நித்தம் நித்தம் பழைய சோறு... மணக்கும் தேங்காய் துவையல்!நடிகை கன்னிகா

‘‘நான் சாப்பாட்டு பிரியை. சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் ரசிச்சு ருசிச்சு தான் நான் சாப்பிடுவேன்’’ என்கிறார் நடிகை கன்னிகா. தேவராட்டம் மற்றும் சாட்டை 2 படத்தில் நடித்திருக்கும் கன்னிகாவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை. சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தவர், நடிப்பதில் மட்டும் இல்லை சிலம்பம் சுற்றுவதிலும் கைதேர்ந்தவர். இவருக்கு எப்படி சாப்பிட பிடிக்குமோ அதே போல் சமைக்கவும் பிடிக்கும். பாரம்பரிய முறையில் எளிதாக சமைக்கக்கூடிய 100 உணவுகள் கொண்ட புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

‘‘சின்ன வயசில் இருந்தே சுவையான சாப்பாட்டை மட்டுமே சாப்பிட்டு நான் வளர்ந்தேன். காரணம் எங்களுடையது கூட்டுக் குடும்பம். ஆச்சி, அப்பத்தா, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா... ன்னு எங்களுடையது பெரிய குடும்பம். ஒரே அடுப்பு தான் என்பதால், வீட்டில் தடபுடலா தான் சமையல் நடக்கும். அதுவும் என்னுடைய அம்மா, சித்தி, அத்தை எல்லாரும் சமையலில் கைதேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு உணவையும் அன்புடன் விரும்பி சமைப்பாங்க. அவங்க அன்பு அந்த உணவில் கலந்து இருப்பதால்தான்  என்னவோ அவங்க சமைக்கும் ஒவ்வொரு சாப்பாடும் அவ்வளவு சுவையா இருக்கும். எனக்கு அசைவத்தில் மீன் மற்றும் சிக்கன் பிடிக்கும். அதே போல் சைவத்தில் எல்லா விதமான காய்கறிகளும் சாப்பிடுவேன்’’ என்றவர் ஊரில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் சென்னையில் கிடைப்பதில்லையாம்.

‘‘நான் ஊருக்கு போகும் போது எல்லாம் அம்மா கருப்பட்டி பணியாரம் செய்து தருவாங்க. அந்த சுவைக்கு கடைகளில் கிடைக்கும் ஸ்நாக்சுக்கு ஈடாகாது. அவ்வளவு சுவையா இருக்கும். இதே கருப்பட்டி பணியாரம் சென்னையிலும் கிடைக்கிறது. ஆனால் ஊருல அம்மா செய்ற பக்குவமோ சுவையோ இங்கு கிடைப்பதில்லை. விருதுநகரில் மற்றுமொரு ஃபேமஸ் பொரிச்ச பரோட்டா.

விருதுநகர் பர்மா பரோட்டா கடைன்னு யாரிடம் கேட்டாலும் மறுக்காம வழி சொல்வாங்க. அந்த பரோட்டாவுக்கு மட்டன் குழம்பு தான் சைட்டிஷ். ரொம்பவே டேஸ்டா இருக்கும். அதே போல் அருப்புக்கோட்டையில் சீனி மிட்டாய்ன்னு ஒரு ஸ்வீட் இருக்கு. பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் இந்த மிட்டாய் பிரதானமா இருக்கும். கருப்பட்டியிலும் செய்வாங்க, சர்க்கரையிலும் செய்வாங்க. பார்க்கும் போது பின்னல் ஜடைப் போல இருக்கும். இதை அங்கு சீரணின்னு சொல்வாங்க. அதே போல் சர்க்கரை பாகில் ஊறவைத்துள்ள சேவும் அங்கு ஃபேமஸ்’’ என்றவர் சாம்பாருக்காகவே ஒரு கடைக்கு சாப்பிட செல்வாராம்.

‘‘சென்னையில் கே.கே.நகரில், விஜயராகவபுரம் பகுதியில் ராம் ஓட்டல்ன்னு ஒரு சின்ன சாப்பாட்டு கடை. அந்த கடையின் சாம்பாருக்காகவே நான் அங்கு சாப்பிட போவேன். இனிப்பு பூசணிக்காய் போட்டு சாம்பார் வைப்பாங்க. வீட்டு சாம்பார் மாதிரி அவ்வளவு சுவையா இருக்கும். விலையும் கம்மி தான். இரண்டு சப்பாத்தி 10 ரூபாய்ன்னு தான் வியாபாரம் செய்றாங்க. அங்கு கூட்டம் அப்படி அலைமோதும். சென்னைக்கு வந்த போது, நான் அந்த ஓட்டலுக்கு அடிக்கடி போவேன். சினிமா மற்றும் சிலம்பு முறையா கத்துக்க ஆரம்பிச்ச பிறகு, ஒன்லி டயட் சாப்பாடு தான்’’ என்றவர் அவரின் டயட் பற்றி பட்டியலிட்டார்.

