‘ஹோம் மினிஸ்டர்’ யோகாசனங்கள்!பொதுவாக, குடும்பத்திலுள்ள அனைவரின் உடல் ஆரோக்கியமும், பெண்களின் கரங்களில்தான் உள்ளது. ஏனென்றால் இவர்கள்தான் வீட்டிலுள்ள மழலைகள் தொடங்கி முதியவர் வரை என அனைவரின் உடல்நலத்தையும் கண்ணும், கருத்துமாய் பேணிக் காப்பவர்கள். இதன் காரணமாகத்தான் பெண்களை ‘ஹோம் மினிஸ்டர்’ எனக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய் பெண்ணினத்தை ‘கல்ப விருட்சம்’ என்றும் சொல்லலாம்.

ஆனால், நாட்டையே பாதுகாக்கும் வல்லமை கொண்ட பெண்ணினத்தின் ஆரோக்கியம் இன்றைய சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது. தன் நலத்தை கவனத்தில் கொள்ளாததுதான் இதற்கு முக்கிய காரணம். எனவே, பெண்களின் ஆரோக்கியத்தைப் பேண உதவும் யோகாசனங்கள் அவற்றை செய்யும் முறை மற்றும் பயன்களை விவரிக்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான டாக்டர் தீபா.

சமீபகாலமாக, இளம் பெண்களின் உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அவற்றில் மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் தாய்மை அடைதல் முதன்மையானவையாகத் திகழ்கின்றன. இயல்பாக நடக்க வேண்டிய ‘தாய்மை’ என்ற உன்னதம் செயற்கை முறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு பெண்களுடைய ஹார்மோன்கள் சரி விகிதத்தில் இல்லாமல் இருப்பதுதான் முக்கிய காரணம். இந்த ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி சீராக செயல்பட ஒரே தீர்வு மற்றும் சிறந்த வழி யோகாசனம்தான்.

சக்தி பிருந்தாவனம் என்ற குழு ஆசனங்கள் நம்முடைய ஆற்றலை அதிகரிக்கும். இந்த ஆசனங்களை ‘பவல முத்தாசனம் பாத்ரி’ என்றும் குறிப்பிடுவார்கள். சூரிய நமஸ்காரத்தில் பன்னிரெண்டு நிலைகள் உள்ளதைப்போன்று, இந்த வகை ஆசனத்தில் எட்டு நிலைகள் உள்ளன. இந்த ஆசனங்களைச் செய்யும்போது, பெண்களுடைய ஆற்றல் அதிகரிக்கும். தண்டுவடத்திலுள்ள அடைப்பைச் சரி செய்து, உடல்வலி, சோர்வு நீக்கும். குறிப்பாக, இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புக்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். ஹார்மோன் சீராக இல்லாத காரணத்தால் ஏற்படும் மாதவிடாய் பிரச்னையை சீர்படுத்தும்.

இந்த ஆசனங்கள் பெண்களின் ஆற்றல் மற்றும் எதிர்ப்பு சக்தி குறையும்போது அவற்றை அதிகரிக்கச் செய்து, தண்டுவடத்தைச் சீர் செய்ய உதவுகின்றது. குறிப்பாக பெண்களின் இடுப்புப் பகுதியில் உள்ள எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை வலுப்படுத்தும். இதனால் மாதவிடாய் பிரச்னைகள், வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் பூஞ்சை தொற்று வராமல் தடுக்கவும் ஹார்மோன்களைத் தூண்டவும் பயன்படுகின்றது. இனி ஒவ்வொரு ஆசனத்தை செய்யும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி டாக்டர் தீபா விவரிக்கிறார்.

ராஜுகர்ஸ்னா ஆசனம் ஒரு மிருதுவான போர்வையைத் தரையில் விரித்து அதன்மேல் கால்களை நீட்டி, ஒரு கயிற்றை இழுப்பதுபோல வசதியாக உட்கார வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது இரண்டு கால் முட்டிகளை ஒன்று சேர்த்து மடக்காமல் நீட்ட வேண்டும். வலதுகையை மேலே உயர்த்தும்போது இடதுகை முட்டி மேல் இருக்க வேண்டும். வலதுகையை மேலே உயர்த்தும்போது, மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். கையை கீழே இறக்கும்போது, மூச்சை வெளியே விட வேண்டும். இதே மாதிரி 5 முதல் 10 தடவை செய்ய வேண்டும். இந்த ஆசனத்தால் தோள்பட்டை, முதுகு பகுதி வலிமை அடையும். மார்பக புற்றுநோய் வராது. பெண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும்.

