வெற்றிக்கு தடை பொருட்டல்லபல்வேறு துறைகளில் பெண்கள் தனக்கான தனித் தன்மையை நிரூபித்து வருகிறார்கள் என தினம் ஒரு செய்தியை நாம் பார்க்கும் அதேவேளையில், திருமணம், குழந்தை என்றானபின் தங்கள் கனவுகளை தொலைத்து, வீட்டு வேலைகளில் முடங்கிக் கிடக்கும் நிலையும் சில பெண்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. அத்தகைய பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருமானத்திற்கான வழியினைச் சொல்கிறார் ஆடை வடிவமைப்புத் துறையில் முக்கியமாக திருமணப் பெண்களுக்கான ஜாக்கெட்டுகளை வடிவமைத்து உருவாக்கி வரும் மினாலியா குரூப் ஆஃப் நிறுவனத்தின் இயக்குனர் மஞ்சு மணிபிரகாஷ்.அவரது அனுபவம், அவர் கடந்து வந்த பாதையை பற்றி கேட்டபோது, குழந்தைகள், குடும்பம் என்கிற சூழலை சமாளித்து தனக்கான துறையை எப்படித் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றார் என்பதை நம்மிடம் பேசத் துவங்கினார் மஞ்சு.

“என்னுடைய தாய்மொழி தெலுங்கு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான்.  சிறு வயதில் இருந்தே ஆடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். எனக்கு எப்போதும் ஆடை தேர்வு குறித்த ஆர்வம் அதிகம் இருக்கிறது என நண்பர்களும் உறவினர்களும் சொல்வார்கள். குறிப்பாக பெண் குழந்தைகளின் வித்தியாசமான ஆடைகளைப் பார்த்தால் அது குறித்து விசாரிப்பேன்.  என் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் என்னிடம் ஃபேஷனாய் உடை அணிவது குறித்து ஆலோசனை கேட்பார்கள். அந்த அளவிற்கு எனக்கு ஆடைகள் மீது மிகப்பெரும் ஆர்வமே உண்டு.

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முடித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே மணிபிரகாஷை காதலித்தேன். முதலில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பிருந்தது. பின்பு இரு வீட்டார் சம்மதிக்க எங்கள் திருமணம் நடைபெற்றது. முதல் பெண் குழந்தை மினாலியா பிறந்தாள். அதற்குப் பிறகு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரத் தொடங்கியது. மினாலியாவின் முதல் பிறந்த நாளுக்கு, அவளுக்கு வித்தியாசமான உடையினை எடுக்க நினைத்து, சென்னையின் பெரும்பாலான இடங்களுக்கு சென்று தேடியும் நான் மனதில் நினைத்து எதிர்பார்த்தது போன்ற உடை அவளுக்கு கிடைக்கவில்லை.

விளைவு, நானே அவளுக்கான உடையினை வடிவமைத்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஃப்ராக் போன்ற உடை ஒன்றை வடிவமைத்து தைத்து அணிவித்து என் மகளை அழகு பார்த்தேன். அதுதான் என்னுடைய  முதல் வேலைப்பாடு. அதன்பின் எனது இரண்டாவது மகன் கிரதேவ் பிறந்தபின், பணிகள் அத்தனையையும் அப்படியே ஒதுக்கிவிட்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் முழுமையாகப் பார்த்துக்கொண்டேன். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயது வரை என் ஆர்வத்தை அடக்கி வைத்து காத்திருந்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் ஆடைகள் குறித்து பல்வேறு விஷயங்களையும், அதன் நுணுக்கங்களை ஒவ்வொரு கடையாக ஏறியிறங்கித் தெரிந்து வைத்துக் கொண்டேன்.

துவக்கத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நானே உடைகளை டிசைன் செய்து, அதை வெளியில் தைக்கக் கொடுத்து பெற்றுக்கொடுப்பேன். இந்தப் பணி எனக்கு மிகப்பெரும் உதவியாய் இருந்தது. கொஞ்ச நாளில் வீட்டில் இருந்தவாறே டெய்லரிங் கற்றுக்கொண்டேன். என் ஆர்வத்தை அறிந்த என் கணவர், தையல் மெஷின் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து வடிவமைத்த ஆடைகளை நானே தைக்கத் தொடங்கினேன். வீட்டில் சிறிய இடம் ஒன்றை ஒதுக்கி அதில் ஆடை தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்தேன். எனது தயாரிப்பு பணிகள் வீட்டிலேயே இருந்ததால் குழந்தைகளையும் என்னால் கவனிக்க முடிந்தது. எத்தனை பணிச்சுமை இருப்பினும் குழந்தைகளை கவனிப்பதில் மிகவும் கவனமாய் இருப்பேன்.