‘‘நான் கம்பு சுத்துறேன். சினிமாவிலும் நடிக்கிறேன். அன்றைய பொழுதை கழிக்க எனக்கு சக்தி வேணும். அதனால் காலை எழுந்ததும் இரவு முழுக்க ஊற வைத்த முளைக்கட்டிய பச்சைப் பயறு. அப்பறம் இரண்டு முட்டை வெள்ளைக்கரு. முளைக்கட்டிய பயரில் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின், மினரல் சத்துக்கள் உள்ளது. சாப்பிட்டதும், வயறு நிரம்பியது போல் இருக்கும். சீக்கிரம் பசிக்காது.

மேலும் சிலம்பம் பயிற்சிக்கு தசை வலுவாக இருக்கணும். அதனால என் மாஸ்டர் கண்டிப்பா இதை சாப்பிட சொல்லி வலியுறுத்துவார். சென்னையில் செட்டிலாயிட்டாலும், நாங்க கிராமத்தில் வளர்ந்தவங்க. எங்க வீட்டில் சம்பா கோதுமை கஞ்சி தான் காலை உணவா இருக்கும். இல்லைன்னா நீராகாரம். சம்பா கோதுமையில் சிறிதளவு பாசிப்பருப்பு, சீரகம், மிளகுத் தூள், உப்பு, தண்ணீர் கலந்து குக்கரில் வேக வைக்கணும். வெண்பொங்கல் டேஸ்டில் இருக்கும்.

இதில் மட்டன், சிக்கன் சேர்த்தா முஸ்லிம்களின் ரமலான் கஞ்சி போல இருக்கும். இதில் வேர்க்கடலையும் சேர்த்து சாப்பிடலாம். எளதில் ஜீரணமாகிடும், உடம்புக்கு ரொம்பவே நல்லது. விரும்பினால் காய்கறிகளும் சேர்த்து சாப்பிடலாம். காலையில் இந்த கஞ்சி சாப்பிட்டா, அதன் பிறகு மதிய உணவுக்கு முன் இடைவேளையில் ஏதாவது ஒரு பழங்களை சாப்பிடுவேன். வாழைப்பழம், மாதுளை, கொய்யா, பப்பாளின்னு... வீட்டில் ஒரு பழக்கடையே இருக்கும். இரவு நேர உணவு ஏழு மணிக்கெல்லாம் முடிச்சிடுவேன்.

வெள்ளையா இருக்கிற எந்த உணவினையும் நான் சாப்பிடுறது கிடையாது. முட்டையின் வெள்ளைக்கரு தவிர, சர்க்கரை, அரிசி, பால், தயிர், மைதா எல்லாவற்றையும் தவிர்த்திட்டேன். பிறகு எண்ணையில் பொரிச்ச உணவுக்கும் நோ சொல்லிட்டேன்’’ என்றவர் விரும்பிய உணவுகளை சாப்பிட ஒரு நாள் ஒதுக்கியுள்ளார்.

‘‘ஆரம்பத்தில் அவ்வப்போது தான் சென்னைக்கு வருவேன். ஷூட்டிங் இருக்கும் போது வருவேன். உடனே கிளம்பிடுவேன். இப்ப கடந்த நாலு வருஷமா சென்னையிலேயே செட்டிலாயிட்டேன். இங்க மாமா, ஆச்சி வீட்டில்தான் தங்கி இருக்கேன். என்னதான் டயட்டில் இருந்தாலும், ஒரு நாள் இந்த உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் ஏற்படும்.

20 நாள் தொடர்ந்து ஷூட்டிங் முடிச்சிட்டு ஊருக்கு போனா எனக்கு பிடிச்ச எல்லா ஸ்நாக்சும் வாங்கி சாப்பிடுவேன். கிட்டத்தட்ட ராஜ்கிரண் எலும்பை கடிப்பார்ல அப்படி சாப்பிடுவேன். அந்த ஒரு நாள் என்னுடைய ஆசையை தீர்த்துக் கொள்வேன். என்னதான் இங்க சென்னையில் ஓட்டல்களில் சாப்பிட்டாலும், வீட்டு சாப்பாட்டுக்கு நிகர் கிடையவே கிடையாது. என்னோட சித்தி, மரவள்ளிக்கிழங்கு வடை மற்றும் தோசை செய்வாங்க.

15 வருஷத்துக்கு முன்னாடி சாப்பிட்ட அந்த சுவை இன்னும் என் நாவில் இருந்து விலகல. அதே சுவையில் நான் இது நாள் வரை எங்கேயும் உணர்ந்தது இல்லை. சாப்பிடும் போது வாயில் விறுவிறுன்னு இருக்கும். ஆனா அவ்வளவு சுவையா இருக்கும். அதே போல் அம்மா மணத்தக்காளி தோசை செய்வாங்க. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல் அவங்க வைக்கும் வேப்பம்பூ குழம்பு, வீடே மணக்கும்.அதே போல் வெந்தய குழம்பு, மிளகு குழம்பும் அவ்வளவு சுவையா இருக்கும். சூடான சாதத்தில் நல்லெண்ணை சேர்த்து இந்த குழம்புடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டா...’’  என்று தன் பழைய நினைவுகளில் மூழ்கினார்.

