கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...தொழில்முனைவோர் சுந்தரி சரிதாவாழ்வென்பது பெருங்கனவு!

ஒவ்வொருவரையும் வாழ வேண்டும் என்பதே பிரச்னைகளை எதிர்த்து போராட வைக்கின்றது. அது முதல் மனிதனாக இருக்கட்டும் அல்லது கடைசி மனிதனாக இருக்கட்டும். நான் என்னவாக ஆசைப்பட்டேனோ அதுவாகவே ஆகிவிட்டேன். தன் வாழ்வின் பெருங்கனவில் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னையின் புகழ்பெற்ற ‘தி பேக்கர்ஸ் நூக்’ பேக்கரி நிறுவனர் சுந்தரி சரிதா சுப்பிரமணியன்.

‘‘பெண்களுக்கு கல்வியைக் கொடுப்பதோடு கைதொழிலையும் கற்றுக்கொடுத்தால் எந்தச் சூழ்நிலையிலேயும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுவார்கள். முதலில் ஒவ்வொரு பெண்களும் கல்வியோடு தனக்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்தான் என் பூர்வீகம். அப்பா சுப்பிரமணியன் சிவில் எஞ்சினியர், அம்மா ரேவதி ஆசிரியை. அப்பாவின் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு சென்றதால் தமிழ் கற்கும் சூழல் குறைந்துவிட்டது. ஆனாலும் தமிழின் மீது எனக்கு தீராத காதல் உண்டு.

குலசேகரப்பட்டி னத்தைச் சேர்ந்த என்னுடைய அம்மா வழி கொள்ளு தாத்தா சி.டி.நாயகம் ஆங்கிலேயர் காலத்தில் சப்-கலெக்டராக இருந்தவர். அவரின் நோக்கம் பெண்களுக்கு கல்வி கொடுத்தால் அந்தக் குடும்பம் முன்னேறிவிடும் என்பதே. அதற்காகவே தனது சொத்தினை கொண்டு  அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார்.

இன்றைக்கும் அந்த அறக்கட்டளை சார்பில் அங்கு பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் சுதேசி இயக்கம் வைத்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எங்கள் உறவுக்காரர். சிறு வயதிலேயே வெளியில் வந்துவிட்டதாலும், எனது கொள்ளு தாத்தா அவரது குடும்பத்தினரைப் பற்றி அதிகம் தெரியப்படுத்தாததாலும் இன்றைக்கு தொடர்பில்லாமல் இருக்கின்றோம்.

என் சிறுவயது நிகழ்வுகளுக்கு வருகிறேன். அப்பாவின் வேலை காரணமாக வெவ்வேறு இடங்களில் படிக்கும் சூழல் ஏற்பட்டது. ஒன்றாம் வகுப்பு சென்னையில் படித்தேன். அதன் பிறகு பெங்களூரில் வசித்த எனது தாத்தா வீட்டிலிருந்து 2 முதல் 4 ஆம் வகுப்புவரை படித்தேன். அடுத்து 5 முதல் 7 ஆம் வகுப்புவரை மும்பையில். இந்தச் சூழ்நிலையில் சென்னை ஐ.சி.எஃப்.

சில்வர் ஜூப்ளி பள்ளியில் எனது தாய் ரேவதிக்கு ஆசிரியைப் பணி கிடைத்தது. அதனால் 8 ஆம் வகுப்பு முதல் அம்மாவின் பள்ளியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் அம்மாவின் சமையலுக்கு உதவியாக இருப்பேன். உதவி என்பதைவிட சமையல் மீது ஓர் ஆர்வம், காதல். சமையலில் நிபுணராக மாற வேண்டும் என்ற கனவும், லட்சியமும் மனதின் அடி ஆழத்தில் பதிந்துபோனது. பள்ளிப்படிப்பை முடித்து கேட்டரிங் படிக்க இடம் கிடைக்காததால் சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தேன்’’ என்றவர் காதலித்து திருமணம்
செய்து கொண்டார்.

