தோழியருக்கான குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-(நவம்பர் 16 முதல் 30 வரை)1. அசுவினி: அன்பினால் எவரையும் வெல்லும் விவேகப் பெண்மணிகளான உங்கள் கனவுகள் நனவாக குருபகவான் 10-ம் வீட்டிற்கு பெயர்ச்சியாவதால் தனஸ்தானம், சுகஸ்தானம், சத்ருஸ்தானம் எனப்படும் மூன்று வீட்டை பார்வை செய்வதால் தேக நலம் சீரடையும். பண வரவில் திடீர் முன்னேற்றமும் புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கண்டு மகிழ்வீர்கள். பழைய வீட்டை மாற்றி புதிதாய் மாற்றி அமைப்பீர்கள். வாகனம், ஆடை, ஆபரணங்கள் சேரும். தெய்வ வழிபாடுகள் நிறைவேறும். கணவன், மனைவி இருவரும் மனம் ஒருமித்து இன்பம் காண்பர். செவ்வாய்க்கிழமை நவசக்தி விநாயகர் (மயிலை) தரிசிக்க நலம் கிட்டும்.

2. பரணி: எவரையும் நேருக்கு நேராய் எதிர்கொள்ளும் ஓர் வீராங்கனைகளான உங்களின் எதிர்காலக் கனவுகள் நிறைவேற குருபகவான் 10-ம் வீட்டிற்கு பெயர்ச்சியாவதால் தங்களின் வாக்குஸ்தானம், மாதுர்ஸ்தானம், ரோகஸ்தானம் எனும் வீட்டைப்பார்ப்பதால் உடல்நலத்தில் தெளிவடைவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு அரசாங்க வேலை கிட்டும் யோகமுண்டு. சிலரின் தடைபட்டு வந்த திருமணம் முடிவாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். இல்வாழ்க்கையில் வெறுப்புக்கள் நீங்கி விருப்பங்கள் கூடுதலாகும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை சேவிக்க தடைகள் விலகும்.

3. கிருத்திகை: எடுத்த செயல் எதுவாயினும் அதனை வெற்றிகரமாய் செய்து முடிக்கும் வெற்றி ராணிகளான உங்களின் ராசிக்கு குருபகவான் 9-ம் வீட்டிற்கு பெயர்ச்சியாவதால் ராசியையும், 3, 5-ம் வீட்டையும் குரு பார்ப்பதால் உங்களின் காட்டில் பணமழைதான் போங்கள். உடல்நலம், மனநலம் தெளிவாகும். தனவரவு இரட்டிப்பாகும். சகோதரர்களின் மூலம் நன்மைகள் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். தம்பதியர்கள் வாழ்க்கையில் வசந்தம் வந்து வீசும் நேரம். வியாழக்கிழமையன்று சீரடி சாய்பாபாவை தரிசிக்க சிறப்புக்கள் வரும்.

4. ரோகிணி: கலகலப்பான சுபாவமும், அனைவருக்கும் ஓடிப்போய் உதவி செய்யும் நல்ல உள்ளமும் கொண்ட தங்களுக்கு குருபகவான் 9-ம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி ராசியையும், மூன்றாம் வீடான தைரியஸ்தானம், 5-ம் வீடான பூர்வ புண்ணியஸ்தானத்தையும் பார்வை செய்வதால் எடுத்த செயல் எதுவாயினும் வெற்றி உங்களின் பக்கம்தான். எனவே உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். உடல் ஆரோக்கியம் தெளிவாகும். பண வரவு இரட்டிப்பாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் வந்து சேரும். நட்பால் நன்மைகள் வந்து சேரும். எதிரிகள் தலை குனிவர். வீட்டில் சுபமங்கள நிகழ்வுகள் கூடிவரும். மகான்களின் ஆசி கிட்டும். கடன் சுமைகள் குறையும். இல்வாழ்க்கையில் கூடுதலான இன்பங்கள் வந்து மகிழ்விக்கும். வியாழக்கிழமையன்று குருபகவானை தரிசிக்க குடும்பம் தழைக்கும்.

