கற்பித்தல் என்னும் கலை



‘கற்பித்தல்’ என்னும் புனிதமான சேவையில் நாம் சரிவர நம் கடமைகளைச் செய்கிறோமா, நம் சேவை கற்பவருக்கு உற்சாகம் அளிக்கிறதா, அவர்கள் ஊக்கத்துடன் கற்றுக்கொள்கிறார்களா போன்றனவற்றை அறிந்து அதற்கேற்றபடி நம்மையும் தயார் செய்துகொள்ளலாம். நம் இஷ்டப்படி பாடம் நடத்திவிட்டு கடமையை முடித்தோம் என்றிருக்கக் கூடாது. ஏனெனில் இது முடித்துவிட்டுப்போகும் தொழில் அல்ல.

நடத்திக்கொண்டேயிருக்க வேண்டிய தொழிலாகும். எவ்வளவு நடத்தி முடித்தோம் என்பதைவிட எப்படி நடத்தினோம் என்பதுதான் முக்கியம். நாம் கற்பிக்கும் விதம், மாணவர்கள் மனதைத் தொட்டுவிட்டால் போதும், வேறு எதற்கும் கவலைப்பட வேண்டாம். நம் திறமையை கணித்து எடை போடுபவர்கள் நம் மாணவச் செல்வங்கள். யார் யாரையோ திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நம்மிடம் நாற்பது மாணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த நாற்பது பேரையும் நம் கற்பிக்கும் திறமையால் பாசத்துடன் கூடிய அரவணைப்பால், அன்பாகத் திருத்தும் அன்னையாக அவர்களை கட்டிப்போட வேண்டும். கடினமானவற்றைக்கூட எளிதாகப் புரிய வைப்பது என்பது நம் திறமையைப் பொறுத்தது. ‘கை ராசியான மருத்துவர்’ என்று சிலரைக் குறிப்பிடுவதுண்டு. அதுபோல், தேர்வில் தோற்கும் நிலையிலுள்ள ஒரு மாணவனை, தன் முயற்சியால் தேர்ச்சி பெற வைப்பதும் அப்படித்தான்.

அதனால்தான் எத்தனை வயதானாலும், படித்த மாணவன் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், அவன் ஆசிரியரைப் பார்த்தால் தலை குனிந்து வணங்குகிறான். தாய், தந்தை பாசம் எவ்வளவு அளவிட முடியாததோ, அந்த அளவு ஆசிரியர்-மாணவர் பந்தம் ஆண்டுகள் கடந்தாலும் அளவிட முடியாத மரியாதையைத் தேடித்தருகிறது.

வெறும் புத்தகப் பாடங்களை சொல்லித்தந்தோம் என்றில்லாமல், அது சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறுவதன் மூலம் நல்ல பொது அறிவை வளர்க்க முடியும். பிள்ளைகள், ‘எப்படா, வகுப்பு முடியும்’ என்று நினைக்காமல் ‘ஐயோ! சீக்கிரம் வகுப்பு முடிந்துவிட்டதே’ என்று அங்கலாய்க்கும்படி செய்திட வேண்டும்.


அதுதான் ஒரு விறுவிறுப்பான வகுப்பாக இருக்கும். உண்மையில் வகுப்பிற்குள் நுழைந்துவிட்டால் எப்படி நேரம் ஓடும் என்றே சொல்ல முடியாது.

அப்படியொரு உற்சாகமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு வரும் தன்னை சிறந்தவர்களாக நினைப்பது இயல்பு. ஆனால் நம்மிடம் இருக்கும் சிறிய குறைகளையும் யாராவது சுட்டிக்காட்டினால், அதை திருத்திக்கொள்வதுதான் பரந்த மனப்பான்மையாகும். வெளியே இருப்பவர்கள் சொல்வதைவிட நம் மாணவர்கள் நம் திறனை மதிப்பிடும் தன்மை உண்மையாக இருக்கும். வளர்ந்த பிள்ளைகள் சரியாகவே மதிப்பிடுவார்கள். இதை அறிவதற்காக ஒவ்வொரு வகுப்பிற்கும் சந்தர்ப்பம் அளிப்பதுண்டு.

