அக்கா கடை -விளையாட்டா ஆரம்பிச்சேன்... ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன்!



புதுச்சேரி, எம்.ஜி. சாலை, சின்ன மணி கூண்டு அருகே பாட்டி பஜ்ஜி கடைன்னு கேட்டா சின்ன குழந்தை கூட அடையாளம் சொல்லும். புதுச்சேரிக்கு இவரின் கடை மிகப் பெரிய அடையாளம் என்று சொல்லலாம். கடந்த 45 வருடமாக இங்கு பஜ்ஜி விற்று வரும் ராஜம் பாட்டியின் கைமணத்தில் தயாராகும் பஜ்ஜியை சாப்பிட பல ஊர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்தும் மக்கள் சாப்பிட வருகிறார்கள்.

‘‘என்னுடைய சொந்த ஊர் புதுச்சேரி தான். நான் பெரிய அளவில் படிக்கல. 18 வயசில் எனக்கு கல்யாணமாச்சு. மெட்ராசில் செட்டிலானேன். ஆனால் என் புகுந்த வீட்டில் என் வாழ்க்கை நல்ல படியாக அமையல. ரொம்பவே கஷ்டப்பட்டேன். கையில் ஒரு குழந்தை, வயிற்றில் இன்னொரு குழந்தையுடன் அந்த வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுங்கி என் அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். என் மகள் பிறந்த பிறகு எனக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கல.

அதனால எங்காவது வேலைக்கு போகலாம்ன்னு நினைச்சேன். என் உறவினர் மூலமா இங்க இருக்கும் பிரான்ஸ் பள்ளியில் ஆயா வேலைக் கிடைச்சது. ஆரம்பத்தில் யாரும் வரலைன்னா மட்டும் என்னை வேலைக்கு வரச் சொல்வாங்க. அதன் பிறகு என்னை நிரந்தர ஊழியரா சேர்த்தாங்க. அங்க  ஆரம்பத்தில் 70 ரூபாய்தான் சம்பளம். இரண்டு குழந்தைகளை வச்சிட்டு எனக்கு அந்த வருமானம் பத்தல. அதனால பஜ்ஜிக் கடை போடலாம்ன்னு நினைச்சேன்.

பள்ளிக்கு முன் போட்டா நல்லா வருமானம் வரும்னு நினைச்சு விளையாட்டா தான் இந்த கடையை ஆரம்பிச்சேன். இன்னிக்கு என் வாழ்க்கைக்கு மட்டுமில்ல என் பசங்க வாழ்க்கையும் நல்ல படியா இருக்குன்னா அதற்கு இந்த கடையும் என்னை நம்பி வந்த வாடிக்கையாளரும் தான் காரணம்.

நான் கடை ஆரம்பிச்சு 45 வருஷமாச்சு. வரும் வருமானத்தில் என் பசங்கள நல்லா வளர்த்தேன். அவங்களுக்கான நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்து இருக்கேன். எனக்குன்னு ஒன்னும் சேர்த்து வைக்கல, அதே போல் கடனும் இல்ல’’ என்றவரின் பஜ்ஜியை சுவைக்கவே பல மைல் தூரத்தில் இருந்து வர காரணம் பற்றி பாட்டியே விவரித்தார்.

‘‘இறால் பஜ்ஜி, முட்டை பஜ்ஜி, மீன் பஜ்ஜி, சிக்கன் போண்டா, நண்டு பஜ்ஜி, கடமான்னு எல்லாமே ஆரம்பகாலத்தில் போடுவேன். அதன் பிறகு இப்ப வயசானதால எல்லா பஜ்ஜியும் போட முடியல. மீன், இறால் மற்றும் முட்டை பஜ்ஜி தான் போடுறேன். சிலர் சிக்கன் போண்டா வேணும்ன்னு விரும்பி கேட்டா போட்டுத் தருவேன். கடல் சார்ந்த உணவுக்கு எப்போதும் ஒரு வாசனை இருக்கும். அந்த வாசனை இருந்தா, சாப்பிட வரமாட்டாங்க. அதனால நான் அந்த வாடையே வராமல் சின்ன குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடணும்னு ரொம்பவே கவனமா இருந்தேன். முன்பு கடலுக்கு போய் தான் மீன் வாங்கி வருவேன்.

