போட்டோ மட்டுமில்ல டாட்டூ போடுவதிலும் நான் ஸ்பெஷலிஸ்ட்! ரூபா



ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற சொல் உண்டு. பிலிம் ரோல் கேமரா முதல் செல்போன் கேமரா வரை நாம் அன்றாடம் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் நம்மில் பல நினைவுகளை அசை போடும்.
பத்து வருடம் கழித்து பார்த்தாலும், அந்த நினைவலைகள் நம் மனதில் ஒரு மின்னல் போல் வந்து செல்லும். நம்மை அறியாமல் நம் மனதில் ஒரு குதுகலம் ஏற்படும். அவ்வாறு நீங்கா நினைவுகளை நம் மனதில் பதிய வைக்கும் புகைப்படத் துறையில் தனக்கு என்று ஒரு பாதையில் பயணித்து வருகிறார் ரூபா.

‘‘என்னோட சொந்த ஊர் திருப்போரூர். நான் சின்ன பெண்ணாக இருக்கும் போதே அப்பா தவறிட்டார். எனக்கு ஒரு தம்பி. என்னையும் என் தம்பியையும் இன்றும் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்வது என் அம்மா தான். எனக்கு சின்ன வயசில இருந்தே புகைப்படம் எடுக்க பிடிக்கும். கேமராவைப் பார்த்தால் எனக்குள் அப்படி ஒரு புத்துணர்வு ஏற்படும்.
அதனாலேயே விஸ்காம் படிக்க வேண்டும் என்று படிச்சேன். கல்லூரியில் என்னுடைய வகுப்பிலே நான் மட்டும்தான் பெண். நான் திருப்போரூரில் உள்ள கல்லூரியில் பல கனவுகளுடன் தான் இந்த படிப்பில் சேர்ந்தேன். ஆனால் நகரத்தில் இருக்கும் எக்ஸ்போஷர் எனக்கு அங்கு கிடைக்கவில்லை.

அதனால் நான் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னைக்கு பயணமானேன். அம்மாக்கு நான் படிப்பை பாதியில் நிறுத்தியது குறித்து கொஞ்சம் கோவம் தான். மேலும் நான் சென்னைக்கு போகப் போகிறேன் என்று சொன்ன போது அந்த கோவம் பல மடங்கானது. ஆனால் நான் அவர்களை எதிர்த்து தான் வீட்டை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்தேன்’’ என்றவர் புகைப்பட கலைஞராக வேண்டும் என்பதற்காகவே கங்கனம் கட்டிக் கொண்டு சென்னைக்கு பயணமாகியுள்ளார்.

‘‘சென்னைக்கு வந்த நான் முதலில் ஒரு ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு தான் ஒரு புகைப்படம் எப்படி எடுக்கணும்ன்னு கத்துக்கிட்டேன். அதில் உள்ள ஒவ்வொரு நுணுக்கங்களையும் புரிந்து கொண்டேன். ஸ்டுடியோ பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் பயணிக்க முடியாது. ஆனால் எனக்கோ அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதனால் நான் தனித்து செயல்பட நினைச்சேன். நான் வேலையில் இருந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்திருந்த காசு மற்றும் அம்மா வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்த காசில் ஒரு கேமரா வாங்கி இருந்தேன். அதை வைத்துக் கொண்டு, நானே சொந்தமாக புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சேன். நான் எடுத்த படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டேன்.

கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என பல கோணங்களில் நான் எடுத்த புகைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. வெட்டிங் ஷூட் ஆர்டர் வந்தது. ஒரு ஆர்டர் நான்கானது, பிறகு எட்டானது... இப்படி படிப்படியாக என்னுடைய உழைப்புக்கு ஒரு அடையாளம் கிடைச்சது. வந்த வருமானத்தில் எல்லா கடனையும் அடைச்சது மட்டுமில்லாமல் என் சொந்த ஊரில் ஒரு ஸ்டுடியோவை துவங்கினேன்’’ என்றவர் தென்னிந்தியாவின் சிறந்த புகைப்பட கலைஞர் என்ற விருது பெற்றுள்ளார்.

‘‘புகைப்படத் துறை நல்ல துறைதான். ஆனால் அந்த துறையைப் பொறுத்தவரை சீசன் காலத்தில் ஆர்டர்கள் குவியும். மற்ற நேரங்களில் ஆர்டர் இருக்காது. அந்த நேரம் சும்மா இருக்க பிடிக்காமல், வேறு ஒரு தொழில் செய்யலாம்னு முடிவு செய்தேன். நான் விரும்பி என் உடலில் குத்திய டாட்டூவையே ஏன் என்னுடைய மற்றொரு தொழிலாக மாற்றக்கூடாதுன்னு தோணுச்சு. அதை பற்றி முழுமையாக கற்றுக் கொண்டேன்.

இப்போது புகைப்படம் மட்டுமில்லை நான் டாட்டூ போடுவதிலும் ஸ்பெஷலிஸ்ட். போட்டோ எடுக்க வருபவர்கள் இங்கே இருக்கும் டாட்டூ ஸ்டுடியோவைப் பார்த்து டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள். இவை கலை சார்ந்த தொழில் என்பதால், இரண்டுமே என்னுடைய நிரந்தர தொழிலாக மாறிப்போனது. பெண்களாக இருந்தாலும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது, சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னேற வேண்டும்’’ என்றார் புகைப்படம் மற்றும் டாட்டூ கலைஞரான ரூபா.  

ஆனந்தி ஜெயராமன்