பெண்ணை முதன்மைப்படுத்திய நாயகி சி.ஆர்.விஜயகுமாரிசெல்லுலாய்ட் பெண்கள்-59

வட்ட வடிவ உருண்டை முகம், காதளவோடிய கதை பேசும் கண்கள், பப்ளிமாஸ் கன்னங்கள், எவ்வளவு நீள வசனம் என்றாலும் சலிப்பின்றி ஏற்ற இறக்கத்துடன் ஒரே மூச்சில் பேசி நடிக்கும் திறன், பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடங்கள், இளம் வயது என்றாலும் வயதை எடை போட முடியாத தோற்றம், இவை அனைத்துக்கும்  மேலாக தெளிவான  அட்சர சுத்தமான தமிழ் உச்சரிப்பு, அசல் தமிழ்நாட்டுப் பெண், இயக்குநர்களின் நடிகை  என்ற  பெருமைக்குரியவர்.

இளங்கோவடிகளின் சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு உருவம் கொடுத்தவர், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர், எண்பது வயதைக் கடந்து விட்டபோதும் இளமை மாறாமல் இருக்கும் தோற்றம், நம் சம காலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் என இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் புகழ் அனைத்துக்கும் சொந்தக்காரர்நடிகை விஜயகுமாரி.

கல்லூரி மாணவி, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பான பெண், டாக்டரம்மா, டீச்சரம்மா, வக்கீலம்மா, உயிர் கொடுக்கும் தோழி, பொறுப்புணர்வு மிக்க குடும்பத்தலைவி, குடும்பத்தையே குலைக்கும் கோடரிக் காம்பு, மதுரை மாநகரையே தீக்கிரையாக்கிய காப்பிய நாயகி, அரச மாதேவி, பாசத்தைப் பொழியும் அன்பான அக்காள் அல்லது தங்கை, குடும்ப பாரத்தைச் சுமக்கும் மருமகள், அன்பே வடிவான மகள் இப்படி அவர் ஏற்று நடிக்காத வேடங்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

 தான் ஏற்ற வேடங்கள் எதுவானாலும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவரைப் போல அந்தந்தக் கதாபாத்திரமாகவே மாறி விடக்கூடியவர். 50களில் நடிக்கத் துவங்கி படிப்படியாக முன்னேறி 60களில் உச்சம் பெற்று 70களில் குணச்சித்திர வேடங்களை ஏற்பவராகி, 80, 90, 2000ங்களிலும் அம்மாவாக, பாட்டியாகத் தொடர்ந்தவர். இப்போது முதுமையின் பொருட்டு சற்றே ஒதுங்கி இருக்கிறார். இப்போதும் நடிக்க அழைப்பு விடுத்தால் போதும், அரிதாரம் பூசச் சற்றும் தயங்காதவர். இவருடன் நடிக்க வந்த பல நடிகைகளுடன் ஒப்பிடும்போது, இன்னமும் இளமை மாறாத தோற்றத்துடன்தான் அவர் இருக்கிறார்.  

மேட்டுப்பாளையம் தந்த மெல்லியலாள்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் விஜயகுமாரி. மிக எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து திரையுலகை  நோக்கி வந்தவர். திரைத்துறை சார்ந்த எந்தப் பின்னணியும் இவரின் குடும்பத்துக்கு இல்லை. தந்தையார் ராமசாமி கவுண்டர்; தாயார் தங்க லட்சுமி. எளிய விவசாயக் குடும்பம். குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தை என்பதால் செல்லமும் அதிகம். இயற்பெயர் மோகனா.

