அகல் திமிறி-தேசிய அளவில் 16 விருதுகளைப் பெற்ற குறும்படம்மனநலம் குறைந்த தெய்வக் குழந்தைகளைப் பராமரித்து வாழும் இறைநிகர் உள்ளங்களுக்கு சமர்ப்பணம்!

நானும் பொட்டப் பிள்ளையப் பெத்தவன்தான். ஆனால் மனசாட்சி இல்லாதவன் கிடையாது. எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. அவள் 28 வருடமாக குழந்தையாவே இருக்கா. அவளுக்கு மனவளர்ச்சி இல்லை. இப்பக்கூட தாயில்லாத என் மகளின் பிறப்புறுப்பை கழுவிவிட்டு வந்துதான் இங்க உட்கார்ந்திருக்கேன். இந்தக் கொடுமை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. எனக்குப்பின் அவளை யார் பார்த்துக்குவா? எனப் பேசும் நீதிபதி பிரம்மாவின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை, மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களின் விடை தெரியாத மில்லியன் டாலர் கேள்வி.

மனச் சிதைவுக்கும், மனப் பிறழ்வுக்கும் ஆளான சிறப்புக் குழந்தைகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் பெற்றோர் எடுக்கும் முயற்சிகளும்.. அவர்கள் படும் சிரமங்களும்.. அதையும் தாண்டி அனுபவிக்கும் வலிகளையும்.. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சித்தரித்து அகம் திமிறி குறும்படத்தை வசந்த் பாலசுந்தரம் இயக்கியுள்ளார். படத்தில் கருணைக் கொலை எனும் செய்திக்கு பின் இருக்கும் மனித உணர்வுகளை மையப்படுத்தி இருக்கிறார். 50 நிமிடம் ஓடக் கூடிய இக்குறும்படம் ஓடிடி தளங்களில் வெளியாகிஉள்ளது.

உடல் நலம் சரியில்லாத எட்டு மாதக் குழந்தையின் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் பணம் தேவைப்பட, பெற்றோர் செய்வதறியாது தவிக்கின்றனர். குழந்தை கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல் கருணைக் கொலை செய்ய நீதிமன்றத்தின் அனுமதி கோரி மனு செய்கிறார்கள். குழந்தையின் மருத்துவ அறிக்கையை வாங்கிப் பார்க்கும் நீதிபதி பிரம்மா மனநலம் பாதித்த தனது 28 வயது மகளால் பாதிக்கப்பட்டவராய் ‘அகம் திமிறி’ கருணைக் கொலை செய்ய அனுமதியை வழங்குகிறார்.

செய்தி மீடியாவில் கவனம் பெற்று பொதுமக்களிடத்திலும் ஊடகங்களிலும் சூடு பிடித்து விவாதப் பொருளாக மாறுகிறது. உலகத்திற்கே தீர்ப்பை வழங்கும் நீதித் துறையும் மனிதர்களால் நடத்தப்படும் ஒன்றுதான். நீதிமானாக இருந்தாலும் அவர்களும் சாதாரண மனிதர்கள்தான். அவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு. சில நேரங்களில் அவர்களின் நீதியும் பிறழும் என்பதை நெத்தியடியாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மீளாய்வு செய்யப்பட வேண்டிய கேள்வியாக, ‘கருணைக் கொலை சமுதாயச் சிக்கலா தனிமனித வலியா?’ எனும் விவாதத்தில், ‘கருணைக் கொலை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சில் நிலுவையில் இருக்கும்போது நீங்க இந்த கருணைக் கொலைக்கு அனுமதி கொடுத்தது சரியா? என கேள்வி எழ, நீதிபதி பிரம்மா சரியான்னு தெரியலை.. ஆனால் தப்பு இல்லை. எந்த ஒரு சட்டமும் இயற்கையின் நீதிக்கு எதிராக இருக்கும்போது, அதற்குரிய நியாயத்தை எந்த நீதிமன்றம் கொடுத்தால் என்ன? எனும் பதிலும், மக்களுக்காகத்தான் சட்டமே தவிர,
சட்டத்திற்காக மக்கள் இல்லை. சட்டமும் நீதியும் அப்பாவி மக்கள் சந்தோசமும் நிம்மதியாகவும் இருக்கத்தான். காசு இல்லாதவுங்க இந்த உலகத்துல வாழவே முடியாதா? போன்ற வசனங்கள் சுருக்.

ஐரோப்பா நாடுகள் சிலவற்றில் கருணைக் கொலை நடைமுறையில் இருக்கிறது. நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் (indian constitution) அதற்கு இடமில்லை. கருணைக் கொலையைப் பற்றிய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், எதிரான நிலைப்பாடே இன்றளவும் இருக்கிறது. ஆனால் நம்மோடு பயணிக்கும் சிலரின் வலி மிகுந்த வாழ்க்கையைப் பார்க்கும்போது, கருணைக் கொலையே கூடாது என முற்றிலும் நிராகரிக்க முடியாது. கருணைக் கொலை வேண்டும் எனச் சொல்லவும் முடியாது.

