விலாங்கு மீன்பெண் மைய சினிமா

ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும், குறைகளும் எப்படி பெண்களின் மீதான வன்முறையாக மாறுகிறது என்பதை ஆழமாக சித்தரிக்கிறது ‘the eel’.
ஜப்பானில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார் யமசித்தா. மனைவி மீது தீராத காதல் கொண்டிருக்கிறார். திருமணமாகி சில வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்குக் குழந்தையில்லை.

ஒருவேளை யமசித்தாவுக்கு ஆண்மை குறைபாடு இருக்கலாம். ஆனால், அவர் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மாலை நேரத்தில் வேலை முடிந்த பிறகு வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு நதிக்குச் சென்று சில மணி நேரங்கள் அங்கே செலவிடுவது அவரது வழக்கம். அந்த நதியில் மீன் பிடிப்பது அவருக்குப் பிரியமான ஒரு பொழுதுபோக்கு. அதனால் தினமும் அவர் தாமதமாகத்தான் வீட்டுக்குச் செல்கிறார்.

பெரிய பங்களாவில் யமசித்தாவுக்காகக் காத்திருந்து காத்திருந்து தனிமையில் மூழ்குகிறாள் அவரது மனைவி. வெறுமையில் வாடும் அவளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்படுகிறது. வழக்கம்போல யமசித்தா வேலை முடிந்து, மீன் பிடித்துவிட்டு இரவில் வீடு திரும்புகிறார். அப்போது அவரின் மனைவி வேறு ஒருவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறார். யமசித்தாவால் தாங்க முடியவில்லை.

தன்னால்தான் மனைவி இன்னொருவரை நாடிச் சென்றிருக்கிறாள் என்பதைப் பற்றி அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. வெறி பிடித்த மிருகத்தைப் போல மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து விடுகிறார். தான் செய்த கொலையை மறைக்காமல் காவல்துறையிடம் சரணடைந்தும் விடுகிறார். சிறையில் அடைக்கப்பட்டு தனிமையில் வாடும் யமசித்தாவுக்கு ஒரு புதிய நண்பன் கிடைக்கிறான். அவன் யமசித்தா என்ன சொன்னாலும் கேட்பவன். யமசித்தா விரும்பாத எதையும் செய்யாதவன், சொல்லாதவன். ஆனால், அவன் மனிதனில்லை; அவன் ஒரு விலாங்கு மீன்.

யமசித்தா மனிதர்களை வெறுத்து ஒதுக்கி மீனுடன் தன் உறவை தொடர்கிறார். எட்டு ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகு பரோலில் ஒரு புத்த சாமியார் கண்காணிப்பில் விடுதலையாகிறார். நகரின் ஒதுக்குப்புறத்தில் புதிதாக ஒரு சலூன் கடையை ஆரம்பிக்கிறார். சிறையில் சிகை அலங்காரம் பற்றி பயின்றது அவருக்கு உதவியாக இருக்கிறது.

அந்தப் புதிய இடத்தில் சில நல்ல நண்பர்கள் அவருக்குக் கிடைக்கிறார்கள். யமசித்தாவின் கடந்த கால வாழ்க்கை அங்கிருப்பவர்களுக்குத் தெரியாததால் சுதந்திர உணர்வை யமசித்தா சுவாசிக்கிறார். சிறையில் கிடைத்த விலாங்கு மீனைத் தன்னுடனே வைத்துக் கொள்கிறார். ஒரு குழந்தையைப் போல அந்த மீனைப் பராமரிக்கிறார்.

ஒரு நாள் யமசித்தா ஜாலியாக சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது சாலையின் ஓரத்தில் ஒரு பெண் மயங்கிக் கிடைப்பதைப் பார்க்கிறார். அந்தப் பெண்ணைக் காப்பாற்றி தன்னுடனே வேலைக்கு வைத்துக்கொள்கிறார். அவளின் பெயர் கெய்கோ.

பெரிய பணக்காரியான கெய்கோவிற்கு 34 வயதான போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அவளின் அம்மா மனநலம் சரியில்லாதவள். கெய்கோ கல்யாணமான ஒருவனுடன் காதல் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் தன் காதலன் பணத்திற்காகத்தான் தன்னுடன் இருக்கிறான் என்பதை தெரிந்துகொள்கிறாள் கெய்கோ. காதலனால் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத அவள் தற்கொலை செய்ய முடிவெடுத்து யாருமே இல்லாத ஒரு இடத்திற்கு வருகிறாள்.  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு மயக்கமடைகிறாள். அப்போதுதான் அங்கே வந்து கெய்கோவைக் காப்பாற்றுகிறார் யமசித்தா.

நாட்கள் செல்கிறது. கெய்கோ கர்ப்பமடைந்த விஷயம் வெளியே தெரிய வருகிறது. அவளின் கர்ப்பத்திற்குக் காரணம் பழைய காதலன். அருகில் இருப்பவர்கள் யமசித்தா தான் கெய்கோவின் கர்ப்பத்திற்குக் காரணம் என்று நினைக்கிறார்கள். இக்குழப்பத்திற்கு நடுவில் கெய்கோ கருவை கலைத்துவிடலாம் என்று முடிவு செய்கிறாள்.

ஆனால், கெய்கோவின் வயிற்றில் உருவாகி கொண்டிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற அந்தக் கர்ப்பத்திற்கு நான் தான் காரணமென்று எல்லோர் முன்னாலும் யமசித்தா சொல்கிறார். கெய்கோவிடம் கருவைக் கலைத்து விட வேண்டாம் என்றும் வேண்டுகிறார். தற்கொலையில் இருந்து மீண்ட கெய்கோவும், மனைவியை கொலை செய்த யமசித்தாவும் பிறக்க போகும் குழந்தைக்காக தங்களின் வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

‘‘கெய்கோவின் கர்ப்பத்திற்கு நான் தான் காரணம்...’’ என்று சொல்லியதற்குக் கூட யமசித்தாவின் ஆண்மை குறைபாடுதான் காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால்  அப்படி சொல்வதின் வழியாக தனக்கு இருக்கும் குறைபாட்டை அவர் மற்றவர்களிடம் மறைக்கலாம். தவிர, அங்கிருப்பவர்களுக்கு அவரின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது. யமசித்தாவின் குறைபாடு அவரின் மனைவிக்குத் தெரிந்திருக்கும். அதனாலும் கூட அவர் மனைவியைக் கொன்றிருக்கலாம்.

தன் மனைவி இன்னொருவருடன் காதலில் இருப்பது உயர் பதவியிலிருக்கும் தனக்கு மிகப்பெரும் அவமானம் என்று நினைத்துக்கூட அவர் கொலை செய்திருக்கலாம். எப்படியிருந்தாலும் யமசித்தாவின் ஆணவம், குறைபாடு, தாழ்வு மனப்பான்மைதான் மனைவியின் மீது வன்முறையாக பரிணமிக்கிறது. இங்கே பலரும் யமசித்தாவைப் போலத்தான் இருக்கிறார்கள் என்பதால் இந்தப் படம் இன்னமும் நமக்கு நெருக்கமாகிறது. கேன்ஸ் உட்பட உலகின் உயரிய விருதுகளைப் பெற்றிருக்கும் இந்த ஜப்பானிய படத்தின் இயக்குனர் இமாமுரா.

த.சக்திவேல்