மிகச் சிறு வயதிலிருந்தே திரைப்படங்களின் மீது ஆர்வம் அதிகம். அதனால் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே பாட்டுப் புத்தகங்களை வாங்கிப் படிப்பதும், அதைச் சேமிப்பதும், சினிமா பத்திரிகைகளில் வரும் நடிக, நடிகையரின் படங்களைக் கத்தரித்து நோட்டுப் புத்தகங்களில் ஒட்டி வைக்கும் வழக்கமும் தொடர்கதையானது. அப்படி ஏற்பட்டது தான் திரைப்படங்களின் மீதான அதீத பித்து. சிறு வயதில் பள்ளிக்கூட விழாக்களிலும் கூட சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது அப்போதிருந்தே தொடர்கதையானது. ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான ‘வேதாள உலகம்’ திரைப்படத்தில் திருவாங்கூர் சகோதரிகள் லலிதா - பத்மினியின் நடிப்பில்  இடம் பெற்ற மிகப் புகழ் பெற்ற பாடல் காட்சி பாம்பாட்டி நடனம்.

‘வாசமுள்ள பூப்பறித்தேனே என் கண்ணாட்டிக்கு…’ என்ற அந்தப் பாடல் அப்போது மிகப் பிரபலம். இந்தப் பாடலுக்குப் பள்ளி விழாவில் நடனமாடினார் மோகனா. ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளின் பாராட்டு மழையிலும் நனைந்தார். இந்தப் புகழ் போதை தலைக்கேறியதால் சினிமாவில் சேர்ந்து நடித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே மனதுக்குள் ஆழமாகப் பதிந்து போய்விட்டது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பிலும் கவனம் செல்லவில்லை. தன் ஆசையை மெதுவாக வீட்டிலும் தெரியப்படுத்தினார். வீட்டில் கடும் எதிர்ப்பலை எழுந்தபோதும், அடி மேல் அடி வைக்க இறுதியில் மோகனாவின் பிடிவாதமே வென்றது.

‘மாங்கல்யம்’ மோகனா விஜயகுமாரியானார் சிறு சிறு வேடங்களே ஆரம்ப காலப் படங்களில் மோகனாவுக்குக் கிடைத்தன. பெரும்பாலும் அவை திரையில் தலைகாட்டி விட்டுச் செல்லும் வேடங்களாகவே அமைந்தன. 1953ல் வெளியான ‘நால்வர்’ படத்தில் சிறு வேடம். மோகனா என்ற பெயரிலேயே அறிமுகமானார். அதையடுத்து ‘மாங்கல்யம்’ திரைப்படத்திலும் சிறு வேடமே கிடைத்தது. இப்படத்தின் துவக்கமே மோகனாவுக்குத் திருமணம் நடப்பதாகத் தொடங்கும். பின்னர் கதை நனவோடை உத்தியில் பின்னோக்கி நகர்வதாகக் கதை சொல்லப்படும்.

மீண்டும் படத்தின் இறுதியில் அந்தக் கதை சொல்லி முடிக்கப்படும்போது மீண்டும் திரையில் தோன்றுவார். அதன் பின்னர் ‘மாங்கல்யம்’ மோகனா என்றே அறியப்பட்டார். அடுத்த படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஆர்.ராதா, ‘உன் பெயரென்ன?’ என்று இயல்பாகக் கேட்க, மோகனா தன் பெயரைச் சொல்லியிருக்கிறார்.

உடனே தன் பாணியில், ‘என்னா பொண்ணு ஓல்டு ஃபாஷன் பேரா வச்சிருக்கியே, ராஜகுமாரி, விஜயகுமாரி இப்படி ஏதாவது வெச்சுக்கோ’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய் விட்டார். ராஜகுமாரி புகழ் பெற்ற நடிகையாகத் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்க, எம்.ஆர்.ராதா சொன்ன ஆலோசனையை ஏற்று அப்போது முதல் தன் பெயரை சி.ஆர்.விஜயகுமாரி (கோயம்புத்தூர் ராமசாமி விஜயகுமாரி) என மாற்றிக் கொண்டார்.

