என்ன செய்வது தோழி ? அவர் நண்பர் ரொம்ப திறமைசாலிஅன்புடன் தோழிக்கு,
எனக்கு வயது 40. கணவர், 3 பிள்ளைகளுடன் வாழ்கிறேன். திருமணம் ஆனதில் இருந்து வாடகை வீட்டில்தான் வாழ்க்கை.  இத்தனைக்கும் என் கணவர் நன்றாக படித்திருக்கிறார்.  அதற்கேற்ற வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை. குடும்ப செலவுகளுக்கோ, பிள்ளைகள் படிப்புக்கோ, வாடகை செலுத்தவோ இதுவரை எந்த பிரச்னை  வராத அளவுக்கு தான் வருவாய்.

ஆனால் சேமிப்பு, கையிருப்பு என்பதெல்லாம் எட்டாக் கனவாகவே இருக்கிறது. விசேஷங்களுக்கு போட்டுச் செல்ல நகைகள் இல்லை.
அதேபோல் வீடு, மனை என சொத்துகள் ஏதுமில்லை. இவர் அப்பாவும் சம்பாதித்து வைக்கவில்லை. இவரும் ஏதும் வாங்கி வைக்கவும் இல்லை. கேட்டால், “வாங்கனா போச்சு” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் இதுவரை வாங்கியபாடில்லை.

‘இப்படி அலட்சியமாக இருக்கிறீர்களே’ என்று கேட்டால், ‘‘செத்தா 6 அடிதான்’ அதுக்கு மேல எதுக்கு சொத்து’ என்று சண்டை போடுவார். அவருக்கு விதவிதமாக சாப்பிட வேண்டும், நன்றாக ஊர் ஊராக சுற்ற வேண்டும். என்னையும், பிள்ளைகளையும் அதே மன நிலையில் வைத்திருக்கிறார்.  எனக்கு இவர் சொல்வதில், செய்வதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லை. ஆண், பெண் என பிள்ளைகளும் இவரைப்போலவே இருக்கின்றன. அவர்களுக்கும் நன்றாக சாப்பிட வேண்டும், அப்பா கூட ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும்.

அதனால் ஆண்டுதோறும் ஏதாவது ஒன்றிரண்டு சுற்றுலா கட்டாயம். அப்படி போவதற்கு தான் இவர் காசை சேர்த்து வைப்பார்.
அதேபோல் ஏதாவது அவசர தேவைக்கு கூட ஆயிரம், 2 ஆயிரம் கடன் வாங்க ஆயிரம் தடவை யோசிப்பார். நிறைய நியாய தர்மங்கள் பேசுவார். ஒன்றுமே ‘பைசாவுக்கு பிரயோஜனப்’ படாது. இவர் சொல்லும் வெட்டி நியாயங்கள் எதுவுமே நடைமுறைக்கு சாத்தியப்படாது.

திருமணம் ஆன புதிதில் இவர் சொல்வதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ‘ரொம்ப நல்லவர்’ என்று நினைத்தேன். இவரது கையாளாகாத தனத்தைதான் இப்படி நியாயம் தர்மம் என்று சொல்லி சப்பை கட்டு கட்டுகிறார் என்பது இப்போதுதான் புரிகிறது.வீட்டில்தான் இவரது நியாயம் தர்மங்கள் எல்லாம். அவையெல்லாம் இவரது அலுவலகத்தில் சுத்தமாக எடுபடுவதில்லை. இவருக்கு பின்னால் வேலைக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்று இவரை விட நிறைய சம்பளம் வாங்குகின்றனர்.

ஆனால் இவரே இவரை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ‘என்னை நோக்கி யாரும் விரலை நீட்ட முடியாது. என் வேலையில் சரியாக இருக்கிறேன்’ என்று அடிக்கடி தன்னை தானே  பாராட்டிக் கொள்கிறார்.அதே நேரத்தில் இவரது நண்பர்கள் எல்லோரும் பெரிய வீடு, கார் என வசதியாக இருக்கிறார்கள். அதிலும் இவரது நண்பர் ஒருவர் பெரிதாக படிக்கவில்லை. ஆனால் காண்டிரக்ட் தொழில் மூலம் ஏகமாக சம்பாதிக்கிறார். சமீபத்தில் புதிதாக வீடு கட்டினார். அதன் புதுமனை புகுவிழாவுக்கு போன பிறகு அதன் பிரமாண்டத்தை பார்த்து வியந்து போனேன். அவர் மீதான மரியாதை அதிகமாகிவிட்டது.

