ஒரு மாத இடைவெளியில் இரண்டு பிரசவம்!தலைப்பை பார்த்தவுடன், உங்களது பதில் இல்லை என்று இருந்தால், சாரி... தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் இதுவும் நடக்கும் என்பதுபோல், வங்கதேச இளம்பெண் ஒருவரால் அது நிரூபணம் ஆகி உள்ளது.வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஆரிபா சுல்தானா. சமீபத்தில்தான் இவருக்கு திருமணமானது. வளைக்காப்பு வைபவம் எல்லாம் நல்லபடியாக முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் திடீரென பனிக்குடம் உடைந்து, வலியால் துடித்தார் ஆரிபா. அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தபோது, அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பமே ஆரிபாவை கொண்டாடியது. குடும்ப வாரிசை பெற்றுத்தந்த ஆரிபாவுக்கு தினம் விருந்து, உபசாரம்தான்.

எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. திடீரென மார்ச் மாத மத்தியில் வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்தார் ஆரிபா. குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், ஆரிபா துடித்தது பிரசவ வலியால். அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வேறு இருந்தன. ஒரு ஆண், ஒரு பெண் சிசுக்கள். இரு குழந்தைகளும் வளர்ச்சி குறைவாக இருந்தன. முதல் பிரசவத்தின்போதே டாக்டர்கள், அவரை முழுமையாக சோதனை செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

உடனடியாக ஆரிபாவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, அவரது குழந்தைகளை வெளியே எடுத்தனர். குழந்தைகளின் வளர்ச்சியை சீர் செய்வதற்காக, அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்தனர்.ஆரிபாவுக்கு ஒரு மாத இடைவெளியில் 2 பிரசவம் நடந்து, தற்போது 2 ஆண் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். தாயும், சேய்களும் நலமாக உள்ளனர்.

இது எப்படி சாத்தியம் என்று ஆரிபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷீலா போதரிடம் கேட்டபோது, ‘‘ஆரிபாவின் நிலையை மருத்துவ உலகில் ‘யூடெரஸ் டைடெல்பிஸ்’ (கருப்பை குறைபாடு) என்று அழைக்கப்படும். மிக அரிய வகையைச் சேர்ந்த குறைபாடு இது. சாதாரணமாக கருப்பையில் இருந்து 2 குழாய்கள் பிரிந்து ஒரு வெற்றிடத்தில் இணையும்.

ஆனால், இக்குறைபாடு கொண்ட பெண்களுக்கு, குழாய்கள் ஒன்றிணையாமல், சிக்கலாக இருக்கும். அதுபோன்றவர்களுக்கு, இரு கருப்பை செயல்பாடு இருக்கும். அதில்தான் இதுபோன்ற குழந்தைகள் வளர்கின்றன’’ என்றார்.ஒரு மாதத்தில் குடும்பத்தின் உறுப்பினர்கள் 5 ஆக உயர்ந்துவிட்ட நிலையில், பெரிய வீட்டுக்கு மாற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம் ஆரிபாவின் கணவர்.

பாலகுமார்