புரட்டாசி மாத மகிமைகள்புரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள்தான் வருவார். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் மட்டும் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். மாதம் முழுவதும் எல்லா நாட்களுமே விரதம் இருப்பவர்களும் உண்டு. பூண்டு, வெங்காயம் போன்ற மசாலா பொருட்களை கூட சேர்த்துக்கொள்ளாமல் சாத்வீகமாக விரதத்தை கடைபிடிப்பவர்களும் உண்டு.
இந்த மாதம் முழுக்கவே பெருமாளை வழிபடுவார்கள். முன்பு எல்லாம் கிராமங்களில் புரட்டாசி விரதம் இருப்பவர்கள் வீடு வீடாக சென்று பெருமாளுக்காக அரிசி வாங்கி வந்து அதை மாவிளக்கு செய்து பெருமாளுக்கு விளக்கு ஏற்றி நைவேத்தியம் படைப்பார்கள். இப்போதுகூட சில ஊர்களில் இதை கடைபிடிக்கிறார்கள். புரட்டாசிக்கு ஏன் இத்தனை சிறப்பு?

பஞ்சபூதங்கள்

நம் முன்னோர்கள் விஞ்ஞானத்தை மெய்ஞானத்துடன் கலந்து தான் சொல்லி இருக்கிறார்கள். இப்போதுதான் இரண்டையும் தனித்தனியாக பிரித்துவிட்டோம். நாம் என்ன தான் பகுத்தறிவு பேசினாலும் சாப்பாடு தான் நமது அடிப்படை தேவை. அதற்கு விவசாயம் அவசியம். விவசாயத்துக்கு காரணமாக அமைவது நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய பஞ்சபூதங்கள். அந்த பஞ்சபூதங்களை இயக்குபவர் கடவுள். அவரை வணங்குவது அவசியம்.

கன்னி ராசி

நவக்கிரகங்களில் மகாவிஷ்ணுவுக்கு உகந்த கிரகமாக சொல்லப்படுவது புதன். இதற்கு அதி தேவதா என்று மகாவிஷ்ணுவை தான் சொல்வார்கள். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் உச்சம் பெறுவார்கள். புதன் கிரகம் கன்னி ராசியில் உச்சம் பெறுவார். சூரிய பகவான் புரட்டாசி மாதத்தில் இந்த கன்னி ராசியில் சஞ்சரிப்பார். சூரியன், புதன் இருவருமே கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதம்தான் புரட்டாசி. சூரியனின் அதி தேவதா சிவபெருமான். புதனுக்கு மகாவிஷ்ணு. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒரே நேரத்தில் தெய்வீக மூலையான கன்னி மூலையில் சஞ்சரிக்கிறார்கள்.

அம்பாள்

சிவனும் விஷ்ணுவும் இணைந்து அருள்புரியும் ஆலயங்கள் மிகக் குறைவாக தான் இருக்கும். ஆனால் அவை மிகவும் விசேஷமானவை. சைவர்களாக இருக்கட்டும் வைணவர்களாக இருக்கட்டும்… இரு தரப்பினரும் சேர்ந்து கொண்டாடுவது இந்த புரட்டாசி மாதம் தான். அம்பாள்களுக்கு பிடித்த நவராத்திரி தொடங்கும் மாதமும் இதுவே. கேதார கவுரி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், மகாலட்சுமி விரதம், அமுக்தாபரண விரதம், ஜேஷ்டா விரதம், சஷ்டி - லலிதா விரதம், கபிலா சஷ்டி விரதம், மகாளய பட்சம் என விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதமும் புரட்டாசிதான்.

அசைவம் தவிர்ப்பது ஏன்?
இந்த மாதம் இந்துக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதற்கு அறிவியல்பூர்வமான காரணம் இருக்கிறது. ‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்…’ என்பார்கள். `புரட்டாசி மாதத்தில் பகல் வேளையில் தங்கமே உருகிப்போகும் அளவுக்குக் கடுமையான வெயில் அடிக்கும். இரவு நேரத்தில் மண் உருகி வழிந்து ஓடும் அளவுக்கு நல்ல மழை பெய்யும்’ என்பதே அதன் பொருள்.

அதாவது இந்த மாதத்தில் பொதுவாக பகல் முழுக்க வெயிலும் இரவு முழுக்க குளிர்ச்சியும் இருக்கும். இப்படி இரு வேறு தட்பவெப்ப நிலைகள் மாறி மாறி வருவதால் உடலும் வெப்பம், குளிர்ச்சி என மாறி மாறி ஆளாகும். இரவுகளில் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும். பகல் பொழுதில் ஈரப்பதம் குறைந்துவிடும். இந்த சூழ்நிலையில் அசைவம் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த பிரச்னைகளை தவிர்ப்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் இந்த மாதத்தில் அசைவத்தை தள்ளி வைக்க கூறி இருக்கிறார்கள்.

சுத்தம்

புரட்டாசி மாத தட்பவெப்பம் என்பது கொசு போன்ற நோய் பரப்பும் உயிர்கள் பெருகுவதற்கு ஏற்ற காலம். கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள் அதிகமாக இருக்கும். தண்ணீரின் மூலம் பரவும் நோய்களான டைபாய்டு போன்ற விஷக்காய்ச்சல்களும் அதிகமாகும். கொசு தொந்தரவை அழிக்க, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். விரதம் இருக்கும் காலங்களில் இயல்பாகவே நாம் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்போம். எதையும் ஆன்மிகத்துடன் இணைத்து சொன்னால் நம் மக்கள் தீவிரமாகக் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இந்தக் காலகட்டத்தில் புரட்டாசி விரதம் ஏற்படுத்தப்பட்டது.

சுக்கிர பகவான்

புரட்டாசி மாதத்தில் தான் சுக்கிர பகவான் கன்னி ராசியில் நீச்சம் அடைகிறார். இவர் நம் கண்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர். எனவே இந்த காலகட்டத்தில் கண் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. கண் தொடர்பான நோய்களுக்கு உடலில் ஏற்படும் சூடு தான் முக்கிய காரணம். எனவே அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நமது முன்னோர்கள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது போல் வாழ்வதற்காகத்தான் வாழ்க்கை முறைகளையும் உணவு பழக்கங்களையும் வகுத்து கொடுத்துள்ளார்கள். இந்த மாதத்தில் பெருமாளை தரிசிப்பவர்களும் வழிபடுபவர்களும் சனி பகவானின் பார்வையில் இருந்து தப்பலாம். அவரது வீரியம் சற்று தணியும். அதற்கான வரத்தை பெருமாள் அளித்துள்ளார்.

துளசியின் முக்கியத்துவம்

கிருஷ்ண அவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிப்பவர்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபம் இடுகிறார். இதனால் சுதர்மர், சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்கிறார்.

அதேபோல் ராதையும், மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்து, சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலக்கிறார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

துளசி காரணம்

துளசி, கற்பூரவல்லி, தூதுவளை போன்ற கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் சளி, செரிமானக் கோளாறுகள், இதய பாதிப்பு, மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். குறிப்பாக துளசியை மூலிகைகளின் ராணி என்று சொல்வார்கள்.

அந்த அளவு சக்தி வாய்ந்தது. துளசியை சாப்பிடுவதன் மூலம் சைனஸ், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி வராமல் பார்த்துக்கொள்ள முடியும். தினமும் 10 முதல் 15 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். துளசி சேர்த்த நீரை குடிப்பதோடு துளசி இலைகளைச் சாப்பிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கவே, புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் நடைமுறையையும் துளசியை பயன்படுத்தும் முறைகளையும் உருவாக்கினார்கள்.

சீனு