என்ன செய்வது தோழி? மிதியடிகளா பெண்கள்?



அன்புத் தோழி,

நாங்கள் 75 வயதை கடந்த தம்பதிகள். எங்கள் மகளுக்கு திருமணமாகி 20 ஆண்டு–்கள் ஆகின்றன. மாப்பிள்ளை நன்றாக படித்தவர். ஆனால் வேலைக்கு போக மாட்டார். என் மகள் தனியார் கல்லூரியில் வேலை செய்கிறாள்.  அவள் மகன் கல்லூரியிலும், மகள் பள்ளியிலும் படிக்கின்றனர்.
 எங்கள் மகளின் கணவன் கொஞ்சநாள் பிசினஸ் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அது என்ன பிசினஸ் என்று என் மகளிடம் எதுவும் சொன்னதில்லை. தினமும் இரவு குடித்து விட்டு வருவார். கேட்டால் இதெல்லாம் பிசினஸ் சம்பந்தப்பட்டது. அதைப் பற்றி  உனக்கு தெரியாது என்பார்.

 நாளாக நாளாக வீட்டில் உள்ள நகைகளை திருடி விற்க ஆரம்பித்தார்.  சில நாட்கள் விட்டு வீட்டுக்கு வர மாட்டார். அவன் அப்பா அம்மாவிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் அவனை ஏதும் கேட்கவில்லை. நாங்கள் சொன்னதையும் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
 அவன்  அம்மா இறந்ததும், அவரின் நகைகள் அவனிடம் கொடுத்தார்கள். அது எவ்வளவு வந்தது? அது என்ன செய்தான் என்று இதுவரை என் மகளிடம் கூறவில்லை.

அவன் அப்பா இறந்த பின் கிடைத்த வீட்டை விற்றான். அந்த பணத்தை வீட்டில் வைத்து இருந்தோம். அதையும் திருடிச் சென்றுவிட்டான்.கேட்டால் ‘நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்’  என்பான்.பிறகு விசாரித்ததில் அவன் தினமும்  சீட்டாட கிளப்புக்கு செல்வதும், குதிரை ரேசுக்கு  செல்வதும், பெண்களிடம் சென்று செலவு செய்வதும்  தெரியவந்தது.

 நாங்கள் வாங்கிக்  கொடுத்த மாருதி காரை யாருக்கும் தெரியாமல் விற்று விட்டான். அவனது மோட்டார் பைக்கை விற்று விட்டான்.  அப்படி விற்பனை செய்வதை எனது மகளிடம் சொல்வதில்லை.கேட்டால் குடித்துவிட்டு வந்து கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டுவான். அவன் இதுவரை ஏதும் சம்பாதிக்கவே இல்லை.குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள டிவி,  கடிகாரம், மொபைல் போன் எல்லாவற்றையும் போட்டு உடைப்பான். பலமுறை வீட்டுக் கதவுகளை உடைத்து  இருக்கிறான்.

பிள்ளைகளுக்கு 2015 லிருந்து நாங்கள் தான் கல்வி கட்டணங்களை  கட்டி வருகிறோம்.  எங்கள் மகளுக்கு நாங்கள் வாங்கி கொடுத்த வீட்டை வாடகை விடுவதாக சொன்னான்.  ஆனால் குத்தகைக்கு விட்டு ஆறு லட்ச ரூபாயை அவன்  வாங்கி இருந்தான்.பிறகு நாங்கள் அந்த ரூபாயை கொடுத்து வீட்டைத் திருப்பினோம். இப்போது  என் மகள்  அந்த வீட்டில்தான் இருக்கிறாள். அவன் தொல்லை தாங்காமல் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொன்னாலும் சண்டை போடுகிறான். அதனால் குடும்ப பெரியவர்களை வைத்து பேசினோம். அப்போதும் அவன் வீட்டை விட்டுப் போக மாட்டேன் என்கிறான்.

அவனை விவாகரத்து செய்துவிடலாம் என்று முயற்சி செய்தாலும், கையெழுத்து போட மாட்டேன் என்று தெனாவட்டாக பேசுகிறான். கூடவே அவளது தாலிச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டான். பிறகு தாலியையும் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான்.அதுமட்டுமல்ல, ஆளில்லாத நேரத்தில்  வீட்டிலிருந்த 50 ஆயிரம், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நிச்சயதார்த்த, முகூர்த்த பட்டுப் புடவைகளையும் திருடிச் சென்று விட்டான்.

வீட்டுச் செலவுகள் எல்லாம் என் மகள் சம்பாத்தியத்தில்தான் போகிறது. பிள்ளைகள் பள்ளி, கல்லூரி போனபின் செலவுக்கு என்
பணம் கேட்பான்.  கொடுக்கவில்லை என்றால்  கதவை பூட்டிவிட்டு,  ‘ நீ எப்படி கல்லூரிக்கு போகிறாய்’ பார்க்கலாம்’ என்று அராஜகம் செய்வான்.

 அவன் தொல்லை தாங்காமல், வேறு வழியில்லாமல் என் மகளும் செலவுக்கு பணம் கொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.  என் மகளின் ஏடிஎம் கார்டை ஒளித்து வைத்து இருந்தாலும்,  அதை எப்படியாவது திருடி வங்கியில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்து விடுவான்.
எங்கள் ஆதரவு காரணமாக அவள் செலவுகளை சமாளிக்கிறாள்.

