அந்த 38 நிமிடங்கள்!



சுவிட்சர்லாந்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பி.வி.சிந்து. இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒகுஹாராவிடம் மோதினார். போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நஸோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து.

விளையாட்டில் ஒரு வெற்றி என்பது வெறும் உடல் வலிமையால் மட்டும் கிடைப்பதல்ல. மனம், அறிவு, வேகம் என அனைத்தும் ஒருமித்த பயிற்சிக்கு கீழ்படிந்து செயல்பட வேண்டும். ஒழுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்து இயங்கும் ஒரு சக்தி தான் ஆட்டத்தை தன் கட்டுக்குள் அடக்கும் ஆற்றலையும் கொடுக்க முடியும். இவையனைத்தும், பி.வி. சிந்துவை வெற்றி பாதையை  நோக்கி அழைத்து சென்றிருக்கிறது.

சிந்துவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் யார்? வேற யாரும் காரணமில்லை. அவரை எதிர்த்து போட்டியிட்ட நஸோமி ஒகுஹாரா தான். ஒகுஹாரா, சிந்துவை பல நாட்கள் தூங்க விடாமல் செய்தவர். சிந்துவின் திறமையை கடந்த இரண்டு வருடங்களாக சீண்டிப் பார்த்தவர் என்று சொல்லலாம். அந்த சீண்டல்தான், சிந்துவை ஓய்வின்றி பயிற்சியில் ஈடுபட வைத்து வெற்றி மாலை சூட வைத்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் போட்டியில், ஒகுஹாரா - சிந்து இருவரும் களத்தில் இறங்கி விளையாடினர். காவியமாக கொண்டாடப்படும் அந்த விளையாட்டு, 110 நிமிடங்கள் வரை சென்றது.

இருவரும் போட்டியை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் கடைசி ெசாட்டு சக்தி இருக்கும் வரை போராடினர். பேட்மிண்டன் விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய போர்களில் ஒன்றாக இன்றும் அந்த ஆட்டம் கருதப்படுகிறது. இறுதியில் தங்கத்தை வென்ற ஒகுஹாரா, அன்று முதல் சிந்துவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கத் தொடங்கினார்.

தற்போது கிடைத்த வெற்றியைக் குறிப்பிடும் சிந்து, “சென்றாண்டு இறுதிப் போட்டியில் நான் தோற்றேன், அதற்கு முந்தைய இறுதிப் போட்டியிலும் என்னால் வெற்றி பெற முடியவில்லை.

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பயிற்சி எடுத்தேன். இந்த வெற்றி என் பேட்மிண்டன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது’’ என்றார்.சிந்து இந்த வெற்றியின் மூலம், அவரை மனதளவில் ஆதிக்கம் செய்து ஆட்டிப்படைத்த தோல்வி என்ற பேயை விரட்டிவிட்டார் என்றே கூறலாம்.

அன்னம் அரசு