கற்பித்தல் என்னும் கலை‘கொரோனா’ காலம் வந்ததிலிருந்து, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனதில் ஒரே கொந்தளிப்புதான். ‘ஆன்லைன்’ வகுப்பு நடந்தாலும், படித்த பாடங்களை மறக்காமலும், புதியனவற்றை ஓரளவு மனதிற்கு எடுத்துச் செல்லவும் உதவுகிறது. ஆனாலும்  புரியாதவர்களும், வசதி வாய்ப்பு இல்லாதவர்களும் குழம்பித்தான் போயிருக்கிறார்கள்.

ஓரிரு நாட்கள் எதிர்பாராத விடுமுறை கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது. ஓரிரு நாட்களாவது பள்ளிக்குச் செல்ல மாட்டோமா, நேரிடையாக கல்வி கற்க மாட்டோமா, எப்பொழுதுதான் இவையெல்லாம் ஓய்ந்து நாம் இயல்பு நிலை அடைவோம் போன்ற பலப்பல ஏக்கங்கள் மாணவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்பொழுது, ஆசிரியர்களுக்கும் நிறைய நினைவலைகள் ஓடத்தான் செய்யும். குறிப்பாக, இந்த 2020 ஆம் ஆண்டு நடந்து முடிந்திருக்க வேண்டிய விளையாட்டு தினத்தை தவற விட்டோம்.

‘சுதந்திர தினக்’ கொண்டாட்டங்கள் பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை. ‘ஆசிரியர் தினம்’ நடைபெறும் நாளில் பிள்ளைகள் ஆசிரியர்கள் போலவும், ஆசிரியர்கள் பிள்ளைகள் போலவும் நடித்துக்காட்டுவதுண்டு. எந்த ஒரு தொழிலுக்கும் கிடைக்கும் பாக்கியங்களைவிட ‘கற்பிப்பவர்’ என்பவருக்கு வாழ்நாள் முழுவதும் வாழ்த்துக்கள் வந்து சேரும். அப்படியாக உலக மூலை முடுக்குகளிலிருந்து, தொழில்நுட்பக் கருவிகளின் முன்னேற்றத்தால் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. பொதுவாக, ஆசிரியர்கள் சில மாணவர்கள் பெயரை மறக்க வாய்ப்புண்டு.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முகத்தை பார்த்துக்கொண்டிருப்பதால், அவ்வளவு பெயர்களும் சிலருக்கு மனதில் நிற்காது. ஆனால் படிக்கும் பிள்ளைகள் தனக்குப்பிடித்த ஆசிரியர்,  ஆசிரியை இவர்களை மறப்பதேயில்லை. எப்பொழுதும்் நம் அனுபவங்களைச் சொல்லும் தருணத்தில், ஒரு மாணவனின் நினைவலையை கேட்கலாமே என்று யோசித்தேன். வாழ்த்துத் தெரிவித்த மாணவன் தன் மருத்துவப் படிப்பை முடித்தவன். படிப்பில் மிகவும் சுட்டி. குறும்பிலும் சுட்டித்தனத்திலும் அனைவரையும் மயக்கி விடுவான்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அனைவரையும் தன் சிரிப்பால் மகிழ்வித்தான். குண்டு குண்டான கன்னங்களில் அழகிய குழி விழும் தோற்றம் வேறு. தான் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மறக்க முடியாத நட்பைத் தேடித் தந்ததாகச் சொன்னான். பள்ளி மாணவத்தலைவனும் அவன்தான்.

ஒருமுறை ஆசிரியர் தின கொண்டாட்டங்கள், பள்ளி அரங்கில் நடைபெற்றபோது, வகுப்பறைகளில் சில மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதாக அவனுக்குத் தெரிய வந்ததாம்.  அவனும் வேறு அணிகளைச் சேர்ந்த மற்ற இரு அணித்தலைவர்களும் அவர்களைத் தேடிச்சென்றனராம். விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை ‘பந்’தாக வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்களாம். வராண்டா முழுவதும் நீர் கொட்டி வழுக்கும் நிலை ஏற்பட்டதாம். பள்ளித் தலைவனையும், அணித்தலைவர்களையும் கண்டவுடன் அவர்கள் ஓடிப்போய் விழா நடைபெறும் இடத்தில் அமர்ந்து விட்டார்களாம்.