பத்துப் பதினைந்து நிமிடங்களில், குறிப்பிட்ட வகுப்பு மற்றும் அதன் ஆசிரியர் குறித்து உண்மையான விபரங்களை கட்டுரை வடிவில் எழுதச் சொல்வது பழக்கம். குறை-நிறை இரண்டையும் குறிப்பிட வேண்டும். வெறும் புகழ்ச்சிக்கு மதிப்பு கிடையாது. வகுப்பில் நடந்த கெட்ட நிகழ்வுகளையும் குறிப்பிடலாம். எந்த விதத்திலாவது ஆசிரியரால் பாதிக்கப்பட்டாலும் எழுதலாம் போன்ற கருத்துக்கள் அடிப்படையில் எழுத அனுமதி தரப்பட்டது.

பெரும்பாலும் மாணவர்கள், ஆசிரியர் நல்ல குணங்களையும், அழகாகயிருக்கிறார், புடவை நன்றாக இருந்தது, அணியும் ஆபரணங்கள் போன்றவை பற்றியெல்லாம் எழுதுவார்கள். அறியாத சில பிள்ளைகள், ஆசிரியரைப் புகழ்ந்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள். அதுபோன்ற கட்டுரைகளை தனியே வைத்து விட்டு, குறைகள் உள்ளதை ஆர்வத்துடன் படிப்பேன். அப்பொழுதுதான், நமக்குத் தெரியாமலே நம்மிடம் இருக்கும் சிறிய குறைகளை போக்கிக்கொள்ள உதவியாக இருக்கும். ஒருநாள் தன்னை எதற்கோ ஆசிரியர் திட்டிவிட்டதாகவும், மனம் வருந்தியதாகவும்கூட எழுதியிருந்தான்.

அவனைத் தனியே அழைத்து சந்தர்ப்பத்தை விளக்கி தட்டிக்கொடுத்ததில் அவன் மனம் லேசானது. பிஞ்சு மனங்கள் வேதனைப்
படக் கூடாது என்பது எங்கள் எண்ணம். எல்லோரும் மனிதர்கள்தானே! சந்தர்ப்பங்கள் நம்மை சிரிக்கவும் செய்யும், கோபப்படவும் வைக்கும். நம்மை நாமே
மாற்றிக்கொள்ள நல்ல ஒரு பரிசோதனை இது என்றுகூட சொல்லலாம். 

வகுப்பிற்கு ‘லேட்டாக’ வரும் ஆசிரியர்களை அவர்கள்தான் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். ‘‘அவங்க கால் மணி நேரம் கழித்துதாண்டா வருவாங்க! அதற்குள் நான் வீட்டுப்பாடம் எழுதி முடித்திடுவேன்’’ என்று பேசிக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் பழக்க வழக்கங்களையும் அவர்கள்தான் சரியாக கணிக்கிறார்கள்.

ஆக, ஒரு கற்பிப்பவர் இவற்றிற்கெல்லாம் பேச இடம் தராத வகையில் இருந்துவிட்டாலே போதும்!வருடம் முழுவதும் சில பிள்ளைகள் ஆட்டம் போடுவார்கள், கரும்பலகையில் எழுதிப்போடும் பாடங்களை ‘நோட்புக்’கில் முடிக்காமல் வைத்துக்கொள்வார்கள். வகுப்புத் தேர்வுகள் நடப்பதையும், அதன் மதிப்பெண் பற்றியும் வீட்டில் பேசியிருக்கவே மாட்டார்கள். திடீரென பெற்றோர்கள் ஆசிரியரை சந்திக்கும்பொழுது, ஒன்றுமே தெரியாமல், ‘வகுப்புத் தேர்வுகள் எதுவும் கிடையாதா’ என்று கேட்பார்கள். ஆசிரியர்கள் அனைத்தையும் ‘பைலி’ல் வைத்திருப்பார்கள்.

