென்ட்ஸ் என்பதில் ஒரு செட்டில் நான்கு இருக்கும். நம்முடைய உண்மையான முடிகளுக்கு நடுவில் இவற்றை இணைத்துவிட்டால் முடி அடர்த்தியினை கூட்டிக் காட்டுவதுடன், வேவி ஹேர் உள்ளவர்களுக்கு வேவியாகவும், ஸ்டெயிட் ஹேர் உள்ளவர்களுக்கு ஸ்டெயிட்டாகவும், கெர்லியாக இருப்பவர்களுக்கு அதேபோன்றும் ஹேர் டெக்ஸ்டருக்கு ஏற்பவும் கிடைக்கும். இவை தவிர்த்து பிரின்ஞ்(fringe) மற்றும் பேன்ட் ஹேர்களும் உண்டு. இதில் க்ளிப் மாதிரியான அமைப்புகள் முடியில் ஒட்டிக்கொள்வதற்கு ஏற்ப பின்னால் இணைக்கப்பட்டு இருக்கும்.

மொத்த விற்பனையாளர்கள் எங்களிடம் இருந்தே வாங்கி பார்லர், சலூன், விக் ஷாப் போன்றவற்றில் விற்பனை செய்கிறார்கள். மெடிக்கல் கண்டிஷனால் முடிகளை இழந்த கேன்சர் மற்றும் அலோபேசியா நோயாளிகள் மருத்துவச் செலவிற்காக நிறையவே செலவு செய்வார்கள். அவர்கள் விக் பயன்படுத்த எங்களை நேரடியாக அணுகி அவர்களின் மெடிக்கல் பில்லை காண்பித்தாலே தள்ளுபடி விலையில் அவர்களுக்கான விக் எங்களிடம் கிடைக்கும். கடந்த 4 ஆண்டுகளாக என் கணவர் சாய்ராம் சென்னை மணலியில் இந்த ஹேர் பேக்டரி தொழிற்சாலையை நடத்தி வருகிறார். என் மாமனார் அப்பாராவின் கனவு தொழிற்சாலை இது. பெரும்பாலும் பெண்களைத்தான் நாங்கள் இந்த தொழிலில் ஈடுபடுத்துகிறோம்.  

வேலை வாய்ப்புகள் இல்லாத கிராமப் பகுதிகளில் இருந்து எளிய பின்னணி கொண்ட பெண்கள், பெற்றோரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், குடிகாரக் கணவர்களால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் என தேர்ந்தெடுத்து அவர்கள் வருமானத்திற்கான ஸ்கில் டிரெயினிங் வழங்கி ஊழியர்களாக எடுத்துக் கொள்கிறோம். இதற்கென பயிற்சியாளர்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து பயிற்சி வழங்கி, மெஷின் ஆப்ரேட்டிங் சிஸ்டமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கொரோனா தொடங்குவதற்கு முன்பு 70 பெண்களுக்கு மேல் எங்களிடம் வேலை செய்தார்கள்.

இப்போது 50 பெண்கள் பணியாற்றுகிறார்கள்.தயாரிப்பு பணிகளை என் கணவர் பார்க்கிறார். மார்க்கெட்டிங் துறையை நான் கவனித்துக் கொள்கிறேன். எனது மாமனாரும் மாமியாரும் ஷோரூமை கவனித்துக் கொள்கிறார்கள் என விடைபெற்றார்.

விக் தயாரிப்பு முறை…

கொசு வலைகளில் இருப்பதுபோல் வலைகளில் நுணுக்கமான சின்னச் சின்ன துளைகள் இருக்கும். அந்தத் துளைகள் வழியே ஒவ்வொரு முடியாக எடுத்து ஊசிமுனை மூலம் கோர்க்கிறார்கள். மிக நுணுக்கமான வேலை என்பதால், பார்வை கூர்மை இருப்பவர்கள் மட்டுமே பொறுமையாக இதைச் செய்ய முடியும்.மெஷினில் வெப்டிங்(hair weifting) செய்த முடிகளைக் கொண்டும் விக் செய்யப்படுகிறது. விக் தயாரிக்க க்ளோஷர் மற்றும் ப்ரெண்டல் முக்கியம். விக்கில் சின்ன தயாரிப்பிற்கே இரண்டு நாட்கள்வரை எடுக்கும். இதில் பண்டில் விக், க்ளோஷர் விக், ப்ரெண்டல் விக், ஃபுல் ஏஸ் விக் என வெரைட்டிகள் உண்டு.

எந்த மாதிரியான விக் உங்களுக்கு செட்டாகும் என்பதைச் சொல்வதற்காகவே எங்களிடம் சீனியர் ஸ்டைலிஸ்டுகள் இருக்கின்றனர். ஷாம்பு அண்ட் கண்டிஷனர் போட்டு நம் முடிகளை சுத்தம் செய்வதுபோலவே விக்கை தொடர்ந்து பராமரித்தால் 5 ஆண்டுகளுக்கு  மேலாக நன்றாக உழைக்கும்.

பேன், ஈர் நீக்கும் வேலை…

இந்த உலகத்தில் எத்தனையோ வேலைகள் உண்டு. ஆனால் பேன் ஈர் எடுத்து சுத்தம் செய்வதும் ஒரு வேலையாக விக் மேக்கிங்கில் செய்யப்படுகிறது. பேன் ஈரை ஒன்றில்லாமல் சுத்தமாக முடிகளில் இருந்து நீக்கி, முடிகளை சுத்தமாக்குவதே அவர்களின் வேலை. அதற்கென ஒரு டீம் சம்பளத்துடன் காலை முதல் மாலை வரை அமர்ந்து எங்களிடம் நாள் முழுக்க வேலை செய்கிறார்கள்.

அப்பாராவ், ஹேர் ஸ்டைலிஸ்ட்

எங்களிடம்  நான்காயிரத்தில் தொடங்கி ஒன்றரை லட்சும் வரை விக்குகள் உண்டு. நாங்களே சொந்தமாக விக் தயாரிப்பு பேக்டரி நடத்தி வருவதுடன், நுங்கம்பாக்கம் ஜெமினி பார்ஷன் காம்ளெக் ஷில்  35 வருடமாக விக் ஷோரூம் ஒன்றையும் நடத்தி வருகிறோம்.நடிகைகளில் தேவி, ஜெயப்ரதா, பானுப்ரியா, சில்க் ஸ்மிதா ஜெயசுதா, ராதா, ரோஜா, மீனா, ரம்பா, நடிகர்களில் சிரஞ்சீவி, கமல், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகர்ஜுனா, அம்ரிஷ், கார்த்திக், பிரபு, விஷ்ணுவர்த்தன், கோவிந்தா, ஜாக்கி ஜெராப் என 80களின் கதாநாயகர், நாயகிகளுக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்ததுடன், விக் தயாரித்தும் கொடுத்துள்ளேன்.

ரஜினி சாரின் சந்திரமுகி படம் வரை அவருக்கு நான்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். என்னிடத்தில் அதிகமாக விக் வாக்கி பயன்படுத்தியவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவரும் சூப்பராக விக் டிசைன் பண்ணுவார். கஸ்டமைஸ்டாக விதவிதமான விக்குகளை தயாரித்து தரச் சொல்லி அணிவார். விக் தயாரிப்பில் நான் இறங்கியதும் எனக்கு நிறைய டிப்ஸ்களை சில்க் ஸ்மிதா கொடுத்து வந்தார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்