அந்த மரியாதைதான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத வைத்திருக்கிறது. ஆம் அவர் மீதான மரியாதை மெல்ல மெல்ல ஈர்ப்பாக மாறி விட்டது. அந்த நண்பர் என் கணவரை செல்போனில் அழைக்கும் போது, இவர் ஏதாவது வேலையில் இருந்தால் நான் தான் பேசுவேன். அப்போதெல்லாம் இரண்டு மூன்று வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு வைத்து விடுவேன். இவர் நண்பரோ  ‘என்ன சமையல் ...’  என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார். நான் வேகமாக பதில் சொல்லிவிட்டு கணவரிடம் போனை கொடுத்து விடுவேன்.

அந்த புதுமனை புகுவிழாவுக்கு பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் சொல்வேன். நானும் கேட்பேன். என் கணவர் வந்தால் போனை தந்து விடுவேன். ‘ என்ன சொன்னான்’ என்று கணவர் கேட்டால், ‘உங்களிடம் போனை கொடுக்கச் சொன்னார்’ என்று சொல்லிவிடுவேன். அப்படி சொல்வதற்கு எனக்கு முதலில் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அதன்பிறகு அப்படி மறைப்பதில் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி வந்தது.

என் கணவர் கால அட்டவணை போட்ட மாதிரிதான் எல்லா வேலைகளையும் செய்வார். சாப்பிடும் நேரம், குளிக்கும் நேரம் எல்லாம் எப்போதும் குறிப்பிட்ட நேரமாகத்தான் இருக்கும். தினமும் காலையில் சரியாக 6 மணிக்கு குளிக்கப் போய் விடுவார். காலை 8 மணிக்கு சாப்பிட உட்கார்ந்து விடுவார். அப்படிதான் சரியான நேரத்துக்கு  வேலைக்கு புறப்பட்டுச் சென்றுவிடுவார். அலுவலகத்திலும் சரியான நேரத்துக்கு புறப்பட்டு வருவார்.
அப்படி கணவர் குளிக்கச் செல்லும் நேரங்களில்தான் பெரும்பாலும், இவர் நண்பரிடம் இருந்து எப்போதும் அழைப்பு வரும். முன்பெல்லாம்
எப்படி இவர் குளிக்கிற நேரம் பார்த்து போன் செய்கிறார் என்று தோன்றும். அதன்பிறகு குளிக்கப் போய்விட்டாரே ஏன் இன்னும் போன் செய்யவில்லை என்று தோன்ற ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் என்னுடைய செல்போன் எண்ணை கேட்டார். நானும் மறுக்காமல் கொடுத்தேன். அதன் பிறகு அவர், பிள்ளைகள் புறப்பட்டுச் சென்ற பிறகு பேசுவார். நானும் பேசுவேன். மணிக்கணக்கில் பேசுவோம். ஒரு கட்டத்தில் உரிமையாக பேச ஆரம்பித்தார். ‘வாங்க, போங்க எல்லாம் போய் வா, போ என்று பேசினார். அது எனக்கு உறுத்தலாக இல்லை. அவர் என் அழகை வர்ணிக்கும் போதும் அதை ரசிப்பேன்.

ஒருநாள் , ‘ஒரு உண்மையை சொன்னால் கோவிச்சுக்கக் கூடாது’ என்று சொன்னார். ஏதோ ஏடாகூடமாக சொல்லப்போகிறார் என்று தோன்றவில்லை. என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வம்தான் அதிகமாக ஏற்பட்டது. அதனால் ‘சொல்லுங்கள்’ என்றேன். அவரோ, ‘தப்பாக நினைக்கக் கூடாது’, ‘அப்புறம் பேசாம இருக்கக்கூடாது’ என்று நீண்ட பீடிகைகளுக்கு பிறகு, ‘நான் உன்னை லவ் பண்றேன்’ என்றார்.

எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு பயம். அழைப்பை சட்டென்று துண்டித்து விட்டேன். அப்படி துண்டித்தது தவறோ..... இனிமேல் பேசாமல் போய் விடுவாரோ’ என்று பயமாக இருந்தது. அதுபோலவே அவர் சில நாட்கள் பேசவில்லை. நானாக அழைக்கலாமா என்று கூட தோன்றியது. ஆனால் தயக்கமாக இருந்தது.