சரி செய்ய முடியாத பிரச்சனை எனும்போது அதனை விவாதப் பொருளாக மாற்ற நினைத்த இயக்குநர், சரி செய்ய முடிந்த உயிருக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். சரி செய்ய முடியாத நிலை எனில் கருணை கொலை செய்வதில் விவாதங்கள் வேண்டும். ‘ஒரு உயிர் மருத்துவத்தின் துணையோடுதான் இயங்குதுனா மருத்துவத்தை நிறுத்தி மரணம் அடையச் செய்யலாம். ஆனால் மருந்தைக் கொடுத்துக் கொல்லக் கூடாது’.. இப்படி ஒரு சட்டத்தை 2018ல் இந்தியன் கான்ஸ்டியூட்ஷனில் சட்டமாகவே கொண்டு வந்து இருக்கிறார்கள். இதுவே பேசுபொருள்தான். இதை இன்னும் நிறைய பேசி.. விவாதமாக்கி.. ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து எனும் இயக்குநர், தான் சந்தித்த பல நிகழ்வுகளின் வழியாகவே இந்தக் குறும்படத்தை காட்சிப்படுத்தி இருக்கிறேன் என்கிறார்.

நீதி என்பது ஒரு பக்கமாக இறங்குவதற்கு கூட நேர்மையான காரணங்கள் வேண்டும். படத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் இடம்பெற்ற பெரியவர் பேசிய சம்பவம் என் வீட்டில் இருந்து 4வது வீட்டில் நடந்த உண்மை சம்பவம். எனக்குத் தோன்றிய கேள்வியை சக மனிதனின் வலியை நான் என் படைப்பில் முன் வைக்கிறேன் என அழுத்தமாகவே சொல்கிறார்.

குறும்படத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை ஜீவனாக நடித்திருப்பவரின் நடிப்பு எதார்த்தம். மொத்த வேதனையையும் முகத்தில் அழகாக வெளிப்படுத்து கிறார். படம் முழுவதும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடல்வரிகள் மனதை பிழிய, ஒளிப்பதிவாளர் சதீஷின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. சமூகம் நல்ல விவாதத்தை நோக்கி நகர்த்தும் படமாக வந்துள்ளது.

வசந்த் பாலசுந்தரம், இயக்குநர்

என் சொந்த ஊர் நாகர்கோவில். சென்னையில் எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் படிக்கும்போதே சினிமாவில் ஆர்வம் இருந்தது. வீட்டில் சொல்ல பயம். என் நண்பர்களில் சிலர் விருகம்பாக்கம், சாலிகிராமம் என இருந்தார்கள். அவர்களோடு அந்தப் பகுதிகளுக்கு செல்லும்போது என் சினிமா கனவுக்கு றெக்கை முளைத்தது. அப்பா இஞ்சினியர் முடி என கறாராகச் சொல்லிவிட்டார். கல்லூரி முடித்த மறுநாளே இயக்குநர் பாலுமகேந்திரா சாரின் ‘சினிமாப் பட்டறை’யில் இணைந்து அவரின் மாணவனாகி சினிமாவின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.

பாலுமகேந்திரா சார் இறப்பிற்குப் பிறகு அவர் குறித்த ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் அவரோடு வேலை செய்த பலரையும் சந்தித்தேன். அப்போது இயக்குநர் சீனுராமசாமி சார் நட்பு கிடைத்தது. அவரோடு தர்மதுரை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அடுத்தடுத்த படங்களில் வேலை செய்வதற்கு நடுவில் என்னுடைய நீண்ட நாள் கனவான இந்த குறும்படம் எடுப்பதிலும் இறங்கினேன்.

திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை நடிகர் கஜராஜ் நீதிபதி பிரம்மாவாக தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் சிறந்த நடிகருக்கான விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது. மனநலம் பாதிப்படைந்த பெண்ணே இதில் நீதிபதியின் மன
வளர்ச்சி குன்றிய மகளாக நடித்திருக்கிறார்.

உண்மைச் சம்பவம் 1

2016ல் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஞானசாயி எனும் 8 மாதக் குழந்தைக்கு பிறப்பிலே ஈரலில் பிரச்சனை இருக்க, பெற்றோர் ஐந்து லட்சம்வரை செலவு செய்து பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்கின்றனர். ஆனாலும் உடல் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த மருத்துவர்கள் அதற்கு 50 லட்சம் தேவை எனச் சொல்ல, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு தம்பலப்பள்ளே நீதிமன்றத்தில் மனு செய்கின்றனர்.

மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் உயர்நீதி மன்றத்தை அணுக பரிந்துரைத்தது. இந்த செய்தி மீடியாவில் விவாதமாக, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனம் பெற்று, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குழந்தையின் மருத்துவச் செலவை முழுவதும் ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. மரணத்தின் வாயில் வரை சென்ற குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது நலமுடன் இருக்கிறது.

உண்மைச் சம்பவம் 2

கடந்த 1973 ஆம் ஆண்டு மும்பையில் கிங் எட்வர்டு மருத்துவமனையில் செவிலியராக இருந்த அருணா ஷான்பாக் அதே மருத்துவமனையில் பணியாற்றிய கடைநிலை ஊழியரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையிலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் அருணாவின் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு, கோமா நிலை அடைந்தார்.  

அருணாவின் நண்பரும், வழக்கறிஞருமான பிங்கி விரானி என்பவர் அருணாவை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்றம்  அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி மறுத்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மருத்துவமனை நிர்வாகம், அவரை சிறப்புடன் கவனித்து வந்தது. தொடர்ந்து 42 ஆண்டுகள் கோமாவிலே இருந்த அருணா ஷான்பாக் தனது 64ம் வயதில் கோமா நிலையிலேயே இயற்கை எய்தினார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்