பெண் மைய சினிமா -C U SOON‘‘வீட்டு வேலைக்காக துபாய் சென்ற  இளம் பெண் விபச்சாரத்தில் தள்ளப்பட்டார்…’’,  ‘‘துபாயில் நான்காயிரம் தினாருக்காக விபச்சார கும்பலுக்கு விற்கப்பட்டாள் இந்தியாவைச் சேர்ந்த பெண்…’’ , ‘‘துபாயில் விபச்சாரக் கும்பலிடம் இருந்து தப்பித்த துணிச்சலான பெண்…’’ - இப்படியான செய்திகளைக் கருவாக எடுத்துக்கொண்டு  ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘C U Soon’ என்ற மலையாளப்படம்.  அதுவும்  இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிமாக வெளியாகியிருக்கிறது.

இணைய சேவையின் அபரிமிதமான வளர்ச்சியால் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் புது வடிவம் தான் இந்த கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிம். அதாவது கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன் ஸ்கிரீனுக்குள்ளேயே படத்தின் கதை முழுவதையும் சொல்ல வேண்டும். நண்பர்களுடன் வீடியோ சாட் செய்யும்போதோ அல்லது ஜூம் மீட்டிங்கில் கலந்துகொள்ளும்போதோ கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் காட்சியைப் போல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் நகரும். திரையை விட்டு வேறு லொகேஷனுக்குள் கதை போகக்கூடாது.

கதைக்குள் வரும் டிவைஸ்களில் உள்ள கேமராவின் செயல்பாட்டைப் போல் ஒளிப்பதிவும், கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது வெளியாகும் சத்தத்தைப் போல் ஒலிப்பதிவும் இருக்க வேண்டும். முக்கியமாக ரியல் டைமில் படமாக்கப்பட்டிருக்க வேண்டியது கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிமுக்கு அவசியம். நேரடியாக இல்லாமல் வெப் கேம், லேப்டாப், டெஸ்க்டாப், டேஸ் கேம், ஸ்மார்ட் போன் மூலம் கதாபாத்திரங்கள் விர்ச்சுவலாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வார்கள்.

இப்படியான கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமாக்கள் உலகளவில் குறைவாகத்தான் வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு வருடத்துக்கு முன் வெளியான ஹாலிவுட் படமான ‘சர்ச்சிங்’. இந்த தொழில் நுட்பம் இந்தியாவில் இதுவே முதல் முறை.

துபாயில் ஒரு வங்கியில் வேலைசெய்துகொண்டிருக்கும் துடிப்பான இளைஞன் ஜிம்மி. ஒரு வாரத்துக்கு முன் தான் அவனுக்கு காதலில் பிரேக் - அப் ஆகியிருக்கிறது. அவனுக்கு அப்பா இல்லை. அம்மா அமெரிக்காவில் இருக்கிறார். தனியாக இருக்கும் ஜிம்மிக்கு ‘டிண்டர்’ டேட்டிங் ஆப்பில் அனு என்ற பெண்ணுடைய அறிமுகம் கிடைக்கிறது.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக இரவு பகல் பாராமல் வீடியோ சாட் செய்கிறார்கள். பேச ஆரம்பித்த ஒரு நாளிலேயே அனுவிடம் புரபோஸ் செய்கின்றான் ஜிம்மி. அத்துடன் அம்மாவிடமும் தங்கையிடமும் அறிமுகம் செய்து அவளை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறுகிறான். அவனது அம்மா அனுவைப் பற்றிய தகவல்களை விசாரிக்க, உறவினரான கெவினிடம் உதவி கேட்கிறாள். கம்ப்யூட்டரில் ஜித்தனான கெவினும் சில நிமிடங்களில் அனுவின் ஹிஸ்டரியைக் கொடுக்கிறான்.

சீக்கிரத்தில் அனுவைக் கல்யாணம் செய்து வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்பது ஜிம்மியின் அடுத்த பிளான். இவையெல்லாம் ஒரு வாரத்துக்குள் போன் கால், ஆடியோ மற்றும் வீடியோ சாட் மூலம் அரங்கேறுகிறது. ஒரு நாள் வீடியோ காலில் அனுவிடம் பேசும்போது அவள் முகத்திலுள்ள காயங்கள் ஜிம்மியை அதிர்ச்சியடைய வைக்கிறது. காயத்துக்கான காரணங்களை அனு சொல்ல மறுக்கிறாள். கவலைப்படும் ஜிம்மி அனுவைத் தன் அபார்ட்மென்ட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறான்.

ஜிம்மி வேலைக்குச் சென்ற நேரமாகப் பார்த்து தற்கொலை செய்யப்போவதாக ஒரு வீடியோவை அனு தட்டிவிட, ஜிம்மி நிலைகுலைந்துபோகிறான். அவசர அவசரமாக ஜிம்மி வீட்டுக்குக் கிளம்பி வந்தால் அனு அங்கே இல்லை. ஜிம்மியைக் கைது செய்ய போலீஸ் வருகிறது. காவல்துறையிடமிருந்து ஜிம்மியைக் காப்பாற்ற அனுவின் உண்மையான பின்புலத்தைக் கண்டுபிடிக்கும் கெவினிற்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

கேரளாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பெண் அனு. வீட்டு வேலைக்காக ஏஜென்சி மூலமாக துபாய் வந்த அவள் விபச்சாரக் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறாள். அவளின் தினசரி வாழ்க்கை நரகமாகிறது. பாஸ்போர்ட்டும் அந்தக் கும்பலிடம் இருக்கிறது. அங்கிருந்து தப்பிக்கத்தான் அவள் ஜிம்மியிடம் அடைக்கலம் தேடியிருக்கிறாள்.  அனுவைப் பற்றிய உண்மை ஜிம்மிற்குத் தெரிந்ததா? அவர்களின் காதல் என்னவானது? பத்திரமாக அனு இந்தியா திரும்பினாளா? என்பதே கிளைமேக்ஸ்.  

வீட்டு வேலைக்காக சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளப்பட்டார் என்பதை இதுவரை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து வந்திருப்போம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவ்வளவு சுலபமாக அந்தச் செய்தியைக் கடந்துபோக முடியாது. விபச்சாரத்தில் தள்ளப்படும் அப்பாவிப் பெண்கள் அனுபவிக்கும் கொடூரத்தை இவ்வளவு அழுத்தமாக சமீபத்தில் எந்தப் படமும் சொல்லியதில்லை. இதற்காகவே இயக்குனர் மகேஷ் நாராயணனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.