டயட் மேனியாகிச்சன் டைரிஸ்

டயட் மேனியாவில் நாம் இந்த இதழில் பார்க்கப்போவது ஜெர்சன் தெரபி பற்றி. என்னது டயட் பகுதியில் தெரபியா என நினைக்க வேண்டாம். உணவே மருந்து என்று வடிவமைக்கப்பட்ட தெரபி இது என்பதால் இதனை ஜெர்சன் டயட் என்றும் சொல்வார்கள். மாற்று மருத்துவத்தில்
ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்ற தெரபி இது.

குறிப்பாக, புற்றுநோய் போன்ற நாட்பட்ட கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த தெரபி டயட்டை மேற்கொள்ளலாம். சிறப்பான டயட், வெறும் பழச்சாறுகள், நச்சு நீக்கிகள், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவை இதில் முக்கிய அங்கம் வகிக்கும்.

இதை சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மேக்ஸ் பி ஜெர்சன் என்ற மருத்துவர் அறிமுகப்படுத்தினார். தனது நாட்பட்ட மைக்ரேன் தலைவலியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் பின்பற்றிய டயட் இது. பின்னர் இதுவே காசநோய், புற்றுநோய் போன்ற பெரிய வியாதிகளுக்கும் மிகச் சிறப்பாய் செயல்படுவதைக் கண்டு மக்களிடம் பரப்பினார்.

இந்த தெரபியின்படி ஓர் உடலில் நோய் உருவாவதற்குக் காரணம் அதன் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாறுபாடுதான். உடலில் நச்சுப் பொருட்கள் கலக்கும்போது இது நிகழ்கிறது. ஜெர்சன் தெரப்பி உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

ஜெர்சனின் மகள் ஜெர்சன் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தை தொடங்கி இந்த டயட்டை மேலும் பரவலாக்கினார். இன்று இந்த டயட்டை மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் உட்பட பல்வேறு நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

அடிப்படையில் இந்த தெரபியில் உணவு, நச்சு நீக்கம், ஊட்டச்சத்தேற்றம் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன. இந்த டயட்டை மேற்கொள்பவர்கள் ஆர்கானிக் உணவுகளையே உண்ண வேண்டும். சைவ உணவுகள், வெறும் பழரசங்கள்- அதாவது பால், சர்க்கரை,நீர் சேர்க்காதது ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, டி அறவே ஆகாது.

இன்று ஜெர்சன் தெரபியை அவர்களது அங்கீகரிக்கப்பட்ட இணையம் மூலமாகக்கூட பின்பற்ற இயலும். அவர்களின் இணையதளத்தில் பதிவு செய்தால் அவர்கள் பரிசீலித்துவிட்டு அவர்களுக்கேற்ற பரிந்துரைகள் சொல்வார்கள். சில சமயம் மூளை புற்றுநோய், பார்க்கின்சன், சிறுநீரகச் செயல் இழப்பு போன்ற நோய்களுக்கு இவர்கள் பரிந்துரைப்பதும் இல்லை.

அங்கீகரிக்கப்பட்ட இவர்கள் இணையதளத்தின் மூலமாக இச்சேவையைப் பெற சற்று அதிகமாகவே கட்டணம் கட்ட வேண்டும். அதே போல் இதை சுமார் இரண்டு ஆண்டுகளாவது பின்பற்ற வேண்டியதும் அவசியம் என்கிறார்கள். அடுத்த இதழில் இந்த டயட் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம்.

எக்ஸ்பர்ட் விசிட்

புற்றுநோயோடு போராடும் உணவுப் பொருட்கள் என்னென்ன என்று நிபுணர்களிடம் கேட்டோம். இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உணவியல் நிபுணர் சுபி ஹுசைன் தரும் லிஸ்ட் இதோ…மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிஃபீனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாகக் காரணமான புண்களை ஆற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.

பூண்டு: தினசரி உணவில் தவறாமல் பூண்டு சேர்த்து வருவது குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். பூண்டில் உள்ள சல்ஃபர் சேர்மங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள பைட்டோ ரசாயனங்களுக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை. மேலும், புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் கட்டிகளைக் குறைக்க பூண்டு உதவுகிறது.

இஞ்சி: இஞ்சி பசியைத் தூண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமைப் பெருகும். இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜிஞ்சரால், பாராடோல், ஷோகால் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்கின்றன. இஞ்சிச் சாறு புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.

சோளம்: சோளத்தில் அதிக அளவு மாவுச்சத்தும் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. இவை, உடலுக்குத் தேவையான எனர்ஜியை தருகின்றன. இதில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பி கரோட்டின், தயமின் மற்றும் நியாசின் உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். ரத்தசோகையைக் குணப்படுத்தும்; புற்றுநோய் செல்களின் பாதிப்பைத் தடுக்கும்.

எள்ளு: எள்ளில் அதிக அளவுத் தாமிரமும் கால்சியமும் உள்ளன. வைட்டமின் பி மற்றும் இ, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம், புரதச்சத்து போன்றவையும் உள்ளன. தேன் மற்றும் எள்ளை ஒன்றாகக் கலந்து, தினமும் சாப்பிட்டுவர, தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும். எள் வயிற்றில் உள்ள புண்ணைக் குணமாக்கும். இதில் உள்ள துத்தநாகம் தோல் புற்றுநோயைத் தடுக்கும்.