5. மிருகசீரிடம்: எதையும் எளிதாய் எடுத்துக்கொள்ளும் சுபாவமும், மதிநுட்பத்தால் விரைவாய் செயல் முடிக்கும் திறமை பெற்ற தங்களுக்கு குரு பெயர்ச்சி 1, 2 பாதம், ராசியிலும், 3, 4-ம் பாதம் தனஸ்தானத்தையும் பார்வை செய்வதால் உடல்நலனில் தெளிவும், முகமலர்ச்சியும் ஏற்படும். தனவரவில் தடை அகலும். மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதுவிதமான தொழில் ஆரம்பம் செய்ய யோசனைகள் உருவாகும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடுவதும், அதன்பொருட்டு வீடு மகிழ்ச்சியாகும். தாம்பத்திய வாழ்வில் வெறுப்புக்கள் நீங்கி விருப்பம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமையன்று பழநியாண்டவரை தரிசிக்க பாபம் நீங்கும்.

6. திருவாதிரை: சுய காரியத்தில் கண்ணாய் நின்று செயல்படும் தனித்திறமையும், எவரையும் எளிதில் வெல்லும் செயல் ராணிகளான தங்களுக்கு குருபகவான் 8-ம் வீட்டிற்கு பெயர்–்ச்சியாகி தனஸ்தானத்தை நேர் பார்வையாயும், சுகஸ்தானத்தையும் பார்ப்பதால் இப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தர உள்ளது. சரளமான பண வரவைக் காண்பீர்கள். மனக்குழப்பங்கள் தீரும். இதுநாள் வரையில் இருந்து வந்த பிதுர் சொத்துக்கள் பிரச்னைகள் முடிந்து ஓர் தொகைக்கு வந்து சேரும். சிலருக்கு உத்தியோக இடமாற்றமும் உண்டு. புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யும் யோகமும் சிலருக்கு அமையும். சித்தர்களை தரிசிப்பீர்கள். அயல் நட்டிலிருந்து நற்செய்திகள் வரலாம். கணவன், மனைவி உறவு கற்கண்டாய் இனிக்கும் தருணமிது. வியாழன் அன்று ராகவேந்திரர் தரிசனம் விருப்பங்கள் நிறைவேறும்.

7. புனர்பூசம்: தெய்வீக அருளைப் பூரணமாய் கிடைக்கப்பெறும் அதிர்ஷ்டசாலிப் பெண்மணிகளான தங்களுக்கு குருபகவான் அஷ்டமஸ்தானம் எனும் எட்டாமிடத்திற்கு பெயர்ச்சியாகின்றார். தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும் பார்வையிடுவதால் செய்தொழிலில் திடமான எண்ணங்களுடன், ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயரை தட்டிச்செல்வீர்கள். தேகம் சீரடையும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். இல்லத்தில் சுபநிகழ்வுகள் கூடுவதும், உற்றார், உறவினர் வருகையும், தங்களின் மதிப்பு உயரும். இல்லறத்தில் இருந்து வந்த கருத்து மாறுபாடுகள் விலகிப்போகும். வியாழன் அன்று ராமானுஜரை தரிசிக்க விருப்பங்கள் நிறைவேறும்.

8. பூசம்: நினைத்ததை செய்து முடிக்கும் தனித்திறன் கொண்ட சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த தங்களுக்கு குருபகவான் நேர்பார்வையாய், 7-ம் வீட்டிற்கு குரு சந்திர யோகமாய்ப் பெயர்ச்சியாகின்றார். எனவே உங்களின் காட்டில் பணமழைதான் போங்கள். மனதில் தெம்பும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும் இனிய நேரம். எங்கும் இனிமையான சூழ்நிலை தென்படும். உற்றார், உறவினர்களிடையே தங்களின் மதிப்பு உயரும். தேகம் தெளிவாகும். சிலருக்கு அரசாங்க வேலை கிட்டும். சிலரின் நெடுநாளைய கனவான புதிய வீடு, வாகனம், ஆபரணங்கள் சேரும் நேரம். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப்பேசி மகிழும் தருணம். வெள்ளிக்கிழமையன்று காமாட்சி தரிசனம் வெற்றிகள் கிட்டும்.

