அக்கா கடை - பாதாளத்தில் விழுந்து மீண்டேன்!



‘‘நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம்னு பிறர் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். அது நமக்கே வரும் போது அதை எதிர்கொள்ளும் வலி மிகவும் வேதனையானது. எல்லா வசதியும் பெற்று வாழ்ந்து வரும் போது, ஒரு நாள் நம்முன் எதுவுமே இல்லை என்று நினைக்கும் போது ஏற்படும் காயம் மிகவும் வலிமையானது. கிட்டதட்ட பாதாளத்திற்கு தள்ளப்பட்டு இருப்போம். அதிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல. ஒரு சிலர் அந்த பாதாளத்தில் சிக்கிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் தங்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த வாழ்க்கை நமக்கானது. அதில் எந்த சிக்கல் வந்தாலும் அதை எதிர்த்து போராடணும். உயிரை மாய்த்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. போராடித்தான் எதையும் சாதிக்க வேண்டும். எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. அந்த தீர்வினை தேடி செல்ல வேண்டும். அதை தெரிந்து கொண்டு அந்த வழியை பின்பற்றினால் எந்தப் புதைக்குழியையும் நம்மால் எளிதாக கடந்துவிட முடியும்’’ என்கிறார் திலகவதி. இவர் சென்னை மயிலாப்பூரில்  அரிசி சேவை செய்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘கோவைதான் சொந்த ஊர். திருமணமாகி சென்னையில் செட்டிலாகி விட்டோம். என் கணவர் தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தார். ஒரே மகள். அளவான குடும்பம். சந்தோஷமாகத்தான் வாழ்ந்தோம். இந்த நேரத்தில்தான் பெரிய பூகம்பம் எங்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. என் கணவர் வேலைப் பார்த்து வந்த நிறுவனத்தில் அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டது.

அதனால் அவர் அந்த வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அப்போது கூட நாங்கள் பெரிய அளவில் பாதிப்பினை உணரவில்லை. ஒரு வேலை இல்லை என்றால் என்ன? வேறு வேலை இல்லாமலா போய்விடும். கண்டிப்பாக வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் இருந்தது.

எனக்கு சமையல் மேல் தனி ஆர்வம் உண்டு. இவருக்கு வேறு வேலை கிடைக்கும் வரை நாம் ஏன் சமையல் தொழிலை செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் என் கணவரின் தம்பி வேலை பார்த்து வந்த இடத்தில் ஓர் இடம் இருப்பதாக சொன்னார். அங்கு எங்களின் சமையல் தொழிலை ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு செய்தோம். முதலில் அந்த இடத்தை சென்று பார்த்தோம். எனக்கும் என் கணவருக்கும் அது பிடித்திருந்தது. சென்னையின் பிரதான பகுதியான அண்ணாசாலையில் ‘சென்னை மெஸ்’ என்ற பெயரில் ஒரு ஹோட்டலை தொடங்கினோம். நல்ல
வரவேற்பு கிடைச்சது.

ஆரம்பத்தில் மதிய நேர உணவு மட்டுமே கொடுத்து வந்தோம். சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி... போன்ற உணவுகளை தான் கொடுத்து வந்தோம். எங்களின் உணவுக்கு மக்களும் ஆதரவு கொடுத்தார்கள். பிசினஸும் நன்றாகத்தான் போனது...’’ என்று சொல்லிவிட்டு நிறுத்தியவர், சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.

‘‘பொதுவாக எந்த ஒரு பிசினஸ் என்றாலும் அதற்கான வளர்ச்சி என்பது ரொம்பவே அவசியம். அப்படித்தான் நாங்களும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்ய நினைச்சோம். தனியார் நிறுவனங்களுக்கு மதிய நேர உணவினை கொடுக்கலாம் என்று திட்டமிட்டோம். ஐ.டி மற்றும் இதர நிறுவனங்களை அணுகி ஆர்டரும் பெற்றோம். அந்த நிறுவனங்களுக்கு தினமும் மதிய உணவை கொடுக்க ஆரம்பித்தோம்.

