DIALOGUE IN THE DARK



981ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ராஜபார்வை திரைப்படத்தின் பாடல் ஒன்றில், நடிகை மாதவியின் அழகை கைகளால் தொட்டு உணர்ந்து நடிகர் கமல்ஹாசன் கவிதையாக பாடல் பாடுவார். அப்படி இருளில் வாழ்க்கையை உணரும் அற்புத அனுபவத்தினை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இருக்கும் ‘டயலாக் இன் த டார்க்’ உணவகம் தருகிறது. இருட்டுதான்  இந்த உணவகத்தில் ஸ்பெஷல்.

வழியில் எங்காவது பார்வையற்றவர்களைப் பார்க்க நேர்ந்தால், பொதுவெளிகளில் அவர்கள் எப்படி இயங்குகிறார்கள், இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களது இருண்ட உலகம் எப்படி இருக்கும் என்பதே நமது சிந்தனையாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் புதுவித அனுபவத்தை இந்த உணவகம் நமக்கு ஏற்படுத்தித் தருகிறது, இரவில் திடீரென பவர் கட் ஆனால் நாம் தடுமாறிப் போவோம். வெளிச்சத்தை தேடி அலைவோம்.

ஆனால் நாம் நுழையும் இடம் முற்றிலும் கும்மிருட்டாகவே இருந்தால்… துவக்கத்தில் இருந்து வெளியில் வரும்வரை பயணிக்கும் அந்த 45 நிமிடமும் கும்மிருட்டுக்குள்தான்.  ஒரு கையில் ஸ்டிக்கும், மற்றோர் கையால் பக்கவாட்டுச் சுவர்களைத் தொட்டுத் தடவியபடியும் நம்மை பயணிக்க வைக்கிறார்கள். நம்மை வழி நடத்த உடன் வழிகாட்டுபவரும் உண்டு.

இருட்டு பயம் தரும் விசயமாகவே நாம் பழகி இருக்கிறோம். ஆனால் இங்கு இருட்டில் நம்மையும் இயங்க வைத்து, பார்வையற்றோரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் புதிய அனுபவம் கிடைக்கிறது.  இருட்டில் செயல்படும் உணவகம் என்றால்,  சன்னமான ஒளி அறை எங்கும் பரவ, விதவிதமான உணவுகளைப் பறிமாறும் கேண்டில் லைட் டின்னர்களை நினைத்துப் போனால் வெரி ஸாரி.. இந்த உணவகத்தில் உணவருந்தி திரும்புவதும் கும்மிருட்டில்தான்.

உள்ளே நுழைவதற்கான அனுமதிச் சீட்டை பெற்றதும் நமது உடைமைகளை பாதுகாப்பாய் வைப்பதற்கு ஒரு லாக்கர் கீ தரப்படும். நம் பொருட்களை அதில் பாதுகாப்பாய் வைத்து பூட்டிவிட்டு சாவியை எடுத்துக் கொள்ளலாம். மொபைல் மற்றும் வெளிச்சம் தரும் எந்த பொருட்களுக்கும் உள்ளே அனுமதிஇல்லை.

அறைக்குள் நுழைவதற்கு முன்பு நமது கைகளில் பார்வையற்றோருக்கான ஸ்டிக் ஒன்று பயன்படுத்தும் வழிமுறையை விளக்கிக் கொடுக்கப்படும். கதவு திறந்ததுமே சடாரென்ற கும்மிருட்டை சந்திப்பது நிச்சயம். கைடின் வழி நடத்தலில் இருட்டில் பயணம் தொடங்கும்... முதல் சில நிமிடங்களுக்கு நாம் தடுமாறுவது உறுதி.

நம்மை அறியாமல் பதட்டமும் தடுமாற்றமும் பற்றிக்கொள்ள, பக்கவாட்டில் இருக்கும் சுவற்றை தடவியபடியே நம்மை நடக்கச் சொல்லுகிறார் வழிகாட்டுபவர். கையில் இருக்கும் ஸ்டிக்கை தட்டிப்பார்த்துக்கொண்டே இருட்டுக்குள் தடுமாறியபடியே நடப்போம்.
வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தனை விசயங்களையும் பார்வையற்றோர்,  தொட்டும், உணர்ந்தும், வாசனையை நுகர்ந்தும், ஒலிகளை வைத்தும் கண்டுபிடித்து வாழ்வது போன்றே, நமக்கும் அத்தனை உணர்வுகளையும் அங்கே ஏற்படுத்தித் தருகிறார்கள்.

நடுவே நீரோடைக்கு மேல் செல்லும் அசையும் பாலத்தின் மேல்(shaking Bridge) நம்மை நடக்க வைக்கிறார்கள். அசையும் பாலத்தில் தடுமாறி விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில், பக்கவாட்டை பிடித்துக் கொண்டே நடக்க கைடு அறிவுறுத்த.. அடுத்து அங்கிருக்கும் பூங்கா ஒன்றின் இருக்கையில்  அமர வைக்கப் படுகிறோம். அங்கு பறவைகளின் ஒலி மாறிமாறிக் கேட்கிறது. நாய் குரைக்கிறது. சலசலத்து ஓடும் ஓடையின் நீர் சத்தம் செவிகளுக்குள் விழுந்து கொண்டே இருக்கிறது.  ஒருகட்டத்திற்கு மேல் அந்த இருட்டு நமக்குப் பழக்கப்பட்டு போகிறது. அந்தப் பூங்காவில் நம்மை விளையாடவும் வைக்கிறார்கள். அடுத்ததாக உணவகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

உணவகத்தில் விருப்பத்திற்கு ஏற்ப சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகிறது. உணவு குறித்து எதுவும் நம்மிடம் சொல்லப்பட மாட்டாது. அதன் ருசி, மணம், சுவை என அனைத்தையும் இருட்டிலேயே உணர்ந்து நாம் கண்டுபிடிக்க வேண்டும். உணவு முடித்து வெளியில் வரும்போது, நமக்கு ஓர் ஆச்சர்யம் அங்கே காத்திருக்கும்.

