சிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த பாடங்கள்!



‘‘சிறைகள் தண்டனை கூடாரங்களாக இல்லாமல், குற்றவாளிகளை மனிதர்களாக்கும் சீர்திருத்த அமைப்பாக இருக்க வேண்டும்” என்கிறார் எலினா ஜார்ஜ். இவர் ப்ராஜெக்ட் அன்லெர்ன் (Project Unlearn) என்ற அமைப்பை உருவாக்கி, இதன் மூலம் 700க்கும் அதிகமான கைதிகளுக்கு கல்வியும், அறத்தையும் கற்பித்து வருகிறார்.

‘‘இது குற்றம் என்று உணராத வரை, தவறை மனிதன் மீண்டும் செயல்படுத்துவான். இதனால், ஒரு பிரச்சனையை அதன் வேர்வரை சென்று மாற்ற வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள், திருத்தப்பட்டு அறத்துடன் வாழ்வார்கள். அதுவே இச்சமூகத்திற்கு வளர்ச்சியையும் வழங்கும்’’ என்கிறார் எலினா.‘‘கேரளாவில் பிறந்தாலும், தில்லியில் தான் வளர்ந்தேன். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பாக சமூகவியல் படிக்கும் போது, இண்டர்ன்ஷிப் பயிற்சி செய்யவேண்டி இருந்தது.

அதற்காகத் தீவிரமாகப் பல நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்த போதுதான், Turn Your Concern Into Action Foundation (TYCIA) என்ற அமைப்பிலிருந்து, தில்லி  திகார் சிறை கைதிகளுடன் பணியாற்றி அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. சிறைக்குச் சென்று கல்வி கற்பிப்பதா என்று ஒரு பக்கம் தயக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஆர்வமாகவும் இருந்தது’’ என்றவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘திகார் சிறை எண் 5ல், 18-21 வயது வரையிலான சிறைவாசிகளுக்கான கல்வித்திட்டத்தை முதலில் உருவாக்க முயற்சி எடுத்தோம். அதற்கான உதவிகளை கைதிகளைக் கொண்டே செய்தோம். சிறை அறைகளை வகுப்புகளாக மாற்றி, அதற்கு மேஜை தயாரிப்பதில் தொடங்கி, சுவரில் ஓவியங்கள் வரைவது வரை தங்கள் பள்ளியை அவர்களே உருவாக்கினர்.

இரண்டு மாதம் டைசியாவுடன் வேலை செய்ததில், பல அனுபவமும் சிறை கைதிகளுடன் நல்ல இணக்கமும் உருவானது. இந்த அனுபவத்தை பாதியிலேயே விட்டுச் செல்ல மனமில்லாமல், ஒரு வருடப் பயிற்சியாக Second Chance Fellowship ல் இணைந்து பணியாற்றினேன். அந்த ஒரு வருடத்தில், சிறைப் பள்ளிக்கான பிரத்தியேக பாடத்திட்டத்தை உருவாக்கினோம். இந்த முறை தினமும் சிறைக்குச் சென்று அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெளி உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிறைக்குள் அடைந்திருப்பவர்களுக்கு, வெளியிலிருந்து ஒருவர் தினமும் அவர்களைச் சந்திக்க வந்தாலே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதில் கைதிகள் ஆர்வமாக இருப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுடன் நல்ல தோழமையை உருவாக்க முடிந்தது.

தினமும் 9-5 மணிவரை சிறையில்தான் இருப்பேன். இதனால் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை உருவாக ஆரம்பித்தது. எந்த முகமூடிக்குப் பின்னும் மறைந்துகொள்ளாமல், என்னுடன் வெளிப்படையாக உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். அவர்கள் என்னுடன் பகிரும் ரகசியங்கள், என்னுடன் மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் பிறந்தது.

அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை கல்வி கற்பவர்களாகவும், படிப்பைப் பாதியிலேயே விட்டவர்களாகவும்தான் இருந்தனர். அவர்களுக்குக் கல்வி மீது பெரும் அபிப்ராயம் இருக்கவில்லை. கல்வியின் முக்கியத்துவமும் தெரிந்திருக்கவில்லை. வெளியில் இருக்கும் போதே கல்வி கற்க முடியாமலும், கற்ற கல்வி உதவாமலும் போக, சிறைக்குள் என்ன வளர்ச்சியை அடையமுடியும் என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது.

