தெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள்சென்னையின் நெருக்கடி நிறைந்த வண்ணாரப்பேட்டையில், ஆர்ப்பாட்டம் இன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது ‘தெருக்கட’ உணவகம். வடசென்னை மக்களிடம் அதிகமாகி உள்ள நீரிழிவு நோய், புற்று நோய், சத்துக்குறைவு, உடல் எடை குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி இன்மை போன்ற வியாதிகளை மனதில் கொண்டு, தினம் ஒரு பாரம்பரிய உணவு என்கிற அடிப்படையில், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியத்தில் தயாராகும் உணவுகளை, மாலை 3 மணியில் துவங்கி இரவு 8:30 மணி வரை விற்பனை செய்து கலக்கி வருகின்றனர் ‘சூப்பர் பவர் வுமன்களான’ சுப்புலெட்சுமி அம்மாள், அமுதா அக்கா, ராணி அக்கா, சுந்தரி அக்கா என்கிற நான்கு பெண்களும். குடும்பமாக இணைந்து செயல்படும் இவர்களிடம் பேசியபோது…

வியாதி இல்லாத ஒரு வாழ்க்கை வாழனுமா? ரொம்பவே சிம்பிள். வெள்ளை விஷமெனப்படும் ரசாயனம் கலந்த வெள்ளைச் சர்க்கரை(sugar), பாலிஷ் செய்யப்பட்ட மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி இவைகளை கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். இவற்றில் தயாராகும் கேக், பிஸ்கட், பிரட், பரோட்டா, பானி பூரி, பீட்சா, நூடுல்ஸ், ஐஸ் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகள், சாக்லேட், ஜாம் வகை உணவுகளையும் உண்ணக் கூடாது. அதேபோல் நீண்ட கால பயன்பாட்டிற்காக பதப்படுத்தப்பட்ட(preservatives) உணவுகளையும் உண்ணாமல் இருப்பதே நல்லது எனும் இந்தப் பெண்கள் தெருக்கடை உணவகம் வழியே தரும் உழைப்பும், அர்ப்பணிப்பும் நம்மை ரொம்பவே பிரமிக்க வைத்தது.

‘‘பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏறிய அரிசி, சிறுதானியங்கள், காய்கறிகளையும், உடலுக்கு ஒவ்வாத கலர்கலரான உணவுகளையும் உண்டு நமது உடம்பினை குப்பையாக்கி வைக்கிறோம். விளைவு.. வியாதிகளைத் தேடி உடம்பில் ஏற்றி, மருத்துவரிடத்தில் வரிசையில் நிற்கிறோம். எல்லா பாரம்பரிய வகை அரிசிக்கும் இயற்கை குணம் உண்டு. இவற்றை உண்டால் மருத்துவரை தேட வேண்டிய அவசியம் கண்டிப்பாக ஏற்படாது.

174 வகையான பாரம்பரிய அரிசியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட 10 முதல் 14 வகை அரிசிகளான காட்டுயானம், கிச்சிலி சம்பா, மூங்கில் அரிசி, பூங்கார் அரிசி, குழியடிச்சான் அரிசி, குடைவாழை அரிசி, குள்ளக்கார் அரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, தூயமல்லி என ரசாயனக் கலப்பற்று, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பட்டைத் தீட்டப்படாத அரிசிகளை விவசாயிகளிடத்தில் நேரடி கொள்முதல் செய்து எங்கள் பகுதி மக்களிடத்தில் சேர்க்கிறோம்.

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரும் கொடை காட்டுயானம் அரிசி. இது இயற்கையின் இன்சுலினாகும். சர்க்கரை நோயிக்கான மிகச் சிறந்த மருந்து. அந்நோயின் எதிரி. சர்க்கரை நோய் மட்டுமல்ல உடலில் ஏற்படும் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. கிச்சிலி சம்பா ரத்தத்தில் க்யூமோ குளோபின் அளவை அதிகப்படுத்தும். மூங்கில் அரிசி கால்வலி, முழங்கால் மூட்டு வலிக்கு சிறந்தது. பூங்கார் அரிசி, குழியடிச்சான் அரிசி போன்றவை கர்ப்பிணி பெண்கள் சுகப் பிரசவமாகி, குழந்தை ஆரோக்யமாய் பிறக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவும்.

