மரங்களுக்காக அழுத சிறுமிக்கு மகத்தான பொறுப்பு!



மணிப்பூர் மாநிலம், இம்பால் அருகே உள்ள நகரம் காக்சிங். கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அப்பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள மரங்கள் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்டது.
அந்த இடத்தில் இளங்பம் பிரேம்குமார் சிங் என்பவரின் 10 வயது மகள் இளங்பம் வேலன்டினா தேவி இரண்டு குல்முகுர் மரங்களை வளர்த்து வந்துள்ளாள். அவளுக்கு அந்த மரங்கள் என்றால் கொள்ளை உயிர். தினமும் பள்ளி விட்டு வந்ததும் அந்த மரங்களுடன் விளையாடிவிட்டு தான் வேறு வேலைப் பார்ப்பாள்.

வேலன்டினா ஆசையாக வளர்த்த அந்த இரண்டு மரங்களை தான் சாலை விரிவாக்கப்பணிக்காக அரசு உத்தரவின் பேரில் வெட்டப்பட்டது. உத்தரவு வந்ததும், வேலன்டினா மரங்களை வெட்டக்கூடாதுன்னு தடுத்தாள்.

ஆனால் யாரும் அவளின் வார்த்தையை பொருட்படுத்தவில்லை. வெட்டி சாய்த்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தான் ஆசையாய் வளர்த்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதை கண்டு கதறி அழுதாள்.

இதை வீடியோவாக எடுத்த ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். மரங்கள் வெட்டப்பட்டதை கண்டு கண்ணீர் விட்டு கதறிய சிறுமி என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோ முதல்வர் நாங்தாம்பம் பைரன் பார்வைக்கும் சென்றுள்ளது.

மரங்களை வெட்டியதற்காக கண்ணீர் விட்டு அழும் இந்த சிறுமியை விட மணிப்பூர் பசுமை இயக்கத்துக்கு சிறந்த தூதராக யாரையும் நியமிக்க முடியாது என்று கருதினார். இதையடுத்து உடனடியாக வேலன்டினா தேவியை பசுமை இயக்கத்துக்கு  தூதராக நியமித்தார்.

இது தொடர்பாக முதல்வர் நாங்தாம்பம் பைரன் அளித்த பேட்டியில், ‘`தான் வளர்த்த மரங்கள் வெட்டப்படுவதை பார்த்து அழும் அந்த சிறுமியின் வீடியோவைப் பார்த்தேன். மரங்கள் வெட்டும்போது பெரியவர்கள்கூட கவலைப்படாத நிலையில் சிறுமி அழுதது என்னை மிகவும் பாதித்தது. உடனடியாக இம்பால் மாவட்ட போலீஸ் எஸ்.பி. யெங்கோம் விக்டோரியாவை அழைத்து சிறுமி வேலன்டினா தேவியிடம் 20 மரக்கன்றுகளை கொடுத்து அதை நடுவதற்கு தகுந்த இடத்தை அளிக்க சொல்லி உத்தரவிட்டேன்.

பசுமை மணிப்பூர் இயக்கத்தின் சிறப்பு தூதராக மரங்களை நேசிக்கும் இந்த சிறுமியைத் தவிர வேறுயாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்று முடிவு செய்தேன். சின்னஞ் சிறு வயதிலேயே மரங்கள் மீது அன்பாக  இருக்கும் இந்த சிறுமியை மாநில தூதராக நியமித்தேன்” என்றார். இந்த உத்தரவையும், அந்த சிறுமி கண்ணீர் விட்டு அழும் காட்சியையும் மணிப்பூர் முதல்வர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பசுமையை ஊக்குவிக்கும் மணிப்பூர் அரசின் அனைத்து விளம்பரங்கள், பிரச்சாரங்களிலும் இனிமேல் வேலன்டினா தேவியின் புகைப்படம்தான் இடம்பெறும். அரசு மரம் நடு விழாக்கள், வி.ஐ.பிக்கள் மரம் நடுவிழாக்கள், உலக சுற்றுச்சூழல் தினம் ஆகியவற்றுக்கும் தூதராக வேலன்டினா தேவி இருப்பார்.ஒரு ஆண்டுக்கு வேலன்டினா தேவி இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசு நிர்ணயித்தபடி ஊதியம், விழாக்களில் பங்கேற்க போக்குவரத்துச் செலவு, உணவு தங்குமிடம் ஆகியவை அளிக்கப்படும். என்ஜாய் வேலன்டினா.

கோமதி பாஸ்கரன்