அதைப்பார்த்து பெற்றோரிடம் கூறும்பொழுது, பிள்ளைகள் மாட்டிக் கொள்வார்கள். இவற்றிற்கெல்லாம் தீர்வாக இப்பொழுது குறுந்தகவல் அனுப்பும் முறை நடைமுறையில் வந்துவிட்டது. தினமும் படிக்க வேண்டிய பாடங்களும், வீட்டுப் பாடங்களும் பெற்றோருக்கே அனுப்பப்படுகிறது. முன்பிருந்த முறை மாறி இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.

தேர்வு சமயங்களில் நன்கு படிக்கும் மாணவர்களின் நோட்டுப்புத்தகங்கள் நிறைய காணாமல் போகும். சரிவர எழுதி முடிக்காதவர்கள், நல்ல பிள்ளைகளின் நோட்டுக்களிலிருந்து தேர்வுக்கு முன்னால் காப்பியடித்துக் கொள்வார்கள். முழுவதும் வேலை முடிந்ததும் காணாமல் போன நோட்டுகள் தானே வந்துவிடும். இதெல்லாம் சகஜமாக நடைபெறுவதுண்டு. ஆனால் இப்பொழுது கைபேசி வசதிகள் வந்துவிட்ட பிறகு, பெற்றோர்களே படம் எடுத்து ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்கிறார்கள்.

பிள்ளைகள் சமயங்களில் நம்மைவிட புத்திசாலிகள். உதாரணமாக, கணக்கு நோட்டு ஆசிரியர் திருத்திக்கொண்டிருக்கிறார் என்று கொள்வோம். முதல் வரிசையில் கடைசியாக அமர்ந்திருப்பவன் தன் பாடத்தை செய்திருக்க மாட்டான். ஒவ்வொருவரை அழைத்து பிழை திருத்தும் சமயம், மெல்ல எழுந்து கடைசி ‘பெஞ்ச்’சில் சென்று அமர்ந்துவிடுவான்.

கடைசி ‘பெஞ்ச்’ முறை வரும் சமயம், மெல்ல எழுந்து முதல் பெஞ்சில் அமர்ந்து விடுவான். எப்படியாவது தப்பிப்பதில் அப்படியொரு சந்தோஷம் அவர்களுக்கு. ஆனால் ஆசிரியர்கள், முகத்தைப் பார்த்தே தவறை கண்டுபிடித்து விடுவார்கள். இருப்பினும் நாசுக்காக சொல்லி புரிய வைப்பார்கள். வீட்டுப்பாடம் முடிக்காதவர்கள், முதல் மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகளின் நோட்டை எடுத்துவந்து காட்டுவதும் வழக்கம். நல்ல மதிப்பெண் பெறும் பிள்ளைகளை ஆசிரியர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்பது அவர்களின் கருத்து.

அதனால்தான் எப்பொழுதும் பாடத்தை மட்டும் முன்னிருத்தி அவர்களை இந்தப் பழக்கங்களிலிருந்து விடுபட வைக்க, அவர்கள் விரும்பும் மாறுதலான யுக்திகளை புகுத்த நினைப்பதுண்டு. உதாரணத்திற்கு, பொங்கல் பண்டிகை பற்றிய பாடம் எனக்கொள்வோம். யார் யார் எப்படிக் கொண்டாடுவீர்கள் என்று கேட்க ஆரம்பித்தால் போதும்! அனைவரும் எழுந்து அழகாகச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