மேலும், கல்வியறிவுடன் படித்தவர்கள் கூட, தங்களைப் போன்ற அதே தவறை செய்துவிட்டு, சிறைக்கு வந்திருப்பதால், கல்வி கற்பதால் மாற்றம் உருவாகும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இது நம் கல்வித்திட்டத்தில் இருக்கும் இடைவெளியையும் குறையையும்தான் சுட்டிக்காட்டுகிறது.
அங்குச் சிறையில் இருப்பவர்கள் 18 வயதிற்கு அதிகமானவர்கள் என்பதால், அவர்களுக்குப் பரிச்சயமான வார்த்தைகளை அறிமுகப்படுத்திப் பாடத்திட்டத்தை உருவாக்கினோம். அவர்கள் வயதிற்குத் தகுந்த மாதிரி பாடங்களை மாற்றியமைத்து, க என்றால் கோர்ட், ச என்றால் சட்டம் என அவர்களுக்குத் தெரிந்த வார்த்தைகளை பயன்படுத்தி புத்தகங்கள் உருவாக்கப்பட்டது.

பல அதிகாரிகளின் உதவியும், அப்போது திகார் சிறைச்சாலையின் தலைமை இயக்குனராக இருந்த திரு. சுதிர் யாதவின் ஆதரவும் வழிகாட்டுதலும்தான் திகார் பள்ளி உருவாகக் காரணம். நாங்கள் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்தினாலும், சிறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வழக்கு குறித்தும், எப்போது விடுதலையாவோம் என்ற கவலை அதிகம் இருக்கும். அதனால், வழக்குகள் குறித்து வகுப்புகளில் பேச ஆரம்பித்தோம். சில விசாரணைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, அதில் யார் மீது குற்றம் இருக்கிறது, தவறு ஏன் நடந்தது, அதற்கான தண்டனை என்ன போன்ற விவரங்களைக் கலந்துரையாடல்களாக உருவாக்கினோம்” என்கிறார்.

அந்த ஒரு வருட அனுபவத்தில், இளைஞர்கள் பலரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அதிகம் ஈடுபட்டிருந்ததையும், அதை நல்ல வழிகாட்டுதல் மூலம் தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்பதையும் எலினா உணர்ந்தார். இதனால், ப்ராஜெக்ட் அன்லெர்ன் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் முக்கியமாகப் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, அவர்களின் உரிமைகள் குறித்தும் கற்பிக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இப்போது சிறையில் இருப்பவர்களுக்கு, அதற்கான சட்டரீதியான தண்டனை குறித்துத் தெரிந்திருக்கும். ஆனால், அறம் ரீதியாக, பெண் உரிமை, சமத்துவம் குறித்த புரிதலை அவர்களுக்குப் புகட்ட நினைத்தோம். பெண்கள் சம்மதத்துடன் அவர்களை அணுகவேண்டும், ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை வற்புறுத்தினால் ஏற்படும் மன உளைச்சலை அவர்களுக்குப் புரிய வைத்தோம். சிறையில் கைதிகள் குழுக்களாக சீட்டாட்டம் ஆடுவதில் ஆர்வம் காட்டுவதைக் கவனித்து, பாடங்களின் மேற்கோள்களை சீட்டுகளில் அச்சிட்டு அவர்களுக்கு விளையாட கொடுத்தோம்.  குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், குழந்தை கொடுமை போன்ற தலைப்புகளில், கைதிகளின் வழக்குகளை, காமிக்ஸ் புத்தகங்களாக வெளியிட்டோம்” என்கிறார்.

