கடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்!



ஆயுர்வேதக் கட்டமைப்பின்படி, நம்  உடலானது இன்றைய காலக்கட்டத்தில், நாம் இந்த பூமியிலிருந்து சேகரித்த ஒரு குவியல். இந்த பூமியின் தன்மை எதுவாகயிருந்தாலும், பூமியை உருவாக்கிய பஞ்சபூதங்களின் தன்மை எதுவாகயிருந்தாலும், அவை அனைத்தும் நம் உடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியாக சொல்லப்படும் ஆயுர்வேத மருத்துவத்தை, குழந்தைகள்  பெண்கள் என தனிப்பட்ட முறையில் இலவச முகாம் நடத்தி அது குறித்து விழிப்புணர்வு மற்றும் அதற்காக சிகிச்சை முறையை நடத்தி வருகிறார் பெங்களூரை சேர்ந்த டாக்டர் ரெஸித்த மேனன்.

‘‘சொந்த ஊரு கேரளா. எனக்கு மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ் படிப்பதை விட, ஆயுர்வேதம் மருத்துவ முறைகள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் ஆயுர்வேதம் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துவிட்டு கேரளா ஆயுர்வேத  மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தேன்.  அங்கு வேலைப் பார்த்த போது, அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவரான ஆனந்த் மோகன், என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்டு என்னை மேலும் ஊக்குவித்தார், வழிநடத்தினார். அங்கு ஏழு வருடமாக வேலை பார்த்தேன்.

அதன் பிறகு கல்யாணமாகி பெங்களூரில் செட்டிலானேன். என்னுடைய திறமையை கல்யாணம், குடும்பம் என்ற கட்டுக்குள் வீணாக்க என் கணவருக்கு விருப்பமில்லை. அவரின் உதவியுடன் பெங்களூரில் ஒரு கிளினிக் துவங்கினேன். என்னைப் பொறுத்தவரை நோயாளிகளுக்கு மருந்தை விட ஆறுதலாக பேசினாலே பாதி நோய் குணமாகிவிடும்’’ என்கிறார் ரெஸித்த மேனன்.

‘‘உடலில் பிரச்சனை என்று வருபவர்களை முதலில் நோயாளியாக பார்க்காமல், நண்பர்களாக பார்க்க வேண்டும். மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாக ஏதாவது ஒரு காரணத்தால் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு மருத்துவர்களை நாடி வருபவர்கள் முதலில் எதிர்பார்ப்பது அவர்களின் பிரச்சனையை  காது கொடுத்து கேட்க வேண்டும் என்பது தான்.

அவர்களின் பிரச்னைக்கு மாத்திரை மருந்து மட்டுமே தீர்வாக அமைந்து விடாது. அதை காட்டிலும், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள விஷயங்களில் சிறுசிறு மாற்றங்களை கொண்டு அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்னைகளை சீர் செய்ய முடியும் என்பதே என்னுடைய கருத்து. சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, நன்றாக உறங்கி, அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் எந்த விதமான நோய்க்கும், ‘நோ என்ட்ரி’ சொல்லலாம்.

இந்த ஆயுர்வேத சிகிச்சை முறையினை தொழிலாக மட்டுமல்லாமல், மக்களுக்கான சேவையாகவும் பார்த்து வருகிறேன். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவச முகாம் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய  குறிக்கோள். இன்றும் பலர் ஆயுர்வேத சிகிச்சை முறையை பற்றி தெரியாமலே இருக்கின்றனர்.

உண்மையிலே,  ஆயுர்வேத மருத்துவம் அறிவியல் மட்டுமே.  இதனால், கடினமான நோயை கூட எளிமையாக சரி செய்ய முடியும். மொத்த தமிழ் நாட்டிலேயே சென்னையில் தான் அதிக அளவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சென்னையில் இருக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன்.

ஒரு சாதாரண உடல் பிரச்னைக்கு  கூட மக்கள் முதலில் தேடுவது மாத்திரை தான். அதிலும், பலர் மருத்துவர்களை ஆலோசனை செய்யாமலே மருந்து மாத்திரைகளை கடையில் வாங்கி சாப்பிடுகிறார்கள். என்னை தேடி வருபர்களிடம் நான் கூறும் ஒரே விஷயம், அவர்களின் உடல்நிலை பிரச்சனைக்கான தீர்வு அவர்கள் அன்றாடம் செய்யும் வேலை மற்றும் சத்தான  உணவுகளை சாப்பிடுவதாலும் சரி செய்யலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரெஸித்த மேனன்.

ஆனந்தி. ஜெ