கட்டியத் மக்மேரு வக்ராசனம்

இந்த ஆசனத்தை டைனமிக்ஸ் ஸ்பைனல் ட்விஸ்ட் (Dynamic spinal Twist) என்றும் குறிப்பிடுவர். வழக்கம்போல், மிருதுவான போர்வை மீது 2 கால்களையும்  நன்றாக விரித்து அமர வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது 2 கைகளையும் மேலே உயர்த்திய நிலையில் வைக்க வேண்டும். வலதுகையால் இடதுகால் கட்டை விரலையும், இடதுகையால் வலதுகால் கட்டை விரலையும் மாறி மாறி தொட வேண்டும். வலதுகையால், இடதுகால் கட்டை விரலைத் தொடும்போது, இடது கையை நன்றாக நீட்டிய நிலையில் வைக்க வேண்டும்.

அப்போது முகத்தை நன்றாக திருப்பி, விரல்களைப் பார்க்க வேண்டும். இந்த ஆசனத்தைச் செய்யும்போது, இயன்றவரை கைகளை நீட்டினால் போதும். சிரமப்படக்கூடாது. உடலைத் திருப்பும்போது மூச்சை வெளியேவிட வேண்டும். இயல்பு நிலைக்கு வரும்போது, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்த ஆசனத்தைச் செய்வதால், முதுகுத் தண்டுவடம் (Spinal guard) நன்றாக வளையும். இதயம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டலம் நன்றாக இயங்க இந்த ஆசனம் பயன்படும். மேலும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

சக்கி சாலன் ஆசனம் (Chunning the mill)

அந்தக்காலத்தில், வீட்டில் பாட்டி-தாத்தா போன்ற பெரியவர்கள் துணி துவைத்தல், மாவு ஆட்டுதல், மரம் வெட்டுதல், வீடு பெருக்குதல் போன்ற ஒவ்வொரு வேலையையும் உடற்பயிற்சியாகவே பார்த்தார்கள். எனவேதான், நமது பாட்டிமார்கள் பத்து குழந்தைகள் பெற்றாலும், எந்த வயதிலும் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். சக்கி சாலன் ஆசனமும் அதைப் போன்றதுதான்.உரலில் மாவு ஆட்டுவதைப் போன்றுதான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும். தரையில் மென்மையான துணியொன்றை விரித்து அதன்மேல் 2 கால்களையும் நன்றாக விரித்து உட்கார வேண்டும். அதன்பிறகு, 2 கைகளையும் நன்றாக நீட்டி (கைமுட்டி மடங்காமல்) ஒன்றாகச் சேர்த்து பிடிக்கவும்.

பின்னர், மாவு ஆட்டுவதுபோல், இடுப்பு பகுதியில் இருந்து 2 கைகளையும் தொடைப்பகுதி வரைக்கும் 5 தடவை சுற்ற வேண்டும். பின்னர், எதிர் திசையில் 5 தடவை அதே மாதிரி சுற்ற வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு, பின்புறமாக கைகளைக் கொண்டு போக வேண்டும். முன்புறமாக கைகளைக் கொண்டு வரும்போது மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும். இடுப்பு தசைகள் (Pavic muslces) நன்றாக இயங்க உதவும் இந்த ஆசனம் மாதவிடாய் மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் பயன்படுகின்றது. தாய்மை அடைந்த பெண்கள் முதல் 3 மாதம் இந்த ஆசனத்தைத் தாராளமாகச் செய்யலாம். குழந்தை பெற்ற பிறகு இடுப்பு தசைப்பகுதியை வலிமைப்படுத்தவும், தொப்பையைக் குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவும்.

நௌக்கசன்சால ஆசனம்

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை எந்தச் சூழலிலும் பேணிப்பாதுகாப்பதில் இவ்வாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. துடுப்பால் படகைச் செலுத்தும்போது, முதுகை வளைத்து கை, கால்களை முன்பக்கமாக நீட்டியவாறு உட்கார்கின்றோம் அல்லவா? அதைப்போன்றுதான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும் என்பதால், Boat Rowing Pose ஆசனம் என்பார்கள்.

முதுகை பின்புறமாகச் சாய்க்கும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். முன்பக்கமாகக் கொண்டு செல்லும்போது, உள்ளே இழுத்த மூச்சை மெல்ல மெல்ல வெளியே விட வேண்டும். இந்த ஆசனமும் இடுப்பைச் சுற்றியுள்ள உறுப்புகளுக்கு புத்துணர்ச்சி தரும். மலச்சிக்கலைச் சரி செய்யும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வதால் மாதவிடாயின்போது ஏற்படுகின்ற வெள்ளைப்படுதல், பூஞ்சை ெதாற்று, வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு, வாந்தி, தலைவலி முதலான பாதிப்புகள் குணமாகின்றன.

