வாசகர் பகுதி



ஒன்பது வடிவங்களில் அன்னை!

‘நவ’ என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகள்

அன்னையை வழிபட்டு கொண்டாடப்படுவதே ‘நவராத்திரி’ விழாவின் சிறப்பாகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரே இப்பண்டிகையின் நாயகிகள் ஆவர். ஒன்பது நாட்களும் அன்னை ஒன்பது வடிவங்களாக நமக்கு காட்சி அளிக்கிறார்.

* முதல் நாள்: மகேஸ்வரி வடிவம். மல்லிகை மற்றும் சிவப்பு அரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வெண்பொங்கல் நிவேதனம் செய்து வணங்கினால் வறுமை நீங்கும். வாழ்நாள் பெருகும்.
* இரண்டாம் நாள்: ராஜராஜேஸ்வரி வடிவம். முல்லை மற்றும் சாமந்தி பூக்களால் அர்ச்சனை செய்து, புளியோதரை நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும்.
* மூன்றாம் நாள்: வராகி வடிவம். செண்பக மொட்டு மலராலும், குங்குமத்தாலும் அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். தனம், தான்யம் பெருகும். வாழ்வு சிறப்பாக அமையும்.
* நான்காம் நாள்: மகாலட்சுமி வடிவம். செந்தாமரை மற்றும் ரோஜா பூக்களால் அர்ச்சனை செய்து பட்டாணி சுண்டல் செய்து படைக்க வேண்டும். கடன் தொல்லை நீங்கும்.
* ஐந்தாம் நாள்: மோகினி வடிவம். கதம்பம்
மற்றும் மனோரஞ்சிதம் பூக்களால் அர்ச்சனை செய்து, பாயசம் செய்து வழிபட வேண்டும். நாம் விரும்பும் அனைத்து
செல்வங்களும் கிடைக்கும்.
* ஆறாம் நாள்: சண்டிகாதேவி வடிவம்.
பாரிஜாதம், செம்பருத்தி மற்றும் சம்பந்தி பூக்களால் அர்ச்சித்து, பச்சைப்பயிறு சுண்டல் செய்து வழிபட வேண்டும். வீட்டில் பொருட்கள் சேரும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
* ஏழாம் நாள்: சாம்பவி துர்க்கை வடிவம். தாழம்பூ, தும்பைப்பூ, மல்லிகை மற்றும் முல்லை பூக்களால் அர்ச்சனை செய்து, எலுமிச்சம் பழச்சாதம் படைக்க வேண்டும். வேண்டும் வரங்களைப் பெற்று நலமுடனும், வளமுடனும் வாழலாம்.
* எட்டாம்  நாள்: நரசிம்ம தாரினி வடிவம். மருதோன்றி, சம்பங்கி மற்றும் வெண்தாமரை பூக்களால் அர்ச்சித்து, தேங்காய் சாதம் செய்து படைக்க வேண்டும். இஷ்ட சித்தி உண்டாகும்.
* ஒன்பதாம் நாள்: பரமேஸ்வரி, சுபத்ரா தேவி வடிவம். தாமரை, மரிக்கொழுந்து, துளசி மற்றும் வெள்ளைநிற மலர்களால் அர்ச்சித்து, வேர்க்கடலை சுண்டல் செய்து வழிபட வேண்டும். ஆயுள் நீடிப்பு, ஆரோக்கியம் பெருகும்.
* பத்தாம் நாள்: விஜயதசமி. அம்பிகை வடிவம். வாசனையுள்ள பூக்களால் அர்ச்சித்து, பால் பாயசம் செய்து படைக்க வேண்டும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.
நவநாயகிகளை வணங்கி வளம் பெறுவோம்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.