9. ஆயில்யம்: சாதிக்கும் எண்ணம் கொண்ட சாதனைப் பெண்மணிகளான தங்களுக்கு குருபகவான் சப்தமஸ்தானம் எனும் 7-ம் வீட்டிற்கு குரு சந்திர யோகமாய் பெயர்ச்சியாகிறார். எனவே உங்களின் மனம் தெளிவடையும். முகம் பிரகாசமாகும். பண வரவு இரட்டிப்பாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். சகோதரர்களால் நன்மைகள் வந்து சேரும். தாய் வீட்டின் மூலம் பிதுர் சொத்துக்களால் ஆதாயம் காண்பீர்கள். தெய்வப்பிரார்த்தனைகள் நிறைவேறும். சித்தர்களை தரிசிப்பீர்கள். சிலரின் தடைபட்ட திருமணம் உடனே முடிவாகும். குடும்பத்தில் இருந்துவந்த மனவேற்றுமைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் என சேரும். தாம்பத்திய வாழ்வில் இருவர் மனம் இணையும் அற்புத நேரம். சனிக்கிழமை ஊனமுற்ேறாருக்கு உதவ சங்கடங்கள் விலகி ஓடும்.

10. மகம்: நட்பிற்கு இலக்கணமாய்த் திகழும் உத்தமப் பெண்மணிகளான தங்களுக்கு குருபகவான் ரண, ருண, ரோகஸ்தானம் எனும் ஆறாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். குடும்பஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். இவ்வாண்டில் எண்ணிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் நிறைவேறும். புதிய தொழில் ஆரம்பிக்க நட்பு வட்டம் கை கொடுக்கும். பழைய பாக்கிகள் வந்து சேரும். அயல் நாட்டிலிருந்து நற்செய்திகள் வந்து மனதை மகிழ்விக்கும். சிலரின் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கண்டு ஆனந்தமாவீர்கள். குலதெய்வ வழிபாடுகள் செய்வீர்கள். கணவன், மனைவி இருவரும் இல்லறத்தில் மகிழ்வு காணும் நேரம். ஞாயிற்றுக்கிழமையன்று மயிலை கபாலீஸ்வரரை தரிசிக்க நன்மைகள் கிட்டும்.

11. பூரம்: உயர்வான எண்ணங்கள், தெய்வ அனுக்கிரகம் அமையப்பெற்ற சூரியன் ராசியான தங்களுக்கு குருபகவான் 6-ம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். வாக்குஸ்தானத்தை குரு பார்ப்பதால் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி எனப் பாடத்தோன்றும். செய்தொழிலில் எதிர்பார்த்தபடி நல்ல வருமானம் கிட்டும். வீட்டைப் புதுப்பித்து அழகுபடுத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் தேவையற்றதை தவிர்க்கவும். உங்களின் வேலைத்திறமையால் மேலதிகாரிகளின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். தேகம் சௌக்கியமாகும். பணபலம் கூடும். சிலரின் தடைபட்ட திருமணம் உடனே முடிவாகும். இல்லறம் நல்லறமாய் இனிமை சேர்க்கும் ஓர் நல்ல நேரம். சனிக்கிழமை லட்சுமி நரசிம்மரை தரிசிக்க
சந்தோஷம் வந்து சேரும்.

12. உத்திரம்: நெஞ்சில் உறுதியுடன் எடுத்த செயலை செய்து முடிக்கும் வரை ஓயாமல் செயலாற்றும் விவேகப் பெண்மணிகளான தங்களுக்கு குரு பூர்வ புண்ணியஸ்தானம் என்னும் 5-ம் வீட்டிற்குப் பெயர்ச்சியாகிறார். எனவே தங்களின் ராசியை குரு 9-ம் பார்வையாய், குரு சந்திர யோகமாய் சஞ்சாரம். ஆதலால் உடல்நலம்,  மனநலம் சீரடையும். முகத்தில் தேஜஸும், தெளிவுமாய் வளைய வருவீர்கள். இவ்வாண்டு மனதில் இருந்து வந்த நெடு நாளைய கனவுகள் நிறைவேறும். பணவரவிற்கு தொழிலில் நல்ல லாபம் காண்பீர்கள். உறவினர்கள் மத்தியில் பெருமையுடன் பேசப்படுவீர்கள்.
சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும் நேரமும் உண்டு. கணவன், மனைவி உறவில் இருந்த விரிசல் நீங்கி விருப்பம் அதிகரிக்கும். புதன்
கிழமையன்று லட்சுமி நரசிம்மரை தரிசிக்க நலம் உண்டாகும்.