இப்ப இங்க இருக்கிற பெரிய மார்க்கெட்டிலேயே வாங்கிடுறேன். மீன் பஜ்ஜிக்கு கொடுவா மற்றும் பாறை தான் நல்லா இருக்கும். அதில் தான் முள் இல்லாமல் வெறும் சதையை மட்டும் தனியா எடுக்க முடியும். வஞ்சரத்தில் நடு முள் இருக்கும். அதிலும் பஜ்ஜி போடுவேன். சாப்பிடும் போது அந்த நடு முள்ளை பார்த்து சாப்பிடணும். இங்க பள்ளி பசங்க கூட சாப்பிட வருவாங்க. அதனால பெரும்பாலும் முள் இல்லாத மீனில் தான் பஜ்ஜி போடுறேன்.

முதல்ல மீன், இறால் எதுவாக இருந்தாலும் நன்றாக கழிவிடுவேன். பிறகு அதில் மஞ்சள் தூள், வினிகர் போட்டு நல்லா ஊறவச்சு கழுவுவேன். வினிகர் சேர்க்கும் போது மீன் வாடை வராது. அதன் பிறகு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு எல்லாம் சேர்த்து நன்கு பிரட்டி வச்சிடுவேன். பஜ்ஜி மாவுக்கு கடலைமாவு, அரிசி மாவு, மைதா மாவு சம பங்கு எடுத்து கொஞ்சம் சோடா மாவும் சேர்த்து கரைத்து வச்சிடுவேன். மீன் நன்றாக மிளகாய் தூளில் ஊறி இருக்கும், அதை அப்படியே மாவில் பிரட்டி பஜ்ஜி போடணும். இதைத்தான் நான் காலம் காலமாக செய்து வருகிறேன்.

சில சமயம் சிக்கன் போண்டா கேட்பாங்க. அதற்கு சிக்கனை கொத்தி உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டி உருண்டை பிடிச்சு மாவில் நனைச்சு போண்டா போடுவேன். மட்டனிலும் போடலாம். இப்படி செய்தா சுவையாவும் இருக்கும். உடலுக்கும் தீங்கு ஏற்படுத்தாது. இந்த பஜ்ஜிக்கு சட்னி சாம்பார் எல்லாம் நல்லா இருக்காது. வெங்காயம், முட்டைகோஸ், கொத்தமல்லி கொஞ்சம் வினிகர் சேர்ந்து கலந்து கொடுப்பேன். அது தான் நல்லா இருக்கும்’’ என்றவர் பல கஷ்டங்களை தாண்டித்தான் தற்போது தனக்கென்று ஒரு நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளார்.

‘‘கடை ஆரம்பிச்ச போது, நான் காலையில் ஸ்கூலுக்கு வேலைக்கு போவதற்கு முன் மீன் வாங்கி சுத்தம் செய்து, மசாலாவில் பிரட்டி வச்சிடுவேன். நான் மாலை பள்ளியில் இருந்து வரும் போது, என் இரண்டு பசங்களும், கடையை திறந்து எல்லாம் தயாரா வச்சிடுவாங்க. நான் மாவு கரைச்சு பஜ்ஜி போட ஆரம்பிச்சிடுவேன். என் மகனுக்கு கல்யாணமாகி சென்னையில் நல்ல வேலையில் இருக்கார். என் மக பிரான்ஸ் நாட்டுக்காரரை கல்யாணம்
செய்து கொண்டு, அங்க செட்டிலாயிட்டா. என் இரண்டு பசங்களும் ரொம்பவே நல்லா இருக்காங்க’’ என்றவரின் கடையில் ஆரம்பத்தில் அந்த வழியாக சென்றவர்கள் தான் சாப்பிட வந்துள்ளனர். அதன் பிறகு சுவை நன்றாக இருக்கவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் சாப்பிட வர ஆரம்பித்துள்ளனர்.