இந்நிலையில் ஒருநாள் மாலை கோவிலுக்கு சென்ற போது, அவர் எதிரில் காரில் வந்தார். காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அவரை பார்த்ததும் நான் நின்றேன். அவர் ‘ஏன் பேசறதில்லை’ என்று கேட்டார். அதற்கு நான் ‘நீங்கள்தான் பேசறதில்லை’ என்றேன். ‘சரி நாளை அழைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

அடுத்த நாள் முதல் வழக்கம் போல் பேச ஆரம்பித்துவிட்டோம். கூடவே ‘வாடி, போடி ’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டார். அவரை ‘மாமா ’ என்று அழைக்க வேண்டும் என்று சொன்னார். அதனால் அவரை ‘மாமா’ என்றுதான் கூப்பிடுகிறேன். அவர் வீட்டுக்கு வரும் போது, வெளியில் பார்க்கும் போது யாரும் பார்க்காமல் ‘சிக்னல்’ செய்வார். இளம் வயது காதலியை போல் உணருகிறேன்.

கடந்த சில நாட்களாக ‘எங்காவது வெளியில் போகலாமா’ என்று கேட்கிறார். எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் யாராவது பார்த்து விட்டால் என்னாவது என்று பயமாக இருக்கிறது. அதனால் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து வருகிறேன். நாங்கள் பேசுவது யாருக்கும் தெரியாது. அவரும் ‘யாருக்கும் சொல்லவில்லை’ என்று சொன்னார்.

சில நாட்களுக்கு முன்பு ‘நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல் செய்தவருக்கு கத்திக் குத்து’ என்ற செய்தியை படித்தேன். அதிலிருந்து என் கணவருக்கு விஷயம் தெரிந்தால் ஏதாவது பிரச்னையாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. என் வீட்டுக்காரர் ரவுடித்தனம் செய்ய மாட்டார். ஆனால் என்னை விட்டு கட்டாயம் விலகி விடுவார். அதை அவரிடம் கூறினால்... ‘கவலைப்படாதே... உன்னை வைத்து நான் காப்பாற்றுகிறேன்...அவனுக்கு பயப்படாதே... என்கிட்ட ஏகப்பட்ட சொத்து, பணம் இருக்கு... எது வந்தாலும் பயப்படாதே.... நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்கிறார்.

 ஆனாலும் எனக்கு முழு நிம்மதி ஏற்படவில்லை. என் பெற்றோருக்கு தெரிந்தால் என்னவாகும்..... என் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள் என்று யோசனையாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் புத்திசாலியான, திறமைசாலியான என் காதலரை என்னால் மறக்க முடியாது. அப்படி நினைக்கக்
கூட எனக்கு பிடிக்கவில்லை. சொல்லப்போனால் என் கணவரை விட என் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார்..

ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று பயமும், தயக்கமும் இருக்கின்றன. என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த சில நாட்களாக குழம்பி போயிருக்கிறேன். அதனால் அவர் போன் செய்தால் கூட அவரிடம் சரியாக பேச முடியவில்லை. அதனால் எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறேன். என்ன செய்வது தெரியவில்லை. நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் தோழி?
இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,
வாழ்க்கையிலும், கணவரிடமும் ஒரு மனைவிக்கு எதிர்பார்ப்புகள் இருப்பது தவறில்லை. அதே நேரத்தில் வாழ்க்கையில் என்ன கிடைக்கிறதோ அதை
புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது வசதியாக இருக்கும். நமக்கென இலக்குகளை வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணிப்பதும், அதற்காக பாடுபடுவதும் தவறில்லை. கடவுள் நம்பிக்கை இருக்குமானால், முடிவுகளை அவரிடம் விட்டுவிடுங்கள்.

எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு குழப்பம் அதிகமாக இருப்பது தெரிகிறது. எதிலும் மனநிறைவு அடையாத போக்கு உங்களிடம் அதிகமாக இருப்பதும் புரிகிறது. அதற்கு உங்களை மட்டும் காரணமாக்க முடியாது. உங்கள் கணவரிடம் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் இல்லாததும், அவரது போக்கும் கூட உங்கள் நிலைமைகளுக்கு காரணம் என்று சொல்லலாம்.

உங்கள் கணவர் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத இயல்பான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர். பெரிதாக எந்த லட்சியமும் இல்லாதவர் என்பது உங்கள் கடிதம் வாயிலாக புரிகிறது. நேரத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் மனிதர்கள் பெரும்பாலும் நேர்மைக்கும், நியாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் பணம் சம்பாதிக்க எந்த தவறான வழிக்கும் போக மாட்டார்கள்.

