துணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்!



சிறு தொழில்

குடும்பத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீண்டெழ ஆயிரம் ரூபாய்க்கு சணல் பை, கலம்காரி துணிப்பை போன்றவை வாங்கி விற்பனை செய்து, பின்னர் ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி இன்று ‘இமயம் கிராப்ட்ஸ்’ என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார் புதுவையை சேர்ந்த ஐராணி ராமச்சந்திரன். இவர் தற்போது பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்திருப்பதோடு, தொழில் பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல். அப்பா பல்லவன் போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநராக இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிச்சேரியில் குடியேறிட்டோம். நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே பாண்டிச்சேரியில்தான்.
1996ல் எனக்கு திருமணம் நடந்தது. சுமார் 10 ஆண்டுகாலம் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு வீட்டில்தான் இருந்தேன். அப்போது பெண்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து அதில் வரும் தொழில்களை நாேன செய்து பார்த்து வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டேன்’’ என்றவர், தன் தொழிலுக்கான ஆரம்பம் குறித்து பேசினார்.

‘‘நான் இந்தத் தொழில் ஆரம்பித்ததே ஒரு விபத்து போன்றது என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய மகன் பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறான். அவனுக்கு முதுகுத் தண்டுவடத்தில் பிரச்னை இருந்ததால், இரண்டு தடவை அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. சாதாரணமாக ஒரு ஜுரம் என்று மருத்துவமனைக்கு சென்றாலே ஆய்வுகளுக்காகவே நாம் செலவு செய்ய வேண்டி இருக்கும். என் மகனுக்கோ முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை என்பதால், அதன் செலவு மட்டுமே என் முன் மலை போல் உயர்ந்து நின்றது.

அதை சமாளிக்க நாம் ஏதாவது ஒரு தொழில் செய்தால் என்ன என்று தோன்றியது. அப்படி சிறிய அளவில் ஆரம்பித்ததுதான் இந்த கைவினைப்பொருட்கள் தயாரிப்பு தொழில். எனது வீட்டுக்காரர் ஆரம்பத்தில் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இப்போது எனது தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

என் கணவர் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தாலும் வருமானம் பெரிய அளவில் இருக்காது. அவரின் சம்பாத்தியத்தில் குழந்தைகளை படிக்க வைக்கவும், வீட்டு செலவுக்குமே சரியாக இருந்தது. இதில் எங்கு சேமிப்பது. இதற்கிடையில் என் மகனின் மருத்துவ செலவு. என்ன செய்வதென்றே புரியாத நிலைமை. கணவர் ஒருவரின் வருமானத்தை மட்டுமே கொண்டு நிலைமையை சமாளிக்க முடியாது என்பது மட்டும் எனக்கு புரிந்தது’’ என்றவர் தான் சிறுவயதில் கற்றுக் கொண்ட எம்பிராய்டரி கொண்டு தொழில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.

‘‘எடுத்ததும் அகல கால் வைக்க முடியாது என்பதால் முதலில் கர்சீப் மற்றும் துணிகளில் எம்பிராய்டரி செய்து கொடுத்தேன். ஃப்ரூட் ஜூஸிலிருந்து ஜாம் தயாரிப்பது, பழரசம் தயாரிப்பது போன்ற ஒரு சிறு தொழில்பயிற்சி இந்தியன் வங்கி மூலம் எங்கள் பகுதியில் நடத்தப்பட்டது. எனது மகனின் ஆபரேஷனுக்குப் பிறகு அவனுக்கு ரசாயனம் கலக்கப்படாத உணவு கொடுக்க வேண்டுமே என்பதற்காக அத்தொழில் பயிற்சியில் நானும் சேர்ந்து கற்றுக்கொண்டேன். அங்குதான் எனது தொழிலுக்கான குருநாதரைக் கண்டுபிடித்தேன்.

அந்த தொழிற்பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் ஸ்டால் போட்டு கலம்காரி துணிகளை விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் என்ன சார் இது பழையத் துணிபோல் இருக்கிறதே என்றேன். அவர் இது ரசாயனங்கள் கலக்கப்படாத கலம்காரி என்று சொல்லப்படும் துணிகளில் படங்கள் அச்சிட்டு அதில் துணிப்பை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்றார். அப்போது அவரிடம் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு துணிப்பை உள்ளிட்ட கொஞ்சம் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்தேன்.

அவர் எனக்கு பொருட்களை கொடுத்தது மட்டும் இல்லாமல் எங்கு எப்படி விற்பனை செய்யணும்னு ஆலோசனையும் கூறினார். பொதுவாக இந்தப் பொருட்கள், கண்காட்சியில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனையாகும். மற்றபடி பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களில் ஆர்டர் எடுத்தும் விற்பனை செய்யலாம் என்று வியாபார யுக்தியை சொல்லிக் கொடுத்தார்.

