உருவம்தான் வேறுபாடு, உழைப்பில் இல்லை மாறுபாடு!ஆட்டோ டிரைவர் ஜெயந்தி



வல்லமை தாராயோ...

பல்வேறு நாட்டினர்கள், மாநிலத்தவர்கள், பல மாவட்டத்தவர்கள் கல்வி, வேலை, தொழில் என தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு தினமும்  ஏராளமானோர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
கெட்டும் பட்டணம் போய் சேர் என்பார்கள். அதாவது கிராமங்களில் வாழ்க்கையில் பொருள் இழந்து, உறவுகளை தொலைத்து நிற்கும் நபர்கள் கெட்டுப்போனவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தவுடன் பட்டணம் செல், புது வாழ்க்கை அமையும், வெற்றி கிட்டும் என்று கூறுவது உண்டு. கடல் சார்ந்த நகரங்களே பட்டணம் என்று அழைக்கப்படுகிறது. காரணம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பது மட்டுமே சென்னை நகரின் தாரக மந்திரம்.

இயந்திர நகரமான இந்த சென்னையில் அறிவால், உடலால் உழைப்பவன் ஜெயிக்கிறான். உறங்கி சோம்பேறியாய் பொழுதை கழிப்பவன் வீழ்கிறான். உழைப்புக்கு உடலும், மனமும் போதும். அதற்கு ஆண், பெண் என்ற உருவ வேறுபாடு இல்லை என்கிறார் சென்னை கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயந்தி.

சென்னை கோட்டையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார் ஜெயந்தி. எட்டாம் வகுப்பு வரை படித்த அவர், வெளி மாநிலத்தவர்களிடம் மொழியால் வேறுபட்டு நிற்காமல் இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என தனக்கு தெரிந்த மொழிகளில் பேசி, சவாரிக்கு அழைத்துச் செல்கிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசிய அவரிடம் ‘‘எப்படி முடிகிறது உங்களால்... ஆங்கில வகுப்புக்கு ஏதும் சென்றீர்களா..?’’ என்று கேட்டதும். ‘‘சார், ஆங்கிலம் ஒரு மொழி தான் சார். அதற்கு படித்து பட்டம் தான் பெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். என் தாயின் மரணம். எங்கள் குடும்பத்தையே கஷ்டத்திற்கு உள்ளாக்கியது. கஷ்டமே என்னன்னு தெரியாம வளர்ந்த நான் அதை அப்போது தான் உணர்ந்தேன். தாய் வழி பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். பாட்டி வீட்டு பக்கத்தில் இருந்த ராணுவக் குடியிருப்பிலுள்ள வீடுகளில் வேலை செய்தேன்.

ஆறு வீட்டில் வேலை செய்தேன். ஒவ்வொரு வீட்டிலும் மாத சம்பளமாக ரூ .150 தந்தார்கள். மூன்று மாதம் கடந்த நிலையில் இரண்டு வீடுகளில் திடீரென வேலை இல்லாமல் போனது. அப்ப எனக்கு பதினாறு வயது தான். வீட்டில் கல்யாணம் செய்து வச்சுட்டாங்க. என் கணவரோ சரியா வேலைக்கு போகமாட்டார். இதனால் குடும்பம் நடத்தமுடியாமல் தவித்தோம்.

பதினேழு வயதில் எனக்கு மகள் பிறந்தாள். பதினெட்டு வயதில் மகன். அடுத்த ஓராண்டில் இன்னொரு குழந்தை. அவனுக்கு ஒரு வயது இருக்கும்போது இருபத்திரெண்டு வயதில் என் கணவர் இறந்து போனார். வாழ வேண்டிய வயதில் வாழ்வு இழந்து நின்றேன். வறுமையின் கோரப்பிடியில் சிக்கினேன். குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது, வாழ்வில் எப்படி முன்னேறுவது. என பலவாறு யோசித்தேன். படுத்தால் தூக்கமில்லை, அடுத்த வேளை சோற்றுக்கும் வழியில்லை என்ன செய்வது என்று தவித்தேன்.