ஆரம்பத்தில் எல்லாமே நாங்க நினைச்சபடி நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. எங்களின் உணவு எல்லாருக்கும் பிடித்து போனது. ஐ.டி நிறுவனங்களை பொறுத்தவரை அவர்கள் ஒருவரிடமிருந்து மட்டுமே உணவினை பெறமாட்டார்கள். பல வகையான கேட்டர்களிடம் இருந்தும் உணவு பெறுவது அவர்கள் வழக்கம்.

நாங்கள் முழுக்க முழுக்க தென்னிந்திய உணவினை கொடுத்து வந்தோம். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், சப்பாத்தி, ஒரு வெரைட்டி ரைஸ், இனிப்பு உட்பட 10க்கும் மேற்பட்ட உணவினை சப்ளை செய்தோம். எங்கள் ஸ்டாலில் கூட்டம் நிரம்பி வழியும். ஒரு கட்டத்துக்குப் பிறகு கூட்டம் குறையத் தொடங்கியது. விற்பனையும் குறைய ஆரம்பித்தது. மேலும் எங்களின் உணவினை மாற்ற வேண்டும் என்பதற்காகவே எங்களின் உணவு சரியில்லை என்று சிலர் தவறாக சொல்ல ஆரம்பித்தனர். இதனால் தொழில் முழுமையாக படுத்துவிட்டது.

எந்த ஒரு தொழிலையும் நாம் கையில் இருக்கும் காசைப் போட்டு துவங்க மாட்டோம். கடன் வாங்கித்தான் துவங்குவோம். அப்படித்தான் நாங்களும் கடன் பெற்று தான் ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய்க்கு கடன் இருந்தது. என்னதான் சுவையாக சமைத்தாலும் அதை பிசினஸாக செய்யும் போது அதற்கான சூட்சுமம் தெரிந்திருக்கணும். அது எங்களுக்கு தெரியல. பெரிய அளவில் கடனை வாங்கி அதை பிசினஸில் போட்டது தான் நாங்க செய்த பெரிய தவறு’’ என்று சொல்லும் திலகவதி, ஒரு வருட போராட்டத்துக்கு பிறகு மீண்டும் எழுந்துள்ளார்.

‘‘கையில் பணமில்லை. அடுத்த மாதம் வீட்டு வாடகை தரணும். இதற்கிடையில் வீட்டு செலவு, மகளின் பள்ளி செலவுன்னு எல்லாம் மலை போல் குவிந்தது. இரவு படுத்தால் தூக்கம் வராமல் தவித்தேன். கண் முன் எல்லா பாதைகளும் அடைப்பட்டு இருப்பது போன்ற உணர்வு. இந்த நிலையில் வேறு யாராக இருந்தாலும் தவறான முடிவை நோக்கித்தான் சென்றிருப்பார்கள்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. அதற்கான தீர்வு கண்டிப்பாக இருக்கும் என்பது மட்டும் என் மனதில் தோன்றியது. இதிலிருந்து எப்படி மீள்வது என்று யோசித்தோம். முதலில் கடனை அடைக்க வேண்டும். அதற்கு எங்கள் குடும்பத்தினர் உதவி செய்தார்கள். என்னுடைய நகைகளை விற்றோம். அதில் வந்த பணத்தைக் கொண்டு கொஞ்சம் கடனை அடைத்தேன். என் கணவரும் இதையே நினைத்துக் கொண்டு வீட்டில் முடங்கிக்கிடந்தால் சரிவராது என வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.

