வாய்ப்புண்ணை அலட்சியம் செய்யாதீர்!



நம்முடைய முகத்தில் பிரதானமாக இருப்பது வாய். உணவு சாப்பிடுவதற்கு, பேசுவதற்கு மட்டுமில்லை, அதன் மூலம் ஒருவருக்கு நோய் ெதாற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒவ்வொருவரும் வாயினை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடலில் நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் பல் மருத்துவர் லோகேஸ்வரி. போரூர், மதனந்தபுரத்தில் பல் மருத்துவமனையை நிர்வகித்து வரும் இவர் வாயில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் நோய்கள் குறித்து விவரித்தார்.

உடலின் நுழைவாயில் வாய் என்கிறீர்களே எப்படி?

மனிதர்கள் உடல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை வாயில் ஏற்படும் சில அறிகுறிகள் மூலம் அறியமுடியும். இதனால் தான் அதனை உடலின் நுழைவாயில் என்கிறோம். வாய்ப்புண் கூட உடலில் நோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். நம் வாயில் 2 வாரத்துக்கு மேல் வாய்ப்புண் இருந்தால் அலட்சியம் செய்யக்கூடாது. உடனே பல்மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

பற்களில்  ஏற்படும் பிரச்னைகள் என்ன?

பல் சொத்தை, ஈறுகளில் பிரச்னை, பல் மற்றும் தாடை சீரின்றியிருத்தல், வாய்ப்புற்று என பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தளவு சொத்தை பற்களை  ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது. இதன் மூலம் பல்வலியை தவிர்க்கலாம். நவீன பல்வேர் சிகிச்சை மூலமும்  எளிதில் தீர்வு பெறலாம்.

பல்லை எப்படி பராமரிக்க வேண்டும்?

காலை இரவு என தினமும் 2 முறை பல் துலக்குவது நல்லது. குறிப்பாக குழந்தைகள் சாக்லேட் போன்ற பல்லில் ஒட்டும் பொருட்களை தின்பதால் இரவில் பல் துலக்குவது நல்லது.பல்லை மேலிருந்து கீழாக துலக்க வேண்டும். அதே நேரம் பற்களின் அனைத்து பகுதிகளிலும் படும்படி 3 முதல் 4 நிமிடங்கள் துலக்கினால் போதும்.

தினமும் தூங்க செல்லும் முன் வாயை கழுவிவிட்டு படுக்கைக்கு செல்லவேண்டும். பல் துலக்கும் பிரஷ்ஷினால் அதிக அழுத்தம் கொடுத்தோ, நீண்டநேரம் பல்லை துலக்குவதோ அவசியமற்றது. பல்லில் எந்த பிரச்னை இல்லை என்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை பல் டாக்டரிடம் சென்று பல்லை சோதனை செய்வது அவசியம்.

வாய்ப்புற்றுக்கான காரணம் என்ன?

புகையிலை மற்றும் பீடி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை எந்த முறையில் பயன்படுத்தினாலும் அது வாயில் பல தீங்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. பற்கள் கன்னத்தை குத்திக்கொண்டு இருந்தால் அது வாய்ப்புற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். நாம் தான் வெற்றிலை புகையிலை போடுவதில்லையே நமக்கு ஏன் வருகிறது என சிலர் அலட்சியமாக இருக்கிறார்கள். யாருக்கு வேண்டும் என்றாலும் வாய்ப்புற்று வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த பற்கள் அல்லது தெற்றுப்பல்லை எப்படி சரி
செய்யலாம்?
பற்களில் கிளிப் மாட்டிக்கொள்வதன் மூலம் இதை சரி செய்யலாம். இதற்கு சரியான வயது 12 முதல் 13 வயது தான். பெரியவர்களும் கூட கிளிப் மாட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் தங்களது முகத்தை அழகாக்கி கொள்ளலாம். சின்ன வயதில் போதுமான வசதி இல்லாததால் தனது தெற்று பல்லை சீராக்க முடியாத நிலையில் இருந்தவர்கள் தற்போது சீரமைக்க முன்வருகிறார்கள். கிளிப் மாட்டுவது பல் அழகுக்கு மட்டுமல்ல, பல் ஈறுகளில் உள்ள பிரச்னையை குறைக்கும்

பற்களில் காஸ்மடிக் சிகிச்சை செய்யலாமா?

நிச்சயமாக, மேல்தாடையை விட கீழ் தாடை பெரியதாக இருந்தால் அதை சரி செய்ய கிளிப் இருக்கிறது இந்த பிரச்னை உள்ளவர்கள் 9 வயதுக்குள் சரி செய்து கொள்வது சுலபம். உடைந்த பல்லை சீரமைத்தல், பல்லில் ஏற்பட்டுள்ள கறையை நீக்குதல், வேர் சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல், பற்களில் கிளிப் போடுதல் போன்றவை இதில் அடங்கும்.

பல் இல்லாவிட்டால் உடம்பில் என்ன பிரச்னை ஏற்படும்?

பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனிமியா என்ற ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. எனவே வயதாகிவிட்டதே பல் விழுந்தால் விழட்டும் என அலட்சியம் செய்யாமல் பல் செட்டை பொருத்திக் கொள்ளலாம் அல்லது புதிதாக பற்களை கட்டிக்கொள்ளலாம். அப்போது வயதானவர்கள் போதுமான ஊட்டச்சத்து உள்ள காய்கறி உணவுகளை கடித்து தின்ன முடியும். இதனால் ரத்த சோகை நோய் ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் உணவு செரிமான பிரச்னையும் ஏற்படாது’’ என்றார் பல் நிபுணர் டாக்டர் லோகேஸ்வரி.

கோமதி பாஸ்கரன்