74 வயதில் இரட்டை குழந்தை!குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்- என்பது குறள்.

அத்தகைய குழந்தை செல்வத்திற்காக காத்திருந்த பெண் ஒருவர் தமது மாதவிடாய் காலம் முடிந்த நிலையில் குழந்தை பெற்றுள்ளார். இது மருத்துவ அதிசயம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெல்பர்த்திபுடி பகுதியை சேர்ந்தவர் மங்காயம்மா.

இவருக்கு ராஜா ராவ் என்பவருடன் 1962ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கை இனிமையாக கழிந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் தம்பதியினர் இருவரும் மனம் நொந்தனர். போகாத கோயில் இல்லை பார்க்காத மருத்துவர் இல்லை.

தினமும் ஒரு ேகாயில் என்று சுத்தியே வெறுத்துவிட்டனர். அப்போதுதான்  செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறலாம் என முடிவு செய்த மங்காயம்மா - ராஜா ராவ் தம்பதி இதற்கு தகுந்த டாக்டரை தேடி தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்கினர். இதற்கு வடிகாலாக அமைந்தது குண்டூரில் உள்ள அகல்யா என்ற தனியார் மருத்துவமனை. அங்கு டாக்டர் உமா சங்கரை சந்தித்து ஆலோசனை பெற்றனர். அப்போது மாதவிடாய் காலம் முடிந்துவிட்டதால் மங்காயம்மாவுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையை தேர்வு செய்தனர்.

இதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நன்கொடையாளரிடம் இருந்து கருமுட்டைகளை பெற்று கணவர் ராஜா ராவின் விந்தணுக்கள் மூலம் அதை கருவுற செய்தனர். தொடர்ந்து 10 மாதங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த மங்காயம்மா கடந்த செப்டம்பர் 5ம் தேதி இரட்டை குழந்தைகளை சிசேரியன் முறையில் பெற்றெடுத்தார்.

அவரை 4 பேர் கொண்ட நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். இதனால் 55 ஆண்டு கால இல்வாழ்க்கையில் கிடைக்காத இன்பத்தை அவர்கள் குழந்தை செல்வம் மூலம் பெற்றதாக தாய்மை அடைந்த மங்காயம்மா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இதை மருத்துவ அதிசயம் என்கிறார் அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் உமா சங்கர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இருப்பினும் 74 வயதில் குழந்தை பெற்ற சம்பவம் உலக சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘‘மங்காயம்மாவை தொடர்ந்து 9 மாதங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பு மற்றும் ஸ்கேன் சோதனை என தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதுவும் மங்காயம்மா முதல் ஐ.வி.எப் சிகிச்சையிலேயே கருத்தரித்ததும் மிக அபூர்வமானது’’ என்றார் டாக்டர்.

2016ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தல்சிந்தர் கவுர் என்ற 72 வயது பெண்மணி, குழந்தையை பெற்றது தான் இந்தியாவில் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண்மணி என்ற சாதனை படைத்திருந்தார். இப்போது  74 வயதில் ஆந்திர பெண்மணி,  இரட்டை குழந்தைகளை  பெற்றெடுத்துகவுரின் சாதனையை முறியடித்துள்ளார் என்று டாக்டர்கள்  தெரிவித்துள்ளனர்.

கோமதி பாஸ்கரன்