 இப்படிப்பட்ட திருடன், மோசக்காரன், ஏமாற்று பேர்வழியை, எல்லா கெட்ட பழக்கம் உள்ளவனை எப்படி வெளியில் விரட்டுவது? எப்படி அவனிடம் விவாகரத்து வாங்குவது? நாங்கள் வாழும் காலத்திலேயே என் மகள் நிம்மதியாக வாழ்வதை  பார்க்க முடியுமா?  தயவு செய்து என் மகளை உங்கள் மகளாக நினைத்து வழி சொல்லுங்கள்.இப்படிக்கு,பெயரை வெளியிட விரும்பாத வயதான தம்பதியர்.

நட்புடன் தோழிக்கு...
உங்கள் மகளின் வேதனையை பொறுக்க முடியாமல் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள். அந்த துன்பத்தில் இருந்து விடுபட உங்கள் மகளுக்கு விவாகரத்து கிடைக்குமா என்று கேட்டு இருக்கிறீர்கள். முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் விவாகரத்து என்பது இன்னொருவர் தருவது அல்ல.
கணவன், மனைவி இருவரும் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவதை ஊடகங்களில், திரைப்படங்களில் பார்த்து இப்படி கேட்கிறீர்கள். அப்படி கணவன்-மனைவி மனம் ஒத்து, சேர்ந்து வந்து பிரிவது அரிதான நிகழ்வுதான்.

அப்படி ஒற்றுமையாக இருப்பவர்களுக்கு விவாகரத்து வழக்கு தொடுக்கும் நிலைமை ஏற்படுவதும் அரிது.எனவே கணவன், மனைவியில் இரண்டு தரப்பும் ஒத்துக் கொண்டால் தான் விவாகரத்து கிடைக்கும் என்பது தவறான கருத்து. நீங்கள் என்ன மதம் என்று குறிப்பிடவில்லை. எந்த மதமாக இருந்தாலும் மதவாரியானச் சட்டங்கள், சிறப்பு திருமணச் சட்டங்கள் மூலமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் மகளுக்கு  விவாகரத்து பெற முடியும்.

உங்கள் மகள் பிரச்னையை பொறுத்தவரை அவரது கணவரால் பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். கெட்ட வார்த்தைகளில் திட்டுவது
மட்டுமின்றி, அடிக்கவும் செய்திருக்கிறார். அடிக்கடி விட்டுவிட்டுச்  சென்றுள்ளார். பொருளாதார ரீதியாகவும் குடும்பத்துக்கு, பிள்ளைகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக வீட்டில் இருந்து பொருட்களை, பணத்தை திருடிச் சென்று உள்ளார். போதாதற்கு பெண்கள் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறீர்கள்.

எனவே உங்கள் மகள் அவரது கணவரால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு இருக்கிறார். எனவே அவர் சட்டத்தின் உதவியை நாடலாம். வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெறலாம்.  நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப அருகில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மூலமாக  வழக்கு தொடரலாம். அதற்கு ஒரு வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெற்று வழக்கு தொடரலாம்.

விவாகரத்து மட்டுமின்றி, ஜீவனாம்சம் பெறலாம். பிள்ளைகளின படிப்பு உள்ளிட்ட இதர தேவைகளுக்காக இடைக்கால நிவாரணமும் கேட்கலாம்.
உங்களுக்கு வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்த வசதியில்லை என்றால் மாவட்ட, தாலுகா அளவில் இருக்கும் இலவச சட்ட உதவி மையங்களை அணுகலாம். அவர்கள் உங்கள் வழக்கை இலவசமாக நடத்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருவார்கள்.

உங்கள் மகளுக்கு என்றில்லை, உங்கள் மகளை போல் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் இயங்கும் சமூக நல ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலரை அணுகலாம். அவர் உங்கள் பிரச்னைகளை விசாரித்து விட்டு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம், இருப்பிட வசதி ஆகியவற்றை கணவரிடம் இருந்து பெற்று தருவார்கள். கூடவே அவர்களே உங்கள் சார்பில் வழக்கறிஞரை வைத்து வழக்கு நடத்துவார்கள். நீங்களும் வழக்கறிஞரை ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

இந்த அலுவலகங்கள் மாவட்ட தலைநகரங்களில் இருக்கும். நேரடியாகவே, அஞ்சல் மூலமாகவே புகார் தெரிவிக்கலாம். உங்கள் மகள்தான் புகார் தெரிவிக்க வேண்டும் என்றில்லை. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று யார் வேண்டுமானாலும் பாதுகாப்பு அலுவலருக்கு இப்படி புகார் தெரிவிக்கலாம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இது மட்டுமல்ல மாநில மகளிர் ஆணையங்களிலும் புகார்  அளித்து பாதுகாப்பு, நிவாரணம் பெற வாய்ப்பு இருக்கிறது.  நேரில் செல்ல முடியவில்லை என்றால் அஞ்சல் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

இன்னொன்று சொல்கிறேன். ஒரு பெண் இவ்வளவு கொடுமைகளை பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டாம். உங்கள் மகள் பல ஆண்டுகளாக எல்லையில்லா குடும்ப வன்முறைகளை அனுபவித்துள்ளார். இவ்வளவு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு பெண்கள் வாசலில் கிடக்கும் மிதியடி போல் சும்மா இருக்கக் கூடாது. பெண்கள் தனித்து இயங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். உறுதியாக பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். அப்படி போராடும் பெண்களுக்கு சட்டம் உதவியாக இருக்கும்.

பெண்களின் பாதுகாப்புக்கு சட்டம் இத்தனை வசதிகள் செய்திருந்தும் ஏன் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தீர்கள்? இப்போதாவது விழித்துக் கொண்டீர்களே! எதையும் தைரியமாகவும், உறுதியாகவும் சட்டத்தின் உதவியுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் மகளுக்கு நல்லது நடக்கும். உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004