ஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடுங்க!பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து வரிசையாக நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளின்னு... பொங்கல் வரை பண்டிகை திருவிழா தான். முன்பெல்லாம் பண்டிகை தினங்கள் என்றாலே வீட்டில் முறுக்குக்கு மாவு அரைப்பது, கொழுக்கட்டைக்கு அரிசி காய வைப்பது... என்ன ஸ்வீட் செய்யலாம்ன்னு ஒரு மாசம் முன்பே திட்டமிட்டு அதற்கான வேலையிலும் ஈடுபட ஆரம்பிச்சிடுவோம்.

இப்போது பெண்களும் வேலைக்கு செல்வதால், பலகாரம் செய்வதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் வீட்டில் பலகாரம் செய்வது கணிசமாக குறைந்துவிட்டது. அதற்காக பண்டிகையை பலகாரம் இல்லாமல் கொண்டாட முடியுமா? அதனால் கடைகளில் பலகாரங்களை வாங்க ஆரம்பித்தனர். அல்லது பலகாரம் செய்பவர்களிடம் ஆர்டர் கொடுப்பது வழக்கமாக மாறியது.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே ஒரு விரல் புரட்சியாக மாறி வருகிறது. பலகாரம் மற்றும் இனிப்புகள் எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதிகளை ஆப்(app)கள் வழங்கி வருகின்றன. இனி பலகாரம் வாங்க கடைக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே விரும்பும் ஸ்வீட்ஸ் மற்றும் பலகாரங்களை ஆர்டர் செய்து பண்டிகையை விமர்சியாக கொண்டாடலாம்...

ஸ்னாக் (Znack)

நீங்கள் சுவைக்க விரும்பும் ஸ்வீட் மற்றும் கேக் எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் உணவகத்தில் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் கொடுக்கும் உணவுகள் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு நேரடியாக குறிப்பிட்ட உணவகத்தில் இருந்து டெலிவரி செய்யப்படும்.நீங்கள் எங்கு இருந்தாலும் ஸ்வீட் அல்லது கேக் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உடனடியாக ஆப்பில் பதிவு செய்தால் போதும், ஸ்வீட் நீங்க இருக்கும் இடம் தேடிவரும். தென்னிந்திய இனிப்புகள் மட்டும் இல்லாமல் வட இந்திய இனிப்பு வகைகளும் இதில் உள்ளன.

மேலும் இதில் பதிவு செய்வது எளிது. முதலில் உங்களின் செல்போனில் ஸ்னாக் ஆப்பினை டவுண்லோட் செய்யுங்க. அதன் பிறகு விரும்பும் ஸ்வீட்களை ஆர்டர் கொடுங்க. மேலும் டெலிவரி செய்ய வருபவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதையும் நீங்கள் உங்கள் செல்போன் மூலம் டிராக் செய்யும் வசதியும் உண்டு.

இதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம் அல்லது நேரடியாக பணமாகவும் கொடுக்கலாம்.
சென்னை மற்றும் பெங்களூரில் மட்டும் ஸ்னாக் இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண்டிகை நாட்களில் மட்டும் இல்லாமல், பிறந்தநாள், திருமணநாள் என சர்ப்ரைஸ் கேக்கும் ஆர்டர் செய்யலாம்.

ஓம் ஸ்வீட்ஸ் (Om Sweets)

தோடா, லட்டு, முந்திரி பர்ஃபி, மில்க் ஸ்வீட்ஸ் மட்டும் இல்லாமல் சமோசா, கச்சோரி, ஆலு டிக்கி போன்ற ஸ்னாக்ஸ் உணவுகளும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இவர்கள் தற்போது தில்லி, குர்கான், பரிதாபாத் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறார்கள். ஆன்லைனில் விரும்பிய இனிப்புகளை ஆர்டர் செய்து, உங்களின் பண்டிகையை கொண்டாடுங்கள்.

முதலில் ஆப்பினை செல்போனில் டவுண்லோட் செய்யவும். அதன் பிறகு உங்களின் செல்போன் எண்ணை இணைக்கவும். அடுத்த நிமிடம் ஓம் ஸ்வீட்சில் உள்ள எல்லா இனிப்புகள் மற்றும் உணவுகள் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்படும். உணவுகளை ஆர்டர் செய்த பிறகு அவை எங்குள்ளன என்பதை டிராக் செய்யும் வசதியும் உண்டு. அது மட்டுமில்லை இதில் உள்ள புதிய உணவுகள் பற்றிய குறிப்பும் அவ்வப்போது தெரிவிக்கப்படும். விரும்பிய உணவுகளை வீட்டில் வந்து தான் தரவேண்டும் என்றில்லை.

உங்கள் வீட்டின் அருகில் அதற்கான டெலிவரி பாய்ன்ட் இருந்தால், நீங்க அங்கு சென்றும் பெற்றுக் கொள்ளலாம். கட்டணத்தை டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் அல்லது நேரடியாக பணமாகவும் கொடுக்கலாம். மேலும் உங்களுக்கு எந்த தேதியில் உணவுகளை சப்ளை செய்ய வேண்டுமோ அந்த தேதியினை முன்பே குறிப்பிட்டு அதற்கு ஏற்ப ஆர்டர் செய்யலாம். விசேஷ நாட்களில் மொத்தமாகவும் ஆர்டர் செய்யலாம்.

