நியூஸ் பைட்ஸ்



கேரளாவில் பெண் ஓட்டுனர்கள்

இந்தியாவிலேயே முதல் முறையாக, கேரள அரசு, தன் அரசு அலுவலகங்களிலும், பிற பொதுத் துறை பிரிவுகளிலும், பெண் ஓட்டுனர்களை பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. பெண்கள் பல துறைகளில் முன்னேற வருகிறார்கள். ஏன் சிலர் அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனராகவும் தங்களின் பணியினை ஆற்றி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கேரள அரசு, அரசு அலுவலகங்களில் உள்ள வாகன ஓட்டுனராக பெண்களை நியமனம் செய்ய உள்ளது. இதையடுத்து, பெண்களுக்கு முறையான வண்டி பயிற்சியும் அளிக்கப்பட்டு, சோதனைகளுக்கு பின் வேலையில் நியமிக்கப்படுவர் என்று அறிவிப்பு வெளியிட்டது.

மோட்டர் ஸ்போர்ட்ஸில் உலக சாம்பியன்

மோட்டர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் மோட்டார்சைக்கிள் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை போட்டியில், பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிஸ்ஸே முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு ஹங்கேரியில் நடைப்பெற்றது. இதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரீட்டா என்பவரை நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில், 65 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தன் வசம் தக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இந்த மோட்டர் சைக்கிள் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் 23 வயதே நிரம்பிய ஐஸ்வர்யாவைதான் சேரும்.

ஒடிசாவில் பெண்களுக்கான அஞ்சல் நிலையம்!

ஒடிசாவில் முதல் முறையாக அனைத்து மகளிர் தபால் நிலையம், சம்பல்பூர் நகரில் திறக்கப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தபால் நிலையத்தில், பணியில் அமர்த்தப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் பெண்கள். அதாவது, இந்த தபால் நிலையம், தற்போது பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றும் அலுவலகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் அன்று 17 போஸ்ட் பேமண்ட் வங்கி கணக்குகள் திறக்கப்பட்டன.
அந்த 17 வங்கி கணக்குகளும் பெண்களுடையதே என்பதும் குறிப்பிடத்தக்கது.

12 வயது சிறுமியின் இலவச நூலகம்!

கேரள மாநிலம் கொச்சியில் வசிக்கும் 12 வயது சிறுமி யசோதா. இவர் தன் வீட்டின் மேற் தளத்தை இலவச நூலகமா மாற்றியிருக்கிறார். நூலகங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், ஏழை மக்களுக்கு எப்படி கட்டுப்படியாகும் என்று, தன் தந்தையிடம் ஆதங்கப்பட்டுள்ளார் யசோதா. அவரின் மனக்குமுறலை போக்க அவரின் தந்தை முகநூல் மூலமாக தன் நண்பர்களிடம் யசோதாவின் இலவச நூலகத்துக்காக புத்தகங்கள் அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளார். இப்போது 3500க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், யசோதா நூலகம் ஆங்கிலம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் எனப் பல மொழி நூல்களுடன் நிறைந்திருக்கிறது.

புல்லட் ப்ரூஃப் பைகள்

அமெரிக்காவில் பள்ளிகளில் தொடர் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுவது நமக்கு தெரிந்ததே, ஆனால் இந்த முறை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் குண்டுகள் துளைக்காத புல்லட் ப்ரூஃப் பைகளை கொடுத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் 200% விற்பனை வளர்ச்சியை இந்த பைகள் எட்டியிருக்கிறது. கடைகள் எங்கும் இந்த புல்லட் ப்ரூஃப் பைகள் தொங்கவிட்டிருப்பதை பார்த்து, மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

லிவ்வின் உறவில் ஆண் மேல் குற்றம் செலுத்த முடியாது

பெற்றோர்களால் பார்த்து நிச்wசயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், பார்க்காமலே திருமணம், ஃபேஸ்புக் திருமணம் என ஒரு உறவினை அமைக்க பல திருமணங்கள் பார்த்து நம்முடைய தலைமுறைக்கு சலித்துவிட்டது. அதனால் லிவ்வின் என்ற கான்செப்ட்டை அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த உறவு திருமணத்தில் தான் முடியும் என்று நிச்சயமாக சொல்லிட முடியாது.

அது தெரிந்தே தான் அவள் அந்த ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வாள். இவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு உறவு முறைகளும் நிச்சயிக்கப்பட்டு இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ஆண் தன்னை  வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக கூறி, அவன் மீது குற்றம் செலுத்த முடியாது என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

ஸ்வேதா கண்ணன்