13. அஸ்தம்: திட்டமிட்டு செயலாற்றும் செயல்திறமை அதிகம் கொண்ட உத்தம குணம் கொண்ட புதனின் ஆதிக்கத்தில் பிறந்த தங்களுக்கு, 5-ம் வீடான பூர்வ புண்ணியஸ்தானம் எனும் புத்திரஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி அடைகின்றார். தன் விசேஷப் பார்வையான 9-ம் பார்வையாய் குரு சந்திர யோகமாய் அமைந்ததால் நினைத்தது யாவும் நடக்கும். கேட்டது அனைத்தும் கிடைக்கும் ஓர் பொற்காலம் எனலாம். ஆதலால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் மேன்மையும், உற்சாகமும் வந்து மனதை மகிழ்விக்கும். தனவரவு அதிகரிக்கும். உத்தியோகத்துறையினர் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றம் வரலாம். உங்களின் நெடு நாளைய ஆசைகள் பூர்த்தியாகும் நேரம். கணவரின் பாராட்டுதல் கண்டு ஆச்சர்யப்படும் இனிய மாதமிது. திங்கட்கிழமையன்று கிருஷ்ணரை தரிசிக்க திருப்பங்கள் வரும்.

14. சித்திரை: நேருக்கு நேர் நின்று எவரையும் துணிவுடன் எதிர்கொள்ளும் திறமைசாலிப் பெண்மணிகளான தங்களுக்கு 1, 2-ம் பாதம் கன்னி ராசிக்கு 5-ம் வீட்டிலும், 3, 4-ம் பாதம் துலா ராசிக்கு 4-ம் வீட்டிலும் பெயர்ச்சியாகின்றார். எனவே உடல்நலம் சீரடையும். தனவரவில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும். கலைத்துறையினர் வெளிநாட்டுப் பயணங்கள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சிலருக்கு அயல்நாடு சென்று கல்வி பயில அழைப்பு வரும். சிலரின் நெடுநாளைய கனவுகள் ஈடேறும். இவ்வாண்டை சாதனையாய் மாற்றிக்காட்டுவீர்கள். மனைவியின் திறமை கண்டு கணவர் மகிழும் அற்புதத் தருணமிது. செவ்வாய் அன்று ெசந்திலாண்டவரை தரிசிக்க திருப்பங்கள் வரும்.

15. சுவாதி: என்றும் சிரித்துப்பேசும் இயல்பான குணமும், எவரிடமும் ஓடிப்போய் உதவி புரியும் தியாக மனப்பான்மையும் கொண்ட சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற தங்களுக்கு குருபகவான் மாதுர்ஸ்தானம், சுகஸ்தானம் என்னும் 4-ம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி அஷ்டமஸ்தானத்தையும், ஜீவனஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் செய்தொழிலில் அபிவிருத்தியும், முன்னேற்றமும் காண்பீர்கள். தாய் வீட்டின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பிதுர்க்கள் மூலம் ஓர் ெபருந்தொகை கைக்கு வந்து சேரும். சிலருக்கு திருமணம் கூடிவரும். தம்பதியினரிடையே ஒற்றுமை உணர்வுகள் மேலோங்கும். ஞாயிறு அன்று கருட பகவானை தரிசிக்க கவலைகள் விலகும்.