லவங்கப்பட்டை: புற்றுநோய்க் கட்டி உருவாகாமல் இருக்க லவங்கப்பட்டை உதவுகிறது. லவங்கப்பட்டையில் இருக்கும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட் நம் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், சில வகையான புற்றுநோய்களில் இருந்து நம்மைக் காத்து உதவுகிறது.

மிளகு: மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் மற்றும் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகில் உள்ள வேதிப்பொருட்கள், நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் மிளகுக்கு உண்டு.

வெங்காயம்: வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். வெங்காயத்தில் உள்ள அல்லிசின் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் பெற்றது. மேலும், வெங்காயத்தை வேகவைத்துச் சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.
வெங்காயத்தாள்: வெங்காயத்தாளில் உள்ள அதிக அளவிலான சல்ஃபர் பல நன்மைகளைக்கொண்டது. வைட்டமின் ஏ, இ, சி, கே, தயமின், தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் நிறைந்த பழவகைகளில் காணப்படும் மோனோடேர்ஃபின்கள் புற்றுநோய் உருவாகும் கார்சினேஜன்களை அழிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்து உள்ள சிட்ரஸ் பழச்சாறுகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். வாய், தொண்டை மற்றும் வயிற்றில் வரும் புற்றுநோய்களை சிட்ரஸ் பழங்கள் தடுக்கும்.

க்ரீன் டீ - பிளாக் டீ: க்ரீன்-பிளாக் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கிறது. டீ, காபியில் உள்ள ‘காஃபின்’ க்ரீன் டீயில் இல்லை. க்ரீன் டீயில் உள்ள கேட்டசின் என்ற பொருள் நுரையீரல், மார்பு, ப்ரோஸ்டேட், குடல் புற்றுநோய்களைத் தடுக்கும். குறிப்பாக, க்ரீன் டீ சிறுநீர்ப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் சருமப் புற்றுநோயைத் தடுக்கும்.

ஃபுட் சயின்ஸ்

கொழுப்புச்சத்து எனப்படும் கொலஸ்ட்ரால் பற்றி இந்த இதழிலும் தொடர்ந்து பார்ப்போம். நம் உடலில் மொத்தம் 200 mgm % கொழுப்புச்சத்து இருக்கிறது என்கிறார்கள். இதில் LDL Cholesterol எனப்படும் குறை அடர்த்திக் கொழுப்பு புரதம் 100 mgm%, VLDLCholesterol எனப்படும் மிகக்குறை அடர்த்திக் கொழுப்புப் புரதம் 30 mgm%, ட்ரைக்ளிஸ்ரைட்டுகள் <130 mgm%, மிக அடர்த்திக் கொழுப்புப் புரதம் எனப்படும் HDLP Cholesterol <50 mgm % உள்ளன.

மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm%க்கு குறைவாக வைத்துக்
கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்ரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.ட்ரைக்ளிஸ்ரைட்டுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்

அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. ரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அப்புறப்படுத்தி ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது. இனி என்னென்ன கொழுப்பு வகைகள் எந்தெந்த உணவுகளில் அதிகம் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

நிறைவுற்ற கொழுப்பு அமிலம் (Saturated fatty acid)எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அதில் மிக அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய். ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் இந்தக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக ரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் ரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (Mono unsaturated fatty acid - MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்மை நிறைவுறா கொழுப்பு அமிலம் (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்ரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

நிறைவுறா கொழுப்பு அமிலம் அதிகம் உள்ள எண்ணெயைக் கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, நிறைவுற்ற கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து ரத்தக் குழாய்களை அடைக்கும்.

ஒரே எண்ணெயை பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் ரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், ரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது. ரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.

ஒமேகா 3 உள்ள உணவுகள்

மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்ஒமேகா 6 உள்ள உணவுகள்
சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.

உணவு விதி #34

ஒரு நோய்க்கு மருந்து இன்னொரு நோயின் நண்பன் இல்லை. இந்த விதி முக்கியமானது. இன்றைய நவீன மருத்துவத்தில் சில பக்கவிளைவுகள் உடையவனவாக உள்ளன. பெரிய பிரச்சனையை இன்னொரு சிறியப் பிரச்சனையாகக் குறைப்பதுதான் நவீன மருத்துவம். ஆனால், இன்று மாற்று மருத்துவம் எடுத்துக்கொள்பவர்கள்கூட ஒரு நோய்க்கு மருந்து என்று ஒருவகை உணவை உண்டு, இன்னொரு வகை நோயை ருவாக்கிக்கொள்கிறார்கள்.

உதாரணமாக சர்க்கரை நோயாளிகள் கோதுமையை அதிகமாக உண்டு க்ளூட்டான் எனும் கெட்ட விஷயத்தை உடலில் சேர்த்துக்கொள்வதைச் சொல்லலாம். எனவே, ஒரு நோயைத் தடுக்க இன்னொன்றை வர வைக்க வேண்டாம். கவனம். அது இந்த விதி சொல்வது.

ஃபுட் மித்ஸ்

வெள்ளைச் சர்க்கரையைவிட பிரவுன் சர்க்கரை நல்லது. இந்த மித் இங்கு ரொம்ப காலமாக உண்டு. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ருசியைத் தவிர இரண்டிலும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுக்குமான கலோரி முதல் மற்ற உள்ளடக்கங்கள் வரை அனைத்தும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். எனவே, வெள்ளை சர்க்கரையோ, கரும்புச் சர்க்கரையோ கொஞ்சம் தூரமே வைத்திருங்கள்.

இளங்கோ கிருஷ்ணன்