மேலும் தலைமை ஆசிரியரிடம் சென்று, அணித்தலைவர்களே விளையாடிக்கொண்டிருப்பதாக புகார் செய்தார்களாம். அணித்தலைவர்கள் வழுக்கும் இடத்தை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, தலைமை ஆசிரியர் வந்து பார்த்திருக்கிறார். அவ்வளவுதான், போதாத நேரம் என்றுதான் சொல்ல வேண்டியிருந்ததாம். அணித்தலைவர்களாகயிருந்துகொண்டு இப்படியா தண்ணீரைக் கொட்டி விளையாடுவது என்று திட்டியதுடன், பெற்றோரிடம் புகார் செய்தாராம்.

அந்த நிகழ்வுதான் பள்ளியில்தான் பெற்ற தண்டனை என்பதையும் சிரித்துக்கொண்டே கூறினான். தப்பு செய்தவர்கள் ஓடி ஒளிய, தவறை திருத்தச் சென்றவர்கள் மாட்டிக்கொண்டார்களாம். இருப்பினும், தலைமை ஆசிரியரிடம் உண்மையைக்கூட சொல்ல முடியாமல் தவித்தார்களாம். தண்டனை பெற்ற பின்னும், அந்நிகழ்ச்சியின் நகைச்சுவையை அனுபவித்தார்களாம்.

கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும், ஒவ்வொரு அணியின் மதிப்பெண்ணும் மொத்தமாக கிடைத்தபின், எந்த அணி அந்த வருடத்தின் ‘சாம்பியன்’ என்று அறிவிக்கப்படும். அப்படியாக மேலே சொன்ன பள்ளித்தலைவனின் அணி பல வருடங்களாக முன்னணி பெற்று வந்ததாம். அவன் பள்ளியை முடிப்பதற்கு முன், அதே நிலைமையை தக்க வைக்க நினைத்தானாம். எதிர்பாராத விதமாக சிறிது சரிந்துவிட்டதாம். அதனால் மனமுடைந்து வெளியே சிறிது நேரம் தனியாக இருந்திருக்கிறான்.

அப்பொழுதுதான் பெரிய அதிர்ச்சி உள்ளே சலசலப்புடன் நடந்துகொண்டிருந்ததாம். காரணம், இவன் அணிக்கு முந்திய அணி சில விதிகளை மீறியிருந்தார்களாம். ஆசிரியர்கள் மூலம் அது நிரூபிக்கப்பட்டதால், அந்த அணி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்து விட்டார்களாம். பழையபடி தங்கள் அணிதான் வெற்றிக்கோப்பையை வெல்வதாக அறிவிப்பு வந்ததாம். தன்னுடைய தலைமையில் சிறிது சரிந்துவிட்டதே என்று ஏங்கியிருந்த அவனுக்கு உடல் புல்லரித்ததாம். இவன் அணி மாணவர்கள் உரக்கக் கத்திக்கொண்டே அவனிடம் கூறினார்களாம். அந்த நிமிடம் அப்படியொரு மகிழ்ச்சி தனக்குக் கிடைத்ததாகக் கூறினான்.

‘‘பள்ளியில் கிடைத்த அப்படி ஒரு சந்தோஷம் என் வாழ்நாளில் ஏற்பட்ட அனுபவம் மேம்’’ என்று சிரித்துக்கொண்டே கூறினான். முதல் வகுப்பில் ‘நேருஜி’ உடையில் ‘பட்ஸ் அண்டு ப்ளாசம்ஸ்’ (buds and blossoms) என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் பங்கெடுத்தது முதல், பன்னிரெண்டாம் வகுப்பில் அணிக்கு வெற்றி சேர்த்தது வரை அனைத்துமே பள்ளியின் வெற்றிப்பாதையில்தான் என்றான். அப்பொழுது ‘‘ஆசிரியர்களால் தரப்பட்ட ஊக்குவிப்பும் உற்சாகமுமே எங்களை சாதிக்க வைத்துள்ளது’’ என்று பெருமையுடன் கூறிக்கொண்டான்.

பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மிகச்சிறந்த மதிப்பெண் பெற்றவர்களை ஊக்குவிப்பதற்காக, சென்னை பல்கலைக்கழக அறிவியல் கண்காட்சிக்கு அழைத்திருந்தார்கள். மாணவர்களின் பங்கையும் அவர்களின் திறமையையும் கட்டுரையாக வடிவமைத்திருந்தார்கள். பள்ளியில் படிக்கும்போதே, தங்கள் பெயர் கல்லூரி இதழில் இடம் பெற்றது குறித்துப் பெருமையாகப் பேசினான். இவை போன்ற நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாதவை என்று ஆனந்தக்கண்ணீர் மல்கக் கூறினான்.

ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பிள்ளைகளுக்கும் பள்ளி வாழ்க்கை நிறையவே கற்றுக்கொடுக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் திறமை பள்ளிப்பருவத்தில்தான் கண்டறியப்படுகிறது. அந்தத்திறமை எவ்வளவு பட்டை தீட்டப்படுகிறதோ அவ்வளவுக்கு ஜொலிக்கிறது. அத்தகைய பட்டை தீட்டும் வேலையைத்தான் கற்பிப்பவர் என்னும் ஆசிரியர் செய்கிறார். ஒளிந்து கிடக்கும் திறமைகளைக் கண்டுபிடித்து பிரகாசிக்கச் செய்வதுதான் ‘கற்பித்தல்’ என்னும் கலை.

மற்றொரு மாணவன், அவன் மாணவன் என்று சொல்ல முடியாத அளவுக்கு பெரிய அனுபவஸ்தர்களைவிட மனப்பக்குவம் படைத்தவன். அவனின் ஆங்கில அறிவு ஒரு அகராதி போன்றது என்றுகூட சொல்லலாம். பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவன் வென்று வராத போட்டிகளே கிடையாது என்று சொல்லலாம்.

பல்வேறு வெளிநாட்டு நிகழ்வுகளிலெல்லாம் கோப்பையை பள்ளிக்கு பெற்றுத் தந்துள்ளான். நிறைய உயர்பதவிகளையெல்லாம் திறமையால் பெற்றுவிட்டாலும், ஆசிரியர் மனதில் சிறு பிள்ளையாகவே நிலைத்துவிட்டான். பெரிய சாதனைகளை புரிந்தபின்னும் அன்புடன் ஆசிரியர்களை தழுவிக் கண்ணீர் வடித்தான். பத்தாம் வகுப்பு முடிந்து, பதினொன்றாம் வகுப்பைத் தாண்டும்பொழுது சிறந்த நடத்தை, கல்வித்தரம், விளையாட்டு, அறிவுத்திறன் போன்றவற்றின் அடிப்படையில் சில மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென பதவி தரும் நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு. அவர்களுக்குள் அந்நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஆங்கிலத்தில் அந்தப்பதவியை ‘பிரெஃபெக்ட்’ (Prefect) என்பார்கள். ஒரு நல்ல நாளில் கல்வியாளர்கள் முன்னிலையில், அவர்கள் கௌரவிக்கப்பட்டு அதற்கான ‘பேட்ஜ்’ (Badge) வழங்கப்படும். சாதனை புரிந்த பழைய மாணவர்களில், யார் அன்றைக்கு வரமுடியுமோ அவர்கள் யாராவது வந்து தலைமை ஏற்பர். அப்படியாக மேலே குறிப்பிட்ட மாணவன் தலைமையேற்க வந்தான்.

புதிய தலைமையேற்கும் மாணவத் தலைவர்களுக்கு, ஊக்கப்படுத்தியும், அவர்கள் பள்ளிக்குச்செய்ய வேண்டிய கடமைகளையும் தங்கள் அனுபவங்கள் மூலம் பகிர்வர். அப்படியாக பழைய மாணவன்தான், பள்ளியின் மூலம் அனுபவம் பெற்ற சில கருத்துக்களை கூறினான்.

அவன் கூறினான், ‘‘பள்ளியில் நாம் எத்தகைய அடிப்படை விஷயங்களைக் கற்று வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறோமோ, அதிலிருந்து ஒருபொழுதும் கீழே சரியக்கூடாது. எத்தனையோ கோப்பைகளையும், விருதுகளையும் சாதித்த நான், மிகப்பெரும் பேச்சுப்போட்டிக்கு தலைமை ஆசிரியரால் சிபாரிசு செய்யப்பட்டேன். மேடையில் ஏறிய நொடி, எதுவுமே எனக்குப் புலப்படவில்லை.