ஒரு மெஷினோடு துவங்கிய என் தொழிலை அடுத்த இரண்டு ஆண்டிற்குள்ளேயே நான்கு மெஷினை நிறுவும் அளவிற்கு நகர்த்தினேன்.  எனக்கென்று டெய்லர், மாஸ்டர், எம்ப்ராய்டர் என குழுவை மிகவும் விரைவாய் உருவாக்கினேன். துவக்கத்தில் நஷ்டம் எதுவுமின்றி போட்ட முதலீடு மட்டுமே கிடைத்தது. இச்சூழலை புரிந்துகொள்ளாத நபர்களாக இருந்திருந்தால், வேறு வேலை பார்க்கலாம் அல்லது குழந்தைகளை பார்த்துக்கொண்டு வீட்டை கவனி என்று அசால்டாகச் சொல்லியிருப்பார்கள். ஆனால் என் கணவர் எனக்கு முழு ஒத்துழைப்பாகச் செயல்பட்டார். விளைவு சிறியதாக தொடங்கப்பட்ட என்னுடைய தொழில் ‘மினாலியா ஃபேஷன்’ என்கிற நிறுவனமாக மாறியது. சென்னையில் இயங்கும் பல ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தில் அதன் நிறுவனர் பெரும்பாலும் ஆணாக இருப்பார். அவருக்குக் கீழ் வேலை செய்கிறவர்கள் வேண்டுமானால் பெண்களாக இருப்பார்கள். காரணம் குடும்பச்சூழல் மற்றும் குழந்தைகள். இதன் காரணமாகவே பெண்கள் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகரமுடியாமல் தடைபட்டுப் போகிறார்கள். துணிந்து செயலில் இறங்குவதற்கு குடும்பத்தில் இருப்போரின் பங்களிப்பு மிகமிக முக்கியம்.

என் தொழில் எந்தவிதத்திலும் என் குடும்ப வாழ்க்கையை பாதிக்கவில்லை. குடும்பம், குழந்தைகளோடு நேரத்தை செலவிடுவதற்கான நேரத்தையும் நானே ஒதுக்கிக்கொள்வேன். வீட்டில் இருந்துகொண்டே சிறு தொழிலாக செய்வதற்கு பெண்களுக்கு ஏற்ற துறை இந்த ஃபேஷன் டிசைனிங் என்று ஆணித்தரமாக சொல்லலாம்.பெரும்பாலான பொட்டிக்(boutique) கடைகளுக்கு செல்கிறவர்கள், நேரடியாக டிசைனர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை என்கிறார்கள். விளைவு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்ற விருப்பத்தில் டிசைனிங் உடைகள் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த நிலையிலிருந்து நான் சற்றே வேறுபட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே சமயம் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான உடை மீது அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

பெரும்பாலும்  திருமண ஜாக்கெட்டுகள்தான் நேர்த்தியான வடிவமைப்பில், தரமாக கிடைப்பதில்லை என அறிந்து கொண்டேன். சேலையின் விலையை விட ஜாக்கெட்டின் விலை அதிகமாக இருந்தது. நான் அதில் தனித்துவமாய் திகழ வேண்டும் என முடிவு செய்தேன்.  எனவே நல்ல டிசைன்களாக வடிவமைத்து ஜாக்கெட்டுகளைத் தயார் செய்யத் தொடங்கினேன். என்னிடம் வரும்  வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் ஆர்டர்களை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்துக் கொடுத்து விடுவேன். ஒரு திருமண ஜாக்கெட்டை தயார் செய்ய 15 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன். என்னுடைய வேலை தரமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் நல்ல டிசைனாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருப்பேன். என் வேலையில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் தரத்திலும் வேலையிலும் சமரசம் இல்லாமல் செயல்படுவதே எனது வெற்றிக்குக் காரணம்.

என்னுடைய மகள் நிலானியை வைத்துதான் நான் பல ஆடைகளை உருவாக்க கற்றுக்கொண்டேன். குழந்தைகளுக்கு நானே என் கைப்பட ஆடைகளை வடிவமைத்து அதை நானே தைத்துக் கொடுக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொழிலாக இருக்கிறது. எனது தொழிலை நான் ரொம்பவே நேசித்து, ரசித்துச் செய்கிறேன். இதுவும் எனது வெற்றிக்கு முக்கியக் காரணம். சிறிய அளவில் தொடங்கிய என் தொழில் இன்று வளர்ந்து லாபம் லட்சத்தை தொட்டு நிற்கிறது. துவக்கத்தில் ஏற்படும் சருக்கல்களைக் கண்டு மனம் தளராமல் தொடர்ந்து பெண்கள்  இயங்க வேண்டும். அதுவே நிலையான வெற்றியை பெற்றுத்தரும். இன்னும் நிறைய பெண்கள் இந்த ஃபேஷன் டிசைனிங் துறைக்கு வரவேண்டும். குடும்பத்தில் உள்ளவர் களும் பெண்களை வீட்டு வேலை செய்பவர்களாகவும், குழந்தைகளை மட்டும் பராமரிப்பவர்களாகவும் பார்க்காமல் அவர்களின் திறமையை உணர்ந்து கைகொடுக்க வேண்டும்” என்றார். உணவுக்கு அடுத்து மனிதன் தேடுவது உடைதானே.

-ஜெ.சதீஷ்