முன்னர் அவர் நடித்த இரு படங்களும் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ தயாரிப்பு என்பதால் கோயமுத்தூரைத் தாண்டி அவர் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால், 1956ல் அவர் சென்னையை நோக்கிப் பயணிக்க வேண்டிய தேவை ஏ.வி.எம். நிறுவனம், ‘நடிகர், நடிகையர் தேர்வு’ என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டது.

விஜயகுமாரியும் தன் புகைப்படத்துடன் விண்ணப்பித்தார். மாதச் சம்பள ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் இப்படத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டார்.  நடிப்பு, நடனப் பயிற்சி போன்றவையும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருடன் பல புதுமுகங்களும் இப்படத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். அப்படி அவர் தேர்வு செய்யப்பட்டு நடித்த படம் ‘குலதெய்வம்’. ஏராளமான நடிக நடிகையர் பட்டாளத்துடன் ‘குல தெய்வம்’
வெளியானது.

வாழ்க்கை இணை எஸ்.எஸ்.ஆரை அறிமுகப்படுத்திய படம்

கூட்டுக் குடும்பம் ஒன்றில் நான்கு மருமகள்களில் ஒருவராக முதன்முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு இணையாக நடித்தார். ஒன்றாக இருந்த குடும்பத்தைக் குலைத்து நடுத்தெருவில் நிறுத்தும் துடுக்குத்தனமான பெண்ணாக நடித்தார். ஆனால், மகள் நடிக்கும் படம் பற்றிய பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த விஜகுமாரியின் தாயார் தங்கலட்சுமி அம்மாள், இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே காலமானார்.

அது மிகப் பெரிய வருத்தத்தை  விஜயகுமாரிக்கு அளித்தது. இப்படத்தில் இணையாக நடித்த எஸ்.எஸ்.ஆருடன் பின்னர் இணைந்து வாழும் துணைவியாக வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தையும் அந்தச் சந்திப்பு கொண்டு வந்தது. தன் தாயாரை இழந்த துக்கமும் வருத்தமும் ஒரு பக்கம் இருந்தாலும் வருங்காலத் துணைவரைக் கண்டடைய உதவியது ‘குலதெய்வம்’ திரைப்
படம்.

1950கள் தொடங்கி 60கள் வரை தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் வெற்றி பெற்ற அசல் ஜோடி ஜெமினி கணேசனும் சாவித்திரியும் என்றால், அவர்களுக்குச் சற்றும் குறையாத மற்றோர் ஜோடி எஸ்.எஸ். ராஜேந்திரனும் விஜயகுமாரியும் என்றால் மிகையில்லை. சாரதா, பச்சை விளக்கு, குமுதம், சாந்தி, நானும் ஒரு பெண், தெய்வத்தின் தெய்வம், பூம்புகார், காக்கும் கரங்கள் என பல வெற்றிப் படங்களை இந்த ஜோடி ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தது. தோல்வியுற்ற படங்களில் கூட இந்த ஜோடியின் நடிப்பு சிலாகிக்கப்பட்டது.

செத்தும் இந்திப்பட வாய்ப்பைக் கொடுத்த அன்புத் தங்கை வேடம்  

ஏ.வி.எம். நிறுவனம் அளித்த வாய்ப்பைத் தொடர்ந்து 58 ஆம் ஆண்டில் ஜெமினி என்ற மாபெரும் நிறுவனத்தின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய
குமாரியைத் தேடி வந்தது. இதே ஆண்டில் எஸ்.எஸ். ஆருக்கு இணையாக ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ படத்தில் பிரதான நாயகி வேடம். வஞ்சிக்கோட்டை வாலிபன் பெற்ற வெற்றியை இப்படம் பெறவில்லை.

என்றாலும் இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் கேட்டு ரசிப்பவையாக நிலைத்திருக்கின்றன. ஏ.எம்.ராஜா - பி.சுசீலா தேன் குரல்களில் பாடப்பட்ட ‘தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா?’ பாடல். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாபனத்தின் ஒலிபரப்பில் தினந்தோறும் தவறாமல் ஒலித்து ரசிக மனங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆற்றிய பாடல் என்றும் கூட சொல்லலாம்.

ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகன் ஜெமினி கணேசனுக்குத் தங்கை வேடம். படம் ஆரம்பித்து சரியாகப் பதினைந்தாவது நிமிடம் உயிரை விட்டு விடும் தங்கை அவள்.  மிகக் குறைந்த நேரமே வந்து உயிரை விட்டாலும், மேற்கொண்டு கதை நகர்வதற்கும் அந்தப் பாத்திரமே அடித்தளம் இட்டு உதவி செய்தது.

மிகப் பிரமாண்டமான செலவில் தயாரிக்கப்பட்ட அப்படம் பெரும் வெற்றியை ஈட்டியது. கதாநாயகனுடன் இரு புகழ் பெற்ற நடனமணிகள் பத்மினி, வைஜெயந்திமாலா நாயகிகளாக நடித்தனர். அந்த வெற்றி ’ராஜ் திலக்’ என  இந்தியிலும் அப்படத்தைக் கொண்டு சேர்த்தது. கதாநாயகன், நாயகியர் இருவருடன் தங்கை வேடமும் விஜயகுமாரிக்கே வழங்கப்பட்டது. செத்துப் போகும் தங்கை பாத்திரம் என்றாலும் அவரது கணக்கில் முதல் இந்திப் படம் என்ற பெருமையும் வெற்றிகளும் வந்து சேர்ந்தன.  

தரின் பிரதான நாயகி வாய்ப்புகள் விஜிக்கே...

அதன் பின்னர் அவருக்குக் கிடைத்தவை பெரும்பாலும் வெற்றி மகுடங்களே. திரையுலகில் மிக உயர்ந்த நிலைக்கும் விஜயகுமாரி சென்றார். இயக்குநர்களின் விருப்பத் தேர்வாகவும் அவர் இருந்தார். பல இயக்குநர்கள் தங்கள் முதல் படத்தை இயக்கியபோது விஜயகுமாரியே நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இயக்குநர் தர் முதலில் இயக்கிய ‘கல்யாண பரிசு’ படத்தில் நாயகனை மணந்து கொள்ளும் இரண்டாவது நாயகி.

பிரதான நாயகியாக இளமைத் துள்ளலும் குறும்பும் கொப்பளிக்க சரோஜா தேவி இருந்தபோதும், அவருக்குச் சற்றும் குறையாத, மறக்க முடியாத அக்கா கீதா வேடம். இப்படம் நகரம், கிராமம் என திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி முரசு கொட்டியது. இந்தப் படத்துக்குப் பின் தரின் ’போலீஸ்காரன் மகள்’, ‘கொடி மலர்’ என தொடர்ச்சியாக விஜகுமாரிக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதன் பிறகும் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட நாயகி சீதாவாக நடிக்கும் வாய்ப்பும் அவருக்கே வழங்கப்பட்டது.

ஆனால், அதைக் கெடுத்துக் கொண்டவரும் விஜயகுமாரியே. தன் துணைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தால் தானும் நடிப்பதாகச் சொல்ல, அந்த வாய்ப்பு பறி போனது. அந்தப் படத்தில் நாயகி சீதாவாகும் அதிர்ஷ்டம் நடிகை தேவிகாவுக்குப் போய் சேர்ந்தது. அவரும் அதைச் சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்து கொண்டார். அதன் பின்னரும் தரின் பல படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பும் தேவிகாவுக்கே அளிக்கப்பட்டது.
 