ஸ்வீட்! சோ ஸ்வீட் (Sweet So Sweet)

இனிப்புகளை சுவைக்க நமக்கு நாள் கிழமை எல்லாம் தேவையில்லை. ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடன் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். நினைக்கும் போது உங்கள் இடம் தேடி வந்து இனிப்புகளை வழங்கும் ஆப் தான் ஸ்வீட் சோ ஸ்வீட்.

இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் இனிப்பு வகைகள் எல்லாம் இதில் அடக்கம். அதேபோல் இந்தியாவில் எந்த மூலையில் இருந்து ஆர்டர் கொடுத்தாலும் இவர்கள் உங்கள் இல்லத்திற்கே வந்து இனிப்புகளை சப்ளை செய்வார்கள். இனி ஸ்வீட் சாப்பிட கடைக்கு தான் போக வேண்டும் என்றில்லை.எப்போது வேண்டும் என்றாலும் உங்கள் அன்பு நெஞ்சங்களுடன் இனிப்பினை பகிர்ந்து கொள்ளலாம்.

24 கேரட் ஸ்வீட்ஸ் (24 Karat Sweets)

மிகவும் பழமையான மற்றும் பாரம்பரிய
இனிப்புகளை மட்டுமே வழங்கும் இனிப்பகம். 83 வருடங்களாக சூரத்தில் செயல்பட்டு வரும் இந்த இனிப்பகம் தற்போது ஆன்லைனில் தங்களின் விற்பனையை துவங்கியுள்ளனர்.இவர்களின் ஸ்பெஷாலிட்டியே தங்க இலை இனிப்புகள்தான். பொதுவாக எல்லா ஸ்வீட்களிலும் வெள்ளி பாயில்கள் ஒட்டப்பட்டு இருக்கும். இதை பார்க்கும் போதே அந்த இனிப்பினை சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும்.

அதே போல் இவர்களின் ஸ்பெஷல் தங்க நிற பாயில். அதுவும் சுத்தமான நாம் சாப்பிடக் கூடிய 24 கேரட் தங்க பாயில் என்பதுதான் அதன் தனித்துவம். இந்த மேஜிக்கல் இனிப்பினை கல்யாணம், பிறந்த நாள், சீமந்தம் மற்றும் ரக்ஷாபந்தன் போன்ற விசேஷ நாட்களில் அளித்து மகிழலாம். தங்க பாயில் என்பதால் இதன் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் மக்கள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சூரத்தில் மட்டுமே செயல்பட்டு வரும் 24 கேரட் ஸ்வீட்ஸ் இனிப்பகம் தற்போதுதேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆன்லைனில் தங்களின் விற்பனையை துவங்கிஉள்ளது. 24 கேரட்ஸ் ஸ்வீட்ஸ் என்ற ஆப்பினை உங்களின் செல்போனில் டவுண்லோட் செய்யுங்கள் தரம் வாய்ந்த இனிப்புகளை சுவையுங்கள்.

ஆஷா ஸ்வீட் சென்டர் (Asha Sweet Centre)

ஆஷா ஸ்வீட் சென்டர் பெங்களூரின் மிகவும் ஃபேமசான இனிப்பகம். 1951ம் ஆண்டு காந்தா பிரசாத்ஜி கர்க் என்பவரால் துவங்கப்பட்டது. இந்தியா முழுக்க பயணம் செய்த இவர் இறுதியாக பெங்களூரில் இனிப்பகத்தை துவங்கினார். 1971ம் ஆண்டு காந்தா பிரசாத்ஜி அவரின் மகன் நரேந்திரகுமார் அப்பாவுடன் இணைந்து கடையினை மேலும் விரிவாக்கம் செய்தனர்.

இனிப்பு துறையை பற்றி மேலும் ஆய்வு செய்த நரேந்திரகுமார் அதில் உள்ள நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டார். மேலும் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்று அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட துவங்கினார். 1980 முதல் இவர்களின் இனிப்பகம் பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் முதல் இடத்தை பிடித்தது. நரேந்திரகுமாரை தொடர்ந்து அவரின் மகன் மயூர் கர்க், இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றார்.

அதுதான் ஆல்லைன் விற்பனை. தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தை இவர் தனக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கியுள்ளார். இப்போது பல வகையான பெங்காலி இனிப்புகள், கோவா இனிப்புகள், உலர்ந்த பழ இனிப்புகள்... என அனைத்தும் நியாயமான விலையில் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளன. ஆஷா ஸ்வீட் சென்டர் ஆப்பினை ஆன்லைனில் டவுண்லோட் செய்து மனதுக்கு பிடித்த இனிப்புகளை சுவைத்து மகிழுங்கள்.

ராஜா ஸ்வீட்ஸ் ராஜபாளையம் (Raja Sweets Rajapalayam)

தமிழ்நாட்டின் சிறந்த மற்றும் சுவையான ஆன்லைன் இனிப்பு என்றால் ராஜா ஸ்வீட்ஸ் தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால், நேரடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படும். தமிழ்நாட்டின் முதல் சிறந்த பத்து இனிப்பு ஆன்லைன் கடைகளில் ராஜா ஸ்வீட்சும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டர் செய்வதும் எளிது. மற்ற ஆப்கள் போல் முதலில் உங்க செல்போனில் டவுண்லோட் செய்யவும்.

பிறகு உங்களின் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். ஒரு முறை பதிவு செய்த பிறகு இந்த ஆப்பில் உள்ள அனைத்து இனிப்பு வகைகள் குறித்த விவரங்கள் விலையுடன் பட்டியலிடப்படும். பிறகு உங்களுக்கு விருப்பமான பலகாரங்களை ஆர்டர் செய்யலாம்.