ப்ராஜெக்ட் அன்லெர்ன் கல்வித் திட்டம், மூன்று மாதங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்குகள் விசாரணையில் இருக்கும் கைதிகள் மூன்று மாதத்திற்குள் விடுதலையாகலாம்அல்லது வேறு அறைகளுக்கு மாற்றப்படலாம். இந்த 90 நாட்களுக்குள், கைதிகளின் மனதை மாற்றிப் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்க வேண்டும் என்பதே எலினாவின் நோக்கம். இதன் மூலம், கைதிகள் அதே குற்றத்திற்காக மீண்டும் சிறைக்கு வரும் விகிதம் குறைந்தது.

”கொரோனா தொற்று ஆரம்பித்ததும், சிறையில் பலருக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால், வெளியில் சென்றவர்கள் மீண்டும் எங்களுடன் இணைந்து பணியாற்றி கல்வி கற்க விரும்பினர். தங்கள் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்துடன், தங்களைச் சுற்றியிருக்கும் இளைஞர்கள் இதே தவறைச் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். மேலும் சிறையில் இருந்த இளைஞர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ேசர்ந்தவர்களாக இருந்தனர். இதனால், மீண்டும் குற்றங்களைச் செய்ய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் குற்றம் செய்து சிறைக்கு வரும் வரை காத்திருக்காமல், குற்றம் நிகழும் முன்னரே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தோம்.

ஆபத்தான பகுதிகளை சேர்ந்த இளைஞர்களிடம், அவர்கள் குற்றம் புரிவதற்கு முன்பே உணர்வு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம். ஆனால் அதைச் செயல்படுத்துவதற்குள், கொரோனா தொற்று தீவிரமாகிவிட்டது” என்கிறார்.
சிறையில் இளைஞர்கள் பலர் அறியாமையில்தான் குற்றங்கள் புரிவதாகக் கூறும் எலினா ‘‘அங்கிருக்கும் பலர், நல்ல தந்தையாக, கணவனாக, பொறுப்பும் அன்பும் நிறைந்த மனிதர்களாகவே இருக்கின்றனர். சூழ்நிலையும், அறியாமையும் அவர்களைக் குற்றவாளியாக்கியுள்ளது.

நான் சந்தித்தவர்களில், பதினெட்டு வயது பூர்த்தியாகாத பெண்ணை திருமணம் செய்ததால் கைதானவர்களும் உண்டு. பெண்ணின் விருப்பப்படியே திருமணம் நடந்திருந்தாலும், அவள் சிறுமிதான். மூன்று மாதங்கள் காத்திருந்திருந்தால், பதினெட்டு வயது நிரம்பி அப்பெண்ணை சட்டப்படி திருமணம் செய்திருக்கலாம். ஆனால் அறியாமையால் குற்றவாளியாகிவிட்டனர். சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி அதனால் கைதாகியுள்ளனர். இதற்கு சமூகமும் முக்கிய காரணம்’’ என்கிறார் எலினா.

“இங்கு யாருமே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. சமூகம், குடும்பம், சூழ்நிலை எனப் பல காரணங்கள் ஒரு இளைஞனைக் குற்றவாளியாக்க முடியும். அதனால், ஒரு கைதியை யாரோ போல பார்க்காமல், அவன் குற்றவாளியாக, இந்த சமூகத்தில் வாழும் நாமும் ஒரு விதத்தில் காரணம் தான் என்ற கண்ணோட்டத்தில் அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும். அறியாமையால், தவறான வழிகாட்டுதலால், செய்யும் தவறினை சுட்டிக்காட்டத் தவறியதால், இன்று ஒருவன் குற்றவாளியாகிறான்.

ஆய்வில், பெண்களை வன்புணர்வு செய்யும் ஆண்கள் பலரும் அந்த பெண்ணிற்கு நன்கு அறிமுகமானவர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவுமே இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும், ஒரு பெண் பாலியல் ரீதியாகத் தாக்கப்படும் போது, பொதுவெளியில் அவளது குணத்தை கொச்சப்படுத்துவதும், இந்த பண்புகளுடைய பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டால் அது தவறில்லை போன்ற எண்ணங்களை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறது. இது சமூகத்தின் தவறுதானே?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