குடைவாழை அரிசி குடலை சுத்தம் செய்யும். குள்ளக்கார் அரிசி ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடம்பை பளிச்சென்று இளமையாக்கும். இதுவும் பெண்களுக்கு உகந்தது. கருப்பு கவுனி அரிசி புற்று நோயை தடுக்கும் பாதுகாப்பு கவசமாக செயல்படும் தன்மை கொண்டது. மாப்பிள்ளை சம்பா அரிசி தசைகள், நரம்புகள், எலும்புகளை பலப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை தரும். கருங்குறுவை உடல் அசதியை நீக்கி உற்சாகத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். தூயமல்லி அரிசி உடல் உறுப்புகளை வலுவடையச் செய்யும். இவை அனைத்தும் விளைச்சலில் ஆங்காங்கே இருந்தாலும் தேடிச்சென்று வாங்கி  மக்களிடம் சேர்ப்பிக்கிறோம்.

இவற்றின் நன்மைகளை முதலில் சொன்னபோது யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எனவே இவற்றை சாப்பிடத் தகுந்த வகையில் ‘ரெடி டூ ஈட்’ எனும் அடிப்படையில், உண்ணக் கூடிய பொருளாக மாற்றிக் காட்டினோம். ஒவ்வொரு பாரம்பரிய அரிசியைக் கொண்டு, தினம் ஒரு இட்லி, அத்துடன் கருப்பட்டியை இணைத்து பணியாரம், கூழ் வகை உணவு, பொங்கல், சாதம், பாயசம், புட்டு, அடை, தானிய வடை, கொழுக்கட்டை, காய்கறி சூப், கீரை சூப் போன்றவற்றையும் தயாரித்து, அதன் செயல்முறைகளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்கினோம்.

நுகர்வோரை மூன்று நிலையாகப் பிரித்து, முதலாவதாக பாரம்பரிய மூலப் பொருட்களை வாங்கி அவர்களாகவே வீடுகளில் தயாரிக்கும் மனநிலை உள்ளவர்களுக்கு மூலப் பொருட்களை பெற்றுக் கொடுக்கிறோம். இரண்டாவது செய்ய நேரமில்லை என்கிற, இரண்டு நிமிட மேகி யூசர்களுக்காக குதிரைவாலி, கம்பு, கேப்பை, வரகு, சாமை, தினை என்கிற எட்டு வகையான சத்து தானியங்களை நூடுல்ஸாக மாற்றி இயற்கை முறை தயாரிப்பு மசாலாவையும் இணைத்து வழங்குகிறோம். இத்துடன் எட்டுவகை சத்து தானியங்கள் வழியே தோல் நீக்காத கருப்பு உளுந்தை இணைத்து, மாவு பவுடராக்கி அதில் தோசை, இட்லி தயாரிக்கும் மாவை உருவாக்கித் தருகிறோம்.

அதற்கும் நேரமில்லை என்கிற மூன்றாவது நிலை பயன்பாட்டாளருக்காக, மேற்குறிப்பிட்ட உணவுகளோடு, பாரம்பரிய அரிசி மற்றும் சத்து தானியங்களைக் கொண்டு நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து, தரமான ஏ2 நாட்டு மாட்டுப் பாலில் தயாரான நெய் இணைத்து, லட்டு, கம்மர்கட், இஞ்சி சாக்லேட், அல்வா,  ஜிலேபி, மைசூர்பாகு, பாதுஷா, கருப்பட்டி லட்டு போன்ற இனிப்புகளைத் தயாரிக்கிறோம்.

சிறுதானியமான சத்து தானியம் கொண்டு தயாரான பக்கோடா, முறுக்கு, கருப்பட்டி பூந்தி, பிஸ்கெட், தினை பாயசம், 26 வகையான பாரம்பரிய பொருட்களை உள்ளடக்கி, ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து தயாரான சத்துமாவும் உள்ளது. கருப்பு உளுந்தை இணைத்து இட்லி பொடி தயாரிக்கிறோம். உணவு தயாரிப்புக்கு செக்கு எண்ணை மற்றும் இந்து உப்பையே பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.