இது நடந்தது 2004ஆம் ஆண்டு. இதற்கிடையில் நான் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்ததால் சென்னை ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் மூலம் குழுவில் ஒரு டிரெய்னிங் கொடுத்தார்கள். அதில், நமக்கு போட்டியாளர் இருந்தாலும் நம்முடைய பொருளை எப்படி விற்பனை செய்யலாம், விற்பனையில் வேறு முறையை கையாள்வது எப்படி என்று பயிற்சி கொடுத்தார்கள்’’ என்றவர் அதன் பிறகு தானே தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

‘‘ஒரு பொருளை வாங்கி விற்பனை செய்வதை விட அதை தயாரித்து விற்பனை செய்யும் போது கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன். படிப்படியாக கற்றுக் கொண்டேன். இன்றைக்கு பாண்டிச்சேரி  ‘ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் வில்லேஜ் முருங்கப்பாக்கம்’ என்ற அரசுக்குச் சொந்தமான இடத்தில் எங்களது தயாரிப்பு நிறுவனத்தை அமைத்து சணல் பை, சணலோடு வெல்வெட் துணி கலந்து செய்யப்
படும் பொருள், போல்டபிள் பேக், பொம்மைகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.

இதில் போல்டபிள் பேக் என்பது கொஞ்சம் வித்தியாசமானது. கலம்காரி துணியில் செய்யப்படும் பை. ரசாயனம் கலக்காத ஊறுகாய், ஜாம் போன்றவை தயாரித்தும் விற்பனை செய்கிறேன். ஆர்டரின் பேரில் கேட்பவர்களுக்கும் மொத்தமாக தயாரித்துக் கொடுக்கிறேன். மேலும் தொழிலாக செய்ய விரும்பும் பெண்களுக்கும் பயிற்சியும் அளித்து வருகிறேன்.

இத்தொழிலைத் தொடங்குவதற்கு நான் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான் முதலீடு செய்தேன். தொழிலில் முழு ஈடுபாடு, விடாமுயற்சி, சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை தெரிந்துகொண்டால் மாதம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். அவரவர் திறமையைப் பொறுத்து இதில் வருமானம் கூடவும், குறையவும் வாய்ப்புண்டு. நான் எனது கடைகளை பாண்டிச்சேரி கடற்கரை மட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமை சந்தையிலும் நடத்தி வருகிறேன்’’ என்றவர் சந்தையில் கடை போடுவதற்கான காரணத்தையும் விளக்கினார்.

‘‘ஐந்து வருடத்துக்கு முன்பு எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த சம்பவம். என்னுடைய தொழில் நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த தருணத்தில் சேமிப்பிற்காக ஒரு பெண்ணிடம் சீட்டுக் கட்டி வந்தேன். அவர் எனக்கு பணம் தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார். இந்த பணத்தை நம்பித்தான் நான் என் தொழிலை மேலும் விரிவு படுத்த திட்டமிட்டு இருந்தேன்.

இதனால் நாம் பெரிய பணச் சிக்கலுக்கு தள்ளப்பட்டேன். பால் வாங்க கூட என்னிடம் பணமில்லை. அதற்காக உடைந்து உட்காரவும் முடியாது. எந்தவித தயக்கமின்றி பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட்டுக்குப் போனேன். அங்கு கடை போட்டிருந்த ஒரு தம்பியிடம், நான் கைவினைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறினேன். பெரும்பாலும் கண்காட்சிகளில் தான் கடை போடுவேன். இப்போது பெரிய அளவில் கண்காட்சிகள் நடைபெறாததால் கஷ்டமாக உள்ளது. அதனால் நானும் இங்கு கடைபோடலாமா’ன்னு கேட்டேன்.

அதற்கு அந்த பையன் எந்தவித தயக்கமின்றி சம்மதம் தெரிவித்தான். அதே சமயம் உங்களின் பொருளும் எப்படி விற்பனையாகும் என்று என்னால் சொல்லமுடியாதுன்னு கூறினான். அவன் சொன்ன வார்த்தை உள்ளூர பயத்தை ஏற்படுத்தினாலும். என் பொருட்களின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

அதனால் தைரியமாக கடை போட்டேன். முதல் வாரம் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு பொருட்களை விற்றேன். இன்றைக்கும் சண்டே சந்தையில் என் தொழில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு மட்டும் இல்லாமல், ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சியிலும் நாங்க இடம் பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டோம்’’ என்றவரின் வாழ்க்கையின் முன்னோடியா அமைந்த புத்தகங்களை இன்றும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

‘‘புத்தகங்கள் எப்போதுமே பொக்கிஷங்கள் தான். ஒரு பெட்டி நிறைய புத்தகங்கள் வைத்திருக்கேன். இதை படித்து தான் நான் படிப்படியாக முன்னேறி இருக்கிறேன். என் கணவர் அதை வேண்டாம் தூக்கி போட்டுவிடு என்றாலும் எனக்கு அதை தூக்கி போட மனமிருக்காது. இந்த புத்தகங்களை கொண்டு என் வீட்டில் சிறிய அளவில் ஒரு நூலகம் அமைக்கும் எண்ணம் உள்ளது. இந்த தொழிலில் நான் இவ்வளவு தூரம் முன்னேற எனது கணவரும், குழந்தைகளும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்’’ என நிறைவாக முடித்தார் ஐராணி ராமச்சந்திரன்.

தோ.திருத்துவராஜ்

முபாரக் ஜான்