தினமும் ஓட்டல் வேலையாக சென்று பழகிய எனக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. எல்லா பாரத்தையும் என் கணவர் மேல் சுமத்தவும் விருப்பமில்லை. எனக்குத் தெரிந்தது சமையல் கலை மட்டுமே. அதை மறுபடியும் கையில் எடுக்கலாம் என்று திட்டமிட்டேன். இதன் மூலம் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஒரு சிறிய அளவில் என்னால் உதவ முடியுமே என்று யோசித்த போதுதான் ‘அரிசி சேவை’ செய்யலாம் என்று பொறி தட்டியது.

கோவையில் அரிசி சேவை பிரபலம். அங்கு காலை, இரவு நேர சிற்றுண்டி பெரும்பாலான வீட்டில் அரிசி சேவைதான் இருக்கும். அதை என் மாமா பெரிய அளவில் அங்கு செய்து வருகிறார். அதை ஏன் நான் இங்கு  செய்யக் கூடாதுன்னு தோன்றியது. முதலில் சிறிய அளவில் நானே தனி ஆளாக வீட்டில் செய்தேன். அதை அருகில் இருக்கும் கடைகளுக்கு, தெரிந்தவர்களுக்கு கொடுத்தேன். ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்போது கடைகள் தவிர, வீடுகளுக்கும் சப்ளை செய்கிறோம்.

இது மிகப் பெரிய வேலை. சாதாரணமாக இடியாப்பம் போல் பிழிந்திட முடியாது. அதற்கு என பக்குவம் வேண்டும். தினமும் அதிகாலை இரண்டு மணிக்கு என் வேலை தொடங்கும். இரவே அரிசியை ஊற வைத்து விடுவேன். காலை அதை மைய அரைத்து வேக வைத்து பிழிவேன். மூன்று வருடங்கள் தனி ஆளாக நானேதான் இதை செய்து வந்தேன்.

பிழிவது அவ்வளவு எளிதில்லை. தொடர்ந்து பிழிந்து பிழிந்து என்னுடைய தோள்பட்டையில் பிரச்னை ஏற்பட்டது. அதன் பிறகுதான் ஆட்களை வேலைக்கு வைத்தேன். அதற்கான இயந்திரங்களையும் வாங்கினேன். முதலில் ஐந்து கிலோ சேவை பிழியும் மெஷின் வாங்கினேன். இப்போது ஒரு மணி நேரத்தில் 50 கிலோ அளவு பிழியும் மெஷினை வாங்கி இருக்கேன். ஆரம்பத்தில் என் கணவர் வேலைக்கு செல்லும் போது வீடுகளுக்கு சப்ளை செய்துவிட்டு செல்வார். ஏறக்குறைய சென்னை முழுக்க நாங்கள் சப்ளை செய்கிறோம்.

1000 பேருக்கு மேல் வாடிக்கையாளர்கள் இருப்பதால், டெலிவரி செய்ய ஆட்கள் நியமித்திருக்கேன். காலை ஏழரைக்கு ஃப்ரெஷ் ஆக பேக் செய்து அனுப்பி விடுவோம். வீடுகளுக்கு மட்டும் அரை கிலோ அல்லது ஒரு கிலோ. கடைகளுக்கு 200 கிராம் பாக்கெட். ஒரு கிலோவில் தாராளமாக நான்கு பேர் சாப்பிடலாம்.

எளிதில் ஜீரணமாகும் என்பதாலும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக விரும்பி வாங்குகிறார்கள். காலையில் வாங்கும் பாக்கெட், இரவு வரை தாங்கும். சுத்தமான ஹை குவாலிட்டி அரிசியையே பயன்படுத்துகிறோம்.ஏற்கனவே பிசினஸில் அடிபட்டு அது எங்களுக்கு பெரிய பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கிறேன்.

எல்லாவற்றையும் விட எந்த நேரத்திலும் எனக்கு ஊக்கம் கொடுத்து என் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என் குடும்பமும், நண்பர்களும்தான். அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் என்னை வெற்றிப் பாதையை நோக்கி பயணம் செய்ய ஊன்றுகோலாக அமைந்திருக்கிறது’’ என்றார் நம்பிக்கையுடன் திலகவதி.

ப்ரியா