‘‘எங்க வீட்டில் விறகு அடுப்பு தான். கேஸ் எல்லாம் கிடையாது. கேஸ் அடுப்பில் சமைக்கும் உணவைவிட விறகு அடுப்பில் சமைக்கும் போது அதன் சுவை மற்றும் மணம் வித்தியாசமா இருக்கும். சமையல் பொறுத்தவரை அம்மாகிட்டதான் கத்துக்கிட்டேன். நாங்க கூட்டு குடும்பம். வீட்டில் இருக்கும் எல்லா பெண்களும் சூப்பரா சமைப்பாங்க.

என் பாட்டி உட்பட. நான் வீட்டுக்கு போனா நான் தான் சமைப்பேன். கருவாடு தொக்கு, காடை, சிக்கன்னு எல்லாம் செய்வேன். இதுதான் என்னை சமையல் புத்தகம் எழுத தூண்டியதுன்னு சொல்லலாம். என் புத்தகத்தில் இருக்கும் எல்லா ரெசிபியும், எங்க ஊரில் திண்ணையில் இருக்கும் பாட்டிகள் மற்றும் அம்மாக்கள் சொன்னதுதான்.

வீட்டில் இவ்வளவு சுவையான மற்றும் ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டு பழகின எனக்கு வெளியே சாப்பிட அவ்வளவாக பிடிக்காது. எப்போதும் பிடிச்ச சாப்பாடுன்னா காலையில் நீராகாரம். இதற்கு சின்ன வெங்காயம், தேங்காய் துவையல் செம காம்பினேஷன். அப்புறம் கேரட், பீட்ரூட், கொத்தவரங்காய், பீன்ஸ், அவரக்காய்ன்னு எல்லா காய்கறி பொரியலும் சாப்பிட பிடிக்கும். இது மட்டுமே ஒரு கிண்ணம் நிறைய சாப்பாடு அளவுக்கு சாப்பிடுவேன். அப்புறம் பருப்பு பாயசம் ரொம்ப பிடிக்கும்.

அம்மா நல்லா செய்வாங்க. அவங்க செய்யும் முறுக்குக்கு நான் அடிமை. தீபாவளி பண்டிகை யின்போது, 15 பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் சுட்டு வைப்பாங்க. கருப்பட்டி பணியாரம், எப்ப நான் ஊருக்கு போனாலும் கண்டிப்பா இருக்கும். அப்பறம் நான் ஒரு டீ பைத்தியம். ஷூட்டிங்கின் போதும் சரி வீட்டில் இருந்தாலும் சரி நினைக்கும் போது எல்லாம் டீ சாப்பிடுவேன்’’ என்றவர் கூட்டாஞ்சோறு உறவுகளை பலப்படுத்தும் என்றார்.‘‘சின்ன வயசில் ஏன் இப்பக்கூட நான் ஊருக்கு போனா கூட்டாஞ்சோறு சாப்பிடலாம்ன்னு சொல்வேன்.

சென்னையில் பரபரப்பு வாழ்க்கையில் இருந்திட்டு வீட்டுக்கு போகும் போது, இரவு நேரத்தில் எல்லாரும் இணைந்து சாப்பிடும் அந்த நேரம் தான் சொர்க்கம். எங்க வீட்டில் மட்டும் இல்லை, அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து, அவர்கள் வீட்டில் உள்ள உணவுகளை எல்லாம் ஒன்றாக சாப்பிடுவோம். வீட்டில் உள்ள பெரியவங்க ஒரு ெபரிய பாத்திரத்தில் சாதம், குழம்பு, காய்கறின்னு எல்லாவற்றையும் ஒன்றாக பிசைத்து உருண்டை பிடிச்சு தருவாங்க. கை நிறைய வாங்கி, வாய் நிறைய சாப்பிடுவோம். அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை’’ என்றார் நடிகை கன்னிகா.

தாளிச்ச அடை, பூண்டு மிளகாய் பொடி

தேவையானவை
தோசை மாவு - தேவையான அளவு
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் (தேவைப்பட்டால் கடலைப் பருப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்)
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
நல்லெண்ணை - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - ஒரு ெகாத்து
கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை

கடாயில் எண்ணையை சேர்த்து, காய்ந்ததும் கடுகினை தாளிக்கவும். கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் இறக்கவும். ஆறியதும், தோசை மாவில் கலந்து கொத்தமல்லி சேர்த்து, அடைபோல் தடிமனாக தோசையாக ஊற்றவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது பூண்டு பொடி சேர்த்தும் சாப்பிடலாம்.

பூண்டு பொடி செய்முறை

பத்து பல் பூண்டினை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் பொடியை உப்புடன் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணை சேர்த்து காய்ந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்க்கவும். பூண்டு நன்கு வதங்கியதும், சூடாக எண்ணையை மிளகாய் பொடியில் சேர்த்து நன்கு கலக்கவும். பூண்டு பொடியுடன் தாளிச்ச தோசையை சேர்த்து சாப்பிட்டா சுவையாக இருக்கும்.

ப்ரியா

பரணி