அப்போது எங்க வீட்டுப் பக்கத்தில் உள்ள குழந்தைகளை போட்டோ எடுக்க பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த ஒருவர் வந்திருந்தார். ஏழை குழந்தைகளை படிக்க வைக்க முன்வந்தார். என் குழந்தைகளையும் படிக்க உதவி செய்தார். ஆடைகள், புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார்.

பெண்களுக்கு கைத்தொழில் கற்றுக் கொள்ள பணம் உதவி செய்வதாக சொன்னவர் என்னிடம் என்ன தொழில் கத்துக் கொள்ள விருப்பம்னு கேட்டார். நான் யோசிக்காமல், ஆட்டோ ஓட்ட கத்துக்கிறேன் என்றேன். அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு செய்தனர். ஆட்டோ ஓட்ட கத்துக்கொண்ட எனக்கு ஒரு மாதத்தில் லைசென்சும் வாங்கி கொடுத்தார்.

சென்னை கோட்டை ஸ்டேண்டில் ஆட்டோ டிரைவராக பதிவு செய்தேன். பின்னர் ஒரு நண்பர் மூலம் தினசரி ரூ.200 வாடகைக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறேன். ஆட்டோ ஓட்டினாலும், ஓடாவிட்டாலும் தினமும் 200 ரூபாயை ஓனருக்கு கொடுத்திடனும். ஆட்டோ ஓட்டும் பணத்தில் தான் வீட்டு வாடகை, சாப்பாடு, துணி, புள்ளைங்க படிப்புச் செலவு என எல்லாத்தையும் பார்க்கணும்.

ஆனால் நான் துவண்டு போகவில்லை. கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டி, என் பிள்ளைகளை படிக்க வைச்சுட்டேன். மகளை பி.காம் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளேன். இரண்டாவது மகன் பிளஸ் 2 முடித்து வேலைக்கு போகிறான். மூன்றாவது மகன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ளான். அவன் கால் பந்தாட்ட வீரனாக வேண்டும் என விரும்புகிறான். அவன் நினைத்தபடி கால்பந்தாட்ட வீரனானால் எனக்கு சந்தோஷம்.

அவ்வப்போது பணக்கஷ்டம் வரும். அப்போதெல்லாம் மனக்கஷ்டம் ஏற்படும். அந்த நேரம் கடவுளை நினைத்துக்கொண்டு போராடி எப்படியும் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்றெண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு பெண் வாடிக்கையாளர்கள் தான் அதிகம். ஒரு பெண் என்பதால் என்னிடம் பாதுகாப்பினை உணர்கிறார்கள். என் ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்களை குறித்த நேரம், இடம், கொண்டு போய் சேர்த்திடுவேன். அதனால் தான் என்னை தேடி அதிகம் பலதரப்பட்ட மொழி பேசுபவர்கள் இங்கு வருவார்கள். எங்க ஆட்டோ ஸ்டாண்டுக்கு இந்தி, சீக்கியர், ராஜஸ்தான், பீகார், குஜராத், நேபாளி என பல மாநிலத்தவர்கள் வருகிறார்கள்.

கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ராணுவக்குடியிருப்பு பக்கத்தில் இருப்பதால் அவர்களுடன் அதிகம் பேசி, பேசியே இந்தி, இங்கிலீஷ் கற்றுக்கொண்டேன். பத்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எங்க ஸ்டேண்டில் என்னைப்போன்று 13 பெண்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர்.

இங்கிலீஷ் பேசுறது ஒண்ணும் ெபரிய விஷயமில்லை, அது ஒரு மொழிதான். அதற்கு பட்டம் படிக்கணுமுன்னு அவசியம் இல்லையே. பெண் ஆட்டோ
ஓட்டுறது என்ன, எந்த வேலையும் செய்யலாம். உழைப்புக்கு ஆண், பெண் என்று வேறுபாடு இல்லை. உழைக்க மனமும், உடலும் தயாராக இருந்தா போதும்’’ என்றார் ஜெயந்தி.

சு.இளம் கலைமாறன்

ஆர்.சந்திரசேகர்