நியூஸ் பைட்ஸ்ஒரு ரூபாய் நாப்கின்

சமீபத்தில் வெளியான தேசிய சுகாதார கணக்கெடுப்பில், கிராமப் புறங்களில் 60 சதவீத பெண்கள், மாதவிடாய் காலத்தின் போது நாப்கின்கள் உபயோகிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு அதிகப்படியான விலையே காரணம் என்ற தகவலும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் மருந்தகம் எனப்படும் ‘ஜன் அவுஷாதி
கேந்திரா’வில், முன்னதாக நான்கு நாப்கின்கள் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது 6 ரூபாய் குறைக்கப்பட்டு, ஒரு நாப்கின் ஒரு ரூபாய் என்ற வீதத்தில், ஒரு பாக்கெட்டின் விலை நான்கு ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவியின் மெழுகு சிலை

சிங்கப்பூரிலுள்ள மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில், மறைந்த நடிகை,
தேவியின் மெழுகு சிலையை, அவரது கணவர் போனி கபூர் திறந்து வைத்தார். தனது அபாரமான நடிப்பு  
திறமையால், தமிழ்ப் படங்களிலும், அதைத் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் எனப் பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மறைந்த நடிகை தேவி. அவரது திடீர் மரணம், இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது நடந்து ஒரு வருடம் ஆகிய நிலையில், 1987 ஆம் ஆண்டு, தேவி நடித்து வெளியான மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் அவரது கதாபாத்திரத்தை முன்மாதிரியாக வைத்துச் சிலை வடிவமைக்கப்
பட்டுள்ளது.

கேரளாவின் முதல் திருநங்கை செய்தியாளர்

இந்தியா சந்திராயன் - 2வின் சாதனையை மெச்சிக்கொண்டிருந்த அதே நேரத்தில், திருநங்கை ஹெய்டி சாதியாவும் அமைதியாக மாபெரும் சாதனையை படைத்தார். 22 வயதாகும் இவர், கேரளாவின் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி, முதல் திருநங்கை செய்தியாளராக அறிமுகமாகி சாதனை படைத்தார். முதல் செய்தியாக, சந்திராயன் - 2 பற்றிய தகவல்கள் சொல்லியதன் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். பத்திரிகையாளர் ஆவதே தன்னுடைய வெகுநாள் கனவு என்று கூறும் சாதியா, விரைவில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அதர்வ் என்ற இளைஞரை மணக்கவும் உள்ளார்.

சென்னையில் 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள்

மக்கள் ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி யஸ்மீன் ஜவஹர் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னையில் புதியதாக நூறு எலக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஆட்டோக்களை முழுவதும் பெண் ஓட்டுனர்களே இயக்குவார்கள் என்ற தகவலையும் குறிப்பிட்டார். இது பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன், பல பெண்கள் இரவு நேரங்களில் தைரியமாக ஆட்டோவில் பயணிக்கவும் உதவும். மேலும் சுற்றுப்புறத்திற்கு நன்மை தரும் வகையில், எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

17 வருடங்களில் 100 பெண் வீரர்கள்

இந்திய ராணுவத்தில் இருக்கும் பாலினப் பாகுபாட்டை சரிசெய்யும் விதமாக, இந்த வருடம் முதல் அடுத்து 17 வருடங்களுக்கு, ஒவ்வொரு வருடமும் 100 பெண் ராணுவ வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று இந்திய ராணுவத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் 100 பெண் வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி ஏற்கனவே தொடங்கிய நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் 100 பெண் வீரர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தங்கள் பயிற்சியை தொடங்கவுள்ளதாகவும் தெரிகிறது. ஆண் வீரர்கள் போலவே பெண் வீரர்களுக்கும் 61 வாரங்கள், அதே சமமான கடின பயிற்சியும் தேர்வும் நடைபெறும் என்று இந்திய ராணுவத் துறை குறிப்பிட்டுள்ளது.


டொரண்டோ திரைப்பட விழாவில் இந்தியப் பெண் இயக்குநர்கள்

டொரண்டோ திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் தலைசிறந்த படங்களை தேர்ந்தெடுத்து சிறப்பித்து வருகிறது. அதில் பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது வெல்வதும் உண்டு. அதன் வரிசையில் இந்த வருடம் இந்தியாவிலிருந்து நான்கு திரைப்படங்கள் டொரண்டோ திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஆனால் இந்த முறை, அந்த நான்கு படங்களில் மூன்று படங்களை இயக்கியவர்கள் பெண்கள் என்பது மேலும் பெருமையை தேடித்தந்திருக்கிறது. நான்கு படங்களில், இரண்டு கேரளாவிலிருந்தும், மீதி இரண்டு பாலிவுட்டில் இருந்தும் தேர்வான படங்கள்.

ஸ்வேதா கண்ணன்