16. விசாகம்: செய்யும் தொழிலே தெய்வம் என தன் காரியத்தில் கண்ணாய் செயல்பட்டு வெற்றிக்கோட்டையை எட்டிப்பிடிக்கும் துணிச்சலான பெண்மணிகளான தங்களுக்கு குருபகவான் சுகஸ்தானம் என்னும் 4-ம் வீட்டிற்கும் (4-ம் பாதம், 3-ம் வீட்டிற்கும்) பெயர்ச்சியாகிறார். ஜீவன
ஸ்தானத்தை நேர் பார்வை செய்கின்றார். எனவே உங்களின் திறமைகள் பளிச்சிடும். செய்தொழிலில் நல்ல முன்னேற்றமும், அதிக லாபமும் கிடைக்கும். தேகநலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் அதிக உற்சாகமும், தெம்பும் கரை புரண்டோடும். ஞானிகளை தரிசிப்பீர்கள். கலைத்துறைப் பெண்மணிகளின் சாதனைகள் வெளிப்படும் நேரம். செவ்வாய்க்கிழமையன்று கருமாரி தரிசனம் காரியம் கைகூடி வரும்.

17. அனுஷம்: அன்பிற்கு தலை வணங்கும் பெருந்தன்மையும், நேர்மையின் மறு உருவங்களான உத்தமப் பெண்மணிகளான தங்களுக்கு குருபகவான் தைரியஸ்தானம் என்னும் மூன்றாம் வீட்டிற்குப் பெயர்ச்சியடைகின்றார். 7-ம் வீட்டையும், 9-ம் வீட்டையும், 11-ம் வீடான லாபஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார். எனவே நினைத்த செயல் யாவும் நடைபெறும் இனிய நேரம். தேகம் மின்னும். தனவரவு கூடும். மனதில் தெம்பும், உற்சாகமும் என வளைய வருவீர்கள். வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். விருந்து, பார்ட்டி என அழைப்பு வரும். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். நவரத்தினங்கள் சேரும். தம்பதிகள் மனம் ஒருமித்து சந்தோஷம் காணும் இனிய நேரம். சனிக்கிழமையன்று வரதராஜப்பெருமாள் தரிசனம் வாழ்வு வளமாகும்.

18. கேட்டை: இனிமையுடன் பேசி காரியம்  சாதிப்பதில் வெகு திறமைசாலிப் பெண்மணிகளான தங்களுக்கு குருபகவான் தைரியஸ்தானம் என்னும் மூன்றாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். அத்துடன் 5-ம் பார்வையாய் 7-ம் வீட்டையும், 7-ம் பார்வையினால் 9-ம் வீட்டையும், 9-ம் பார்வையால் லாபஸ்தானத்தையும் பார்வையிடுவதால் மனதில் தைரியமும், புதுவிதமான தெம்பும் வந்து சேரும். குலதெய்வ வழிபாடுகளை செய்து முடிக்க எண்ணுவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கூடும். சிலரின் உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். சிலர் புதிய வங்கிக் கணக்கைத் தொடங்குவீர்கள். கடன் சுமைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதியைக் காணும் இனிய நேரம். வெள்ளிக்கிழமையன்று மீனாட்சி தரிசனம் வெற்றியைத் தரும்.

19.மூலம்: உயர்ந்த நோக்கங்களும், நல்ல எண்ணங்களுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் சாதனை நாயகிகளான உங்களின் கனவுகள் நிறைவேறும் ஓர் இனிமையான நேரமாய் தங்களுக்கு குருபகவான் தனஸ்தானம் என்னும் 2-ம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். எனவே தேகநலம் சீராகும். பண வரவில் முன்னேற்றம் காண புதிய வழிகளை யோசிப்பீர்கள். நட்பு வட்டத்தினால் நன்மை வந்து சேரும். மனதில்  புதுவித உற்சாகம் பிறக்கும். திருமணம், விருந்து, பார்ட்டி என கலந்துகொள்வீர்கள். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் தேடி வந்து பாராட்டும் ஓர் இனிமையான தருணம். சனிக்கிழமையன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் தரிசனம் பாவங்கள் விலகும்.

