சக்தி தரிசனம் -ஆவினம் பெருக்குவாள் பால்வளநாயகி



பசுபதி கோவில்

கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில் இது. காமதேனு எனும் பசுவானவள் பதியான ஈசனை நோக்கி தவமிருந்த தலம். பசுவால் கண்டறியப்பட்ட தலங்களும், அதே நேரத்தில் ஒரு பசு பால் சொரிந்து ஈசனுடைய திருமேனியை வெளிப்படுத்திய தலங்கள் என்று நிறைய உண்டு.
அதுபோல இங்கு எழுந்தருளியிருந்த ஈசனுக்கு பாலாபிஷேகம் புரிந்து சிவதரிசனம் பெற்றது. பசு பூஜித்தல் என்பதே சகல தேவர்களும் அவற்றுள் நின்று பூஜித்தமைக்கு இணையாகும். இத்தல அம்பாளின் திருப்பெயர் பால்வளநாயகி என்பதாகும். மேலும், அகத்தியரால் வழிபடப்பட்ட தலமாகும்.

ஒவ்வொரு தலங்களாக தரிசித்தும், சிவச் சின்னங்களின் வெளிப்புற மற்றும் அவை உணர்த்தும் சக்திகளின் பிரமாண்ட தரிசனங்களை பெற்றும் இத்தலத்திற்கு வந்தாள். பாற்கடலுக்குள் வந்து விட்டதாக உணர்ந்தாள். பால் மணமும் ஈசனின் அருள் மணமும் அவளை உருக வைத்தது. பசு எனும் உயிர்களுக்கெல்லாம் பதியான ஈசனின் எதிரில் அமர்ந்தாள்.

ஒவ்வொரு தரிசனமாகப்பெற்றவள் இத்தலத்தின் ஈசன் நாதங்களின் ஆதிநாதத்தை கேட்டாள். அந்த உடுக்கை எனும் டமருகத்திலிருந்து பிரணவமான ஓம் எனும் நாதம் அகில உலகையும் அணைப்பதை கண்டாள். ஓம் எனும் பிரணவத்திலிருந்து சப்த பிரபஞ்சம் உருவாவதை அறிந்தாள். அதுவே சகல ஓசைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பதை அறிந்தாள்.

சப்த பிரபஞ்சமாக அதே ஓம் உடுக்கையிலிருந்து அலை அலையாக வெளிப்படுவதை புறச் செவி வழியாயும், அகச் செவி மூலமும் உணர்ந்தாள். ஒலியின் ஆதாரமும் ஈசன்தான் என்று அறிந்து உடுக்கையை கைகூப்பித் தொழுதாள். உடுக்கையே அகில உலகையும் படைப்பதையும் புரிந்து கொண்டாள். சப்தங்களிலிருந்துதான் வேதங்கள்... அந்த வேத சப்தங்களிலிருந்துதான் உலக உற்பத்தி என்பதை அந்த கணமே அறிந்தாள். அடுத்த தலம் நோக்கி நகர்ந்தாள்.

சப்த மாதர்களில் வாராஹி வழிபட்ட தலம் இது. வேத தர்மங்களை காப்பதற்காக வராஹர் எப்படி பூமியை அசுரனிடமிருந்து தூக்கி நிறுத்தினாரோ அதேபோல இங்கு மகாகாளி அசுரர்களை அழிப்பதற்காக எடுத்த அவதாரங்களின்போது வராஹரிடமிருந்து இவள் வாராஹியாக வெளிப்பட்டாள். அந்த வாராஹியே இத்தல பசுபதிநாதரை வழிபட்டாள்.

அநவித்யநாதசர்மா தம்பதி பசுபதிநாதரையும், பால்வளநாயகியையும் கண்குளிர தரிசிக்கும்போது அரிவை எனும் தாய்ப்பருவத்தில் காட்சி தந்தாள். அகத்தியர் தரிசித்த கோயில்கள் பொதுவாகவே சிவசக்தி திருமண கோயில்களாகவே இருக்கும்.

இங்கே அநவித்யசர்மா தரிசிக்கும்போது தாயாக இருந்தாள் என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும். இக்கோயிலில் உள்ள உச்சிஷ்ட கணபதியையும், கன்னி மூலையில் உள்ள ஜேஷ்டா தேவியையும் தரிசிப்பது அவசியமாகும். தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் பாபநாசத்தை அடுத்து இத்தலம் அமைந்துள்ளது.

கிருஷ்ணா