அதே நேரத்தில் உங்கள் கணவரை போன்று நேர் வழியில் சம்பாதிக்கும் பலர் தேவையான வசதி வாய்ப்புகளுடன் இருக்கின்றனர். உங்கள் கணவரும் ஊதாரியாக தெரியவில்லை. அவர் குடும்பத்தில் எல்லோரும் நன்றாக சாப்பிட வேண்டும், சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். அது ஒன்றும் தவறான விஷயமில்லை. நல்ல உணவும், இனிய பயணங்களும் உடல் நலம், மனநலத்துக்கான காரணிகள். வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியம் தராததுதான் உங்களுக்கு அவரிடம் உள்ள பிரச்னை.

எனவே சொந்தமாக வீடு வேண்டும் என்பது உட்பட உங்கள் நியாயமான விருப்பங்கள் குறித்து உங்கள் கணவரிடம் ஏற்கனவே பேசியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் மீண்டும் பேசுங்கள். உங்கள் அன்பாலும், அக்கறையாலும் அவரை உங்கள் வழிக்கு கொண்டு வர முடியும். நேர்மையான அவரது வழியில் பொருள் ஈட்டி உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.

அதை விட்டுவிட்டு உங்களின் புதிய காதல்,  உங்கள் விருப்பங்களை சரி செய்து விடாது. மாறாக உங்கள் வாழ்க்கையில் பிரச்னையைதான் ஏற்படுத்தும். கூடவே உங்கள் பிள்கைளின் வாழ்க்கையும் பாதிக்கும். போதாதற்கு உங்கள் காதலரின் மனைவி, பிள்ளைகளின் வாழ்க்கையும் பாதிக்கும்.

உங்கள் அழகிற்காக உங்களிடம் பேச விரும்புபவர், நாளை உங்களை விட அழகானவர் வந்தால் உங்களை விட்டுவிட்டு போக மாட்டார் என்பது என்ன நிச்சயம். ஏற்கனவே மனைவி இருக்கும் போதே உங்களை விரும்புகிறார். அதற்கு முன்பு எத்தனை பேரிடம் பழக்கமோ.... இப்போது எவ்வளவு பேரிடம் பழகிக் கொண்டு இருக்கிறாரோ? உங்களுக்கு தெரியுமா?

எனவே விஷயம் வெளியில் தெரிந்தால் உங்கள் குடும்பத்திலும், அவர் குடும்பத்திலும் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும். கூடவே உங்கள் கணவருக்கும், காதலருக்கும் இருக்கும் நீண்ட கால நட்பும் விரோதமாக மாறலாம்.எனவே என்னுடைய ஆலோசனை என்னவென்றால், மீண்டும் உங்கள் கணவரிடம் உங்கள் விருப்பங்கள் குறித்து பேசுங்கள். வீடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும் நல்லது என்பதை அவரிடம் விளக்குங்கள். மீண்டும் சொல்கிறேன் உங்கள் அன்பு அக்கறை மூலம் அவரை மட்டுமல்ல உங்கள் ஆழ்மனதில் இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையையும் சரி செய்ய முடியும்.

உங்கள் புதிய காதலில் ஆர்வம் காட்டாதீர்கள். ஒரு தவறான விஷயம் நடக்கும் போது அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உங்கள் காதலர் எளிதில் தப்பித்துக் கொள்வார். ஆனால் உங்களுக்கு அத்தனை எளிதாக இருக்காது. சமூகம் இன்னும் பெண்ணுக்கு எதிராகத்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆண் தவறு செய்தாலும் பெண்ணை மட்டும் குற்றம்சாட்டும் சமூகமாகவே இன்னும் நம் சமூகம் இருக்கிறது.

எனவே உங்கள் காதல் வெளியில் தெரிந்தால் உங்கள் குடும்பம் சிதறலாம், பிள்ளைகள் பாதிப்பார்கள். எனவே அந்த உறவை தொலைத்துவிட்டு உங்கள் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்.இன்னொரு ஆலோசனை நீங்களும் ஒரு வேலையை தேடிக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் பொருளாதாரத்தில் தற்சார்புடன் இருக்க முடியும். அது உங்களுக்கு பாதுகாப்பு உணர்வை தரும். கூடவே உங்கள் இலக்குகளை அடைய உங்கள் கணவருக்கு உதவியாகவும் இருக்க முடியும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...