விஜயகுமாரியின் நடிப்புத் திறனுக்குச் சான்று சாரதா

இயக்குநர் தரைப் போலவே இயக்குநர் திலகம் கோபாலகிருஷ்ணன், தான் இயக்கிய முதல் படமான ‘சாரதா’ படத்துக்கு நாயகியாகத் தேர்வு செய்தவரும் விஜயகுமாரியே. விஜயகுமாரியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லப்படும் மாஸ்டர் பீஸ் கதாபாத்திரம் சாரதா.
பொதுவாக மிகை நடிப்பு பாணியில் விஜயகுமாரி பல படங்களில் நடித்தவரென்று பெயரெடுத்திருந்தாலும், இயல்பான நடிப்பையும் பல படங்களில் வழங்கியவர் என்பதை மறுக்க முடியாது. தரின் நாயகிகள் அவ்வகையினரே. அதற்கு நேர்மாறாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவரது பாணியில் மிக நீள வசனங்களை உருவாக்கிக் கதாபாத்திரங்களைப் பேச வைத்துப் பல வெற்றிப் படங்களையும் அளித்தார்.

தொடர்ச்சியாகத் தன் அடுத்தடுத்த படங்களிலும் விஜயகுமாரிக்கு வாய்ப்பளித்தார். மீண்டும் தர் படத்தில் செய்த அதே தவறை விஜயகுமாரி ‘கற்பகம்’ படத்தின்போதும் செய்ததால், கற்பகமாக நடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். கே.எஸ்.கோபால கிருஷ்ணனும் விஜயகுமாரிக்கு மாற்றாக, தெய்வ நாயகி என்ற புதுமுகத்துக்கு கே.ஆர்.விஜயா எனப் பெயர் சூட்டி கற்பகமாகவே தன் படத்தில் உலவ விட்டதன் மூலம் புதிதாக ஒரு விஜயாவை அறிமுகப்படுத்தினார்.. அதன் பிறகு அந்த விஜயாவின் கொடியும் 1980கள் வரை தமிழ்த் திரையுலகில் ஓங்கி உயர்ந்து பறந்தது.

இயக்குநர்கள் தர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மட்டுமல்லாமல் கதை வசனகர்த்தாவாக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்த ஆரூர் தாஸ் முதலில் இயக்கிய ‘பெண் என்றால் பெண்’, பி.மாதவன் இயக்கிய ‘மணி ஓசை’, மல்லியம் ராஜகோபாலின் முதல் படமான ‘ஜீவனாம்சம்’ போன்ற படங்களிலும் நாயகி விஜயகுமாரியே. இப்படங்கள் அனைத்திலும் தன்னுடைய பங்களிப்பைத் தவற விடாமல் அவர் செவ்வனே செய்திருக்கிறார்.

திறமைக்குச் சான்றளிக்கப்பட்ட படங்கள்  

அவரது ஆரம்ப காலப் படங்களான வஞ்சிக்கோட்டை வாலிபன், ராஜ் திலக், பெற்ற மகனை விற்ற அன்னை, கல்யாணப் பரிசு போன்றவற்றில் மனமுவந்து முழு ஈடுபாட்டையும் உழைப்பையும் செலுத்தி விஜயகுமாரி நடித்ததால் அவை வாழ்நாள் முழுவதும் பெரும் பேரையும் புகழையும் அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தன. அதன் பலன்தான்  60களிலும் அவருக்கு வெற்றி வாய்ப்புகளைக் குவித்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன என்றும் சொல்லலாம்.  

பெண்ணை முதன்மைக் கதாபாத்திரமாக்கிய பெரும்பாலான படங்களில் அவரே முதன்மை நாயகியாகவும் இருந்தார். படத்தின் தலைப்பே கதாநாயகியைச் சுட்டுபவையாகவும் அமைந்தது இதில் குறிப்பிடத்தக்கதாகும். அவற்றில் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்தவை சாந்தி, சாரதா, ஆனந்தி, பவானி, அமுதா, அல்லி, கைதியின் காதலி, பார் மகளே பார், போலீஸ்காரன் மகள், நானும் ஒரு பெண், பெண் என்றால் பெண், கொடிமலர், தேடி வந்த திருமகள், நாட்டுக்கொரு நல்லவள், மனைவி, படித்த மனைவி, டீச்சரம்மா போன்றவை. அதில் பல படங்கள் பெரும் வெற்றி பெற்றவை என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும்.

