இனி வரக்கூடிய சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்..! நடிகை விஷாலினி



“கொரோனா கொடுத்த அவகாசத்தில் திரைத்துறை கலைஞர்கள் தங்களை தாங்களே செதுக்கி செதுக்கி சினிமாவை ஒரு நல்ல சிலையாக வடிவமைக்க காத்திருக்கிறார்கள். அதனால் இந்த காலத்தை நான் ஒரு வரமாகவே பார்க்கிறேன்” என்கிறார் நடிகை விஷாலினி.இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தெக்கத்தி பொண்ணு தொடரில் அறிமுகமாகி, தற்போதுவரை எழுபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்களிடையே தனக்கென்று ஓர் தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கும் விஷாலினி, இந்த கொரோனா காலத்தில் நடித்த PHRIKE (F-rai-k) குறும்படம் தற்போது ஹாட் டாப்பிக்.    

‘‘அப்பா, அம்மா அந்தமானில் ஆசிரியர்களாக வேலை பார்த்தாங்க. அப்பாக்கு சொந்த ஊர் மதுரை. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்குதான். எங்க வம்சத்திலேயே சினிமாவில் யாரும் கிடையாது. அந்தமானிலிருந்தும் சினிமாக்கு வந்த முதல் ஆள் நான்தானு நினைக்கிறேன். இங்க பெரும்பாலும் பாம்பே கல்ச்சர்தான். இந்தி, இங்கிலீஷ் அதிகமா புழங்கியதனால தமிழ் கொஞ்சமாதான் பேசுவேன். லீவுக்கு இங்க வரும் போது தமிழ் படங்கள் பார்ப்போம். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருந்தாலும், ஹீரோயினா வரணும், இவங்களை ஃபாலோ பண்ணணும்னு எண்ணம் இருந்ததில்லை.      

எனக்குள்ள சினிமா மீது அதிக ஈர்ப்பு இருந்தாலும் டீன் ஏஜ் வரும் போது வீட்டில் ரொம்ப கண்டிப்பா இருந்தாங்க. “இது டேஞ்சரான பீல்டு, மிஸ் யூஸ் ஆகிடுவ”னு சொல்லி எனக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தாங்களே தவிர நம்பிக்கை கொடுத்தது கிடையாது. படிப்பு முடிச்ச கையோடு கல்யாணமும் ஆயிடுச்சு.

குழந்தை, குடும்பம்னு ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில் சினிமா ஆசை அப்பப்ப தட்டிகிட்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் எங்க குடும்ப மருத்துவர் ஒருவரிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவரும் ஒரு நடிகர் என்பதால், சினிமாவில் எப்படி கால் ஊன்ற வேண்டும் என்று பாதை காட்டினார். அப்போதுதான் பிரபல இதழில் அட்டை படத்திற்கு புகைப்படம் எடுக்கும் குழுவின் அறிமுகம் கிடைத்து, என் படமும் அட்டை படமாக வந்தது. அதை பார்த்த பாரதி ராஜா சார் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

சினிமா மீது தீவிர ஆர்வம் இருந்தாலும் எப்படி கேமரா முன் நடிக்க வேண்டும் என்பது தெரியாது. ஒரு பல்கலைக்கழகத்துடன் வேலை பார்த்து இரண்டு ஆண்டில் பட்டம் பெற்று வெளியே வந்த எனக்கு முதல் படமாக அமைந்தது சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தெனாவட்டு திரைப்படம். இந்த படத்திற்கு பிறகு பல படங்கள் நடித்திருந்தாலும் திரைத்துறையில் எனக்கென்று தனி அடையாளத்தை கொடுத்தது சுந்தர பாண்டியன் படம்தான். அதற்கு பிறகு நிறைய படங்களில் என் முகம் திரையில் தெரிய ஆரம்பித்தது” என்று கூறும் விஷாலினி, “தனக்கு கிடைக்கும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்திலிருந்து மாறி வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவும் முயற்சி செய்கிறேன். அதேபோல் அவ்வாறு ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் அமைந்தாலும் அதில் வித்தியாசம் காட்டி நடித்ததால்தான் இன்று தனித்து அடையாளம் தெரிந்து தொடர்ந்து நடிப்பதற்கு
காரணம்’’ என்கிறார்.