கலப்படம் இல்லாத மலைத்தேன் அல்லது நாட்டுத் தேனில் ஊறிய நெல்லிக்காய், கருப்பட்டி, சுக்கு மல்லி காஃபி பொடி தயாரித்துத் தருகிறோம். குடம்புளியில் தயாரான பானகமும் எங்களிடம் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நாட்டுச்சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் ஃப்ரூட் ஜூஸ் எங்களிடம் எப்போதும் கிடைக்கும்.

சிறுதானியத்தில் சாமைதான் ராஜா. இது அதிக சத்துக்களைக் கொண்டது. விலையும் குறைவு. நீரிழிவை தடுத்து, ரத்த சோகை, மலச்சிக்கல், ஆண்மைக் குறைவை நீக்கி ஆண் விந்துக்களை அதிகரிப்பது. கேப்பை உடல் சூட்டை தணித்து, உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். தினை உடலுக்கு வலிமை தந்து, கொழுப்பைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

சர்க்கரை அளவை குறைக்கும். வரகு புற்று நோயாளிகள் பயன்படுத்த நல்லது. கண் பார்வை, உடல் எடை குறைப்பு, பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யும். கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து நிறைந்தது குதிரைவாலி. இதில் மினரல்ஸ் அதிகமாக உள்ளது. இதை உண்டால் குதிரையின் வேகம் கிடைக்கும். உடல் பருமனை கட்டுக்குள் வைக்கும். எலும்புகள் வலுவடையும். கம்பு உடல் சூட்டை தணித்து, கெட்ட கொழுப்பை கரைக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும். செரிமானப் பிரச்சனையை சரி செய்யும்.

ரசாயனம் இல்லாத, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழத்துடன், நாட்டுச் சர்க்கரை அல்லது பனங் கருப்பட்டி சேர்த்து, தண்ணீர் சத்து இல்லாத பழங்களுக்கு ஏ2 நாட்டு மாட்டுப் பால் இணைத்து ஜூஸ் தயாரிக்கிறோம். சிலவகை பழங்களை எதற்காக சாப்பிடுகிறோம், என்ன பயன் என எடுத்துச் சொல்லியும், எந்தப் பிரச்சனைக்கு எந்த பழத்தின் ஜூஸ் குடிக்கலாம் என்பதையும் மக்களிடத்தில் சொல்கிறோம்.

சிலவகைப் பழங்களில் பதினைந்துக்கும் அதிகமான மருத்துவ குணங்கள் உண்டு. சாத்துக்குடி தாய்மை அடைந்த பெண்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும், தோல் வியாதி பிரச்சனை உள்ளவர்களுக்கும், உடல் எடை இழப்பை சரி முடி இழப்பை சரி செய்யும். புற்றுநோய் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்ற பழம். அவகடோ என அழைக்கப்படும் வெண்ணைப் பழம் (butter fruit) கல்லீரல், பல் வலி, சரும வியாதி, முடி கொட்டுதல், கண் பார்வை இழப்பு, உடல் எடை இழப்பு என எல்லாவற்றையும் சரி செய்யும். சப்போட்டா பழம் எனர்ஜிக்கான பூஸ்டர். நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது.

நாட்டுச் சர்க்கரை இணைத்து உணவுகளைச் சாப்பிடுவதால் எலும்பு பலப்படும். குழந்தைகளின் நன்மைக்காக நாட்டுச் சர்க்கரை ஏ2 பால் கொண்டு, நூறு சதவிகிதமும் இயற்கை சார்ந்த ஐஸ்க்ரீம், ஃப்ரூட் பாப்ஸ் போன்றவைகளை தயாரிக்கிறோம்.  கலப்படமற்ற பவுடர் கலக்காத நாட்டு மாட்டுப்பாலை நேரடிக் கொள்முதல் செய்து, தெருக்கட வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் பாரம்பரியத்தை அறிவதும், நமது மூதாதையர்களின் பாரம்பரிய உணவு பழக்க முறையை பின்பற்றுவதுமே. இதைச் செய்தாலே எந்த வியாதியும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். நோயற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே நம் பொறுப்பு’’  என முடித்தனர் இந்தப் பெண்கள்.