படித்தது அனைத்தும் மனதிற்குத் தோன்றாமலே இருந்துவிட்டது. சுமார் நாற்பது நொடிகள் மௌனம் சாதித்த பிறகு, மேடையை விட்டு இறங்கி வந்தேன். நடந்ததை தலைமை ஆசிரியரிடம் சொன்னேன்; அவர் ‘பரவாயில்லை, மீண்டும் அடுத்த வருடம் முயற்சி செய்’ என்று மேலும் ஊக்கப்படுத்தினார். மறுவருடம் கடின உழைப்புடன் பல்வேறு புத்தகங்களைப்படித்து நிறைய விஷயங்களை அறிந்துகொண்டேன். ஒவ்வொரு சுற்றிலும் முதலாவதாக வந்து, இறுதிச்சுற்றில் எட்டு மாணவர்களுள் முதலாவதாக வெற்றி பெற்றேன்.

‘லண்டன் பயணம்’ பரிசாக என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றுதான் கூற வேண்டும். ஆக, பிடித்த விஷயங்களை ஒருமுறை தோற்றாலும், விடாமல் முயற்சிக்க வேண்டும். பிடிக்காத-நம்மால் சாதிக்க சிரமப்படும் விஷயங்களை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது. சில பிள்ளைகள் எல்லாம் தெரிந்தும் தன்னை காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏதேனும் தவறாகக் கூறிவிட்டால், மற்றவர் ஏளனம் செய்வார்களோ என்றெல்லாம் யோசிப்பார்கள்.

எல்லோருமே அனைத்தும் ெதரிந்தவர்கள் என்று கூறமுடியாது. நம் கருத்தை சபையில் கூற கூச்சப்படவேக் கூடாது. நம் வாழ்க்கையை, நாம் அனுபவிக்க மற்றவர்களுக்காக கருத்துச் சுதந்திரங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை. அதேசமயம் நம்மை நாமே சாதித்து விட்டதாக பெருமைப்படுத்திக்கொள்வதுதான் அறியாமை.

ஒரு பெரிய ‘ஞானி’ போன்று பேசி முடித்தான். இத்தகைய மாணவர்கள் உலகம் முழுவதும் ‘சிட்டுக்குருவிகள்’ போன்று பறந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளி அவனுக்கு நிறைய அனுபவப் பாடங்களை சொல்லித் தந்திருக்கிறது. ஆம். ஆசிரியர்கள் பலவித அனுபவங்களைப் பெறுகிறார்களென்றால், மாணவர் மனதில் எத்தனையோ நிகழ்வுகள், மலரும் நினைவுகளாக வரத்தான் செய்கிறது. ஒரு விஷயம் மாணவர்கள் கருத்தில் கொண்டால் போதும். அவர்களின் விருப்பத்தை பெற்றோருக்குத் ெதரியப்படுத்த வேண்டும்.

என்னவெல்லாம்் செய்ய முடியுமோ அவற்றில் அதிகம் ஆர்வம் தந்து, அதை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாலே போதும். பிள்ளைகள் தங்கள் விருப்பத்தைச் சொல்ல ஆசிரியர்கள் உதவியையும் நாடலாம். ஆயிரக்கணக்கான துறைகள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து, அதில் நம் திறமையை மூலதனமாகச் செலுத்தினாலே நம்மால் நிறைய பலவிதமான விஷயங்களை சாதிக்க முடியும்.

வாழ்க்கையில் தேவைப்படும் அனைத்து விஷயங்களுக்கும் எப்படி ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகக் கருதப்படுகிறதோ, அதுபோல் கற்கும் பிள்ளைகள் ‘அப்துல்கலாமின்’ அருமைச் சொற்களை தினம் ஒன்றாக படித்தால் போதும். அனைத்திற்கும் வழி உண்டு. வாழ்க்கை என்பது கற்கும் மாணவர்களுக்கு ஒரு கரடு முரடான பாதை என்று சொல்ல வேண்டாம்.

அழகிய பூக்கள் நிறைந்த சோலையாகக் கொள்ளலாம். நிறைய முட்கள் நிறைந்த செடியில் காணப்படும் அழகிய ரோஜாக்கள் போன்று, சில கடினப் பாதைகளை கடக்க வேண்டியிருந்தாலும் அதன்பின் அழகான எதிர்காலம் ஒளிந்திருப்பதாகக் கொள்ளலாம். அழகிய புஷ்பங்களைப் பெற நம் முக்கோணம் என்னும் பெற்றோர், ஆசிரியர், பிள்ளைகள் ஒன்று சேர்ந்துதான் பயிரிட முடியும்.

சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்