ஆனால், பெண்ணை முதன்மைக் கதாபாத்திரமாக முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இவ்வளவு படங்களில் எந்தவொரு படமும் பெண் நிலைவாதம் எதையும் பேசி விடவில்லை; பிற்போக்குத்தனத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் மட்டுமே அவை வலியுறுத்தின என்பதையும் இங்கு தவறாமல் குறிப்பிட்டேயாக வேண்டும். இன்றைய காலகட்டத்திலும் இதுதான் பெரும்பான்மை நிலை என்னும்போது, 1950களிலும் 60களிலும் எந்த மாதிரியான மனநிலையும் பார்வையும் பெண்ணைப் பற்றி இருந்திருக்கும் என்பதை நன்கு உணர முடிகிறது.

ஆனால், அதையும் கடந்து தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்திலேயே கூட சில படங்களேனும் பெண் நிலைவாதம் பேசியிருப்பதை நினைத்து அற்ப சந்தோஷம் கொள்ள வேண்டிய நிலையில்தான் தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்திய சினிமாவும் இருக்கிறது.அடுத்த இதழிலும் விஜயகுமாரி தொடர்வார்.

நடிகை விஜயகுமாரி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

நால்வர், மாங்கல்யம், குலதெய்வம், பெற்ற மகனை விற்ற அன்னை, பதிபக்தி, வஞ்சிக்கோட்டை வாலிபன், அழகர்மலை கள்வன், கல்யாண பரிசு, நாட்டுக்கொரு நல்லவள், தங்க ரத்தினம், தங்கம் மனசு தங்கம், தேடி வந்த திருமகள், குமுதம், பணம் பந்தி யிலே, ஆலய மணி, தெய்வத்தின் தெய்வம், எதையும் தாங்கும் இதயம், முத்து மண்டபம், பாத காணிக்கை, வழிகாட்டி, போலீஸ்காரன் மகள், சாரதா, குங்குமம், ஆசை அலைகள், கைதியின் காதலி, படித்த மனைவி, காஞ்சித் தலைவன்,

மணி ஓசை, நானும் ஒரு பெண், நீங்காத நினைவு, பார் மகளே பார், அல்லி, பச்சை விளக்கு, பாசமும் நேசமும், பூம்புகார், ஆனந்தி, காக்கும் கரங்கள், பணம் தரும் பரிசு, பூமாலை, சாந்தி, அவன் பித்தனா?, கொடிமலர், மணி மகுடம், சுந்தரமூர்த்தி நாயனார், விவசாயி, கணவன், பவானி, கல்லும் கனியாகும், நீயும் நானும், தேர்த்திருவிழா, ஜீவனாம்சம், அவரே என் தெய்வம், மனைவி, பொற்சிலை, காலம் வெல்லும், சவாலே சமாளி, அகத்தியர், பிள்ளையோ பிள்ளை, ராஜராஜ சோழன், அன்பைத் தேடி,

சித்ரா பௌர்ணமி, அனாதை ஆனந்தன், டீச்சரம்மா, அமுதா, எல்லைக்கோடு, கிருஷ்ண லீலா, திருமலை தெய்வம், வைராக்கியம், தெய்வத் திருமணங்கள், தெய்வாம்சம், தெய்வ சங்கல்பம், சுப்ரபாதம், கடவுளின் தீர்ப்பு, மெட்டி, தங்க மகன், நான் மகான் அல்ல, மாவீரன், வணக்கம் வாத்தியாரே, பெரிய இடத்துப் பிள்ளை, அரண்மனைக்கிளி, ஆத்மா, பூவே உனக்காக, தர்மச் சக்கரம், தெனாலி, காதல் சடுகுடு.

ஸ்டில்ஸ் ஞானம்