கிச்சன் டிப்ஸ்*மிக்ஸியில் இட்லிக்கு அரைப்பதாக இருந்தால் ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் முப்பது நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால்  சூடாவதைத் தவிர்க்க முடியும்.
*கோதுமை மாவை அரைத்ததும் சலித்து சிறிது டேபிள் சால்ட்டைக் கலந்து வைத்தால் வண்டு வராது.
*பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கெட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுவென்று இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலித்தீன் பாக்கெட்டில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும்.
*டிக்காஷனை ஒருபோதும் நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தக்கூடாது. பாலை நன்கு சுட வைத்து நுரை வரும் வரை ஆற்றி டிக்காஷன் விட்டு பிறகு சர்க்கரையை போட்டுக் கலக்கவும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*கடையில் ஃபிரெஷ்ஷாக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
*உப்பு ஜாடியில் எப்போதும் தண்ணீர் வடிகிறதா? அதனைத் தவிர்க்க சிறு புளித்துண்டை எடுத்து உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் நீர்த்தன்மையை புளி எடுத்துவிடும்.
*அதிகப்படியாக வாங்கி வைத்திருக்கும் எண்ணெயில் ஒரு சில பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால், எண்ணெய் கசடு தங்குவது
நிகழாது.

- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்துவிட்டால் போதும். சாம்பார் ‘கமகம’ என்ற
வாசனையுடன் இருக்கும்.
*காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும்.
*பால் பாக்கெட்டை வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போய்விட்டால், அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக்கூடக் காய்ச்சலாம்.

- கே.ராகவி, வந்தவாசி.

*சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தித் தேய்த்தால் புது பாத்திரம்போல மின்னும்.
*துணிகளில் எண்ணெய் கறைபட்டுவிட்டால் விபூதியை அந்த துணியின் மீது கொட்டி நன்றாக கசக்கிய பிறகு துவைத்தால் கறை போய்விடும்.
*பால் காய்ச்சும்போது பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் தண்ணீரை விட்டு விட்டுப் பிறகு பால் ஊற்றிக் காய்ச்சினால் பால் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டு அடி பிடிக்காது.
*முட்டைக்கோஸை இஞ்சியுடன் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து தயிருடன் அரைத்தால் பச்சடி நன்றாக இருக்கும்.

- ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை.

*பட்டாணியை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரையை அதில் சேர்த்தால் பட்டாணி வேக, வேக வாசனை அருமையாக இருக்கும்.
*வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது அத்துடன் கொஞ்சம்
முருங்கைக்கீரையை சேர்த்து செய்தால் சுவையாகவும், மணமும் அருமையாக இருக்கும். உடம்பிற்கும் மிகவும் நல்லது.

- ஆர். மஹாலட்சுமி, சென்னை.

*சுண்டல் தாளித்து பின்னர் இரண்டு தேக்கரண்டி அவலை வறுத்து, பொடி செய்து தூவினால் சுண்டல் சூப்பர் சுவையுடன் இருக்கும்.
*தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து சமைத்தால் ரசம் சுவையாக இருக்கும்.
*புழுங்கல் அரிசியை வறுத்து, மாவாக்கி, வைத்துக்கொண்டால் காய்கறி கூட்டு, கறி செய்யும்போது சிறிதளவு லேசாகத் தூவினால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

- அ. சித்ரா, காஞ்சிபுரம்.

*பெருங்காயம் கெட்டியாகி விட்டால், சில பச்சை மிளகாய்களுடன் அதைப்போட்டு வைத்தால் மென்மையாகி விடும்.
*ஃபிரைட் ரைஸ், தேங்காய் சாதம் செய்யும்போது முதலில் எண்ணெயில் ஒன்றிரண்டு ஸ்பூன் கசகசாவைத் தாளித்து, பிறகு மற்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*கோதுமை, மைதா மாவில் பூரி செய்யும்போது சிறிது அவித்த உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்தால் பூரி சுவையாக சாஃப்ட்டாக இருக்கும்.
*ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய் அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்து பருப்பை வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
*பாகற்காய் பொரியல் செய்யும்போது ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் கசப்பு தெரியாது. கீரையும், பாகற்காயும் சேர்ந்து நல்ல மணமுடனும், ருசியுடனும் இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*கலந்த சாதம் செய்ய சாதம் சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்தால், பருக்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக நன்றாக இருக்கும்.
*பொரித்த அப்பளங்கள் நமத்துவிட்டால், அதை வாணலியில் வறுத்து சிறிது தேங்காய், கறிவேப்பிலை, புளி,  பச்சை மிளகாய், உப்பு சேர்த்து துவையலாக அரைக்க சுவை நன்றாக இருக்கும்.
*மாவடு-2, தே.துருவல் - 1, ப.மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கு சேர்த்து அரைத்து தயிரில் கலக்கி கடுகு தாளிக்க, மாவடு தயிர் பச்சடி தயார்.

- மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

கோதுமை உசிலி

கோதுமையால் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு மிகவும் நன்மையை தரக்கூடியவை. உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்கள் கோதுமையால் செய்யப்படும் உசிலியை வீட்டில் சுவையாக செய்து சாப்பிடலாம்.

தேவையானப் பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 6 டீஸ்பூன்
உளுந்து - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - 10 இலைகள்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கோதுமை உசிலி செய்வதற்கு முதலில் உளுந்து மற்றும் கடலைப் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து, அவை நன்கு ஊறியதும் அதனுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த பருப்பு கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து ஆற வைக்கவும்.

கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் சிறிதளவு நீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வேகவைத்து ஆற வைத்துள்ள பருப்பு கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் ஆகிய அனைத்தையும் போட்டு வதக்கி எடுக்கவும். சுவையான கோதுமை உசிலி ரெடி.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.