ஆம். இந்த 45 நிமிடமும் நம்மோடு இணைந்து வலதுபக்கம் திரும்புங்க, இடது பக்கம் தொட்டுப்பாருங்க,  சைடில் சுவர் இருக்கு பிடிச்சு நடங்க.. இரண்டு ஸ்டெப் முன்னால் வாங்க… இப்போது நாம் பாலத்தில் நடக்கப் போகிறோம். இங்கு பெஞ்ச் இருக்கு உட்காருங்க என நம்மை வழிநடத்தியவர் மட்டும் எப்படி சாதாரணமாக இருட்டில் நடக்கிறார். அங்குமிங்கும் இயல்பாய் வலம் வருகிறார் என ஒரு முறையாவது நமக்கு யோசிக்கத் தோன்றும். அங்குதான் இருக்கிறது சஸ்பென்ஸ்.

நாம் வெளியில் வந்து வெளிச்சத்தை மீண்டும் பார்க்கும்போது அந்த சஸ்பென்ஸ் நமக்கு உடைகிறது. ஆம், இத்தனை நேரமும் நம்மோடு கைடாகப் பயணித்து நம்மை இருட்டில் வழிநடத்திச் சென்றவர் பார்வையற்றவர் எனத் தெரிய வர மனம் கனக்கிறது.

பார்வையற்றவர்களாய் அவர்களை பார்த்த எண்ணம் மாறி, வெளிச்சத்திற்கு நாம் பழக்கப்பட்டதுபோல், வாழ்க்கையை இருட்டில் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே நமக்கு மேலிடுகிறது. இருட்டில் நாம் இருந்தபோது நாமும் தட்டுத் தடுமாறித்தானே நின்றோம் என்ற எண்ணமும் வருகிறது.

எங்களின் வாழ்க்கை இருட்டல்ல. உங்கள் அனுதாபம் எங்களுக்குத் தேவையில்லை. எங்களின் வாழ்க்கையை உங்களை உணரவைப்பதே எங்கள் நோக்கம் என்கிறார்கள் ‘டயலாக் இன் த டார்க்’ நண்பர்கள். இதை அனுபவத்தால் மட்டுமே  உணர முடியும்.

செல்வி, வழிகாட்டி

‘‘ஆங்கில இலக்கியக்கியத்தில் எம்.ஏ.பி.எட். முடித்திருக்கிறேன். சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து பேருந்து, மின்சார ரயில், சில நேரங்களில் ஆட்டோ என்று பயணித்தே எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்வரை தினமும் வேலைக்கு வந்து செல்கிறேன்.  ‘டயலாக் இன் த டார்க்’ கான்செப்ட்டில் என்னுடன் பணியாற்றுபவர்கள் அனைவரும் பார்வையற்றோர்.

பார்வைக்குறை உடைய மாற்றுத் திறனாளர்களை மற்றவர்கள் உணர வேண்டும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். இங்கு ஒரே நேரத்தில் 30 பேர் அமர்ந்து உணவகத்தில் உணவு உண்ண முடியும். உங்களை எங்கள் இடத்திற்குள் பயணிக்க வைப்பதோடு, குழுவாய் இங்கு வரும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ரைஸ் இன் த டார்க், காஃபி இன் த
டார்க் போன்ற டாஸ்குகளை வழங்குவோம்.

இவர்களால் எப்படி படிக்க முடியும். இவர்கள் படித்து என்ன செய்யப் போகிறார்கள். இவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும். யார் வேலை தருவார்கள் என்கிற சிந்தனை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் எல்லோரையும்போல் நாங்களும் பயணிக்கிறோம். கணினி கைபேசிகளைப் பயன்படுத்துகிறோம். எக்செல், பவர் பாய்ண்ட், வேர்ட் புராஸஸிங், ஸர்சிங், மெயிலிங், டிசைனிங் என அனைத்திலும் பணி செய்கிறோம். அதற்கென எங்களுக்காக சில ஸ்கின் ரீடர் சாப்ட்வேர்கள் பயன்பாட்டில் இருக்கிறது’’ என்றார்.

ஒரு விபத்தில் பார்க்கும் திறனை இழந்த நண்பனுக்காக, 1988-ல் ஆன்ட்ரியாஸ் ஹெயின்கே என்பவரால் ஜெர்மனியில் தொடங்கப்பட்டது ‘டயலாக் இன் த டார்க்’. கடந்த 30 வருடங்களாக 41 நாடுகளில் இது இயங்கி வருகிறது.

இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் இதன் கிளைகள் இருக்கிறது. நமக்கு இந்த அனுபவத்தை ஏற்படுத்தி தருவதிலும், பார்வையற்றோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதிலும் எஸ்.வி.கிருஷ்ணன் மற்றும் சுதா கிருஷ்ணன் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.  இதுவரை இந்த அமைப்பில் 3000க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

மகேஸ்வரி நாகராஜன்

ஜி.சிவக்குமார்