கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...வாழ்வென்பது பெருங்கனவு!

ஏவியேஷன் கல்லூரி சேர்மன் தீபா ரித்திக்


வாழ்க்கை எல்லோரையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதில்லை. கரடுமுரடாகவும், சில இடங்களில் மெத்தை விரித்த புல்தரையைப் போலவும், பல நேரங்களில் ஆகாயத்தில் பறப்பது போலவும் நகர்ந்து கொண்டிருக்கும். நாம் தான் நமக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி வசந்தத்தை வசப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருடைய வாழ்விலும் நம் வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு வழிகாட்டி கண்டிப்பாக இருப்பார்.

அந்த வகையில், படிப்படியாக தனது லட்சியக் கனவில் அடியெடுத்து வைத்து இன்றைக்கு பலபேருக்கு கல்வியையும் வேலைவாய்ப்பையும் வழங்கிக்கொண்டிருக்கும் ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ் ஆஃப் ஏவியேஷன் (Remo International College of Aviation) சேர்மனாக அமர்ந்திருக்கும் தீபா தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

‘‘சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தான் நான் பிறந்து வளர்ந்து படித்த இடம். அப்பா நித்தியானந்தம் - அம்மா விஜயலட்சுமி தம்பதியினருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் நான் இரண்டாவது மகள்.
அப்பா டெய்லர் கடை நடத்தியதோடு துணி வியாபாரமும் செய்து வந்தார். அரசு உதவி பெறும் முருகதனுஷ்கோடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்த பின்னர் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்தேன். மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற உந்துதலில் தொலைதூரக் கல்வியில் எம்.ஏ (வுமன் ஸ்டடீஸ்) படித்து முடித்தேன்.

எல்லா பெற்றோரும் நினைப்பது போலவே படிப்பு முடிந்தவுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. எனக்கோ ஆசிரியருக்கான படிப்பு படித்து நம்மால் நாலுபேருக்கு கல்வி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற பெருங்கனவு மனதில் இருந்தது. காலம் யாருடைய கனவுகளையும் கேட்டு அறிந்துகொள்வதில்லையே. ரித்திக் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த 15 ஆண்டுகளில் அன்புக்கும் ஆசைக்கும் அடையாளமாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்தவுடன் வீட்டில் இருந்தபடியே நல்லதொரு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதற்கிடையில் மனதில் பதியம் போட்டு வைத்திருந்த ஆசிரியை கனவினால் அருகில் இருந்த பள்ளியில் ஆசிரியைப் பயிற்சியில் சேர்ந்தேன். அந்த ஆசிரியைப் பயிற்சி என் வாழ்க்கையை மாற்றியமைத்தது.

சிறுபிள்ளைகளுடன் பழகுவது, விளையாடுவது என இருந்ததால் அப்பணி அர்ப்பணிப்போடு அன்பானதும் என்பதால் அதனை நேசித்தேன். நாமும் இதுபோன்று ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் கனவிலும் நினைவிலும் வந்துகொண்டிருந்தது. நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம் என்பதுதானே சான்றோர் வாக்கும். அந்த வாக்கு பலித்தது போலவே தற்போது ஒரு பள்ளியை உருவாக்கியுள்ளேன்.

இதற்கிடையில் உற்பத்தித்துறையில் தொழில் செய்து வந்த எனது கணவர் ரித்திக்கிற்கும் கல்வியின் வழியாக இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதனால், அவருக்குப் பிடித்த ஏவியேஷன் பயிற்சி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ் ஆஃப் ஏவியேஷன் நிறுவனத்தில் சேர்மனாக என்னை நியமனம் செய்தார். இன்றைக்கு அப்பணியைச் செம்மையாகச் செய்து வருகிறேன்.