20. பூராடம்: அனைவருக்கும் உதவி புரியும் ெதாண்டு உள்ளம் கொண்ட உத்தமப் பெண்மணிகளான தங்களை மகிழ்விக்கும் ஓர் நல்ல நேரமாய் தங்களுக்கு குருபகவான் 2-ம் வீடான குடும்பஸ்தானத்திற்குப் பெயர்ச்சியாகிறார். எனவே உங்களின் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பண வரவில் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டு திருப்தியளிக்கும். தேகநலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் தாமே தேடி வந்து உறவாடுவர். எதிரிகள் தலைகுனிவர்.  கடன் பிரச்னைகளிலிருந்து மீள்வீர்கள். சிலருக்கு சொந்த ஊருக்கு உத்தியோக மாற்றம் கிட்டும். மாணவிகள் அயல்நாடு சென்று கல்வி பயில அழைப்பு வரக்கூடும். கணவன், மனைவி இருவரும் ஒற்றுமை காணும் இனிய நேரம். வியாழக்கிழமையன்று குருபகவானைத் தரிசிக்க குழப்பங்கள் தீரும்.

21. உத்திராடம்: நட்பிற்கு இலக்கணமாய்த் திகழும் அன்பு மனம் கொண்ட தியாகப் பெண்மணிகளான தங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் ஓர் நல்ல நேரமாய் (1-ம் பாதம் 2-லும்) 2, 3, 4-ம் பாதத்திற்கு ராசியிலும் பெயர்ச்சியாகிறார். 5, 7, 9-ம் வீடுகளைப் பார்வை செய்கின்றார். எனவே தொட்டவைகள் யாவும் துலங்கும் நேரம். தேக ஆரோக்கிய நலனில் கவனம் கொள்வீர்கள். பண வரவு சரளமாய் வரக்கூடும். மனதில் இருந்து வந்த சோர்வுகள் விலகும். சகோதரிகளால் நன்மைகள், நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட கை கொடுப்பீர்கள். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்ல அழைப்புகள் வரக்கூடும். இல்லறத்தில் இன்பங்கள் கூடுதலாகி மகிழ்வடையும் இனிய நேரம். ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய பகவான் தரிசனம் ஆரோக்கியம் தரும்.

22. திருவோணம்:  எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் தனித்திறமையும், செயல்திறன் அதிகம் கொண்ட திறமைசாலிப் பெண்டிர்களான உங்களின் கனவுகள் யாவும் நனவாக தங்களின் ராசியில் குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அவர் தன் 5, 7, 9-ம் பார்வையால் தங்களுக்கு நிறைவான பலன்களை அள்ளித்தர உள்ளார். எனவே உடல்நலம் சுகமடையும். தனவரவு அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் வந்து முகம் பிரகாசமடையும். சிலருக்கு அரசாங்க வேலை கிட்டும் யோகம் உண்டு. சுபமங்கள நிகழ்வுகள் கூடும். புதிய வீடு வாங்கும் நெடுநாளைய கனவுகள் நனவாகும். கணவன், மனைவி இருவரும் பரஸ்பர அன்பைப் பகிரும் நேரம். வெள்ளிக்கிழமை வரலட்சுமியை தரிசிக்க வாழ்வு வளமாகும்.

23. அவிட்டம்: எதையும் தாங்கும் மனோ திடமும், யோசித்து செயல்படும் தனித்திறமை கொண்ட தங்களுக்கு குருபகவான் 1, 2-ம் பாதம் ஜென்ம ராசியிலும், 3, 4-ம் பாதங்கட்கு 12-ம் வீட்டிற்கும் பெயர்ச்சியாகின்றார். எனவே எச்செயலிலும் வெற்றி காண்பீர்கள். பணமுடை தீரும். தேகநலம் சுகமாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். வாகன வகையில் செலவுகள் வரலாம். பழைய வீட்டை மாற்றி புதிதாய் அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்துறைப் பெண்களுக்கு இடமாற்றம் வரலாம். அலுவலகத்தில் பணிச்சுமைகள் கூடுதலாகும். அதன்பொருட்டு மனஉளைச்சல், அசதியும் உண்டாகும். சித்தர்கள் தரிசனம் கிட்டும். இல்வாழ்க்கையில் இனிமைகள் கூடுதலாகி அசத்தும் நேரம். திங்கட்கிழமையன்று சோமநாதரை தரிசிக்க சோகம் தீரும்.

