கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... இயற்கை மருத்துவர் உஷாரவிவாழ்வென்பது பெருங்கனவு!

வெற்று காகிதங்கள் ஓவியமாகிவிடாது. அதில் எளிதாக ஒரு கோடு போட்டால் நல்ல ஓவியனின் பார்வையில் அந்தக் கோடும் ஒரு ஓவியமே! கடந்த 28 ஆண்டுகளாக பல வண்ணங்களில் வரையப்பட்ட ஓவியமாக இயற்கை முறை மருத்துவத்துறையில் சாதித்து வரும் பேராசிரியை டாக்டர் உஷாரவி தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்…

‘‘மதுரை மாவட்டம், தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் புதுப்பட்டியில் பிறந்தேன். அப்பா விமானப்படையில் தனது 17 வயதில் பயிற்றுநராகச் சேர்ந்து இரண்டு போர்களில் பங்கேற்றதோடு, மூன்று முறை ஸ்டார் விருதும் பெற்றுள்ளார். விமானப்படையில் சார்ஜென்டாக இருந்து விருப்ப ஓய்வுபெற்று பின்னர் இந்திய ரயில்வேயில் சி.பி.எஸ்.ஆராக பணியாற்றி ஓய்வுபெற்றார். இவ்வாறு பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றியதால் நான் பிறந்த 13வது நாளிலேயே கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டோம்.

இந்தியாவில் அநேக பகுதிகளில் எனது பள்ளிப் படிப்பை படிக்க வேண்டியிருந்தது. கடைசியாக திருச்சியில் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். அடுத்து தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பார்மஸி படிப்பை முடித்தேன். சிறு வயது முதலே நாம் ஒரு மருத்துவராகிவிட வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.

ஆனால் அந்த நேரத்தில் மாற்றுமுறை மருத்துவம் அதாவது, இயற்கை மருத்துவம் குறித்து அவ்வளவாக பிரபலமடையாத காலகட்டத்திலேயே அந்த மருத்துவத்தின் மீது ஒரு நாட்டம் இருந்தது. அக்குபங்சர் துறையில் உலக அளவில் பேராசிரியர் ஆண்டன் ஜெயசூர்யா மிகவும் பிரபலமானவர். ஆனால், அவர் ஒரு அலோபதி மருத்துவர். அவரது கருத்தரங்கில் சென்னையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது.

அதன் பிறகு எனக்கு அக்குபங்சர் சிகிச்சை மேல் ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. இதுவும் ஒரு மருத்துவமுறை, அதை நம் நாட்டில் இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வத்தில் இலங்கை மற்றும் சீனாவிற்கு சென்று அங்கு அக்குபங்சரை பயின்றேன். அதனை தொடர்ந்து பாண்டிச்சேரி அரசு சமுதாயக் கல்லூரியில் யோகா நேச்ரோபதி பட்டய பயிற்சியினையும் முடித்தேன்.

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த அரோமாதெரபி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் பிலப்பென்னிடம் நேரடியாக சென்று அரோமாதெரபியையும் பயின்றேன். தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பிஎன்ஒய்எஸ் (BNYS) ஐந்தரை ஆண்டு பட்ட படிப்பையும் முடித்தேன்’’ என்றவர் 20க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் மருத்துவ ஆய்வுக் கட்டுரையினை சமர்ப்பித்து விருதும், பாராட்டும் பெற்றுள்ளார். 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 500-க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டுரைகள் எழுதியுள்ளார். 2000ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அக்குபங்சர் கருத்தரங்கில் இவரின் ஆய்வுக் கட்டுரையான பை-பாஸ் (BAY PASS) அக்குபங்சர் என்ற கட்டுரை சிறப்பு பாராட்டும், விருதும் பெற்றது.

‘‘சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களில் பலருக்கு அந்த அறுவை சிகிச்சைக்கு பின் உடலளவில் சில உபாதைகள் ஏற்படும். காரணம் சிசேரியன் போது அக்குபங்சர் தியரிபடி ரென் உயிர் சக்தி ஓட்டத்தை துண்டிக்கப்படும். அதனை அக்குபங்சர் சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து தடைபட்ட உயிர் சக்தி ஓட்டத்தை சீராக்கும் முறை தான் பை-பாஸ் அக்குபங்சர்.