“சினிமாவை கற்றுக் கொள்ளவே கொஞ்ச காலம் ஆனது. அடுத்தடுத்த படங்களில் என்னுடைய சிறப்பு என்ன என்பதை கண்டுபிடித்தேன். அதை ஒவ்வொரு படங்களிலும் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அதேபோல் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. காரணம் சமீபத்தில் நான் நடித்த அனைத்து படங்களிலும் வெரைட்டியாவே செய்திருக்கிறேன். விஜய் சாரின் ‘மாஸ்டர்’, சூர்யா சாரின் ‘சூரரை போற்று’, ஜெயம் ரவி சார் படம், விஷால் சாரின் ‘சக்ரா’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’… போன்ற படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். படம் வெளியாகும் போது உங்களுக்கே தெரியும்’’ என்றவர் இயக்குனர் போற்றும் நடிகை என்ற பெயர் பெற்றுள்ளார்.

‘‘சீனு ராமசாமி சார், ரஞ்சித் அண்ணா என்று ஒவ்வொரு இயக்குநருடனும் வேலை பார்க்கும் போது நான் என்னை களிமண்ணாகவே எண்ணிக் கொள்வேன். அப்போது தான் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்னால் நடிக்க முடியும். நான் டாம் பாய் போல் துறுதுறுனு இருக்கக்கூடிய ஆள். வெறும் சேலை கட்டிட்டு மேக்கப் போட்டால் மட்டும் பெரிய பொண்ணா வந்து நின்னுட முடியாது. மன ரீதியாகவும் அதற்கு தயாராகணும். தொடர்ந்து அம்மா, அக்காவா மட்டுமே பண்ணிட்டு இருந்தால் இரண்டு வருஷத்தில் ஒரு பிரேக் எடுக்க வேண்டி வரும். சினிமா வேகமா போயிட்டு இருக்கிறது.

இந்த கொரோனா காலத்தை பயனுள்ளதா பயன்படுத்தணும்னு கிட்டத்தட்ட ஒன்பது கிலோ குறைச்சுட்டேன். நிறைய வித்தியாசமாக கதாபாத்திரங்கள் பண்ண முடியும் என்ற ஒரு நம்பிக்கை வந்திருக்கு. பாதி பாரம் குறைந்த மாதிரி இருக்கு. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன்” என்று கூறும் விஷாலினி PHRIKE (F-rai-k) குறும்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார்.

“லாக்டவுனில் இருக்கிறோம்...ஏதவது பண்ணலாமே என்று சித்தார்த் கேட்டார். போதிய ஆட்களை வைத்துக் கொண்டு, வீட்டுக்குள் மட்டுமே ஷூட் பண்ணக் கூடிய இந்த நேரத்தில் பெஸ்ட்டா என்ன பண்ண முடியுமோ என்று யோசித்து என் வீட்டிலேயே ஷூட் பண்ணோம். ஒரு ஷாட் நடிச்சுட்டு அடுத்து லைட் பிடிப்பேன், செட் அசிஸ்டெண்டா மாறிடுவேன். அப்படி குறைந்த ஆட்களுடன் வேலை பார்த்தது, இன்று எல்லோரும் பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.   

இந்த லாக்டவுனால் தயாரிப்பாளர்கள் குறைந்துடுவாங்க, தியேட்டர்ஸ் இல்லாமல் போகும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இனிதான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்புகிறேன். எல்லோருக்குமே வாழ்க்கையில் இது ஒரு பெரிய மாற்றம். எல்லா தரப்பு இயக்குநர்கள், நடிகர்கள் தங்களை சுய பரிசோதனை செய்திருப்பார்கள். எல்லோருமே தங்களை திருத்திக் கொள்வதற்கு, செதுக்கி கொள்வதற்கு, இயல்பாக, எளிமையாக இருப்பதற்கான வாழ்க்கை வந்திருப்பதோடு, மனிதர்களிடையே ஒரு உறவு முறைக்கான சூழலும் உருவாகியிருக்கிறது. நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்று பேசியவர்களிடையே எல்லோரும் ஒரே ஆள்தான் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

சினிமா ஷூட்டிங் போகும் போது என்ன வேலை செய்கிறோம் என்பதே தெரியாமல் பல பேர் இருப்பாங்க. அவர்கள் அந்த இடத்தில் தேவை இல்லாமல் இருப்பதோடு, தேவையில்லாத செலவாகவும்தான் இருந்தார்கள். யாரையும் தவறாக சொல்லவில்லை. அவங்களும் ஒரு முயற்சியில்தான் இருக்காங்க. இவங்கதான் வரணும், அவங்கதான் வரணும் என்பதெல்லாம் கிடையாது. இருந்தாலுமே 20-30% பேர் என்ன பண்றோம் என்பது தெரியாமலே இருந்தார்கள். இப்ப அவங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும். அதனால் இனி வரக்கூடிய சினிமா ஆரோக்கியமானதா இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார் விஷாலினி.  

அன்னம் அரசு