24. சதயம்: முன்யோசனைகள் அதிகமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட தங்களுக்கு குருபகவான் சென்ற ஆண்டு லாபஸ்தானம் என்னும் பதினொன்றாம் வீட்டில் பலன் தந்துள்ளார். இப்போது அயன, சயன, போக ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகின்றார். தன் 5, 7, 9-ம் பார்வையால் சுகஸ்தானம், சத்ருஸ்தானம், மாங்கல்யஸ்தானம் என்னும் வீட்டை பார்வை செய்வதால் உடல்நலம் முன்னேற்றம் ஆகும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பணமுடை தீரும். மனதில் தெளிவு பிறக்கும். வீடு வாங்கும் நீண்ட நாளைய ஆசை கூடிவரும். இல்வாழ்வு நல்வாழ்வாய் மாறும் ஓர் நல்ல மாதமாய் மலரும் நேரம். வியாழக்கிழமையன்று ஷண்முகரைத் தரிசிக்க சந்தோஷம் வரும்.

25. பூரட்டாதி:  பொறுமையுடன் சிந்தித்து செயலாற்றி வெற்றி பெறும் வெற்றியின் நாயகிகளான தங்களுக்கு லாபஸ்தானம் எனப்படும் 11-ம் வீட்டிலிருந்து 12-ம் வீட்டிற்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். தன் 5, 7, 9-ம் பார்வையால் சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள்ஸ்தானம் இவ்விடங்களை பார்வையிடுகின்றார். இதனால் உங்களை புரட்டிப்போட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். முகத்தில் மலர்ச்சியும், தெம்பும் என தெளிவாய் வளைய வருவீர்கள். குடும்பத்தினரின் பாராட்டினால் மகிழ்ச்சி அடைவீர்கள். இல்லத்தில்  சுபநிகழ்வுகள் திருமணம், கிரகப்பிரவேசம், புத்திரப்பேறு எனக்கூடிவரும். தம்பதிகள் இருவரும் பரஸ்பர ஒற்றுமை காணும் இனிய நேரம். திங்கட்கிழமையன்று சிவபெருமானை தரிசிக்க சிறப்புக்கள் கூடும்.

26. உத்திரட்டாதி: எடுத்த செயல் எப்படிப்பட்டதாயினும் அதனை போராடி வெற்றி பெறும் வரை பாடுபட்டு செயல்புரியும் வீரப்பெண்மணிகளான உங்களுக்கு குரு பகவான் லாபஸ்தானம் என்னும் 11-ம் வீட்டிற்குப் பெயர்ச்சியாகி தன் 5, 7, 9-ம் பார்வையினால் 3-ம் வீட்டையும், பூர்வ புண்ணியஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார். எனவே ஜெயம் உங்கள் பக்கம்தான். ஆதலால் புதிய தொழில் ஆரம்பம் செய்ய நட்பு வட்டம் கை கொடுக்கும். தாயாரின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தேகம் சுகமாகும். பணவரவு மகிழ்ச்சி அளிக்கும். வீடு, வாகனம் என சொத்து சேரும். கணவரின் பிரத்யேகமான அன்பைக்கண்டு மகிழும் நேரம். சனிக்கிழமை பார்வையற்றவர்கட்கு உதவ பாவங்கள் விலகும்.

27. ரேவதி: கல்வியில் முன்னிலை வகிக்கும் தனித்திறமையும், அறிவின் சிகரங்களான தங்களை மகிழ்விக்கும் வண்ணம் குருபகவான் லாபஸ்தானம் என்னும 11-ம் வீட்டிற்குப் பெயர்ச்சியடைகின்றார். எனவே நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்களை விட்டு விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வந்து உறவு கொண்டாடுவர். எடுத்த செயல்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். பண வரவைக்கண்டு மகிழும் தருணம். தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலரின் புதிய வீட்டின் கனவுகள் செயல் வடிவாகும் ஓர் இனிமையான நேரம். கணவன், மனைவி இருவரும் கருத்து ஒற்றுமை காண்பீர்கள். புதன்கிழமை மாமல்லபுரம் நிலமங்கைத்தாயார் தரிசனம் நிலம் பிரச்னை தீரும்.