‘‘இளமையில் எல்லோருக்கும் காதல் வரும். எனக்கும் தொழிலதிபர் ஜெயக்குமார் என்பவர் மீது வந்தது. திருமணம் செய்து கொண்டோம். அன்பின் அடையாளமாக இரண்டு குழந்தைகள். வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. திடீரென்று புயல் வீசும் என்று நாங்க யாருமே நினைக்கவில்லை. அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. ஜவுளித்துறையை தேர்ந்தெடுத்து தொழில் நடத்தி வந்தோம். போதிய வருமானம் இல்லாததால் என் உறவுக்கார பெண் ‘நீ தான் நன்றாக சமைப்பாயே அதனால் அதைச் செய்யலாமே’ என்றார்.

அதன் விளைவாக 1994ல் வீட்டிலிருந்தபடியே செய்யும் ஒரு கேட்டரிங் தொழிலைத் தொடங்கினேன். கிரன்ச் என் மன்ச் (Crunch N Munch) என்ற அந்த கேட்டரிங் மூலம் சென்னையில் அண்ணாநகர் மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளில் சைனீஸ் மற்றும் கான்டினென்டல் உணவுகள், கேக்கள், பிஸ்கட்கள் மற்றும் டெசர்ட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தேன்” என்ற சரிதா, அடுத்தகட்டமாக சமையல் பயிற்சியை துவங்கினார்.

‘‘ஓட்டல் சாப்பாட்டினை வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று பலர் விரும்பினார்கள். அதனால், சமையல் வகுப்புகளை துவங்கி என்னுடைய அடுத்த அடியை எடுத்து வைத்தேன். சிறிய அளவில் பேக்கிங் வகுப்புகளைத் தொடங்கி எளிமையான கேக்குகள், குக்கீஸ்கள், கான்டினென்டல் மற்றும் சைனீஸ் ரெசிபிக்களை கற்றுக்கொடுத்தேன். 1996 வரை எல்லாம் நல்ல விதமாக சென்று கொண்டிருந்ததில் சிறு சறுக்கல். வியாபாரத்துக்குத் தடை போட வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் சமைப்பதை நிறுத்தவில்லை.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக புது வகைகளை சமைத்துக் கொண்டே இருந்தேன். ‘ஹோம் பேக்கர்ஸ் கில்ட்’ என்ற முகநூல் பக்கத்தில் இணைந்தேன். அது என்னை மீண்டும் பேக்கிங் பக்கம் திரும்ப வைத்தது. எனக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய சவாலே என்னை நான் மெருகேற்ற வேண்டும் என்பது தான். புதிய பொருட்கள் மற்றும் யுக்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தை நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது கேக் அலங்காரம், ஐசிங் பயிற்சி மற்றும் ஃபான்டன்ட் மாடலிங் போன்ற வகுப்புகளைத் தொடங்கினேன்” என்றவரின் வாழ்வில் மறுபடியும் ஒரு சுனாமி தாக்கியது.

‘‘2012 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரியும் சூழல் ஏற்பட்டது. என்னை நான் தயார் படுத்திக் கொள்ள 2 வருடம் பிடித்தது. ‘தி பேக்கர்ஸ் நூக்’ என்ற பேக்கரியை துவங்கினேன். தொழில் ரீதியாகவும், சுயமாகவும் அது ஒரு மிகப்பெரிய முடிவு, ஏனெனில் இறுதியில் எனக்கு பிடித்த பாதைக்கே திரும்பிவிட்டேன். என்னுடைய குழந்தைகள் நன்கு வளர்ந்து தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். இதனால் என்னுடைய மொத்த நேரத்தையும் என்னுடைய புதிய வியாபாரத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பயணம் திருப்தியளிப்பதாகவே இருக்கிறது. வாடிக்கையாளர்கள்  எனக்கு விலைமதிக்கத்தக்க அனுபவத்தை அளித்துள்ளனர். ஆனாலும் என் தொழில் சார்ந்த பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கப் கேக்குகள், ஃபான்டண்ட் கேக், ஆரோக்கியமான மஃப்பின்கள், குக்கீஸ், டெசர்ட் கப்கள், டெசர்ட் ஜார்களை தயாரிக்கிறேன். இது தவிர பிரெட்கள், ஸ்டஃப்ட் பிரெட்கள், பன்கள் மற்றும் ரோல்களும் தயாரிக்கிறேன். மேலும் புதிய உணவுகளை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார் சுந்தரி சரிதா சுப்பிரமணியன்.

தோ.திருத்துவராஜ்