‘‘பாலியல் உணர்வுகள் ஒரு வயதிற்கு மேல் இயற்கையாகவே உருவாகும். அந்த நேரத்தில் முறையான பாடங்களை அறிமுகப்படுத்தி விளக்கும் போது, மாணவர்களும் இதை சாதாரணமாகக் கடந்து போவார்கள். கொரோனா ஊரடங்கால், வீட்டில் அடைப்பட்டு இருக்கும் நமக்கே ம ன அழுத்தம் ஏற்படும் போது, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையே இல்லாமல், குடும்பத்தைப் பிரிந்து தண்டனை கைதியாக வாழ்பவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். தங்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? குடும்பம் எப்படி இருக்கிறது எனப் பல கவலைகளுடன் ஒவ்வொரு நாளும் கசப்பாக மாறியிருக்கும். அந்த தருணத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நம்பிக்கையான ஒருவரை நாடுகிறார்கள். இந்த தண்டனை காலம், உளவியல் ரீதியாக அவர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும். அதைக் கவனிக்காமல் விடும் போது, சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி அதிகரிக்கலாம்” என்று, கைதிகளுக்கு உளவியல் சிகிச்சையின் முக்கியத்துவத்தை எலினா குறிப்பிட்டார்.

‘‘குற்றத்தைக் குறைக்க, சிறையில் அடைத்து விட்டால் நியாயம் கிடைப்பதாக நம்புகிறோம். ஆனால் சிறைத் தண்டனை அனுபவித்து தன் தவறுகளைத்
திருத்திக்கொண்டு மறுவாழ்வுக்குத் தயாராகி வரும் ஒருவரை இச்சமூகம் ஏற்கவோ மன்னிக்கவோ மறுக்கிறது. என்னைப் பொறுத்த வரை திகார் சிறைச்சாலை, அடர்ந்த மரங்கள் செடி கொடிகள் நிறைந்து கம்பீரமாக இருந்தாலும், உறைவிடப் பள்ளியைப் போலத்தான் நான் அதைப் பார்க்கிறேன். கைதிகள் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து உடற்பயிற்சி செய்து காலை உணவிற்குத் தயாராகுவார்கள். பின் அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் இருக்கும். அதில் இசை, கலை மற்றும் பல திறன் கல்வி சார்ந்த பாடங்கள் நடக்கும்.

சில சமயம், இங்கு திகார் ஒலிம்பிக்ஸ் கூட நடைபெறும். அதில் அனைத்து கைதிகளும் (ஆண்,பெண்) கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். பண்டிகை நாட்களை, ஒன்று கூடிக் கொண்டாடுவார்கள். சில சமயம் குடும்பத்தினரும் விழாவில் கலந்துகொள்வார்கள். கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படும். மேலும், சிறை வளாகத்தை பராமரிப்பதும் இவர்கள் தான். இப்படி திகார் சிறை வெறும் தண்டனை இடமாக இல்லாமல், குற்றவாளிகளை மனிதர்களாக்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் இடமாகவும் இயங்கி வருகிறது.

‘‘சிலர் விடுதலையாகி, நல்வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர் ஒரு கும்பலில் சிக்கி, அதிலிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக்கொள்கின்றனர். சிலருக்கோ, சிறையை விட்டு வெளியே வந்தால், பாதுகாப்பு இருக்காது. இதனால் விடுதலையாகிச் சென்றாலும், அவர்களுக்கு ஒரு உதவி எண்ணைக் கொடுத்து, தேவையான வழிகாட்டுதலைச் செய்து வருகிறோம்.

மூன்று வருடங்களில், பலர் விடுதலையாகியுள்ளனர். இருண்ட சிறை அனுபவத்தில், ஒரு ஒளியாக நம் வகுப்புகள் இருந்துள்ளன என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கு. இப்போது அவர்களில் பலர் நல்ல வேலையில் இருக்கின்றனர், சிலர் பள்ளிப் படிப்பை தொடர்கிறார்கள், மேலும் சிலர் தாங்கள் செய்த தவறை மற்றவர்கள் செய்யக்கூடாது என்ற சமூக அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். இந்த மாற்றத்தைத்தான் இந்தியா முழுவதும் உருவாக்க முயன்று வருகிறோம்” என்கிறார் எலினா ஜார்ஜ்.

ஸ்வேதா கண்ணன்