கஷ்த துக்‌ஷன ஆசனம் (Chopping wood pose)

ஒரு மரத்தை வெட்டுவதை எவ்வாறு செய்வோமோ அதைப்போன்றுதான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும். அதாவது கால்களை மடக்கியவாறு கைகள் இரண்டையும் சேர்த்து முன்பக்கம் உயர்த்தி நீட்டியவாறு அமர வேண்டும். அதன்பிறகு மூச்சை மெதுவாக உள்ளிழுத்து கைகளைத் தலைக்கு மேலே தூக்க வேண்டும். மூச்சை வெளியே விடும்போது கைகளை வேகமாக கீழே இறக்க வேண்டும். இதைப்போன்று, 10-லிருந்து 15 தடவை செய்யலாம். தோள்பட்டை பின்பக்க சதை ஆகியவற்றை வலுப்படுத்தி மூட்டுவலியைச் சரி செய்யும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படுகின்ற கோபம், எரிச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்தி மனதுக்கு அமைதியைத் தரும்.

நமஸ்கார ஆசனம்

கஷ்டதக்‌ஷன ஆசனம் செய்வதற்கு, மரத்தை வெட்டுவதைப்போல் அமர்ந்தோம் அல்லவா? அதைப்போன்று அமர்ந்து 2 கால்களையும் நன்றாக தள்ளி வைக்க வேண்டும். அதன்பிறகு 2 கைகளையும் 2 முட்டிக்கு முன் நீட்டியவாறு வைத்து, கை கூப்பிய நிலையில் மார்பு பகுதிக்கு அருகே நமஸ்காரம் பண்ண வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது, கைகளை முன்னாடி கொண்டுவர வேண்டும்.

மூச்சை வெளியே விடும்போது, தலைக்கு மேலே கைகளை உயர்த்த வேண்டும். முட்டி வலியால் அவதிப்படுபவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. ஒருவேளை செய்ய விரும்பினால் சம்மணமிட்டு செய்யலாம். தொடை, முட்டி, தோள், கழுத்து, இடுப்பு ஆகிய உறுப்புகளின் தசைகள் மற்றும் நரம்புகள் வலுவாகும்.

வாயு நிக்‌ஷாசனம் (Wind Realusing pose):

பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். தாய்மை அடைந்த பிறகு நிறைய பெண்கள் வாயு பிரச்னையால் அவதிப்படுவார்கள். சிசேரியன் மூலமாகவோ அல்லது நார்மல் டெலிவரியாகவோ குழந்தை பெற்றாலும் ஒரு சில பெண்களுக்கு கர்ப்பப்பை சுருங்காமல் வாயுத்தொல்லை இருக்கும். ஸ்காவ்டிங் (Squatting) நிலையில் உட்கார்ந்து 2 கைகளால் பாதத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆசனத்தைச் செய்யும்போது இயல்பாக மூச்சு விடலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். முதுகுத் தண்டுவடத்தைச் சீராக வைக்க  உதவும். இடுப்பு பகுதியில் உள்ள உறுப்புக்களை வலிமைப்படுத்தும்.

கௌவ்வசலாசனம் (Crow Walking)

இந்த ஆசனம் காகம் சின்னச் சின்னதாக அடியெடுத்து நடப்பதைப் போன்றது. ஸ்காவ்டிங் நிலையில் (Squatting) அமர்ந்து வலதுகால் முட்டியைத் தரையில் வைத்து இடதுகாலை உயர்த்தி வைக்க வேண்டும். பின் 2 கைகளையும் முட்டியின் மீது வைத்தவாறு கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இதைச் செய்யும்போது இயல்பாக மூச்சை விடலாம். கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

உதர கர்ஷன் ஆசனம்

கௌவ்வசலாசனம் செய்வதற்கு எவ்வாறு உட்கார்ந்தோமோ, அதைப்போன்று முதலில் அமர வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு, முதுகை நன்றாக திருப்பி இடதுபக்கம் பார்க்க வேண்டும். பழைய நிலைக்கு வரும் போது, மூச்சை வெளியே விடவேண்டும். இதே மாதிரி 5-லிருந்து 10-தடவை செய்யலாம். வாதம், பித்தம், கபம் பிரச்னை தீரும். செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கும். வாயுத்தொல்லையை போக்கும். மலச்சிக்கலை நீக்கும்.

செய்தி: விஜயகுமார்

படங்கள்:ஆ.வின்சென்ட்பால்