‘‘எந்த ஒரு தொழிலிலும் லாபம் நஷ்டம் இருக்கும். அதை எல்லாம் சமாளிக்கணும். பொதுவா நான் எந்த பொருளையும் மறுநாள் கொண்டு வருவதில்லை. சிக்கன் மீந்துட்டா அப்படியே யாருக்காவது கொடுத்திடுவேன். அதே போல் பஜ்ஜி பொரிக்கும் எண்ணையும் கொட்டிடுவேன். வீட்டில் நம்ம பசங்களுக்கு ஆரோக்கியமா எப்படி சமைப்போமோ அதே போல் தான் நான் பார்த்து பார்த்து செய்றேன். ஆரம்பத்தில் நான் இங்க கடைய வச்ச போது கூரை எல்லாம் எதுவும் இல்லை. மழை பெய்தா குடை வச்சு அடுப்பு அணையாம பார்த்துப்பேன்.

இப்ப மேலே ஷீட் போட்டு இருக்கேன். அதே போல இங்க கடைக்கான இடத்துக்கு வாடகை கொடுத்தேன். இப்ப இந்த இட ஓனர் வாடகை வேணாம் கரன்ட் பில் மட்டும் கொடுத்தா போதும்ன்னு சொல்லிட்டார். கொரோனா வந்த போது கடை போடல. அப்ப சென்னையில் மகன் வீட்டில் இருந்தேன். இப்ப மறுபடியும் எல்லாம் பழைய நிலைக்கு மாறிடுச்சு.

அதனால கடையை போட ஆரம்பிச்சுட்டேன். என் தங்கை மகன் இப்ப எனக்கு உதவியா இருக்கார். பசங்க தான் ஏன் இன்னும் கஷ்டப்படுறன்னு கேட்பாங்க. என்னால் முடிந்த வரை என் உடம்பில் தெம்பு இருக்கும் வரை நான் கடையை போடுவேன். காரணம் இது நாள் வரை நான் யார்கிட்டேயும் கையேந்தியது இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன்’’ என்றவருக்கு பிரான்ஸ் அரசு ஒரு விருதினை வழங்கியுள்ளது.

‘‘நான் ஆரம்ப காலத்தில் இங்கு கடை போட்ட போது நான் வேலை பார்த்த ஸ்கூல் வாத்தியார் என் கடையில் பஜ்ஜி சாப்பிட்டு இருக்கார். அவர் பிரான்ஸ் நாட்டுக்காரர். அதன் பிறகு அவர் பிரான்சில் போய் செட்டிலாயிட்டார். மறுபடியும் சுமார் 30 வருஷம் கழிச்சு புதுச்சேரிக்கு வந்தவர் என் கடையை தேடி வந்து சாப்பிட்டார். அவருக்கு அப்ப சாப்பிட்டதற்கும் இப்ப சாப்பிட்ட போதும் சுவை மாறலன்னு பிரான்ஸ் முனிசிபாலிட்டி மேயரிடம் சொல்லி எனக்கு விருது கொடுத்தார்.

ஏழு மணிக்கு கடையை ஆரம்பிப்பேன். பத்து மணிக்கு மூடிடுவேன். மசாலா முதல் மாவு கரைப்பது வரை எல்லாமே நானே தான் செய்றேன். யாரிடமும் கொடுப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை பெண்கள் எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் வாழணும். முயற்சி செய்தால், கண்டிப்பாக ஜெயிக்கலாம்’’ என்று சொல்லும் பாட்டியின் பஜ்ஜி மட்டுமல்ல அவரின் இறால் மற்றும் மீன் ஊறுகாய் கூட புதுச்சேரி மக்கள் மத்தியில் ஃபேமஸ்.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஸ்டீபன்