கூடவே யார் யார் அம்மாவுக்கு உதவி செய்வீர்கள், வீட்டை சுத்தப்படுத்த எப்படி உதவுவீர்கள் என்றால் கொஞ்சம் சப்தம் குறையும். அப்பொழுது வீட்டு வேலைகளில் உதவுவது குறித்தும், வீட்டை சுத்தம் சுகாதாரமாக வைத்துக்கொள்வது பற்றியும், தங்கள் பொருட்களை தூய்மையாக வைத்துக்கொள்வது பற்றியும் கொஞ்சம் எடுத்துரைக்கலாம். ‘பொங்கல்’ என்று கூறும்பொழுது கொஞ்சம் சாப்பாட்டு ருசியையும் புகுத்தலாமே! சர்க்கரைப் பொங்கல் பற்றி பேசலாம். இந்த அனுபவம் எனக்கு உண்டு. சொல்ல ஆரம்பித்த சமயம், எல்லோரும் அமைதியாக சமையல் குறிப்பை
எழுதிக்கொண்டனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த முதல் நாள். நான் அறைக்குள் நுழைய இருந்தேன். பின்னால் பிள்ளைகள் கத்திக்கொண்டே ஓடி வந்தார்கள். மூன்று பிள்ளைகள் ‘டிபன் பாக்ஸை’ நீட்டிக்கொண்டே ‘‘இது நாங்களே செய்த சர்க்கரைப் பொங்கல் மிஸ்! டேஸ்ட் பண்ணிப் பாருங்க!’’ என்றனர். ஏன் பெற்றோரை பொருட்கள் வாங்கித்தர சிரமப்படுத்தினீர்கள் என்று கேட்டேன்.

‘‘இல்லை மிஸ், எங்க அம்மாவுக்கு நான் செய்வேன் என்றதும் மகிழ்ச்சி. பத்தியா, மிஸ் சொன்னாதான் நீங்கள் வீட்டுல வேலை செய்றீங்க என்று எனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துத் தந்தாங்க!’’ என்றான். அவர்கள் மனதை வேதனைப்படுத்தக் கூடாது என்பதற்காக, எல்லா ஆசிரியர்களுக்கும் ருசி பார்க்கச் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மாணவர்களும் பொங்கல் செய்ய ஆரம்பித்தனர். பின் அதையே ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி, பிள்ளைகளுக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்காத பிள்ளைகள்கூட இதுபோன்ற விஷயங்களில், ஊக்கமுடன் கலந்துகொண்டு தன்னையும் சுறுசுறுப்பாக மாற்றிக் கொண்டனர். இத்தகைய மகிழ்ச்சி எங்கு கிடைக்கும்?

ஆசிரியர்களுக்கு, பிள்ளைகள் புதுமை யானப் பெயர்களை அவர்களுக்குள் சொல்லி வைத்திருப்பார்கள். அதில் அவர்களின் ஒற்றுமைதான் என்ன? விஷயம் வெளியில் போகாமல் நண்பர்களுக்குள் மட்டும் பகிர்வார்கள்.

எங்கள் காதுகளுக்கு எட்டினாலும், அவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் தரமாட்டோம். கண்டுகொள்ளாமல் விட்டால், ஒருநாள் ஓய்ந்து விடுவார்கள். சிறிய குழந்தைகள் வீடுகளில், அப்பா-அம்மா விளையாட்டுக்களை சுவாரசியமாக விளையாடுவார்கள். பெரியவர்கள் பார்த்துவிட்டால் வெட்கம் வந்துவிடும். அதுபோல் ‘பாப் கட்டிங்’ வைத்திருந்த ஒருவரை ‘கிராப்புத்் தலை’ என்று சொல்லிக் கொண்டிருந்தது கேட்க நேர்ந்தது. எனக்கு சிரிப்புதான் வந்தது. அதற்குள் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கப்பட்டன.

