என்னை நானே மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்!மிருதங்க கலைஞர் ஜெயமங்கலா கிருஷ்ணமணி

‘‘எங்களுடையது இசைக் குடும்பம். அம்மா இந்திரா கிருஷ்ணமூர்த்தி டான்சர். அவங்களுக்கு பரதம், குச்சுப்பிடி, கதகளி, மோகினியாட்டம்ன்னு நான்கு விதமான நடனங்கள் தெரியும். திருநெல்வேலியில் ஜெயமங்கலா இசை மற்றும் நடன பள்ளி நடத்தி வராங்க. அப்பா பாலக்காடு கிருஷ்ணமூர்த்தி. சங்கீத வித்வான். பாட்டி ராஜலட்சுமி கிருஷ்ணன். அவங்களும் பாட்டு பாடுவாங்க. அவங்களுக்கு இசை தான் ஸ்வாசம்’’ என்று பேசத் துவங்கினார் பெங்களூரை சேர்ந்த மிருதங்க கலைஞர் ஜெயமங்கலா கிருஷ்ணமணி.

இசை குடும்பத்தில் வந்தவருக்கு இசை ஞானம் இல்லாமல் இருக்குமா? இவர் சங்கீதம் மட்டுமில்லாமல் மிருதங்கமும் பிரமாதமாக வாசிக்கிறார். இவர் கை விரல் பட்டவுடன் மிருதங்கத்தில் இருந்து இசை தீப்பிழம்பாய் வெளியேறுகிறது. ‘‘என்னை சுற்றி எப்போதுமே இசை ஒலிச்சிட்டே இருக்கும். ஒரு பக்கம் அப்பா பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருப்பார். இன்னொரு பக்கம் அம்மாவின் சலங்கை ஒலி. நான் பிறந்த நாள் முதல் இசையின் ஒலியை கேட்டு தான் வளர்ந்தேன்.

அதனால் என்னை அறியாமலேயே எனக்குள் இசை ஊடுறுவி இருந்தது. என்னோட பாட்டியும் அதற்கு ஒரு காரணம். அவங்ககிட்ட நான் முதல் முறையா பாட்டு பாட கத்துக்கிட்டேன். நிறைய கீர்தீஸ் அவங்க தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நாங்க இருவரும் இசையால் பேசிக்கொள்வோம். அதன் பிறகு அம்புஜம் வேதாந்தம் என்பவரிடம் பாட்டு கத்துக்கிட்டேன். பாரதியாரின் காவடி சிந்துகள், ஊத்துக்காடு வெங்கட கவி... ன்னு அவங்க சொல்லிக் கொடுத்தாங்க.

அதன் பிறகு சங்கீத கலா ஆச்சாரியா சுப்பிரமணியம் அவர்களிடம் கற்றுக்ெகாள்ளும் வாய்ப்பு கிடைச்சது. அவர் பெரிய மகான். அவரிடம் நான் பாட்டில் போடப்படும் கணக்கு பொருத்தம் கத்துக்கிட்டேன். ஸ்வரம் பாடி தான் அவர் பாட்டை எடுப்பார். அதில் இவரை மிஞ்சிய ஆள் கிடையாது. அதே போல் பாட்டு பாடும் போது தாளத்தை கணக்கு போட்டு பாடுவாங்க. மேலும் ஜாவளி முறையும் இவர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். ஒரு கீர்த்தி எடுத்து பாடினா எப்படி ஒவ்வொரு சங்கதியா கொண்டு வரணும்ன்னு கூட எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

என்னை ஒரு பாடகரா மெருகேற்றியவர். இவரைப்போல், டி.ஜி.சுப்பிரமணியம் அவர்களும் என்னுடைய இன்னொரு குரு. அவரும் மகா வித்வான். அவரிடம் இருந்தும் பாட்டு கத்துக்கிட்டேன்’’ என்றவர் தனக்குள் ஒளிந்து இருந்த மிருதங்க ஞானத்தை வெளிப்படுத்திய பெருமை இவரின் குருவை சேருமாம்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே ஒரு பழக்கமுண்டு. எந்த ஒரு இசை கேட்டாலும் அதற்கான தாளம் போடுவேன். இதை என்னுடைய குரு அம்புஜம் வேதாந்தம் அவர்கள்தான் கண்டுபிடிச்சாங்க. அவங்க தான் அம்மாவிடம் ‘இவ நல்லா தாளம் போடுறா, மிருதங்கம் வாசிக்க கத்துத்தரலாம். நல்லா வருவா’ன்னு சொல்லி இருக்காங்க. அம்மாவும் அவங்க பேச்சை மறுக்காம என்னை மிருதங்க பயிற்சிக்கு அனுப்பினாங்க. நெல்லை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தான் என்னுடைய முதல் மிருதங்க குரு. அதன் பிறகு நாஞ்சில் அருள், மன்னார்குடி ஈஸ்வரன்... என பெரிய வித்வானிடம் கத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது’’ என்றவர் மிருதங்கம் வாசிக்க கடின உழைப்பு வேண்டுமாம்.