இந்தக் கல்லூரியில் இருபாலரும் படித்து வருகிறார்கள். ஏவியேஷன் துறையில் உள்ள பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாலும் விமானத்துறையில் சிறந்து விளங்குவதாலும் சாதனை விருதுகள் ஏராளமாகப் பெற்றுள்ளோம். பள்ளிப் பருவத்தில் கவுன்சலிங் செய்வதில் ஆர்வம் இருந்ததால், அதை என் கல்லூரி மாணவர்களுக்குச் செய்து வருகிறேன். எந்த ஒரு பிரச்னையானாலும் சரி அல்லது எதை நோக்கி நாம் பயணிக்கிறோம், பயணிக்க வேண்டும், நமக்கான வாய்ப்புகள் எங்கே எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற வழியைக் காண்பிப்பதுதான் கவுன்சலிங். அந்த வழிகாட்டுதலால் பலரும் பயன்பெற்று வருகிறார்கள்’’ என்றவர் விமானத்துறையில் வாய்ப்புகள் குறித்து பகிர்ந்தார்.  

‘‘விமானத்துறை என்றால் பைலட் அல்லது ஏர்கோஸ்டஸ் ( Pilot (or) Airhostess) மட்டுமே வேலைவாய்ப்புக்கானது அல்ல. இந்த வேலையைப் போன்று 30 விதமான வேலைவாய்ப்புள்ள படிப்புகள் விமானத்துறையில் உள்ளன. உதாரணமாக customer service, Baggage handler, ramp, security, flight operations, flight dispatcher, RTR, load trim, duty manager, airport manager, air traffic controller.... என பல விதமான பணிகள் உள்ளன. அதுமட்டுமல்ல கை
நிறைய சம்பளமும் கிடைக்கும் துறையாக இருக்கிறது.

இதன் காரணமாகவே இதுசார்ந்த கல்வியைத் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டது. இந்தக் கல்லூரி தொடங்கி 8 ஆண்டுகளில் ஏராளமான மாணவர்களுக்கு இத்துறைகளில் வேலைவாய்ப்பை வாங்கித் தந்துள்ளேன். குறிப்பாக ஆண்களைவிட பெண்களுக்கே இத்துறைகளில் அதிக வாய்ப்புள்ளது.

ஆரம்பத்தில் எங்கள் கல்லூரி மூலமாக பட்டயப் படிப்பு சான்றிதழ் கொடுத்து வேலைக்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். அதற்கான கல்வித்தகுதி பிளஸ்2 முடித்திருந்தாலே போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் பேசன்ஜர்ஸ் ஹேண்ட்லிங்ஸ் போன்ற பணிகளை பிளஸ்2 படித்த மாணவர்கள் சரிவர கையாள முடியாமல் போனதால் இத்துறையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கே வாய்ப்புகள் கிடைத்தன.

இதனால், அழகப்பா பல்கலைக்கழகத்துடன் கல்லூரியை இணைத்து பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பட்டப்படிப்பில் பி.பி.ஏ. ஏர்லைன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட், பி.எஸ்.சி ஏவியேஷன், எம்.பி.ஏ. ஏர்லைன் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் ஆகிய பட்டப்படிப்புகளை துவங்கினோம். முதல் ஆண்டு 100 மாணவர்கள் சேர்ந்தனர். தற்போது பல நூறு மாணவர்கள் இணைந்து படித்து வருகின்றனர்’’ என்றவர் இந்த துறையில் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.   

‘‘இந்தக் கல்லூரியில் படித்த பல மாணவ - மாணவிகள் இன்றைக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் பணிபுரிகிறார்கள். குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் பி.எஸ்சி ஃபேஷன் டிசைன், பி.எஸ்.சி விஸ்காம், பி.எஸ்.சி ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ், பி.காம் பேங்கிங், எம்.பி.ஏ ஹெல்த்கேர் எனப் பல பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்,  பெண்கள் நினைத்தால் கனவுகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஆகாயத்தில் பறக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் பல குவிந்துள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு நான் ஒரு வழிகாட்டியாக இருப்பதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.

துருப்பிடித்த கவலைகளையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு நம்மால் முடியும் என்று சாதிக்க நினைத்தால் சரித்திரம் நம் பெயரைப் பதிவு செய்ய காத்திருக்கிறது. வெந்ததைத் தின்று, வந்ததை செய்து, மந்தையில் நின்ற நாம், புதிய சந்தையில் நின்று, நம்மால் முடியுமென்று விந்தைகள் பல செய்வோம், அந்த விண்ணையும் ஆள்வோம்’’ என்று வைர வரிகளுடன் முடித்தார் தீபா ரித்திக்.