சிறு விஷயங்களை நம் பார்வையால்கூட திருத்தி விடலாம் என்பதற்கு இதுபோன்ற சான்றுகள் பல உள்ளன. ‘படிபடி’ என்று சொல்லுவதற்குப் பதில் அந்தப் பரிசோதனையை செய்துவா என்று கூறினால், அவர்கள் அதைப் படித்துப் பார்த்தால்தான் செய்ய முடியும். தானே சிரத்தையுடன் செய்துவிடுவார்கள். குறிப்பாக, உணவுப் பண்டங்கள் விஷயத்தில் போட்டி போட்டுக்கொண்டு செய்வார்கள்.

ஒருமுறை தென்னமரம் பற்றியும் அதன் பாகங்கள் பற்றியும் விளக்கி விட்டு, அவர்களால் அதன் பாகங்களிலிருந்து முடிந்த ஏதேனும் ஒன்றை செய்துவரச் சொன்னோம். 2, 3 நாட்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் ஒரு கண்காட்சி நடத்தும் அளவுக்கு பொருட்கள் வந்து குவிந்துவிட்டன.

தேங்காய் ஓட்டில் ஆரம்பித்து செய்யப்பட்ட  இசைக்கருவி முதல் தேங்காயின் ‘பர்பி’ வரை அடக்கம். புத்தகத்தை மனப்பாடம் செய்யச் சொல்லாமல், அவர்களின் விருப்பப்படி, சில ஆய்வுகள் மூலம் படிப்பை சொல்லித் தருவது அவர்களின் அறிவை மேலும் பெருக்கும்.

நாம் படித்தவர்கள்தானே, அவர்கள் சிறியவர்கள் என்று நினைத்து, வார்த்தைகளை அலட்சியமாகவும் பயன்படுத்தக் கூடாது. அதுவும் பலமொழி பேசும் பிள்ளைகளிடையே வார்த்தைகளைப் பார்த்து பயன்படுத்துவதும் நல்லது. ஒரு புது ஆசிரியை, ஒரு மாணவனிடம் நாளைக்கு நீ வரும்பொழுது ‘ராவில் அம்மாவை அழைத்து வா’ என்றார். மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அந்தப் பையன் மலையாளம் பேசுவதால், ஆசிரியை அப்படிச் சொல்லியிருக்கிறார். மலையாளத்தில் ‘ராவில்’ என்றால் காலை என்று அர்த்தமாம். ஆசிரியரும் சரியாகத்தான் மாணவனுக்கு புரிய வைக்க, அவன் மொழியில் சொல்லியிருக்கிறார். மாணவனும் புரிந்துகொண்டான். ஆனால் தமிழ் பேசும் பிள்ளைகள் ‘ராவில்’ என்பதை இரவில் என்று நினைத்து, அப்பொழுது ‘யாரும் பள்ளிக்கு வரமாட்டோமே!’ என்று கிணடலடித்தனர். இன்றும் இதுபோன்ற சிரிப்பு நிகழ்வுகள் கண்முன் தெரிந்துகொண்டிருக்கின்றன.

தமிழ் ஆசிரியை வந்து, ‘‘யாருப்பா, வகுப்பிலேயே முதல் மதிப்பெண்?’’ என்று கேட்டிருக்கிறார். ‘‘அதோ ‘அவன்தான் அவுட் ஸ்டாண்டிங்’ மாணவன்’’ என்று கூறி தினமும் பாடம் முடிக்காமல் வெளியில் நிற்கும் ஒருவனைக் காட்டியிருக்கிறார்கள்.

இதுபோன்ற அனுபவங்கள் பிள்ளைகளுடன் பழகும்போது மட்டுமே சாத்தியம். அந்த வெகுளித்தனமான ‘ஜோக்குகள்’ சரியான நேரத்தில் நம்மையும் சிரிக்க வைத்து களைப்பைப் போக்கிவிடும். காலையில் வரும் ‘குட்மார்னிங்’ வார்த்தைகள் மட்டுமல்லாது மாலையில் வீடு திரும்பும்பொழுது ‘குட்பை’ வார்த்தைகளும் அன்றைய நாள் நல்லபடியாகச் சென்றதைக் குறிக்கும்.

சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்