இயற்கை மருத்துவம் குறித்து நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என்பதால் பல பள்ளிகளுக்குச் சென்று அக்குபிரஷர் குறித்து விவரித்து வருகிறேன். அதாவது திடீரென ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாலோ அல்லது வலிப்பு ஏற்பட்டாலோ அந்த நேரத்தில் நம்மிடம் எந்த ஒரு மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றாலும் பதட்டப்பட தேவையில்லை. கட்டை விரலைக் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசரகால சிகிச்சை குறித்து கற்றுக்கொடுத்து வருகிறேன். இதனை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளிலும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மருந்தே இல்லாமல் எளிய முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

என்னுடைய நோக்கம், நோய்கள் வந்த பிறகு அதற்கு வைத்தியம் பார்க்காமல் நோய்கள் வராமல் காப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? அதற்கு நம்முடைய கைவிரல்களிலேயே சிகிச்சை முறைகள் உள்ளன. அதாவது நம்முடைய கை விரல்களால் சில இடங்களில் அழுத்தம் கொடுத்தால் நம் உடலினை நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நோய் வந்துவிட்டாலும் எந்தவிதமான ரசாயனமும் இல்லாமல் நம் உடலை இயற்கை மருந்துகள் மூலம் சரிசெய்யலாம். எல்லாராலும் எல்லாம் முடியாது, நம்மால் என்ன முடியுமோ அதை முடிந்த அளவுக்கு செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த விசயங்களை என்னால் முடிந்த அளவுக்கு செய்து வருகிறேன். ஒருபக்கம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சேவைப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறேன்’’ என்றவர் இரண்டு மருத்துவ முறைகளை இணைந்து செயல்படுத்தினால் நல்லதொரு பலன் கிடைக்க வாய்ப்புள்ளதை அறிந்து அதனை பின்பற்றி வருகிறார்.  

‘‘இப்போது ஒரு சிலர் இயற்கை மருத்துவத்திற்கு மாறிவருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்றால் அது பற்றிய முழு விவரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இயற்கை மருத்துவம் என்பது பஞ்சபூத சக்திகளோடு இணைந்து செய்கின்ற மருத்துவம். அதனுள்ளே அக்குபங்சர், அக்குபிரஷர், அரோமோதெரபி, காந்த சிகிச்சை, கற்களைக்கொண்டு சிகிச்சை அளிப்பது, மூலிகைகளைக் கொண்டு செய்வது, எண்ணெய்த் தேய்த்தல் என 14 வகையான வைத்தியமுறைகள் அடங்கியுள்ளன.

இந்த வைத்திய முறையில் சாதாரண சளியில் தொடங்கி குழந்தையில்லாத தம்பதிகள் என அனைத்து பிரச்னைக்கும் அவரவர் உடலில் உள்ள குறைபாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கலாம். வெளிநாடுகளிலும் பெரும்பாலானவர்கள் இயற்கை மருத்துவத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். உடலை கஷ்டப்படுத்தாமல் சிகிச்சை அளிக்கக்கூடியது என்றால் அது இயற்கை மருத்துவம்தான். எனது கணவர் ரவியும், பாரம்பரிய மூலிகை ஆய்வாளர். சுமார் 500க்கும் மேற்பட்ட மூலிகை உணவுகளில் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறார்.

இயற்கையோடு ஒன்றியதுதான் நமது வாழ்க்கை முறை. எனவே இயற்கை மருத்துவத்திற்கு மதிப்பளித்தால் மக்கள் நலமாக வாழ்வார்கள். அதைச் செயல்
படுத்துவதே எனது லட்சியமாக இருக்கிறது’’ என்று இயற்கையின் நேசிப்போடு பேசி முடித்தார் டாக்டர் உஷாரவி.

தோ.திருத்துவராஜ்