பாரம்பரிய உணவகமான ‘தெருக்கட’ கான்செப்டின் மூளையாக செயல்படும் ராஜாவிடம் பேசியபோது… ‘‘நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பகுதி நேரமாக மென்பொருள் துறையில் இயங்கிக் கொண்டே என்னால் முடிந்த பாரம்பரிய மாற்றங்களை மக்களிடம் விதைக்கும் முயற்சியில் இருக்கிறேன். நம் பாரம்பரிய வாழ்க்கைக்கும், உணவு முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதை எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்து மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதன் துவக்கமே தெருக்கட.

“உங்கள் நலம் உங்கள் கையில்” என்கிற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, “மாற்றம் என்பது சொல் அல்ல செயல்” எனும் குறிக்கோளுடன் பாரம்பரிய உணவுகளை மக்களிடத்தில் தேடிக்கொண்டு வந்து சேர்க்கிறோம். துவக்கத்தில் இயற்கையான பழச்சாறுகளை தயாரித்து வழங்கும் கடையாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று பாரம்பரியத்தைப் போற்றும் உணவகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பாரம்பரிய உணவின் மூலப் பொருட்களை விளைவிக்கும் இயற்கை விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடத்தில் நேரடி கொள்முதல் செய்கிறோம். இதனால் விவசாயிகளும்
மக்களும் நேரடியாகவே பயனடைகிறார்கள். சிறு குறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரமும் இதனால் மேம்படுகிறது.

இன்றைய அவசர யுகத்தில் பணத்தை நிறைய செலவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் தரமான பொருளை வாங்கு கிறோமா, ஆரோக்கியமான உணவை உண்கிறோமா என்கிற புரிதல் யாரிடத்திலும் இல்லை. கடை உணவு ஆரோக்கியமாக உள்ளதா? வீட்டில் உண்ணும் உணவு தரமான பொருளால் தயாராகிறதா என்றெல்லாம் யாரும் யோசிப்பதும் இல்லை.

விளைவு, ருசிக்கு மட்டுமே அடிமையாகி குறைந்தது ஒரு வியாதிக்கு சொந்தக்காரர்களாக மாறி நிற்கிறோம். இளம் வயதிலேயே நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் இருக்கிறது. யாருக்காவது வியாதி இருக்கா என்று கேட்டால், அனைவரும கையைத் தூக்கும் நிலை உருவாகியுள்ளது? பாரம்பரியத்தை உணர்ந்தாலே மருத்துவர்களையும், மருந்து மாத்திரைகளையும் அணுக வேண்டிய தேவை கண்டிப்பாக இருக்காது.

சரியான உணவை உண்பதன் மூலமே நோயற்ற ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதற்கான முயற்சி நம்மில் இருந்து தொடங்க வேண்டும். நம் விவசாயத்தையும், நிலத்தையும், நீரையும், காற்றையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இயற்கையையும் சுரண்டும் மனநிலையில் இருந்து மனிதன் மாற வேண்டும்.

தரமற்ற உணவுப் பொருட்களை சூப்பர் மார்க்கெட் வழியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வாங்குவதைத் தவிர்த்து, நம் பாரம்பரியத்தை மீட்கும் இயற்கை விவசாயிகளிடம் இருந்து நஞ்சில்லா தரமான மூலப் பொருட்களைப் பெற்று பயனடையுங்கள். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்.

தெருக்கட வழியாக மக்களிடம் உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையிலும் நம் பாரம்பரிய உணவை சிறந்த முறையில் தயார் செய்து எடுத்து வருகிறவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயற்கை உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்குகிறோம்.

மகளிரைத் தொழில் முனைவோர்களாக மாற்றி, குழந்தைகளிடத்திலும் ‘நஞ்சில்லா உணவே மருந்து’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொடர்ந்து விதையை விதைத்துக்கொண்டே இருப்போம். எங்களின் அடுத்த முயற்சியாக, தெருக்கட பாரம்பரிய சந்தை விரைவில் சென்னையில் உதயமாக உள்ளது’’ என முடித்தார்.

மகேஸ்வரி நாகராஜன்

ஏ.டி.தமிழ்வாணன்