‘‘பாட்டை கேட்டு அந்த இசைக்கு ஏற்ப பாடலாம். அதே போல் மிருதங்கமும் இசைக்கு ஏற்ப வாசிக்கணும். அது அவ்வளவு சுலபமில்லை. ஆரம்பத்தில் ரொம்பவே கடினமா உழைக்கணும். தாளத்திற்கு ஏற்ப கை விரல்கள் பேசணும். ஆரம்பத்தில் என்னுடைய விரல்கள் ரொம்பவே மிருதுவா இருக்கும். மிருதங்கத்தில் தாளம் போடும் விரல் நுனி எல்லாம் ரொம்ப வலிக்கும். இப்ப பயிற்சி எடுத்து தழும்பு தட்டி கடின மாயிடுச்சு. இப்ப நானே இசையை கம்போஸ் செய்து, என்னுடைய கச்சேரிகளில் வாசிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு இசையை கம்போஸ் செய்ய நிறைய பேருடைய கச்சேரிகளை கேட்கணும். கேட்க கேட்க தான் நமக்குள் ஞானம் வளரும். அது தான் நமக்கான ஒரு ஸ்டைலை உருவாக்க வழிவகுக்கும். ஏழு வயசில் இருந்தே நான் பாட்டு மற்றும் மிருதங்கம் கத்துக்கிட்டாலும் இன்னும் நிறைய இருக்கு தெரிந்துகொள்ள. இது ஒரு பெரிய கடல்’’ என்றவர் 350க்கு மேற்பட்ட கச்சேரிகளை செய்துள்ளார்.

‘‘+2 முடிச்ச தருணம். 1996ம் ஆண்டு முதல்  முறையா பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் நடன நிகழ்ச்சிக்கு நான் வாசிச்சேன். என்னுடைய சித்தப்பா தான் வாசிக்கிறதா இருந்தது. அவரால போக முடியல. அதனால நான் வாசிச்சேன். அமெரிக்காவில் நடைபெற்ற அவரின் நிகழ்ச்சிக்கு நான் மிருதங்கம் வாசிச்சேன். அதுதான் என்னுடைய முதல் வெளிநாட்டு பயணம்.

அதனை தொடர்ந்து 350க்கும் மேற்பட்ட கச்சேரிகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செய்திருக்கேன். சென்னையில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடி இருக்கேன். 2004ம் ஆண்டு அமெரிக்கா சேம்பர் ஹவுஸ் மற்றும் ஹவுஸ் கான்சர்ட் செய்து இருக்கேன். வி.வி.கோபாலகிருஷ்ணன், நித்தியயின் அம்மா லலிதா சிவக்குமாருக்கும் வாசித்து இருக்கேன். அதை கேட்டு நித்தய தன்னுடைய டிசம்பர் மாத மார்கழி இசை கச்சேரிக்கு என்னை வாசிக்க சொன்னார்.

இதை தவிர நான் தனியாகவும் கச்சேரி செய்து இருக்கேன். இதில் என்னால மறக்க முடியாத அனுபவம் வளையப்பட்டி சுப்பிரமணியம் அவர்கள் தவில் வாசிக்க உடன் நான் மிருதங்கம் வாசித்தது. ஒவ்வொரு கலைஞரோடு வாசிப்பது ஒரு புது அனுபவம். காரணம் அவங்களுக்கு என தனி ஸ்டைல் விரும்புவாங்க. அதற்கு ஏற்ப வாசிக்கணும். இதற்காகவே நிறைய பயிற்சி எடுப்பேன்’’ என்றவர் அரிய வர்ணனங்களை கண்டறிந்து வாசித்து வருகிறார்.

‘‘பொதுவா கச்சேரியில் எல்லாரும் தெரிந்த வர்ணனங்களை தான் பாடுறாங்க. அப்படி இல்லாமல் பல புதிய வர்ணனங்கள் குறித்து பயிற்சி செய்து வருகிறேன். இது வரை 14 தில்லானாக்களை கம்போஸ் செய்திருக்கேன். என்னுடைய தில்லானாக்களை என் அம்மா அவங்க நடனப் பள்ளியில் பயிற்சி அளிக்கிறாங்க. இப்போது கூட கண்ட நடையில் ஒரு வர்ணனை அமைத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இது போல் வித்தியாசமா முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.

நான் ஒரு பக்கம் என்னை மெருகேற்றி வந்தாலும், எனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கும் சொல்லித் தருகிறேன். இந்த சமயத்தில் நேரடியாக பயிற்சி அளிக்க முடியாது என்பதால் ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்கிறேன். எதிர்காலத்தில் இசைக்கான அகாடமி ஒன்று ஆரம்பிக்கணும்னு எண்ணம் இருக்கு. அதற்கான முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். என்னுடைய எல்லா முயற்சிக்கும் பக்கபலமா இருப்பது என் கணவர் மற்றும் என் மாமனார், மாமியார். என் கணவரும் இசை பயின்று வருகிறார். என் மாமியாரும் இசை பயின்றவர். என்னுடைய ெபஸ்ட் விமர்சகர்களும் இவர்கள்தான்’’ என்றவர் இசைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

‘‘1999ல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் லயன்.கே.சங்கரா விருது கிடைச்சது. அதன் பிறகு 2002ம் ஆண்டு யுவ கலா பாரதி விருது பெற்றேன். அடுத்த ஆண்டு நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவின் போது செம்பை விருது பெற்றேன். 2008ம் ஆண்டு டிசம்பர் மாத கச்சேரியில் சிறந்த பாடகர் என்ற விருது கிடைக்கப் பெற்றேன். 2011ம் ஆண்டு சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற கச்சேரியில் சிறந்த மிருதங்க வித்வான் என்ற விருதினை பெற்றிருக்கேன்’’ என்றார் ஜெயமங்கலா.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்:வெங்கடேஷ்